நடுப்பக்கக் கட்டுரைகள்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

23rd Dec 2021 06:53 AM | முனைவர் வைகைச்செல்வன்

ADVERTISEMENT


கேரளத்தில் மீண்டும் அரசியல் படுகொலைகள் தலையெடுத்துள்ளன. அடுத்தடுத்து இரண்டு படுகொலைகள் நடந்து அரசியல் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எஸ்.பி.ஐ கட்சியின் கேரள மாநில செயலாளராக இருப்பவர் கே.எஸ்.ஷான். 
இவர் ஒரு நாள் மாலை நேரத்தில் ஆலப்புழா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்போது ஒரு கார் திடீரென்று மோதியது. காரில் வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் ஷானை வெட்டிச் சாய்த்து விட்டு மறைந்திருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தில் இருந்தவரை ஆலப்புழா மருத்துவமனையிலும் பின்னர் கொச்சி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
அடுத்து ஒரு நிகழ்வு. பா.ஜ.க.வின் ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் ரஞ்சித் சீனிவாசன். இவர் அதிகாலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதற்காக ஆலப்புழாவிலுள்ள தனது வீட்டில் தயாராகிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்த மர்ம நபர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார். 
பத்து மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இருவேறு கொலைகளும் கேரள மாநிலம் முழுமைக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி விட்டன. 
கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவேறு மதங்களின் பின்னணியில் அரசியல் கொலைகளால் கேரள மாநிலத்தில் இயல்பு நிலை கெட்டு வருகிறது. மதம் மற்றும் பழிவாங்கல் பின்னணியில் கொலைகள் மீண்டும் தலையெடுத்திருப்பது, பொதுச்சேவைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. 
கொடூரமும், மனிதாபிமானமற்ற இந்த வன்முறைச் செயல்களால் இவர்கள் எதைச் சாதித்து விடப் போகிறார்கள்? மனிதநேயமற்று, மானிடப்பற்றை அகற்றி விட்டு புதிய ஒன்றை இவர்களால் படைத்து விட முடியுமா? கண்களை  இழந்த பிறகு சித்திரம் வாங்கிப் பயன் என்ன? 
வெறுப்பு மனப்பான்மையை பொதுச்சேவையோடு முடிச்சுப் போட நினைத்தால், சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் எவ்வாறு அரவணைத்துச் செல்ல முடியும்? மக்களுக்காக இயங்க வேண்டியது அரசியல் இயக்கங்களின் தார்மிகக் கடமையல்லவா?
கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தி இதுபோன்ற அரசியல் கொடூரக் கொலைகள் நடைபெறுகின்றன என்பது வருந்தத்தக்க செய்தியாக இருக்கிறது. சமூகப் பொருளாதாரத்தில் உயரிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் கேரளத்தில்தான் அரசியல் கொலைகள் அதிக அளவில் நடைபெறலாமா? 
1997-ஆம் ஆண்டு முதல் 2008 வரை கண்ணூரில் மட்டும் இத்தகைய கொலைகளுக்குப் பலியானோர் எண்ணிக்கை 56 என்று கூறுகிறது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கான விடை. 
ஆனால், பலியானவர்கள் அனைவரும் அரசியல் செயல்பாட்டுக் களத்தில் உள்ளவர்கள் அல்ல. அரசியல் புள்ளிகளின் எந்தவொரு கணக்கீட்டையும் அறியாத அப்பாவிப் பொதுமக்களே இத்தகைய வன்முறைக்கு தங்கள் உயிரைப் பலிகொடுத்து உள்ளனர். 
நாட்டு வெடிகுண்டு அல்லது கத்திக்குத்து அல்லது அரிவாள்வீச்சு - இவைதான் இந்தக் கும்பல்களின் கொலை ஆயுதங்களாக இருக்கின்றன. குறிப்பாக வடகேரளத்தில் கொலைகள் அதிகமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மற்றைய பகுதிகள் இதே அளவிற்கு இல்லையென்றாலும் அங்கெல்லாமும் அரசியல் கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. 
கடந்த 17 வருடங்களில் கேரளத்தில் 172 பேர் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் பாஜகவினர் 65 பேர், சி.பி.ஐ (எம்) 85 பேர், காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கொலைகள் கண்ணூரில் தலசேரி பகுதியில் நடந்துள்ளன. 
பாஜகவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை, எதிர்க்கட்சிகள் அவரது வகுப்பறைக்குள் புகுந்து, மாணவர்கள் முன்னிலையிலேயே வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து, உளவியல் ரீதியான பாதிப்பில் இருந்து இன்னும் அந்த மாணவர்கள் மீளவில்லை என்று தெரிவிக்கிறார்கள். 
காங்கிரஸ்காரர் ஒருவர் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிற வேளையில் சி.பி.எம் கட்சிக்காரர்கள் அவரது கால்களை வெட்டிவிட்டார்கள். அதன் பின்னர் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். 
இவை வாடகைக் கொலையாளிகளால் செய்யப்படும் குற்றங்களா? நிச்சயமாக இல்லை. இக்கொலைகள் உணரச்சிகரமான குற்றங்கள். கோபத்தில் ஒரு வித ஆத்திரத்தின் விளைவால் நடப்பவை. மக்களின் மிதமிஞ்சிய அரசியல் ஈடுபாடு, இவ்வகையான மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. கேரள சமூகம் தொடர்ந்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருவதன் காரணமாக ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகளே இவை.  
அரசியல் களம் என்பது மக்களை ஒருங்கிணைப்பது. உணர்வுரீதியாக அவர்களின் செயல்பாடுகளுக்கு அர்த்தம் அளிப்பது. அவர்களை ஒரு திசையை நோக்கிச் செலுத்துவது. இதன் மூலம் அதிகாரத்தை நோக்கி மக்களைத் திரள அணி சேர்ப்பது. 
கட்சி விட்டு கட்சி தாவி புதுக்கட்சியில் செயல்படுவது என்பது சில நேரங்களில் சாமர்த்தியமாக நடக்கிறது. லட்சியபூர்வமாக ஒரு கட்சியில் செயல்படும் ஒருவரால் அப்படிக் கட்சி தாவ முடியாது. மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த ஒருவர் கட்சி தாவுகிற போது, அக்கட்சித் தொண்டர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 
லட்சியமின்றி அரசியல் செய்ய முடிந்தவர்களால் அரசியலின்றி அரசியல் செய்ய முடிவதில்லை. ஆகவேதான், லட்சியவாத அரசியலே கேரளத்தின் அரசியல் கொலைகளுக்கு பிரதான காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
தமிழகத்தைப் பொறுத்தவரை தொலைக்காட்சி விவாதங்களின் போது எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்றாலும், நட்புடன் உரையாடுவதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். 
ஆகவே, லட்சியம், கொள்கை, கோட்பாடு என்பவையெல்லாம் பொதுத்தளத்தில் இயங்கக் கூடியவர்களின் தத்துவார்த்தத்தைக் குறிக்கக் கூடியவையாக இருக்க வேண்டுமே தவிர, பிறர் மீதான வெறுப்பைக் காட்டுவதாக ஆகிவிடக்
கூடாது. 
இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் தொடர்வது மகிழ்ச்சிகரமான ஒன்றுதான். தமிழ்மண்ணில், தமிழ் உணர்வுகளால் ஒன்றுபட்டுக் கிடக்கின்ற இயக்கங்கள்தான் அதிகம். ஆகவே, இங்கு அதிகம் வெறுப்பு உமிழப்படுவதில்லை. 
நமது மண்சார்ந்த இனக்குழுக்கள் நமது ஐவகை நிலக்கோட்பாடுகளில் இருந்து தோன்றியவையாகும். கேரளத்தில் இத்தகைய மண்சார்ந்த அரசியல் என்பது குறைவாக இருக்கிறது. அவர்களின் லட்சியவாதம் கற்பனையான சொற்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 
அவர்கள் கம்யூனிஸமாக, காங்கிரஸின் மாநிலம் கடந்த தேசியவாதமாக, பாஜகவின் இந்து தேசமாக என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். ஆக, உணர்ச்சிக் குவியல்களால் கொலைக்குற்றங்களும், கொடூரங்களும் இழைக்கிறார்கள். அதனால், அங்கு அரசியல் களம் பற்றி எரிகிறது. 
இந்தியாவில் 2017 முதல் 2019 வரை அரசியல் காரணங்களுக்காக 230 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2017-இல் 72 பேரும், 2018-இல் 59 பேரும், 2019-இல் 99 பேரும் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். 
மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் ஆண்டுதோறும் மாநில வாரியாக அரசியல் காரணங்களுக்காக எத்தனைபேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது தெரிவிக்கப்படும்.
இதுபோன்று மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும், கர்நாடாகத்தில் 19 பேரும் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில் 6 அரசியல் படுகொலைகள் மட்டும் நடந்திருப்பதாக மத்தியக் குற்ற ஆவண அறிக்கை தெரிவிக்கிறது. 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் மூன்று பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், 2018-இல் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என்றும் மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கை சொல்கிறது.
தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் மனநிலை வெறுப்பு அரசியலின் அடையாளமாக இருக்கிறது. இதுபோன்று மாற்றுக் கருத்துடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கருத்து கூறுபவர்கள் யாராயினும் அவர்களை மிரட்டுவது என்பது கேரள அரசியல்வாதிகளின் கைவந்த கலையாக இருக்கிறது. இது சகிப்புத்தன்மை அற்ற அரசியலையே பறைசாற்றுகிறது. 
ஜனநாயக முறைப்படி மாற்றுக் கொள்கையாளர்களுடன் தங்களுடைய கொள்கைகளை எடுத்துரைக்கத் திராணியற்று வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே மக்களின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். 
முன்னேறிய மனிதகுல சமுதாயத்தில் பல கொள்கைகள், பல சித்தாந்தங்கள் இருப்பது இயல்பே. இவையெல்லாம் விவாதப் பொருளாகி, வெற்றி பெற்றிருக்கிறது இல்லையேல் தோல்வி அடைந்திருக்கிறது. இதனை உணர்ந்து செயல்பட வேண்டுமே தவிர வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது. 
ஜனநாயக நாட்டில் எல்லாவகையான சிந்தனைகளின் அடிப்படையிலும், கட்சிகள் அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பட உரிமை உண்டு. ஆனால், வன்முறை அரசியல், கொலைக்களமாகும் அரசியல் பழிதீர்ப்புகள் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தராது. 

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT