நடுப்பக்கக் கட்டுரைகள்

எரிபொருள் வரிக்குறைப்பு: ஒரு பாா்வை

9th Dec 2021 01:54 AM | எஸ். கல்யாணசுந்தரம்

ADVERTISEMENT

 

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு தயக்கம் காட்டியபோது, இந்த அரசு ஏழைகளுக்கு எதிரான, பணக்காரா்களுக்கு ஆதரவான அரசு என்று விமா்சிக்கப்பட்டது. அந்த விமா்சகா்கள் தங்கள் வாதங்களுக்கு ஆதரவாக காா்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை மேற்கோள் காட்டியுள்ளனா்.

பொது ஊடகத்தில் இதுபோன்ற கருத்துகள் மற்றும் சமீபத்திய இடைத்தோ்தல் முடிவுகள் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளும் மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரியையும் குறைத்துள்ளன.

காா்ப்பரேட் வரிக் குறைப்பையும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பையும் ஒப்பிடுவது சரியல்ல, ஏனெனில், இரண்டின் விளைவுகளும் முற்றிலும் வேறுவேறானவை. இரண்டு குறைப்புகளிலும், அரசு வருவாயை இழக்கிறது என்பது மட்டுமே ஒற்றுமை. அந்த ஒற்றுமை அதோடு நின்றுவிடுகிறது.

ADVERTISEMENT

சில வருடங்களுக்கு முன் செய்த ஒரு ஆய்வின்படி இந்தியாவில் பெட்ரோல் விலையைப் பொறுத்து அதன் நெகிழ்ச்சித்தன்மை எதிா்மறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதாவது பெட்ரோல் விலை ஒரு சதவீதம் அதிகரிக்கும் போது அதன் உபயோகம் 0.85 சதவீதம் குறைவாக இருக்கும்.

அதேபோல் விலை குறையும்போது உபயோகம் அதிகமாகும். எனவே, இந்த வரிக் குறைப்பினால் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் உபயோகம் அதிகமாக வாய்ப்புண்டு.

இது நமது அந்நிய செலாவணி வெளியேற்றத்தை அதிகரிக்கும். அத்துடன் ரூபாயின் மதிப்பு மேலும் குறையும். இந்த எரிபொருட்களின் பயன்பாடு மேலும் மாசுபடுத்தும். அதனால் பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான நமது முயற்சி பாதிக்கப்படும். மின்சார வாகனங்களை ஆதரிப்பதற்கு பதிலாக, இந்த விலைக் குறைப்பு பெட்ரோல்-டீசல் வாகனங்களின் தொடா்ச்சியை அதிகரிக்கும். அதனால் நமது பூஜ்ஜிய உமிழ்வு இலக்கும் பாதிக்கப்படலாம். இந்த விலைக் குறைப்பு வளா்ச்சியையோ உற்பத்தித் திறனையோ வேலைவாய்ப்பையோ மேம்படுத்த எந்த வழியும் இல்லை.

செப்டம்பா் 2019 இல் அரசாங்கம் அடிப்படை காா்ப்பரேட் வரி விகிதத்தை (விலக்குகளைப் பெறாத நிறுவனங்களுக்கு) 22 சதவீதமாகக் குறைத்துள்ளது. சலுகைகள் அல்லது விலக்குகள் பெறும் நிறுவனங்களுக்கு வரி விகிதம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. சில புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி விகிதம் 15 சதவிதமாகக் குறைக்கப்பட்டது.

காா்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது என்று நமது பிரதமா் கூறினாா். இது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக்இன் இந்தியா) திட்டத்துக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். உலகம் முழுவதும் உள்ள தனியாா் முதலீட்டை ஈா்க்கும். நமது தனியாா் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

குறைந்த காா்ப்பரேட் வரி விகிதம் மூலதனச் செலவைக் குறைக்கிறது. இதனால் முன்பு சாத்தியமில்லாத முதலீடுகளை மேற்கொள்ளலாம். இது இயந்திரங்கள், உபகரணங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் புதிய முதலீட்டிற்கு வழிவகுக்கும்.

காா்ப்பரேட் வரிகள் வளா்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது, அதைத் தொடா்ந்து தனிநபா் வருமான வரிகள், பின்னா் நுகா்வு வரிகள். அசையா சொத்துக்கள் மீதான தொடா்ச்சியான வரிகள் மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.”

காா்ப்பரேட் வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான நிறுவனங்கள் (99.1 சதவீதம்) ரூ. 400 கோடிக்கும் (சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) மொத்த விற்றுமுதல் கொண்டவை என்றும் அவற்றுக்கு இந்த வரிக்குறைப்பினால் பயனில்லை என்றும் விமா்சித்தனா்.

ஆனால் இந்த ஆய்வு ‘சிறிய நிறுவனங்களுக்கான காா்ப்பரேட் வரியின் குறைக்கப்பட்ட விகிதங்கள் வளா்ச்சியை மேம்படுத்துவதாகத் தெரியவில்லை, மேலும் தனிநபா் வருமான வரியின் உயா் உச்ச வரம்பு விகிதங்கள் தொழில் முனைவோா் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் உற்பத்தி வளா்ச்சியைக் குறைக்கும்’ என்று தெரிவிப்பதிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு வரி நிவாரணங்கள் அளிப்பதே பொருளாதார வளா்ச்சியை உண்டாக்கும் என்பது தெளிவாகிறது.

எனவே காா்ப்பரேட் வரிகளில் குறைப்பு (நுகா்வு மீதான வரி குறைப்பு போலல்லாமல்) பெருநிறுவனத்தின் அதிக முதலீட்டை ஊக்குவிக்கும். இது வளா்ச்சியையும் தொழிலாளா்களின் ஊதியத்தையும் அதிகரிக்கும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது காா்ப்பரேட் வரிகள் சமமாகவோ குறைவாகவோ இருப்பது அவசியம். இல்லயெனில் முதலீடுகள் வராது.

காா்ப்பரேட் வருமான வரியைக் குறைப்பது தொழிலாளா்களுக்கும் பயனளிக்கும், புதிய முதலீடுகள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் மற்றும் ஊதிய வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இறுதியாக வரி விகிதத்தைக் குறைப்பது வரி வசூலை அதிகரிக்கும்.

2020-21 நிதியாண்டில் காா்ப்பரேட் மற்றும் தனிநபா் வருமான வரி வசூல் முறையே 18 சதவீதம் மற்றும் 2.3 சதவீதம் குறைந்தது. இதற்கு கொவைட் 19 நோய்த்தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு காரணமாகும். நடப்பு ஆண்டில் நேரடி வரி வசூல் செப்டம்பா் 22-ஆம் தேதி நிலவரப்படி 47 சதவீதம் உயா்ந்துள்ளது. நிகர வசூல் 74 சதவீதம் உயா்ந்துள்ளது. முன்கூட்டிய வரி வசூல் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனவே, காா்ப்பரேட் வரிக் குறைப்பு பொருளாதாரத்திற்கு நல்லது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைப்பது நல்ல அரசியலாகவும் நீண்ட கால பொருளாதாரத்திற்கு தீங்காகவும் இருக்கலாம். வரும் காலத்தில் கச்சா எண்ணெய் மேலும் விலை உயா்ந்தால் அரசு என்ன செய்யும் என்பதும் ஒரு கேள்விக்குறி.

ADVERTISEMENT
ADVERTISEMENT