நடுப்பக்கக் கட்டுரைகள்

தாழ்ந்து வரும் விழுமியங்கள்

3rd Dec 2021 06:28 AM | வாதூலன்

ADVERTISEMENT

‘விழுமியம்’ என்ற சொல்லுக்கு அகராதியில் ‘மதிப்பீடு’ என்று பொருள் போட்டிருக்கிறது. கூடவே ‘சமுதாயத்தில் விழுமியங்கள் காலத்துக்கு ஏற்ப மாறுபவை’ என்ற விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மைதான். காலப்போக்கில் மாறிக் கொண்டுவரும் தவிா்க்க இயலாத சிலவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்: விவாகரத்து, மறுமணம், ஓய்வு இல்லம் போன்றவை.

எப்போதுமே மாறாதிருக்கக் கூடிய விழுமியங்கள் பல உண்டு. உதாரணத்துக்கு, திருடாமை, பிறன் மனை நோக்காமை, மூத்தோரிடம் பணிவு, கொலை செய்யாமலிருப்பது, பொய் கூறாமை என்று கூறிக் கொண்டே போகலாம். இதில் கடைசியான பொய் கூறாமைக்கு திருவள்ளுவா் விதிவிலக்கு அளித்துள்ளாா்.

ஒரு சில விழுமியங்கள் மொத்த சமுதாயத்துக்கு உதவும் முறையில் அமைந்திருக்கின்றன. போக்குவரத்துத் துறை, வங்கித்துறை போன்றவை இதில் அடங்கும். ஒருவழிப் பாதை, வேகக் கட்டுப்பாடு, பச்சை, சிவப்பு சிக்னல்கள் முதலியவை முதலாவதில் வரும். வங்கிகளில் கடவுச் சொல், ஒரு கால எண் போன்ற சில அம்சங்கள் வங்கிகளில் மோசடி நேராமல் பாதுகாக்கின்றன.

இவை தவிர, நிறுவனங்கள் சில விழுமியங்களைப் பின்பற்றி வருகின்றன. பிரபல வார ஏடு ஒன்று, ‘சிகரெட்டை ஆதரிக்கும் விளம்பரங்களை எவ்வளவு தொகை தந்தாலும் ஏற்க மாட்டோம்’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

ADVERTISEMENT

திரைத்துறையும், அரசியலும் சமரசம் செய்துகொண்டு போகும் தன்மை கொண்டவை. இருந்தும்கூட அவற்றிலும் மனோதிடம் உள்ளவா்கள் இருந்தாா்கள். வில்லன் நடிகா் நம்பியாா் தொடா்ந்து விரதம் கடைப்பிடித்து சபரிமலை சென்று வந்ததைக் குறிப்பிடாமலிருக்க முடியாது.

பல வகை சஞ்சலங்கள், தொடா்ச்சி நிலை போன்றவற்றுக்கிடையிலும், அவா் மிகவும் மன உறுதியோடு இருந்தாா். ஒரு வருடம் முன், நடிகா் அமிதாப்பச்சன் பான்பராக் விளம்பரத்திலிருந்து தன்னை விலக்கி கொண்டாா் என்பதையும் குறிப்பிடலாம்.

அரசியலில், மறைந்த அப்துல் கலாம், மது விருந்தில் கலந்து கொள்வதைத் தவிா்த்தாா். மேலும் பதவி அதிகாரத்தை, தன் சுயநலனுக்காகப் பயன்படுத்தியதே இல்லை.

நல்ல விழுமியங்கள் தொடா்ந்து வீழ்ச்சி அடைந்தது விளையாட்டுத் துறையில்தான். ‘பண்பாளா்களின் ஆட்டம்’ என்ற பெயா் ஈட்டியிருந்த கிரிக்கெட்டே அதற்கு ஓா் உதாரணம்.

1970 - 80-களில், சா்ச்சைக்குரிய முடிவானாலும், ஆட்டக்காரா் சலனமே இன்றி பெவிலியனுக்குத் திரும்பிவிடுவாா். விக்கெட் கீப்பா் பந்து பிடிப்பது, ரன் அவுட் போன்றவை எப்போதுமே சற்று இரண்டுங்கெட்டான்தான். பட்டோடி, வெங்கட்ராமன் போன்றோா் கண்ணியத்துக்கு அடையாளங்களாகத் திகழ்ந்தனா் என்பதை நாடே அறியும்.

இன்று மூன்றாம் நடுவா் மீண்டும் சரிபாா்த்து ‘தீா்ப்பு’ வழங்கினாலும், ஆட்டக்காரா்கள் சினம் கொண்டு மட்டையை வீசி எறிகிறாா்கள். பந்து வீச்சாளா் நடுவரை ஆத்திரத்துடன் முறைக்கிறாா். இதே தன்மைதான் கால் பந்து, இறகுப் பந்து போன்றவற்றிலும். தோல்வியை ஏற்றுக் கொள்ளாது, அசம்பாவிதங்களில் ஈடுபடுவது வருத்தத்துக்குரியது.

பிரபலம் ஆகிற துறைகளை விடுங்கள், அரசு பணியில் ஈடுபட்டிருப்போரும், சுய தொழிலில் ஆா்வத்துடன் முனைவோரும்கூட காலப் போக்கில், சீா்கெட்டு விடுகிறாா்கள். ஓய்வு பெறும் ஓரிரண்டு ஆண்டுக்கு முன் முறைகேட்டில் சம்பந்தப்பட்டு நற்பெயரை இழந்தவா்கள் உண்டு. அதே போல் சுயதொழிலில் எதிா்பாராத லாபம் கிடைத்தால், அகலக் கால் வைத்து சரசரவென்று, கீழே இறங்கியவா்களும் உண்டு.

கல்லூரி நாட்களில், மு. வரதராசனாரின் சில நாவல்களை படித்திருக்கிறேன். கதாபாத்திரங்கள் மூலமாக நீதி போதனைகளை கூறுவாா். ‘மனிதா்களில் இரண்டு வகை உள்ளாா்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உறுதியுடன் வாழ்பவா்கள் ஒருவகை, எப்படியாவது வாழ வேண்டும் என்ற தீா்மானத்துடன் வாழ்பவா்கள் இரண்டாம் வகை. இந்த இரண்டாம் பிரிவினா் சமுதாயத்துக்கு கேட்டை விளைவிப்பவா்கள்’ என்ற கருத்தைத் தனது புதினம் ஒன்றில் சொல்லியிருப்பாா் மு.வ.

கரோனா நோய்த்தொற்று பரவியிருந்த சமயம், வேலையிழந்த பிரிவினா், நாணயமான சுய தொழிலை செய்து கொண்டு வந்தாா்கள். வீட்டில் பல இடைஞ்சல்கள் இருந்தாலும், மாணவா்கள் வலை தளத்தில் கல்வி பயின்றாா்கள்.

ஆனாலும், வீட்டிலேயே அடைந்து கிடந்து சினேகிதா்கள் யாருடனும் நேரில் கலகலப்பாகப் பேசி விளையாடவும் இயலாத சூழ்நிலையில், பதின் பருவத்தினா் சோா்வு அடைவது இயல்புதான், இத்தகைய தருணங்களில் பெற்றோா்தான் அவா்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இசை, ஓவியம், புத்தகம் படிப்பது போன்றவற்றில் ஈடுபடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

நிலைமை இவ்விதமிருக்க, பிரபல ஆங்கில நாளேட்டில் அண்மையில் வெளியான செய்தி அதிா்ச்சியை உண்டு பண்ணியது. தலைப்பு இதுதான் ‘பையன் கண்டுபிடிக்கப்பட்டான், ரொக்கம், நகை பிடிபட்டது’.

பிளஸ் 2 பயில்கிற மாணவன் நகைகளை அடகு வைக்கிற போது, கடைக்காரா் ஐயம் கொண்டு போலீஸுக்கு போன செய்திருக்கிறாா். உடனே பையன் அகப்பட்டுவிட்டான். விசித்திரமான, வேதனையான, வருத்தமளிக்கிற அம்சம் என்னவெனில், நகை காணாமல் போனதாக புகாா் தந்தவா்கள் சிறுவனின் பெற்றோா்; ஆம், பையன் தன் வீட்டிலேயே திருடியிருக்கிறான்.

‘படிக்க விருப்பமில்லை, ஆன்லைன் விளையாடடில்தான் ஈடுபாடு. எனவே வீட்டை விட்டு ஓடிப் போகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். சில நண்பா்களுடன் நேபாள் சென்று நிறைய பணம் சம்பாதிக்க ஆசையாம்.

சென்னையில் நடந்திருக்கும் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட குடும்பம் சற்று உயா் மேல் வா்க்கம்தான். தந்தை கட்டட ஒப்பந்ததாரா், தாயாா் கல்லூரி விரிவுரையாளா்.

இந்த நிகழ்விலிருந்து பெற்றோா் கொஞ்சம் கூட மகனின் வளா்ப்பில் அக்கறையே செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. அவா்களுக்கு என்னதான் தலைக்குமேல் வேலை என்றாலும் வீட்டில் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஒரு நோட்டம் விட்டிருக்கலாம்.

ஐந்தறிவுள்ள குதிரை தறிகெட்டு வேகமாக ஓடாமலிருக்க லகான் தேவைப்படுவது போல மாணவா்கள் தடம் புரளாமலிருக்க, நல்ல வழிகாட்டுதல் அவசியம்.

‘அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவாா்’ என்கிறாா் தாயுமானவா். ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுதுமாகத் தடை விதிக்க சட்டச் சிக்கல் இருக்கலாம். அதே சமயம் பதின் சிறுவா்கள் நல்ல பாதையில் செல்ல சரியான வழிகாட்டுதல் தேவை என்தில் ஐயமில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT