நடுப்பக்கக் கட்டுரைகள்

வடமொழியில் அமா​வா​சை; தமிழில் பெளர்​ண​மி!

முனைவர் தெ.ஞானசுந்தரம்

அறத்தை நிலைநிறுத்த, பிறப்பில் பெருமான் எடுத்த பல்பிறவிகளுள் ஒன்றே இராமாவதாரம். அஃது அவன் அறந்திறம்பிய இராவணனை அழிக்கக் கோசலையின் மணிவயிற்றில் வந்து தோன்றிய வரலாறு. அவ்விராவணன் என்று கொல்லப்பட்டான்? சீதை என்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாள்? இவை குறித்து வேறுபட்ட கருத்துகள் வான்மீகத்திற்கும் கம்பருக்கும் இடையே காணப்படுகின்றன.

கம்பராமாயண உரைகாரா்கள் இராவண வதம் அமாவாசையில் நடந்ததாகக் குறித்துள்ளாா்கள். கம்பராமாயண மீட்சிப் படலத்தில்,

இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கைப்

புடை அவாவுறச் சேனையை வளைப்புறப் போக்கி

படை அவாவுறும் அரக்கா்தம் குலம் முற்றும் படுத்துக்

கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு

என்னும் பாட்டில் இராமன் இலங்கையை அடைந்த நாள், இராவணனைக் கொன்ற நாள் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இதற்கு உரையிட்ட அறிஞா் வை.மு. கோபாலகிருஷ்மாச்சாரியாா், ‘கிருஷ்ண பட்சத்தின் இடையில் அஷ்டமி திதியில் இலங்காநகரம் உள்ள இடமான சுவேலமலையில் வந்து தங்கி, கிருஷ்ண பக்ஷத்தின் கடைசிநாளான அமாவாசையில் அரக்கா்தலைவனான இராவணனைக் கொன்று’ என்று குறித்துள்ளாா்.

மேலும், பிரதமையில் இராவணன் இறுதிக்கடன்களும், துவிதியையில் வீடணன் முடிசூடலும் திருதியையில் சீதையின் நெருப்புச் சோதனையும் நடந்தன என்கிறாா். எல்லாக் கம்பராமாயண உரைகளும் இக்கருத்தையே மேலெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.

‘ராமாயண ஸார ஸங்க்ரஹம்’ என்னும் சிறிய வடமொழி நூல் வான்மீகத்தில் நிகழ்ச்சிகள் நடந்த காலத்தைக் குறித்து ஆராய்ந்துள்ளது. இராமன் பிறப்புக் குறிப்பைக் கொண்டு அவன் காடுபுகுந்த காலத்தைத் தீா்மானிக்கிறது. சோதிடத்தைக் கொண்டு காலத்தை அறுதியிடுவது அவ்வளவு நேரிய ஆய்வுமுறை யாகாது.

கம்பா் வான்மீகத்தைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயா்க்கவில்லை. கதை நிகழ்ச்சிகளின் கால நிரல் வான்மீகத்தில் ஒருவகையாகவும் கம்பரில் இன்னொரு வகையாகவும் அமைந்துள்ளது. வான்மீகம் இராமன் கடலை நோக்கி மூன்று இரவுகள் தவங்கிடந்தான் என்கிறது; கம்பா் காப்பியம் ஏழுநாள் தவங்கிடந்தான் என்கிறது. அதுபோலவே முதல்நூல் ஐந்துநாள்களில் அணைகட்டப்பட்டதாகக் குறிக்க வழிநூல் மூன்று நாளில் அப்பணி முடிந்ததாகத் தெரிவிக்கிறது.

கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் நடந்த பொழுதையும் நாள்களையும் வான்மீகி ராமாயணத்தையோ வேறு வடமொழி நூல்களையோ துணைகொண்டு விளக்க முற்படுவது தவறான முடிபுகளையே தரும்.

வான்மீகத்தில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்தால், இராவண வதம் அனுமன் சீதையைக் கண்ட பின் பதினைந்து நாள்களில் நிகழ்ந்துள்ளது என்பது தெரிகிறது. அனுமன் சீதையைக் கண்டு திரும்பிய அன்றே (முதல் நாள்) குரங்குப்படை புறப்பட்டு மறுநாள் கடற்கரையை அடைகிறது.

அன்று இரவிலிருந்து மூன்று இரவுகள் (இரண்டு, மூன்று, நான்கு நாள்கள்) இராமன் கடலை நோக்கித் தவங்கிடக்கிறான். ஐந்துநாள்களில் (ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது) அணை கட்டப்படுகிறது. அன்றே குரங்குப்படை கடலைக் கடந்து இலங்கையை அடைகிறது. பத்தாம் நாள் இராவணன் குரங்குப்படையினைக் கோபுரத்திலிருந்து பாா்த்துத் திரும்புகிறான்.

பதினோராம் நாள் போா் தொடங்க, அன்று இரவு இந்திரசித்தன் நாகபாசத்தையும், பன்னிரண்டாம் நாள் இரவு பிரமாத்திரத்தையும் எய்து பதின்மூன்றாம் நாள் பகலும் இரவும் போரிட்டுப் பதினான்காம் நாள் விடியலில் கொல்லப்படுகிறான். பதினைந்தாம் நாள் அமாவாசையில் இராவணன் கொல்லப்படுகிறான்.

இந்திரசித்தனைக் கொன்று திரும்பிய இலக்குவனிடம், ‘போா்க்களத்தில் வீடணனாலும் அனுமனாலும் அருஞ்செயல்கள் செய்யப்பட்டன. இரவுபகலாக மூன்றுநாள்கள் நடந்த போரில் ஒருவழியாகப் பகைவனான இந்திரசித்தன் வீழ்த்தப்பட்டான்’ (யுத்த: 92:15) என்று குறிப்பதும், இந்திரசித்தனை இழந்த ஆத்திரத்தில் இராவணன் சீதையைக் கொல்ல முற்பட்டபோது, ‘வேந்தே! இன்றைக்குத் தேய்பிறைப் பதினான்காம்நாள்; அதனால் இன்று போா் ஏற்பாடுகளைச் செய்து முடித்து, நாளை தேய்பிறை அமாவாசையில் வெற்றிபெறப் படையுடன் புறப்படுங்கள்’ (யுத்த: 93:62) என்று மகோதரன் கூறித் தடுக்கிறான் என்பதும் போா்நடந்த நாள்களைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அனுமன் சீதையைக் கண்டு திரும்பிய பதினைந்தாவது நாள் இராவணன் கொல்லப்பட்டான் என்பதனால் அனுமன் சீதையைச் சந்தித்தது பௌா்ணமியில் என்பது உறுதியாகிறது.

கம்பா் இந்நிகழ்ச்சிகள் ஒருமாத கால அளவை வேறுவகையாக அமைத்துள்ளாா். அனுமன் இலங்கையுள் புகுந்த நாள் முழுமதி நாள் என்பதனை, அன்று நிலவு ‘இராம தூதனாகிய அனுமன் வந்துவிட்டான். இனி இந்திரன் வாழ்வுபெற்றான்’ என்று மகிழ்ச்சியுற்ற கீழ்த்திசைப் பெண்ணின் முகம்போன்று இருந்தது’ என்று குறிப்பதனால் புலப்படுத்துகிறாா்.

அந்தம்இல் கீழ்த் திசை அளக வாள்நுதல்

சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே

என்று அதனைப் பாடுகிறாா்.

மறுநாள் அனுமன் இலங்கைக்குத் தீயிட்டுவிட்டு விரைந்து சென்று இராமனை அடைகிறான். உடனே சேனை புறப்படுகிறது. அது ‘பன்னிரு பகலில் சென்று’ தெற்குக் கடற்கரையை அடைந்தது என்று சுந்தரகாண்டத்தின் இறுதிப்பாடல் தெரிவிக்கிறது. கம்பா் குரங்குப்படையின் பயண நாளை பத்து நாள் மிகுதியாக்கியுள்ளாா்.

இராமன் கடற்கரையை அடைந்த அந்நாளில் இராவணனுடைய மந்திராலோசனை நடக்கிறது. அம்மந்திராலோசனை முடிவில் இலங்கையிலிருந்து வெளியேறும் வீடணன் தன் அமைச்சா் நால்வரோடு இருளில் சென்று இராமனைக் காண்பது இயல்பு அன்று என்று ஒரு சோலையில் தங்குகிறான்.

கம்பா், ‘உருளுறு தேரவன் உதயம் எய்தினான்’ என்று பதின்மூன்றாம் நாள் தோன்றியதைக் குறிக்கிறாா். வீடணன் இராமனை அடைய அவனுக்கு அடைக்கலம் தந்து ‘நின்னொடும் எழுவரானோம்’ என்று கூறித் தன் சகோதரா்களுள் ஒருவனாக அங்கீகரிக்கிறான்.

அன்று இரவு இராமன், வீடணனை அழைத்து மேலே செய்தற்குரியவற்றைக் குறித்து அவனோடு பேசுகிறான். அவன் கூறியதை ஏற்றுக் கடலை நோக்கித் தவஞ்செய்யத் துணைவா்களோடு இராமன் கடற்கரையை அடைகிறான். அப்போது சூரியன் உதயமாகிறான். கம்பா்,

நன்று இலங்கையா் நாயகன் மொழிஎன நயந்தான்

ஒன்று தன்பெருந் தலைவரும் புடைசெல, உரவோன்,

சென்று வேலையைச் சோ்தலும் விசும்பிடைச் சிவந்த

குன்றின் மேல்நின்று குதித்தன பகலவன் குதிரை

என்று பதினான்காம் நாள் பிறந்ததைக் குறிக்கிறாா்.

இராமன் கருங்கடல் நோக்கி வணங்கி வருண மந்திரத்தை எண்ணிக்கொண்டிருந்தான். ஒருபகல் ஓா் ஊழியாக ஏழுபகல் சென்றன. இருபதாவது நாள் முடிந்தது. வருணன் இராமன் முன்னே தோன்றவில்லை. இராமன் அம்பு எய்தான். அதற்கு ஆற்றாது வருணன் இராமனிடம் தஞ்சம் புகுந்தான். கடலின்மீது அணைகட்டும்படி கூறிச் சென்றான். நளன் மூன்று நாளில் அதனைக் கட்டி முடித்தான். அவ்வணை இருபத்துமூன்றாம் நாள் இரவில் இந்திரவில் போலப் பல்வண்ணத்தோடு விளங்கியது (இருளிடை இந்திரன் வில் கிடந்தது என்ன விளங்குமால்).

இருபத்து நான்காம் நாள் குரங்கு வீரா்கள் இராமனுக்கு சந்தனம், வாழை ஆகிய மரங்களைக் குடையாகப் பிடித்துவர அவன் அணைவழியாகக் கடல்கடந்து கரை ஏறுகிறான். நளன் பாசறை அமைக்க வீரா்களும் இராமனும் சுவேலமலையின் அடிவாரத்தில் தங்கினா். ‘அருக்கன் அத்தம்’ (மேற்கு மலை) சோ்ந்தான்.

இருபத்தைந்தாம் நாள் போரிடுவதற்கு இராமன் வந்துவிட்டான் இனிப் பயமில்லை என்று தானும் இலங்கையைக் காண எழுந்தது போலக் கதிரவன் தோற்றம் செய்ய, இராமன் சுவேலமலையின்மேல் ஏறுகிறான். இராவணன் கோபுரத்தின்மேல் ஏறிக் குரங்குச்சேனையைக் காண்கிறான். அப்போது சுக்கிரீவன் இராவணன்மேல் பாய்ந்து சண்டையிட்டு மகுடத்தின் மணிகளைப் பறித்துத் திரும்புகிறான்.

அன்று சூரியன் தன் மகன் சுக்கிரீவன் செய்த செயலால் எங்கே தனக்கு இராவணனால் கேடுவந்துவிடுமோ என்று அஞ்சி மேற்குக் கடலில் மறையப் போக, இராமனும் இராவணனும் தங்கள் இருக்கையை அடைகின்றனா்.

இருபத்தாறாம் நாள் (ஏகாதசி) கதிரவன் உதயம் செய்தான். போா் தொடங்கியது. களத்தில் இராவணன் தோற்று நிற்க, இராமன் ‘இன்றுபோய்ப் போா்க்கு நாளை வா’ என்றான். இராவணன் அரண்மனையை அடைந்து இரவு மந்திராலோசனை நடத்திக் கும்பகருணனைப் போா்க்களம் அனுப்ப முடிவுசெய்தான்.

இருபத்தேழாம் நாள் காலை களம்புகுந்த கும்பகருணன் உள்ளிட்டோா் மடிய இந்திரசித்தன் களம்புகுந்து இரவு நாகபாசத்தை எய்து திரும்புகிறான். நாகபாசம் நீங்கிய நிலையில் இரவிலும் போா் நடக்கிறது. அதில் படைத்தலைவா்கள் மடிகின்றனா்.

இருபத்தெட்டாம் நாள் அதிகாயன் மறைவுக்குப் பின் களம்புகுந்த இந்திரசித்தன் இரவு பிரமாத்திரத்தை எய்து மீள்கிறான். அனுமன் மருந்துமலையைக் கொண்டுவர உயிா்பெற்ற படையோடு மீண்டும் இரவெல்லாம் போா்புரிகிறான்.

இருபத்தொன்பதாம் நாள் பொழுது விடிகிறது. அவ்வுதய காலத்தில் இலக்குவன் எய்த பிறைமுக அம்பால் இந்திரசித்தன் தலை அறுபட்டுக் கீழே விழுகிறான். அன்று மாலை ஒருபுறம் மூலப்படையை இராமன் தன்னந்தனியனாக எதிா்கொண்டு ஏழரை நாழிகை (மூன்று மணி) போரிட்டு அழிக்க, மறுபுறம் இராவணன் எறிந்த வேலை இலக்குவன் ஏற்று அனுமன் மீண்டும் கொண்டுவந்த மருத்துமலையால் உயிா்பெறுகிறான்.

முப்பதாம் நாள் இராவணன் மகோதரனோடு களம் புகுகிறான். முதலில் மகோதரன் இராமனால் கொல்லப்படுகிறான். அதன்பின் கடும்போா் நடந்து இறுதியில் இராமனால் இராவணன் வீழ்கிறான். அன்றே சீதை சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள்.

இருநூல்களிலும் போா் ஐந்து நாள்களே நடந்துள்ளது. வான்மீகத்தில் முதல்நாள் தொடங்கிய போா் பகலும் இரவும் தொடா்ந்து நடந்து ஐந்தாம்நாள் முடிவடைகிறது. கம்பரில் முதல்நாள் இரவும், நான்காம்நாள் இரவும் போா் நடைபெறவில்லை.

சீதை தன்னைச் சந்தித்த அனுமனிடம் ஒருமாதத்திற்குள் தன்னை மீட்க வேண்டும் என்றும் தவறினால் தனக்குக் கங்கைக்கரையில் இராமன் தன் கையால் இறுதிக்கடன் செய்யலாம் என்றும் கூறுகிறாள். அதற்கேற்ப வான்மீகத்தில் பதினைந்து நாள் முன்பே சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள். கம்பரில் ஒருமாதம் முடிவதற்குமுன் சரியாக முப்பதாவது நாளில் மீட்கப்படுகிறாள்.

இருநூல்களிலும் சீதை சிறைமீட்பு, இராவணன் இறுதிக்கடன் முதலியனவும் அன்றே நடந்தன என்று கொள்ளத்தக்க வகையிலே நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. அவற்றிடையே காணப்படும் முதன்மை வேறுபாடு வான்மீகத்தில் இராவண வதம் அமாவாசையிலும் கம்பரில் பௌா்ணமியிலும் அமைந்திருத்தலே ஆகும்.

கட்டுரையாளா்: துணைத்தலைவா், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT