நடுப்பக்கக் கட்டுரைகள்

பொதுத்துறை வங்கிகள்: தனியார்மயம் தீர்வல்ல!

பி .எஸ்.எம். ராவ்

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்வதை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. அண்மையில் நிதிநிலை அறிக்கையின்போது இரு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தவிர ஐடிபிஐ வங்கி பங்குகளின் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் பொதுத்துறை வங்கிகள் திறம்படச் செயல்படும் நிலையில், அவற்றை விற்பனை செய்யத் துடிப்பது ஏன்? 

தனியார்மயமாக்கம் காரணமாக மேற்படி வங்கிகளின் லாபம் அதிகரிக்கப் போகிறதா? மக்கள் சேமிக்கும் வைப்புத்தொகை தனியார் வங்கிகளில் பத்திரமாக இருக்குமா? அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகளை விட தனியார் வங்கிகள் சிறப்பாக இயங்குகின்றன என்பதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளதா?
1969}இல் 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. அச்சமயத்தில் நாடு முழுவதும் 8,187 வங்கிக்கிளைகள் மட்டுமே இருந்தன. இப்போது வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1,60,827.  வங்கிகள் தேசியமயமாக்கத்தால்தான் இது சாத்தியமானது என்பதை அரசு மறுக்க முடியாது.

 ஊரகப் பகுதிகளில் 1969}இல் இருந்த வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1,443; இது செப்டம்பர் 2020 நிலவரப்படி 52,632 ஆக அதிகரித்திருக்கிறது. அவற்றின் நிதிப்பங்களிப்பும் 17.6 % லிருந்து 32.72 % ஆக உயர்ந்திருக்கிறது. வங்கித்துறை சீர்திருத்தம் 1990}களில் தொடங்கியபோது, ஊரக வங்கிக் கிளைகளின் நிதிப்பங்களிப்பு 58.2 % ஆக உச்சத்தில் இருந்தது.

பட்டியிலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் மக்களுக்கு அளித்த கடன் தொகையின் மதிப்பு 1969}இல் ரூ.3,987 கோடியாக இருந்தது, 2021 ஜனவரி 1 நிலவரப்படி ரூ. 1,07,04,649 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 1969}இல் வங்கிகளிடமிருந்த ஒட்டுமொத்த வைப்புத்தொகை ரூ. 3,035 கோடி மட்டுமே. அது தற்போது ரூ. 1,47,26,753 கோடியாகப் பெருகியுள்ளது.

அதேசமயம், தனியார் வங்கிகளின் கடனளிப்பும் வைப்புத்தொகை இருப்பும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. 2020 மார்ச் மாத நிலவரப்படி, தனியார் வங்கிகளின் வைப்புத்தொகை ரூ. 40,40,424 கோடியாகும் (30.88 %). அதே காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் வைப்புத்தொகை ரூ. 90,43,443 கோடி (69.12 %). தவிர, வங்கிகளின் கடனளிப்பை ஒப்பிட்டால், தனியார் வங்கிகள் ரூ. 37,07,435 கோடியை அளித்துள்ளன (36.79 %); பொதுத்துறை வங்கிகள் ரூ. 63,71,042 கோடியை அளித்துள்ளன (63.21 %) மேற்கண்ட அம்சங்களைப் பரிசீலிக்கும்போது, மக்கள்நலனைக் கருத்தில் கொண்டு இயங்குவதில் தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளே சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளை அணுகுவதில் பொதுத்துறை வங்கிகளே முன்னிலை வகிக்கின்றன.  
நாட்டிலுள்ள 6 லட்சம் கிராமங்களில் வங்கிக்கிளை உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 52,000 மட்டுமே. அதாவது இன்னமும் 87 % ஊரகப் பகுதிகளுக்கு வங்கிச் சேவை விரிவடைய வேண்டியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதுசார்ந்த துணை வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட பிற வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் (ஆர்.ஆர்.பி.) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ஊரகப் பகுதிகளில் கொண்டுள்ள கிளைகளின் எண்ணிக்கை 44,397 (மொத்த ஊரகக் கிளைகளில் 84.35 %). தனியார் துறையில் இந்த எண்ணிக்கை 8,235 மட்டுமே (15.65 %). இவற்றில் தனியார் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 7,317;  சிறு நிதி வங்கி (எஸ்.எஃப்.பி.) மற்றும் வெளிநாட்டு வங்கிக்கிளைகள் 918 ஆகும்.  

வங்கிக் கிளைகளை அமைப்பதில் மட்டுமல்ல, ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுவதிலும் தனியார் வங்கிகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. 2020 டிசம்பர் மாத நிலவரப்படி, ஊரகப் பகுதிகளிலுள்ள மொத்த ஏடிஎம்களில் (33,312) தனியார் வங்கி ஏடிஎம்களின் எண்ணிக்கை 6,112 மட்டுமே (18.34 %).
1969}இல் தனியார் வங்கிகள் தோல்வியடைந்ததால்தான் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டி வந்தது. பிரிட்டீஷார் ஆண்டபோதே பல தனியார் வங்கிகள் திவாலாகி  உள்ளன. அதற்கு வணிக நிறுவனங்கள் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பிரதானக் காரணமாக அமைந்தது. அலெக்ஸôண்டர் அண்ட் கோ, ஃபெர்குஸன் அண்ட் கோ போன்ற வணிக நிறுவனங்கள் அக்காலத்தில் வங்கிக் கிளைகளை அமைத்தன. பொதுமக்கள் அந்த வங்கிகளில் சேமித்த பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போனபோது, அந்த வங்கிகளின் தோல்வியிலிருந்து பெற்ற பாடம் காரணமாக, அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு, வணிக நிறுவனங்கள் வங்கிச் செயல்பாடுகளில் ஈடுபடத் தடை விதித்து சட்டமே இயற்றியது.

சுதந்திர இந்தியாவிலும் 1947 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 559 தனியார் வங்கிகள் திவாலாகின. அவ்வாறு வீழ்ச்சி அடைந்த தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களைக் காக்க, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உதவியுள்ளன. அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அறிக்கைப்படி, 1969 முதல் 2020 வரை, 25 தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கியுடன் எஸ் வங்கி இணைக்கப்பட்டது  மிகச் சமீபத்திய உதாரணமாகும்.

சமூகநலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதில் பொதுத்துறை வங்கிகளே என்றும் முன்னிலையில் இருந்து வருகின்றன. உதாரணமாக, எளிய மக்களுக்கு உதவியாக மத்திய அரசு துவக்கிக் கொடுத்த 41.98 கோடி "ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் 97.2% பொதுத்துறை வங்கிகளால்தான் கையாளப்படுகின்றன. தனியார் வங்கிகளின் "ஜன்தன்' பங்களிப்பு 2.5% மட்டுமே.

சுயஉதவிக் குழுக்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை 1.02 கோடியாகும். இவற்றில் மண்டல ஊரக வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 80 லட்சமாகும் ( 78 %). இதில் தனியாரின் பங்கு விகிதம் 7 % .
2020 மார்ச் 1 நிலவரப்படி, சுயஉதவிக் குழுக்கள் வங்கிகளில் சேமித்துள்ள தொகையின் மதிப்பு ரூ. 1.08 லட்சம் கோடியாகும். இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு ரூ. 94,291 கோடி (87.25 %). இதில் தனியார் வங்கிகளின் பங்கு விகிதம் 6.7 %. அதாவது, சமுதாய லாபம் என்பது தனியார் வங்கிகளின் இலக்காக என்றும் இருந்ததில்லை.

2020 மார்ச் மாத நிலவரப்படி, விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை ரூ.4,50,207 கோடி (மொத்தக் கடனில் 86.6 %). இதற்காக 3.88 கோடி விவசாயிகளின் கடன் கணக்குகளை அவை கையாள்கின்றன. அதேசமயம், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் தனியார் துறை வழக்கம்போல பின்தங்கி உள்ளது. அதன் பங்களிப்பு ரூ.72,893 கோடி (13.94 % ) மட்டுமே.

2015}16 முதல் 2019} 20 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபம் ரூ. 7,77,043 கோடி ஆகும். 
மோசமான கடன்கள் வழங்கப்பட்டதன் காரணமாக ரூ. 9,84,415 கோடி இழப்பு ஏற்பட்டதால்தான், பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ. 2,07,372 கோடியாக மதிப்பிடப்படுகிறது.

கடனைத் திரும்பச் செலுத்தும் திறனுள்ளவர்கள் கூட வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவிர்ப்பதாக, வங்கி  ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த மோசமான கடன் தொகையில் பெருமளவிலானவை பெரு நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) வழங்கப்பட்டவையாகும். 

2001 முதல் 2009 வரை, இந்தக் கடன் தொகையில் ஒரு பகுதி வங்கிகளின் பேரேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மோசமான கடன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெரும் தொகையின் மதிப்பு கொஞ்சநஞ்சமல்ல, ரூ.6,94,037 கோடியாகும்.

2020}21 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வாராக் கடன்களை (என்பிஏ) பொருத்த வரையிலும் கூட, பொதுத்துறை வங்கிகளின் இழப்பு விகிதம் தனியாருடன் ஒப்பிடுகையில் குறைவே. 2020 மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ. 6,87,317 கோடி; தனியார் வங்கிகளின் வாராக்கடன் ரூ. 2,05,848 கோடி.  

பொதுத்துறை வங்கிகளின் வர்த்தக இழப்புக்கு மோசமான கடன்கள், வாராக் கடன்கள் போன்றவையே காரணம் என்பதுதான் உண்மை.  இதில் பெருமளவு பெருநிறுவனங்கள் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியதால் விளைந்ததாகும். 

வங்கிகளின் கடன் பேரேட்டிலிருந்து நீக்கப்பட்ட 50 பெரு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் மதிப்பு மட்டுமே ரூ. 68,607 கோடி! 
இவ்வாறு கடனைத் திரும்பச் செலுத்தாத அதே தனியாருக்குத்தான் பொதுத்துறை வங்கிகள் விற்கப்படுகின்றன! இதில் எந்த அறிவுபூர்வமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பது அவசியம்; குறைந்த செலவில் மக்களுக்கு நிறைந்த வங்கி சேவை அளித்தாக வேண்டியுள்ளது; இன்னமும் மக்களில் பெரும்பான்மையினர் வங்கிச் சேவையைப் பெற முடியாமல் உள்ளனர்; விவசாயிகளும் ஏழைகளும் வங்கிகளின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றனர்; இத்தகைய நிலையில் பொதுத்துறை வங்கிகளை மேலும் வலுப்படுத்துவதே அவசியம். தனியார்மயம் தீர்வல்ல. 
    
கட்டுரையாளர்:
பொருளாதார நிபுணர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT