நடுப்பக்கக் கட்டுரைகள்

கோயில் என்பது...

7th Apr 2021 04:52 AM |  கோதை ஜோதிலட்சுமி

ADVERTISEMENT

 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் கட்டடக்கலையின் உச்சம் என்று பாராட்டப்படும் கோயில்களை அமைத்த மன்னர்கள் யாரும் தங்கள் அரண்மனைகள் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் வகையில் கட்டிக் கொண்டு வசிக்கவில்லை என்பதை உற்று நோக்கும் அறிவு நமக்கு இருந்தால் கோயில்கள் நிறைய செய்திகளைச் சொல்லும்.
 "தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல' என்றோர் அரசியல் வாதம் நிலவுகிறது. கோயில்களில் நடக்கும் வழிபாடுகள் கோயில் முறைமை அனைத்தும் ஆரியர் புகுத்திய சதி என்பதான அர்த்தமற்ற பேச்சுகள் உலவுகின்றன. தமிழறியாதவர்கள் அவ்விதம் பேசலாம். தமிழறிந்த சான்றோர் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
 திருமூலரின் "திருமந்திரம்' ஆகம நூல். கோயில் அமைப்புக்கான ஆகம சாத்திரங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஒன்பது ஆகமங்களே திருமந்திரத்தின் ஒன்பது பிரிவுகளில் "தந்திரங்கள்' என்று சொல்லப்பட்டுள்ளன. திருமந்திரம் எந்த சம்ஸ்க்ருத நூலின் மொழிபெயர்ப்பும் அல்ல. திருமூலரின் தமிழ் எளிமையும் கருத்துச் செறிவும் மிக்க தமிழுக்கான அடையாளம்.
 கோயில் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை விஸ்தாரமாகச் சொல்லும் நூல், கோயில்களில் விதிமுறைகளோடு பூஜைகள் நடக்காமல் போனால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை,
 "ஆற்றரு நோய்மிக்கு அவனி
 மழையின்றிப்
 போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
 கூற்றுதைத்தான் திருக் கோவில்கள்
 எல்லாம்
 சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே' - என்று எச்சரிக்கிறது.
 முன்னோரின் அறிவாற்றலுக்கு உதாரணமாக நிற்பவை கோயில்கள். வானியல் அற்புதங்கள், கட்டடக்கலை நுணுக்கங்கள், அதற்கான கணிதப்புலமை, பொறியியல் நுணுக்கம், ஒருங்கிணைப்பதற்கான இயந்திரப் பொறியியல், ஞானம், சிற்ப சாஸ்திரம் அதற்கான கலை நுணுக்கம், மண்வளம், கற்கள் பற்றிய அறிவு என நீளும் நிலவியல் புரிதல், உலோகங்களைப் பயன்படுத்துவதற்கான இயற்பியல், வேதியியல் அறிவு அனைத்தையும் செய்து முடிக்கும் மேலாண்மை, நிர்வாக அறிவு என்று பல அறிவுசார் அம்சங்களை உள்ளடக்கியது கோயில் அமைப்பு முறை.
 ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு ஒலி கேட்கும் அமைப்பு குக்கிராமங்களில் இருக்கும் கோயில்களில் கூட உண்டு. இதற்கு இரும்பை உருக்குவது போல கல்லை உருக்கி, அதன் அடர்த்தியை மாற்றி அமைத்து, விரும்பும் அளவிலான ஒலி கேட்கும் வகையில் வார்த்து வடிவமைத்திருக்கிறார்கள். அதற்கான கருவிகளும் தொழில் நுட்பமும் நம் சிற்பிகளிடம் அன்றைக்கு இருந்திருக்கிறது.
 உலகின் புகழ்மிக்க பல பல்கலைக்கழகங்களும் கோயில் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. காடு, மலை, அருவி, கடற்கரை, ஆற்றங்கரைகள் ஆகியவை மனித மனத்துக்குப் புத்துணர்வு தரும் மின்காந்த அலைகள் அதிகம் உள்ள இடங்கள் என்கிறது அறிவியல். அதே மின்காந்த அலைகளும் அதனால் ஏற்படும் அதிர்வுகளும் கோயில்களில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
 அதோடு மட்டுமல்லாது, பிரசித்தி பெற்ற கோயில்கள், மலைகளில், கடற்கரைக் கோயில்களாக, ஆற்றங்கரை நெடுகிலும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது முன்னோரின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. முன்னோரின் சாதனைகளைக் கொண்டாடுவதும் பாதுகாப்பதும் பொறுப்புணர்ந்தோரின் செயல். அதை விடுத்து, அவை நம்முடையவை அல்ல என்று ஒதுங்குவதோ, நம்முடைய மக்கள் மாற்றான் சொல்லுக்கு மயங்கி அவர்களின் கலாசாரத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று பேசுவதோ முன்னோருக்கு நாம் செய்யும் அவமரியாதை.
 மனிதன் தன்னைக் காக்க துணை தேவை என்று நம்புபவன். இறை நம்பிக்கை மனிதனின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த இறையை வணங்குவது என்பதில் மாற்றங்கள் தோன்றலாம். ஆனால், இறை நம்பிக்கை நிரந்தரமானது. அதை நன்கறிந்த நம் மூதாதையர், எது மனித மனத்தில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துமோ, எதனை மனிதன் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு தொடர்வானோ அதிலே அழிந்துவிடக் கூடாது என நினைத்து கலை, அறிவியல், வரலாறு, கலாசாரம், பண்பாட்டுக் கூறுகளைப் பிணைத்து வைத்தனர்.
 கோயில்கள் பண்பாடு, கலாசாரம், சமூகம் என எல்லாத் தளங்களிலும் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், படையெடுப்புகள், பிற சமய ஆக்கிரமிப்புகள் என்று தேசம் கொடுமைகளை, அழிவுகளை சந்தித்தாலும் நம் பண்பாட்டுக் கூறுகள், கலாசாரத்தின் வேர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கோயில்கள் பிரமாண்டமாய் கட்டப்பட்டுள்ளன.
 கல்லில் நாகஸ்வரம் செய்து வாசிக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது. இன்று அந்தக்கலை அழிந்துவிட்டது என்றாலும் இன்னும் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கும் கல் நாகஸ்வரம் நம் கலைக்கு சாட்சியாக நிற்கிறது. அக்கலை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்பையும் கோயில் சுமந்து நிற்கிறது.
 உணவு முறை, அதை சமைக்கும் நடைமுறை போன்றவை ஒரு கலாசாரத்தின் சிறப்பு அம்சங்கள். அவற்றை அந்நிய ஆதிக்கம், உலகமயமாக்கல் என்று பல காரணங்களைச் சொல்லி இல்லாமல் செய்துகொண்டிருக்கிறோம். நம் அடையாளங்கள் தொலைந்து கொண்டிருக்கின்றன. அவற்றைச் சற்றும் மாற்றாமல் அப்படியே காத்து வருபவை கோயில்கள்.
 நீராதாரங்களைக் காப்பதற்கான அமைப்பாக கோயில் குளங்கள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதியின் மண்வளத்திற்கேற்ப கோயில்களில் நந்தவனங்கள், மூலிகை வனங்கள், ஸ்தல விருக்ஷங்கள் என்று இயற்கைப் பாதுகாப்பு, காளை, பசுக்கள், ஆடுகள், மயில், சேவல், கோழி என கோயிலுக்கு நேர்ந்துகொண்டு தரப்படும் சக உயிரினங்கள் என்று கோயில் பல்லுயிர் பெருக்கத்திற்கான கேந்திரமாகவும் இருக்கிறது.
 மருத்துவச் சாலைகளாகவும் கோயில்கள் பயன்பட்டதை கல்வெட்டுகள் சொல்கின்றன. கோயில்களே பொழுதுபோக்கு அம்சங்களுக்கான இடமாக இருந்ததை திருவிழாக்கள் உணர்த்துகின்றன. மனஅழுத்தம் தீர்க்கவும் கோயில்கள் சிறந்த பங்காற்றுகின்றன. இன்று உலகின் பல நாடுகளிலும் மனஅழுத்தம் பெரும் பிரச்னையாக உள்ளதால், அதற்கான மருத்துவம் பெரிய அளவில் தேவைப்படுகிறது.
 நம் நாட்டைப் பொருத்தவரை வாழ்வில் ஏற்படும் எத்தகைய பிரச்னைக்கும் நாம் நாடிச் செல்லும் இடம் கோயில்தான். பிரார்த்தனைகள், நேர்த்திக்கடன்கள், பரிகாரங்கள் என்று மனத்தை லேசாக்கவும் திசைதிருப்பவும் நம்பிக்கையை வலுவாக்கவும் பல செயல்முறைகளைக் கோயில்கள் கொண்டிருக்கின்றன. அதனால்தான், இன்றளவும் மனநல மருத்துவம் பெரிதாக நமக்குத் தேவைப்படவில்லை. கோயில்கள் இல்லாத அந்நிய நாடுகளுக்குத் தேவைப்படுகிறது.
 கோயில்கள் சமூக ஒருங்கிணைப்புக்கான களமாகவே இருந்திருக்கின்றன. யார் கோயிலுக்குள் நுழையலாம், யார் நுழையக்கூடாது போன்ற மூடத்தனங்கள் எல்லாம் காலத்தால் பிற்பட்டவை. கோயிலுக்குள் எப்படி நுழைய வேண்டும், அதற்கான தூய்மை விதிகள் யாவை என்பவற்றைப் பற்றி மட்டுமே சாஸ்திரங்கள் சொல்கின்றன.
 மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் ஆலயம் ஒரு கடற்கரைக் கோயில். ஆலயத்தின் பத்து நாள் திருவிழாவில் ஒரு நாள் விழா, அந்தக் கடல்புரத்தின் மீனவ மக்களுக்கானது என்று ராஜராஜன் கல்வெட்டு சொல்கிறது. இன்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேர் இழுக்கும் உரிமை உடையவர்கள் அந்த ஊரின் பரதவ குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
 சில கோயில்களில் திருவிழாவின்போது உற்சவரை வீதியுலாவுக்கு அலங்கரித்து அன்றன்றைய வாகனங்களில் எழுந்தருளச் செய்யும் உரிமை கொண்டவர்கள் பட்டியலின மக்கள். கோயிலுக்குக் கொடை அளித்தவர்கள் வரிசையிலும் பேதம் இல்லை. ஆண்-பெண் பாகுபாடு கூட இல்லை.
 திருவண்ணாமலையில் ஒரு பெண் தன் சொத்துகளை செலவு செய்து ஆலய கோபுரம் எழுப்ப முயன்றிருக்கிறார். "அம்மணி அம்மாள் கோபுரம்' என்று இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கிறது அக்கோபுரம்.
 ஒரு குடியானவப் பெண் தந்த கல், பெரியகோயிலை அலங்கரித்து நிற்கிறது.
 இன்னும் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் தந்தவர் தொடங்கி, ஆடு, மாடு தந்தவர் முதல் தன் சொத்துகளை எல்லாம் தந்தவர் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் முயற்சியும் பங்களிப்பும் கோயில்களில் உண்டு.
 கோயில்களும் ஆகம விதிகளும் நம்முடைய அறிவியல் இல்லை என்று சொல்லி நம் முன்னோரின் அறிவுச் செல்வத்தை நிர்மூலம் செய்யப்போகிறோமா? ஆகமமும் அதனைச் செயல்படுத்திய அறிவியலும் அறிவியலைத் தாங்கி நிற்கும் நுண் கலையும் நம்முடையவை. ஆரியம் - திராவிடம் என்ற மாயைகளுக்குள் சிக்கி நம் பெருமைகளை நாமே கேள்விக்குள்ளாக்குவது அறியாமை.
 அறிவுத் தேடலில் திளைத்திருந்த நம் தேசம், தன் ஞானத்தின் களஞ்சியமாக நம்மிடம் தந்திருப்பவையே கோயில்கள். உலகம் வியக்கும் உன்னதங்களை செயலில் காட்டியதோடு, அதனை "கோயில்' என்ற அழியா வடிவத்துக்குள் பொதிந்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
 சிறந்த வாழ்வியலுக்கான சாதனமாய் நம் முன்னோர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் கோயில் என்ற கருவியைக் காத்து நம்மையும் நம் சமூகத்தையும் மேன்மை செய்துகொள்ளப் போகிறோமா? தொலைத்து விட்டு அடையாளம் அற்றவர்களாக நிற்கப்போகிறோமா?
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT