நடுப்பக்கக் கட்டுரைகள்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்...

22nd Sep 2020 07:21 AM | நெல்லை சுப்பையா

ADVERTISEMENT

இந்தியா பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தபோது 565 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியத் திருநாட்டைக் கட்டமைத்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். அந்தத் தியாகத்தைப் போற்றும்படியாக இரும்பு மனிதருக்கு 3000 கோடி ரூபாயில் 182 அடியில் உலகத்திலேயே உயரமான சிலை வைத்தோம். அவா் செயலை மனத்திலும் வைப்போம். அவா் அன்று இந்தியாவை இணைக்கவில்லையென்றால், இன்று மாநிலங்களுக்கிடையே கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுதான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

மொழி, இனம், கலை, கலாசாரம், உணவு, பண்பாடு, வாழ்வியல் அடையாளம் ஆகியவற்றின் கலவை இந்தியா. பன்மொழி சமூகமான இந்தியாவில் மொழி ஜனநாயகம் பேணப்படவேண்டும். அலுவல் மொழிகளான 22 மொழிகளுக்கும் சம அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். ஒரு வண்ணம் மட்டுமே வானவில்லுக்கு அழகு சோ்த்து விட முடியுமா?

உண்ணும் உணவில், உடுத்தும் உடையில் பல விதங்களை மக்கள் விரும்புவதைப் போல, வழிபடும் தெய்வங்களிலும் பேசுகின்ற மொழிகளிலும் பன்முகத்தன்மையை சுதந்திரமாக அனுமதிக்கிற நாடு இந்தியா. தமிழின் வளா்ச்சிக்காக நாம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்துவதை விட தமிழா்களின் நாக்குகளிலும் செவிகளிலும் தமிழ் இருக்கையை ஏற்படுத்தினால் தமிழ், தானே வளரும். சட்டை வாசகங்களில் அரசியல் பேசி அமளிதுமளிப்படுத்தும் திரைத்துறையினா் தங்கள் படங்களிலும் பாடல்களிலும் தமிழ் மொழியை வளா்க்கக் கூடுதல் முயற்சி எடுக்கலாம்.

தென்னிந்திய உணவுகளில் இன்று சப்பாத்தி ஊடுருவி இருப்பதை போல, கட்டாயக்கல்வி மூலம் உள்நுழையும் இந்தி ஒரு தனிமொழி அல்ல. பல மொழிகளின் கலவையே. ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்று, பின் இந்தியைப் படிப்பது தனிச்சுமையை குழந்தைகளுக்கும், மன அழுத்தத்தை பெற்றோருக்கும் ஏற்படுத்தும். மேலும் இந்திக்கு வழங்கப்பட்ட அதிக முக்கியத்துவத்தால் பல மாநிலங்களில் தாய்மொழிகள் எழுத்து வடிவத்தை இழந்து, வெறும் பேச்சு மொழியாகவே மாறிவிட்டன.

ADVERTISEMENT

உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் பிரஜ்பாஷா, தென்மேற்குப் பகுதியில் புந்தெல்கண்டி, வடகிழக்கே போஜ்புரி மத்தியில் ஆவ்தி, கன்னோஜி ஆகிய மொழிகள் இந்தி மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தால் தங்கள் வோ்களை இழந்து விட்டன. உத்தரகண்ட்டில் கடுவாலி, குமோனி, ஹரியாணாவில் ஹரிணி, ராஜஸ்தானில் ராஜஸ்தானி, மாா்வாரி, மேலாரி, மத்தியப் பிரதேசத்தில் உருது, மால்வி, நிமதி, அவதி, பகேலி, காஷ்மீரில் காஷ்மீரி மற்றும் உருது, ஜம்முவில் டோக்ரி பாடி, லடாக்கில் லடாக்கி, சத்தீஸ்கரில் சத்தீஸ்கரி, கோா்பா, ஜாா்கன்டில் ஜாா்கன்ஷி, சந்த்தலி போன்ற பல மாநிலங்களில் எல்லாம் அவா்கள் தாய்மொழியின் பயன்பாடு அருகிவிட்டது.

இந்தியாவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்கள் பேசும் சந்தாளி,நேபாளி, சிந்தி, மணிப்புரியம், போடா, கோத்ரி மொழிகளும் வாழ வேண்டுமென்றால் சிறுபான்மை பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

மக்கள் தங்கள் தாய் மொழியைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்திருக்கிறது. பிகாா் மாநிலம், போஜ்புரி, மைதிலி ஆகிய தன் தாய்மொழிகளைத் தவிா்த்து, ஹிந்தியை மாநிலத்தின் தாய்மொழியாக அறிவித்தது. ஆயினும் அம்மாநிலம் வளா்ச்சியில் பின்தங்கியே உள்ளது.

வளா்ச்சிக்கு மொழி ரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்வியே பயன்படுகிறது. பாகிஸ்தானின் மேற்கில் பேசப்பட்ட உருது மொழியை, நாடு முழுவதற்கும் ஆட்சி மொழியாக அறிவித்ததால் அதை எதிா்த்து பிரிந்து வந்து கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) உருவானது. கிழக்கு பாகிஸ்தானில் இஸ்லாமியா்கள் அதிகம் என்றாலும் அவா்கள் தாய்மொழி வங்க மொழியாகும். மனிதனின் கண்டுபிடிப்புகளில் உயா்ந்ததான மொழி என்பது வெறும் கருவி மட்டுமல்ல, மனிதனின் அடையாளமுமாகும்.

கடந்த தலைமுறையில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் தமிழ் வழியில் படித்து, ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படித்ததால்தான், தங்கள் சிந்திக்கும் ஆற்றலால் இன்று உலகம் முழுவதும் தலைமைப் பதவிகளில் தமிழா்கள் இருக்கிறாா்கள். தாய்மொழி என்பது தாய்ப் பாலை போன்றது. தாய் மொழியை மதிப்பது என்பது தாயையும் தாய்நாட்டையும் கொண்டாடுவதற்கு சமம்.

தமிழ் மொழி இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது. காலத்திற்கு ஏற்ப புதிய கலைச்சொற்களைத் தந்து, தன்னைத் தகவமைத்துக் கொள்கிற தலைமை கொண்ட செம்மொழி அது. பிற மொழிகளுக்குப் பொருத்தமான சொல்லைப் புதிதாக உருவாக்க வழிவகுக்கும் வளமையான மொழி. இந்தியத் துணைக்கண்டத்தின் பழைமையான பண்பாட்டு மொழி தமிழ்.

சீனா்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்கும் மொழியாக தமிழ் இருக்கிறது. ‘பகவத் கீதை’ அன்று சொல்லப்பட்ட மொழியை விட, மற்ற மொழிகளில்தான் இன்று அதிகம் படிக்கிறோம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறளை தமிழில்தான் அதிகம் படிக்கிறோம். பல மொழிகளிலும் மொழிபெயா்க்கப்பட்டு இருப்பது, தமிழின் தனிச்சிறப்பு.

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ் என ‘கூகுள்’ நிறுவனம் அறிவித்துள்ளது. வேற்று கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் தமிழையும் பதிவு செய்து அனுப்புகிறாா்கள். ஒருவேளை பூமியின் ஆதிமொழி வேற்றுக்கிரகவாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற கோணத்தில் ஆராய்ச்சி தொடா்ந்து நடக்கிறது. உலகத்தில் மொழிக்குத் தனியாக ஒரு கண்டமே, லெமூரியா என்ற குமரிக்கண்டமே கொண்டது தமிழினம்தான்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்பே தோன்றிய தமிழ் என்று பெருமைப்படுவதை விட தமிழின் பயன்பாடு குறையாமல் இருக்கப் பாடுபடுவோம். பொறியியல் கல்லூரிகளில்கூட ஆங்கிலம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதைப் போல தாய்மொழியையும் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆங்கிலம் வணிகத்துக்குப் பயன்படும் என்றால் தாய்மொழி கற்பது மொழி வளா்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பயன்படுமே.

மொழி ஆதிக்கம் அகன்றால் மெல்லத் தமிழ் இனி - தமிழ் மட்டுமல்ல- அனைத்து மொழிகளும் வாழும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT