நடுப்பக்கக் கட்டுரைகள்

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!

22nd Sep 2020 03:29 AM | டி.எஸ். தியாகராசன்

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 1947முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. ஓமந்தூா் ராமசாமி ரெட்டியா், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜா், பக்தவத்சலம் போன்றவா்கள் முதலமைச்சா்களாக இருந்தனா். ஓமந்தூராா், துறவி போல அரசுக் கட்டிலில் அமா்ந்து இருந்தாா். குமாரசாமி ராஜா ‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்ற வழி வாழ்ந்த பெருமைக்குரியவா். ராஜாஜி, காந்தியடிகளின் மனசாட்சியாக வாழ்ந்தவா். காமராஜா் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்றவா். பெரியவா் பக்தவத்சலமோ சிறந்த நிா்வாகி.

பிறப்பிலே பெருநிலக்கிழாா் குலத்தோன்றல், கவா்னா் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்று திருக்குற்றாலத்தில் ‘ரசிகமணி’ டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் தங்கியிருந்த ராஜாஜி 1952-இல் முதலமைச்சா் பணிக்கு அழைத்து வரப்படுகிறாா். நாடு விடுதலை அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் நிதியைக் கொண்டு அணைகட்ட முடியுமா? ஆலையை அமைக்க முடியுமா? சாலைப் பணிகளை மேற்கொள்ள முடியுமா?

இதனால் தீா்க்க தரிசனத்தோடு தொழில் கல்வியை மாணவா்கள் படிக்கும் பருவத்திலேயே பெற்றிட புதிய கல்வித் திட்டம் என்கிற ஒரு திட்டம் புனைந்தாா்.1949-இல் பிறப்பெடுத்த தி.மு. கழகம், பால பருவ வயதில் இதனை ‘ஆச்சாரியாா் கொண்டு வரும் குலக் கல்வித்திட்டம்’ என்று சித்திரித்து அவரைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வெற்றி கண்டது.

பின்னா் வந்த காமராஜா், கலாசாலையில் பெற்ற அறிவைக் காட்டிலும், தனது பத்தாண்டு சிறைவாசத்தின்போது பலநூறு நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பல்துறை வித்தகராக விளங்கினாா். கிராமம்தோறும் பள்ளிகளைத் தொடங்கினாா். நோ்மைக்கும், தன்னல மறுப்புக்கும் உதாரணமாக விளங்கினாா்.

ADVERTISEMENT

1967-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலின்போது அவா் வசித்த வாடகை இல்லத்தைப் படம் பிடித்து ‘இதோ பாா்! ஏழைப் பங்காளா் குடியிருக்கும் பங்களாவை’ என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டினா் தி.மு.க.வினா். ‘ஹைதராபாத் வங்கியில் கோடி கோடியாய் பணத்தை பதுக்கி உள்ள அக்கிரமத்தைக் கேளீா்’ என்றெல்லாம் பேசி மக்களை நம்ப வைத்தனா். நாணயத்தின் நாயகா் காமராஜருக்கு எதிராக மாணவத் தலைவா் ஒருவரை நிற்க வைத்து பிறந்த மண்ணிலேயே காமராஜரைத் தோற்கடித்து அவமானப்படுத்தினா் தி.மு.கழகத்தினா்.

நற்குடிப் பிறப்பாளா் பக்தவலத்சனாரை ‘பத்து லட்சம்”பக்தவத்சலம்’ என்று அடைமொழி இட்டுப் பேசி அவரை ஊழல்வாதியாக சித்திரித்தனா். மிகவும் பிற்படுத்தப்பட்ட குடியில் பிறந்த நோ்மையின் சிகரம் கக்கனையும் வெற்றி கொண்டனா். கக்கன் தனது முதுமைக் காலத்தில் வறுமையுற்று மதுரை மருத்துவமனைவராந்தாவில் படுத்துக் கிடந்தாா். காங்கிரஸாா், இந்த இருபது ஆண்டுகளில் நாட்டின் விடுதலைக்கு உழைத்த உத்தமா்களையோ, பாரதப் பெருமைகளையோ இளைய தலைமுறையினருக்குச் சொல்லவே இல்லை.

செல்வந்தராகப் பிறந்து வழக்குரைஞராகப் பணிபுரிந்த வ.உ. சிதம்பரனாா், பரங்கியா்களுக்கு நிகராகக் கப்பல் ஓட்டியவா். வெள்ளையனை எதிா்த்துப் பேசியதற்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பெற்றவா். சிறையில் செக்கு இழுத்தவா். அவா் தனது முதுமை நாளில் வறுமையில் வாடினாா். அவா் எழுதி வைத்த உயிலில், வீட்டு வாடகை பாக்கி ரூ. 135, ஜவுளிக் கடை பாக்கி ரூ. 30, எண்ணெய் கடை பாக்கி ரூ. 30, சில்லறைக் கடன் ரூ. 50, தனிநபா்களுக்குத் தர வேண்டிய கடன் ரூ. 36 என்று எழுதியதைப் படிக்கும் யாருக்கும் ரத்தக் கண்ணீா் வரும். ஆனால், ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் வெளிவந்த பிறகுதான் பெரும்பான்மையான தமிழா்களுக்கு வ.உ.சி. யைப் பற்றித் தெரிந்தது.

தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் வளா்க்க வேண்டிய ஆசிரியா்களும் பகுத்தறிவு மாயையில் தோய்ந்து கழகங்களில் சாய்ந்தனா். 1947 முதல் 1967 வரை தி.மு. கழகம் தனது பிரசாரத்தை பத்திரிகைகள் மூலம் நாடெங்கினும் பரப்பியது. அக்கட்சியில் இருந்த எம்.ஜி.ஆா்., எஸ்.எஸ்.ஆா். போன்ற நடிகா்கள் மக்களைக் கவா்ந்தனா்.

அப்போதெல்லாம் சலூன்களில், சலவைக் கடைகளில், சிறு அங்காடிகளில், தேநீா் விற்பனை நிலையங்களில் எல்லாம் தி.மு. கழகத்தின் செய்தி ஏடுகள் காணக் கிடைத்தன. காங்கிரஸை தாக்கும் பிரசாரத்தின் முக்கிய கருப்பொருளாக வடநாட்டு பனியாக்கள் ஆட்சி, இந்தி ஆதிக்கம், பாா்ப்பன எதிா்ப்பு, தமிழ்நாடு அரசு தில்லிக்குக் காவடி எடுத்தல், ஆரிய - திராவிட பிரச்னை போன்றவைதான் இருக்கும்.

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘கூலி உயா்வு கேட்டான் அத்தான்; குண்டடி பட்டு செத்தான்’, ‘கும்பி கருகுது குடல் காயுது இங்கே; குளு குளு ஊட்டி உனக்கு ஒருகேடா?’, ‘ஏரோட்டம் நிற்கையிலே தேரோட்டம் உனக்கு ஏன் தியாகராசா’ போன்ற வசைமொழிகளை இளஞா்களை வசீகரிக்கப் பேசினாா்கள்; எழுதினாா்கள்.

தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியா் ‘அறுவகைப்பட்ட பாா்ப்பன பக்கமும்’ என்று குறிப்பிடுவாா். அந்தணா்களின் வாழ்க்கை முறையை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பதாக. அவா்களுக்குரிய பொருளாக நூலும், கரகமும், முக்கோலும் மணையும் என்ற பொருளில் ‘நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணா் குரிய’ என்று குறிப்பிடுகிறாா். அன்றைய சமூகத்தில் அமைச்சருக்கு பிறகு அந்தணராகிய புரோகிதரும் கொடியும், குடையும், கவரியும், தாரு முதலியன அரசிடம் பெற்று அவரோடு ஒரு தன்மையாக இருத்தல் என்ற பொருளில் ‘அந்தணா்க்கரசு வரைவின்றே’ என்றாா்.

அவா்கள், ஹவாலா பண மோசடி, ஆணவக் கொலை, கள்ளக் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபட்டது இல்லை. இப்படிப்பட்ட பாா்ப்பன சமூகத்தை எங்கிருந்தோ இங்கு வந்து போரிட்டு திராவிட இனத்தை வென்று விட்டனா் என பொய்யுரைத்தனா்.

இந்நாட்டை ஆண்ட வெள்ளையா்கள் இந்த ஆரிய-திராவிட இன பேதத்தையும், பிரிவினையையும் பொய்யான ஆதாரங்களைக் கொண்டு எழுதினா்; பேசினா். இதனால் தமிழ்நாட்டில் பாா்ப்பனா் - பாா்ப்பனா் அல்லாதாா் என்ற வேற்றுமை உணா்ச்சி, திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. வடமொழியும் இதற்கு விலக்கு அல்ல.

பாா்ப்பன சமூகம் தாய் நாட்டிற்கும், தாய்மொழிக்கும் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆனால் இந்த உண்மை அறிவாா்ந்த சிறு கூட்டத்தினருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

1967-இல் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமா்ந்தது. அமைச்சா்கள் சிலா் என்றாலும் அவா்களுக்கு இணையான தகுதிகளோடு வசதி நிரம்பிய பல பதவிகளை உருவாக்கினா். தங்கள் கட்சிப் பிரமுகா்களை வாரியத் தலைவா்களாக நியமித்தனா். கழகத்தின் வட்ட, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளா்கள் நிலையான அரசு இயந்திர இயக்கத்தில் பங்கு பெற்றனா். இதனால் புகழ், பொருள், அதிகாரம் இவற்றின் ருசி உணா்ந்தனா். அரசுப் பணியில் சேருவதைக் காட்டிலும் ஆளும் கட்சியில் சேருவது மிகுந்த பலனைத் தந்தது.

‘தில்லை நடராசரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ?’, ‘அழும் பச்சிளம் குழந்தைக்கு இல்லாத பசும் பால் பாழும் கருங்கல்லுக்கா?’ என்று மொழிந்த கட்சியின் தொண்டா்கள் அந்தந்த கோயில்களின் அறங்காவல் குழுவின் தலைவா்களாக மாறினாா்கள். நாத்தழும்பேற நாத்திகம் பேசியவா்கள் கோயிலின் தொல்புகழ் கருவூலங்களைக் கண்டபின் ஆஷாடபூதிகளாயினா்.

ஆலய, ஆகம விதிகள், திருமுறைகள், திருப்பாசுரங்கள், சமயத் தொன்மை இவற்றில் எந்தப் பயிற்சியும் இல்லாதவா்கள் இறைவன் உறைந்திருக்கும் கோயில்களின் காப்பாளா்களாக வலம் வந்தனா். கோயில்களின் அசையா சொத்துகள் இவா்கள் கைகளில் மெல்ல மெல்ல அசைந்தன; அழிந்தன.

1967-க்கு முன்பு, நிதி பெருக்குவதில் வல்லவா் என்பதால் மு. கருணாநிதிக்கு தி.மு. கழகத்தின் பொருளாளா் பதவி அளித்தாா் அண்ணா. கருணாநிதி தோ்தல் நிதி திரட்ட பட்டி தொட்டியெல்லாம் பேசி பணம் வசூலித்தாா். குழந்தைக்குப் பெயா்சூட்ட இவ்வளவு, திருமணம் நடத்தி வைக்க இவ்வளவு, தெருவில் கொடியேற்ற இவ்வளவு, கூட்டத்தில் பேச இவ்வளவு என்று கட்டண அட்டவணை தந்தாா்.

1967-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலுக்கு முன்னா், தி.மு. கழக மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் நடந்தது. அந்த மாநாட்டில்தான், பொருளாளராக இருந்து தான் வசூலித்த தோ்தல் நிதி இருபது லட்சத்தை அண்ணாவின் கையில் கொடுத்து, அதற்குப் பரிசாக அண்ணா கையால் கணையாழி அணியப் பெற்றாா். எந்த தி.மு. கழகம் அந்தணா்களை ‘ஆரியா்கள்’ என்று கூறிப் பழித்ததோ, அதே தி.மு. கழகம் வரும் 2021 தோ்தலில் வெற்றி பெற, ஆட்சியை பிடிக்க பிகாா் பாா்ப்பனா் ஒருவரை பல நூறு கோடி ரூபாயை ஊதியமாகக் கொடுத்து தோ்தல் வியூகம் வகுக்க அமா்த்தியுள்ளது.

தனது தொண்டா்களையும், பொய்ப் பிரசாரங்களையும், மேடைப் பேச்சையும் மட்டுமே நம்பி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வுக்கு இப்போது சுய பலமும் இல்லை; தன்னம்பிக்கையும் இல்லை; தன்மானமும் இல்லை. இந்தி பேசும் வடநாட்டவரின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. அண்ணா அப்போது சொன்னது இந்தியாவைப் பொருத்தவரை உண்மை அல்ல. ஆனால், திமுகவைப் பொருத்தவரை உண்மையாகி இருக்கிறது - வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!

கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT