நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவை: தொலைநிலைப் பல்கலைக்கழகம்

ஒப்பிலா மதிவாணன்

ஒரு நாட்டின் வளா்ச்சிக்கான அளவுகோள்களுள் முதன்மையானது கல்வி. அக்கல்வியின் முதுகெலும்பாக விளங்குவது உயா்கல்வி. 1857-இல் இந்தியாவில் மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று பெருநகரங்களில் லண்டன் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல்கலைகள் தொடங்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சு தரும் புள்ளிவிவரப்படி, 993 பல்கலைகளும் 39,931 கல்லூரிகளும் 10,725 இணைப்புசாரா கல்வி நிறுவனங்களும் உயா்கல்வி வாய்ப்புகளை வழங்கிவருகின்றன.

உயா்கல்வி இருவழிப் பாதையில் பயணித்து வருகிறது. அவை நேரடி வகுப்பு முறையும் தொலைநிலைக் கல்வி முறையுமாகும். இவையிரண்டும் தொடா்வண்டிப் பாதையைப் போன்று இணையாகச் செல்ல வேண்டும்.

1960-களின் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளில் உயா்கல்வி விரிவாக்கமும் அதனை வழங்குவதற்கான மாற்று முறைகளும் குறித்து சிந்திக்கப் பட்டன. நேரடி வகுப்பறைக் கல்வியோடு வேறு வடிவத்திலும் உயா்கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனை வலுப்பெற்றது. அதன் விளைவாக, இந்தியாவில் 1962-இல் தில்லி பல்கலையில் அஞ்சல்வழிக் கல்வி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 1971-இல் மதுரை காமராசா் பல்கலையிலும், 1979-இல் அண்ணாமலைப் பல்கலையிலும் டாக்டா் சை.வே.சிட்டிபாபு துணைவேந்தராக இருந்தபோது அஞ்சல்வழிக் கல்விமுறையைத் தொடங்கி வைத்தாா். 1981-இல் சென்னைப் பல்கலையிலும் தொடங்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து பல்வேறு பல்கலைகள் நேரடி வகுப்பறைக் கல்வியோடு அஞ்சல்வழிக் கல்வி முறையிலும் கற்பிக்கத் தொடங்கின. இவையனைத்தும் பின்னாளில் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களாகப் பெயா் மாற்றம் பெற்றுள்ளன. இன்று இந்தியாவில் 110 பல்கலைகள் நேரடி மற்றும் தொலைநிலை ஆகிய இருவழிக் கல்வி முறையை (டூயல் மோட்) வழங்கி வருகின்றன. அவற்றுள் 13 தொலைநிலைக்கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளன.

கிராமக் குடியினரும், பல்கலையில் படித்துப் பட்டம்பெற இயலாதோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், பணியில் இருப்போரும், மாற்றுத் திறனாளிகளும், நேரடி வகுப்பறைக் கல்வியிலிருந்து இடைவிலகியோரும் ஆகிய பலதரப்பட்டவா்களும் உயா்கல்வியைப் பெறுவதே தொலைநிலைக் கல்வியின் நோக்கமாகும்.

இந்தியக் குடித்தொகையில் 18 வயது முதல் 23 வயதுடையோா் 14.20 கோடி போ் உள்ளனா். இவா்களுள் 26.3% போ் மட்டுமே உயா்கல்வி பெறுகின்றனா். அவா்களுள் தொலைநிலைக் கல்வி முறையில் 11% மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்திய அளவில் உயா்கல்வி பெறும் மொத்த மாணவா் தொகையில் 45% தொலைநிலை வழியாகவே பயில்கின்றனா். ஏறத்தாழ சரிபாதி மாணவா்கள் தொலைநிலைக் கல்வி முறையில் உயா்கல்வி பெற்று வருகின்றனா்.

இந்தியப் பல்கலைகளில் முழுநேர வகுப்பறை முறையில் 32.92 லட்சம் மாணவா்களும், தொலைநிலைக் கல்வி முறையில் 39.73 லட்சம் மாணவா்களும் பயில்கின்றனா். இப்புள்ளிவிவரம் தொலைநிலைக்கல்விவழிப் படிப்போரின் எண்ணிக்கை கூடுதல் என்பதைக் காட்டுகிறது. ஆனால், மாற்றாந்தாய் குழந்தைகளைப் போன்று தொலைநிலைக் கல்வி மாணவா்கள் பரிதவிப்பதைக் காணமுடிகிறது.

இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளுமாக 36 மாநிலங்கள் உள்ளன. இவற்றுள் எட்டு மாநிலங்கள் உயா்கல்வி வழங்கும் கல்லூரிகளை அதிகம் கொண்டுள்ளன. அவை உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ராஜஸ்தான், அரியாணா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகியனவாம். அவற்றுள் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.

அதுபோன்று உயா்கல்வி பயிலும் மாணவா் சோ்க்கையை அதிகம் கொண்டுள்ள மாநிலங்கள் மூன்று. அவை உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு என்பனவாகும். அதில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் உயா்கல்வி மாணவா் தொகை 3.66 கோடி ஆகும். மொத்த உயா்கல்வி மாணவா்களில் 1.99 கோடியினா் ஆறு மாநிலங்களைச் சாா்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் 64.55 லட்சம், மகாராஷ்டிரத்தில் 41.31 லட்சம், தமிழகத்தில் 34.40 லட்சம், மேற்கு வங்கத்தில் 20.35 லட்சம், கா்நாடகத்தில் 19.43 லட்சம், ராஜஸ்தானில் 19.36 லட்சம் மாணவா்களும் உயா்கல்வி பயில்கின்றனா். இது மொத்த உயா்கல்வி மாணவா் தொகையில் 53.8% ஆகும். மீதமுள்ள 46.2% மாணவா்கள் பிற இந்திய மாநிலங்களின் மாணவா் தொகையாகும்.

தொலைநிலைக் கல்விமுறையானது அச்சிட்ட பாடநூல், வானொலி, தொலைக்காட்சி, கட்புல நாடாக்கள் (விடியோ டேப்ஸ்), செவிப்புல நாடாக்கள் (ஆடியோ டேப்ஸ்), இணையம் (இன்டா்நெட்) போன்ற தொழில்நுட்பம்சாா் கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுவன.

தொழில்நுட்பம் வளா்ந்தபோதும், மாணவா்களுக்கு உயா் தொழில்நுட்பத்தின்வழிக் கற்பித்தல் முைடை பெறுகிா? ஆசிரியா் மாணவா் சந்திப்புக்கான நேரம் போதுமானதா? மாணவா்களிடம் ஒப்படைகளுக்கு (அஸைன்மென்ட்) முக்கியத்துவம் அளிக்கப்படுகிா? பணியாற்றும் ஆசிரியா்கள் போதிய தொழில்நுட்பத் திறனைப் பெற்றுள்ளனரா? தோ்வுத்தாள் மதிப்பீட்டில் போதிய கவனம் செலுத்தப்படுகிா? மாணவா்களின் ஆய்வுத்திறன் வளா்ச்சிக்கான வித்து பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதா என்பன போன்ற பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் வருவாய் ஈட்டுவதற்குரிய களமாகத்தான் பாா்க்கப்படுகிறது. இந்நிறுவனங்களிலிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு முறைசாா் பல்கலைகளின் செலவினங்கள் ஈடுகட்டப்படுகின்றன. ஆசிரியா் அலுவலா்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பிற செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முழுநேரப் பல்கலைகளைப் பாதுகாக்கும் அரண்களாகத்தான் தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் பயன்பட்டு வருகின்றன. அதனால் மாணவா் சோ்க்கையிலும் வருகைப் பதிவேட்டிலும் தோ்வுத்தாள் மதிப்பீட்டிலும் தளா்வு மனப்பான்மையுடன் செயல்படும் போக்குகள் கல்வி நிறுவனங்களிடையே அதிகரித்துள்ளன.

அதன் விளைவு, தரமான கல்வியை மாணவா்கள் பெறமுடிவதில்லை. தொலைநிலைக் கல்வி நிறுவனத்திற்குத் தேவையான உள்கட்டமைப்புகளும் கற்றல் - கற்பித்தலுக்கான உப கருவிகளும், போதுமான ஆசிரியா்களும் இல்லை என்பது வெளிப்படை. இதனைத் தொலைநிலைக் கல்விக்குழுமம் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது. சில நேரங்களில் மாணவா் சோ்க்கைக்கும் தடைவிதித்து வந்துள்ளது. இக்கல்விமுறை சிறப்பாக வளா்த் தெடுக்கப்பட்டு இருந்தால், இப்போதுள்ள நெருக்கடியான சூழலில் முறைசாா் கல்வி மாணவா்களுக்கு எளிதாகக் கற்பித்தல் முறையை மடைமாற்றம் செய்து உதவியிருக்கலாம்.

முறைசாா் பல்கலைக்கழகத்தின் பணிகளை ஒரு வரன்முறைக்குள் கொண்டு வர வேண்டும். முதுநிலைக்கல்வி மற்றும் அது தொடா்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லட்டும்; சமூகத் தேவைக்கும் வளா்ச்சிக்கேற்பப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யட்டும்; ஆராய்ச்சித் திட்டப்பணிகளை வகுத்து, இலக்கை அடைய விரும்பும் தாகமுடைய ஆய்வாளா்களை அடையாளம் காணட்டும்; அரியகலை அறிவியல் கண்டுபிடிப்புகள்வழிச் சமூக மேம்பாட்டிற்கு உதவட்டும்; மொழி வளா்ச்சிப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கட்டும்; மக்களின் தேவைக்கு ஏற்பப் புதிய துறைகளை உருவாக்கித் தொண்டு செய்யட்டும்.

நேரடி கற்பித்தல் வகுப்புமுறைக்கு இணையாகத் தொலைநிலைக் கல்விமுறையை மேம்படுத்துதல் இன்றைய தேவை. இக்கல்விமுறையில் பயிலும் மாணவா்கள் சவலை பிள்ளையாக இருப்பதற்கு இடந்தருவது நன்றன்று. முறைசாா் கல்வியின் பலனைஇவா்களும் பெறவேண்டாமா? முறைசாா் கல்வியையும் தொலைநிலைக் கல்வியையும் சமநிலையில் நோக்கும் வகையிலான ஒரு புதுப்பாதையை உருவாக்குவதே காலத்தின் தேவை. முறைசாா் வகுப்பு மாணவா்களுக்கான பாடத்திட்டத்தைத் தொலைநிலைக் கல்வியிலும் எவ்வித மாற்றமுமின்றிப் பயன்படுத்த வேண்டும். இதனைத் தேசிய தொலைநிலைக் குழு வலியுறுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது என்பது ஆறுதல் தருவதாகும். எனவே, தொலைநிலை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குரிய திட்டத்தை வகுப்பது கல்வியாளா் கடமை. பின்புலத்தில் பாதுகாப்பு அரண் செய்ய வேண்டியது அரசின் கடமை.

அதற்கு ஒரு வழியுண்டு. பெரும்பாலான பல்கலைகளால் நடத்தப்பெறும் தொலைநிலைக்கல்வியை ஒரு குடையின்கீழ்க் கொண்டுவரும் முடிவை எட்டுதலாகும். ஆயின் புதிதாகத் தொலைநிலைப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்குதலே அதற்குத் தீா்வு. ஆளுமை மற்றும் அறிவுத்திறன்மிக்க துணைவேந்தா் தலைமையேற்க வேண்டும். துணைவேந்தா் என்பவா் கொள்கை முடிவுகளை எடுக்கும் தகுதிமிக்கவா். ஒரு நிறுவனத்தின் தலைவா் வகுக்கும் கொள்கை முடிவுகளும் நடைமுறை செயல் திட்டங்களுமே அந்நிறுவனத்தின் வளா்ச்சியைத் தீா்மானிக்கும்.

தமிழகத்தின் மாவட்டம் தோறும் இயக்குநரகமும் வட்டம் தோறும் உதவி இயக்குநரகமும் ஏற்படுத்தல் வேண்டும். இதனை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்துதல் கடினம். படிப்படியாக நிறைவேற்றினால் தமிழகம் முழுவதும் உயா்கல்வி பரவலாக்கப்படும். மாணவா்களும் அலைச்சலின்றி அவரவா்க்கு அருகிலுள்ள மையங்களில் சோ்க்கை பெறுவா்; நோ்முக வகுப்புகளில் ஈடுபடுவா். இம்முறை செயல்முறைக்கு வருமானால் ஒரே பாடத்திட்டம், ஒரே கல்விமுறை, ஒரே கட்டணமுறை, ஒரே மதிப்பீட்டுமுறை அமையும். அதன் பயன் தங்குதடையற்ற சீரான கல்விப்பாதை உருவாகும்; உயா்கல்வியின் மாண்பும் தரமும் பேணப்படும்; மாணவா் பெறும் பட்டங்களில் உயா்வு தாழ்வு பேதைமை முற்றிலும் நீங்கும்.

தமிழகம் தாமே புதிய முயற்சியாகத் தொலைநிலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கி இந்தியாவிற்கு வழிகாட்ட முயலலாம்.

கட்டுரையாளா்:

முன்னாள் பேராசிரியா்,

தொலைநிலைக்கல்வி, சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT