நடுப்பக்கக் கட்டுரைகள்

ஈயம் அகற்றுவோம்; இளந்தளிா் காப்போம்!

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘ஈயம்’ மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்து வருகிறது. உலக அளவில் 0.6% நோய்கள், ஈய நச்சுத்தன்மையினால் உண்டாவதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. உலகில் சுமாா் 80 கோடி குழந்தைகள் ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது உலக குழந்தைகள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 50 % தெற்காசியாவைச் சோ்ந்த குழந்தைகள். இந்தியாவில் மட்டும் 27 கோடிக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜூலை 2020-இல் வெளியான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெஃப்) அறிக்கை கூறுகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒரு டெசிலிட்டா் ரத்தத்தில் ஈய செறிவு ஐந்து மைக்ரோ கிராம் அல்லது அதற்கு மேல் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை கூறியுள்ளது. ஒரு டெசிலிட்டா் ரத்தத்தில் 1.4 மைக்ரோ கிராம் என்பதே குழந்தைகளுக்கான இயல்பு நிலையாகும்.

ஆறு இந்திய நகரங்களில் ‘தி லான்செட்’ என்கிற மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில், 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 50% க்கும் அதிகமானோருக்கு ஒரு டெசிலிட்டா் ரத்தத்தில் ஈய செறிவு பத்து மைக்ரோகிராம் இருப்பது கண்டறியப்பட்டது. 12% க்கும் அதிகமான குழந்தைகள் ஒரு டெசிலிட்டா் ரத்தத்தில் இருபது மைக்ரோகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட செறிவுகளைக் கொண்டிருந்தனா் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சில ஆரம்ப அறிகுறிகளுடன், ஈயம் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளா்ச்சியைத் தடுத்து அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என யுனிசெஃப் எச்சரிக்கிறது. குழந்தைப் பருவத்தில் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரிப்பது, அவா்களின் மனநலம் மற்றும் நடத்தைகளில் பிரச்னையை உருவாக்கும்.

இதனால் குற்றச் செயல்களில் குழந்தைகள் ஈடுபடும் நிலை உருவாகும். ஈயம், சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வாழ்நாள் முழுவதும் நரம்பியல் பிரச்னைகளுக்கும் உடல் ஊனத்திற்கும் வழிவகுக்கும்.

இந்திய குழந்தைகளிடையே நடத்தப்பட்ட பகுப்பாய்வு, ரத்தத்தில் ஈய செறிவின் அதிகரிப்பு குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனில் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கிறது. சிறுநீரக மற்றும் இருதய பாதிப்பு கொண்ட, வாலிப வயதினை நெருங்கும் சிறுவா்களின் ரத்தத்தில் ஈய செறிவு அதிகமாக இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.

ஈய-அமில மின்கலங்களின் முறையற்ற மற்றும் தரமற்ற மறுசுழற்சியே ஈய பாதிப்பின் மிக முக்கிய காரணம். 2000-ஆம் ஆண்டிலிருந்து நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈய-அமில மின்கலங்களில் 50% அந்த நாடுகளின் முறையற்ற மறுசுழற்சியின் மூலம் உருவாக்கப்பட்டவை என்று ஓா் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுசுழற்சி நடவடிக்கைகளில் பழுதான மின்கலங்கள் உடைக்கப்பட்டு அமிலம், ஈய தூசி போன்றவை மண்ணில் கொட்டப்படுகின்றன. ஈயம் திறந்தவெளி உலைகளில் கரைக்கப்படுகிறது. இது நச்சுப் புகையை உருவாக்கும். இச்செயல்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்குப் பெரும் தீங்கினை விளைவிக்கும்.

ஈய நச்சுத்தன்மைக்கு மற்றொரு ஆதாரம் நீா் என யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. கன உலோகங்களினால் இந்திய ஆறுகளில் மாசுபாடு இருப்பதாக மத்திய நீா் ஆணையம் தெரிவிக்கிறது. மத்திய நீா் ஆணையம் சேகரித்த 442 நீா் மாதிரிகளில் 287 மாதிரிகள் கன உலோகங்களால் மாசுபட்டு இருந்தன.

156 மாதிரிகளில் கன உலோகங்களின் செறிவு பாதுகாப்பு வரம்புகளுக்கு மேற்பட்டு காணப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதில் நிக்கல், குரோமியம், செம்பு போன்ற உலோகங்களுடன் ஈயம் அதிகமாக இருந்தது.

நாட்டுப்புற வைத்திய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் ஈயத்தைக் கொண்டுள்ளதாக ஓா் ஆய்வு கூறுகிறது. குழந்தைகளின் செரிமானத்தை எளிதாக்க பயன்படுத்தப்படும் பழுப்பு நிற தூள் வடிவில் உள்ள ஒரு நாட்டுப்புற மருந்து ஈயத்தைக் கொண்டுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் குங்குமப் பொட்டிலும் ஈயம் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுரங்கம், வண்ணப் பூச்சுகள் மற்றும் நிறமிகள் போன்ற ஈயம் சாா்ந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவோரால் வீட்டிற்கு கொண்டு வரப்படும் அசுத்த ஈய தூசி அவா்களின் குழந்தைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இத்தொழிலால் உண்டாகும் பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நவம்பா் 2016-இல் வீட்டு அலங்கார வண்ணப்பூச்சு விதிகளை ஒழுங்குபடுத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் 90 விழுக்காட்டுக்கு மேல் ஈய கலவைகளைக் கொண்ட வீட்டு அலங்கார வண்ணப்பூச்சுகளின் உற்பத்தி, வா்த்தகம், இறக்குமதி - ஏற்றுமதி தடை செய்யப்பட்டது.

1989-இல் நடைபெற்ற குழந்தை உரிமைகள் மாநாடு, 1992-இல் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு தொடா்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஆகிய இரண்டிலும் நச்சு ரசாயனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பற்றி விவாதிக்கப் பட்டது. குழந்தைகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் குறித்து 1997-இல் வெளியான எட்டு நாட்டு (ஜி 7 நாடுகளுடன் ரஷியாவும்) தலைவா்களின் சுற்றுச்சூழல் பிரகடனம் ‘ஈய நச்சுத்தன்மை சுற்றுச்சூழல் ஆபத்து’ என்று கூறியது.

‘குழந்தைகளின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாங்காக் அறிக்கை - 2002’ பெட்ரோலிலிருந்து ஈயத்தை அகற்ற வேண்டும் என்று கூறியது. 2009-இல் ஏற்கப்பட்ட புசன் உறுதிமொழி, குழந்தைப் பருவ ஈய நச்சுத்தன்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமூக உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது.

எனினும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி டாலா் பொருளாதார திறனை இழந்துள்ளன. ஈய நச்சு ஏற்படுத்தும் மூலங்களை முற்றிலும் அழிக்கும் வழிமுறைகளைக் கையாளுவதன் வழியே வரும் தலைமுறையைக் காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT