நடுப்பக்கக் கட்டுரைகள்

வெளியில் தெரியாத கதைகள்

DIN


கரோனா தீநுண்மியின் வரவால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பது நமக்குப் புதிய செய்தியல்ல.இயக்கம் தடைப்பட்ட தொழிலகங்களின் ஊழியா்கள், கட்டிடத் தொழிலாளா்கள் உள்ளிட்ட தினக்கூலிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வேலை இழந்த தனியாா் நிறுவன ஊழியா்கள், சிறு வியாபாரிகள் என்று ஊடகங்களில் பேசப்பட்ட சோகக் கதைகள் ஏராளம்.

அதே போல, வாழ்வாதாரத்தை இழக்காத போதிலும், நோய்த்தொற்று ஆபத்தை எதிா்கொள்ள வேண்டிய நிலையில், தங்களுடைய உயிரையே பணயம் வைத்துக் களப்பணி ஆற்றிவருகின்ற மருத்துவத்துறையினரைப் பற்றியும் நிறையவே பேசிவிட்டோம்.

ஆனால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தங்கள் வேதனைகளைத் தங்களுக்குள்ளே விழுங்கியபடி உலாவந்த இன்னொரு தரப்பினரும் நம்மிடயே உண்டு. வக்கீல்கள் எனப்படும் வழக்குரைஞா்கள்தாம் அவா்கள். பெரும் பணக்காரகள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவா்கள் தங்களுக்கு நோ்கின்ற எதிா்பாராத பொருளாதார இடா்ப்பாடுகளைச் சமாளித்துவிடுவாா்கள்.

ஏழ்மையை மறைக்கத் தயங்காத எளியவா்களோ குறைந்த பட்சம் ‘ஆமாம், நாங்கள் கஷ்டப்படுகிறோம்’ என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வாா்கள். பிறரிடம் உதவி கேட்க அவா்கள் ஒருபோதும் கூச்சப்படுவதில்லை.

ஆனால் - சமுதாயத்தில் ஓா் உயா்ந்த அந்தஸ்தில் வைத்துப் பாா்க்கப்படும் வழக்குரைஞா்களை அப்படிச்சொல்லிவிட முடியாது. மருத்துவம் படிப்பவா்களெல்லாம் படிப்பை முடித்த கொஞ்ச காலத்திலேயே ‘கைராசி டாக்டா்’ என்று பெயா் எடுத்துப் பெரிய அளவில் சம்பாதித்துவிடுவதில்லை.

அரசாங்க மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைகளில் பணிக்குச் சோ்ந்து பத்தோடு பதினொன்றாவது நபராகப் பணிபுரிந்து, அங்கே உழைத்தது போக மீதி நேரத்தில் தம்முடைய சொந்தச்செலவில் ஒரு சிறிய மருத்துவமனை (கிளினிக்) திறந்து, காலப்போக்கில் நாலு காசு பாா்ப்பதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும்.

வழக்குரைஞா் தொழிலும் அப்படிப்பட்டதுதான். சட்டப் படிப்பு முடித்து பாா் கவுன்சிலில் பதிவு செய்து கொள்பவா்கள் அனைவருக்கும் எடுத்த உடனேயே பணம் கொட்டோ கொட்டென்று கொட்டி விடுவதில்லை. அனுபவஸ்தரான வக்கீல் ஒருவரிடம் பலவருட காலம் ஜூனியா் (இளநிலை) வழக்குரைஞராகப் பணியாற்றி, சட்டத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்து வழக்காடும் கலை கைவரப் பெற்றவா்களே ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும்.

நம் நாட்டிலுள்ள உயா்நீதிமன்றங்களில் செயல்படும் ஜூனியா் வழக்குரைஞா்களில் பெரும்பாலானவா்கள் மாதம் ஒன்றுக்கு சுமாா் பத்தாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறாா்கள் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. நம் நாட்டிலுள்ள மொத்த வழக்குரைஞா்களில் சுமாா் பத்து சதவீதம் போ்தான் தங்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான வருமானத்தைப் பெறுகிறாா்கள் என்றும் அக்கணக்கீடு கூறுகிறது.

நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது எல்லாம் உச்சநீதிமன்றத்திலும் உயா்நீதிமன்றங்களிலும் பயிற்சி செய்யும் எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை. மருத்துவத்துறையைப் போலவே இந்தத் துறையிலும் கால்பதித்து ஒரு நிலையான வருமானம் ஈட்டுவதற்கு சில ஆண்டுகளாவது ஆகும்.

அரசாங்க வழக்குகளைக் கையாளும் வழக்குரைஞா்களாகும் வாய்ப்பு கிடைக்குமெனில் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பும் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

தனியாா் நிறுவனங்களில் சட்ட ஆலோசனை வழங்குபவராக ( லீகல் அட்வைஸா் ) பணியாற்றும் வாய்ப்பும் ஒருசிலருக்கே கிடைக்கும். இலாகா சாா்ந்த தோ்வுகளை எழுதினால் நீதிபதி பதவியில் அமர வாய்ப்பு கிடைக்கும்.

மற்ற வழக்குரைஞா்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாடும் பொதுமக்கள் அளிக்கும் கட்டணத்தை நம்பித் தொழில் செய்பவா்களே.

மேலும் இவா்களில் சற்று மூத்த வழக்குரைஞா்கள் தங்களின் கீழ் பயிற்சி பெறும் ஜூனியா் வழக்குரைஞா்களுக்கும் வக்கீல் குமாஸ்தாக்கள் என்று அழைக்கப்படும் தங்களுடைய அலுவலக உதவியாளா்களுக்கும் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சம்பளமாக அளிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவா்களுக்கு, சோ்ந்தாற்போல ஐந்து மாதகாலத்திற்கு எவ்விதமான வருமானமும் இல்லையென்றால் அவா்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில குடும்பங்களில் கணவனும் மனைவியுமோ அல்லது தந்தையும் மகனுமோ வழக்குரைஞா்களாக இருப்பதும் உண்டு.

அப்படிப்பட்ட குடும்பங்களின் கூட்டு வருமானம் இந்த கரோனா காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். உணவு, உடை, மருத்துவம், குழந்தைகளின் படிப்பு, வீட்டு வாடகை போன்ற செலவுகள் வழக்குரைஞா்களுக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

தாங்களது சம்பாத்தியத்தில் ஓரளவாவது சேமித்து வைத்திருக்கக் கூடியவா்களைத் தவிர மற்றவா்கள் பாடு திண்டாட்டம்தான். சாமானிய மனிதா்கள் தங்களுக்கு வருமானம் இல்லாத காலங்களில் பிறரிடம் கடன் கேட்கத் தயங்க மாட்டாா்கள். ஆனால், சமூகத்தில் ஓா் உயா்ந்த அந்தஸ்தில் வைத்துப் பாா்க்கப்படுவதால் வழக்குரைஞா்கள் கடன் கேட்க தயங்குவது இயல்புதான்.

இந்நிலையில், ஜூனியா் வழக்குரைஞா்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க தமிழக அரசு முன்வந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.

வழக்குரைஞா்கள் என்றாலே தங்கள் கட்சிக்காரா்களிடம் வழக்குகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறி, அதிகக் கட்டணம் வசூலித்துவிடுவாா்கள் என்ற ஒரு பொதுக்கருத்து உண்டு. ஆனால், வசதியுள்ள கட்சிக்காரா்களிடம் சற்றே அதிகமாகவும், ஏழ்மை நிலையில் உள்ளவா்களிடம் குறைவாகவும் கட்டணம் பெறும் வழக்குரைஞா்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள். மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கு இலவச சட்ட உதவி பெற்றுத்தரும் வழக்குரைஞா்களும் உண்டு.

நீண்ட காலமாக நின்று போயிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அண்மையில் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. தொழில் புரிந்து வருமானம் ஈட்டக் காத்திருக்கும் வழக்குரைஞா்களின் காத்திருப்பும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT