நடுப்பக்கக் கட்டுரைகள்

புதிய வரைவிலக்கணம் தேவை

அ. அரவிந்தன்


ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஆறாயிரம் ரூபாயை நேரடியாக செலுத்தும் பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் மூலமும், விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கும் பிரதம மந்திரி கடன் அட்டை திட்டத்தின் வாயிலாகவும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வரும் சூழலில், சுயசார்பு இந்தியா திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ், பயனாளிகள் நிலப் பதிவுகளின்படி சாகுபடி நில உரிமையாளர்களாக இருப்பது அவசியம் என்ற அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தாலும், பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்த வரையறை தொடர்பான விவாதம் நாடு முழுவதும் தொடர்ச்சியாக அரங்கேறியதை புறந்தள்ளிவிட முடியாது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 23 வரையிலான நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 56 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 41 லட்சம் பேர் பயனடைந்து வந்த நிலையில், இந்த எண்ணிக்கை நான்கு மாத காலத்தில் 46 லட்சமாக உயர்ந்து, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய தொகை,  கைமாறி, ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிரச் செய்துள்ளது. 

இதனால், இத்திட்டம் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமார் 80 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்ட வேளாண் துணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இத்திட்டத்துக்காக இணையதளப் பக்கத்தில் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மாற்றப்பட்டு, புதிய கடவுச் சொல்லை வெளியிடக் கூடாது என்றும், அதனை மாவட்ட வேளாண் இயக்குநர் அல்லது துணை இயக்குநர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டைப் பொருத்த மட்டில் வேளாண் திட்டங்களின் கீழ் பயன்பெற வேண்டுமாயின், சொந்தமாக நிலம் வைத்திருப்பது கட்டாயம். அதே சமயம், "விவசாயி' என்ற பதத்துக்கான அளவுகோல் முறையாக பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், நிலமற்ற விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் குத்தகை முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், நாடு முழுவதும் வெவ்வேறு நிலைகளில், பல்வேறு பரிமாணங்களில் செயல்படுகின்றன. 

உதாரணமாக, "நீதி ஆயோக்' அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில், நில குத்தகையை நெறிப்படுத்தும் "மாதிரி விவசாய நில குத்தகை சட்டம், 2016'-ஐ கர்நாடகம் உள்ளிட்ட வெகு சில மாநிலங்களே திறம்பட செயல்படுத்தின. பெரும்பாலான மாநிலங்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், இச்சட்டத்தின் பயன்பாடுகளை குத்தகைக்கு நிலம் பெற்று விவசாயம் செய்வோர் அணுக இயலாத நிலை உருவானது.

இவர்களின் நிலைமை இப்படி என்றால், இதுபோன்ற தருணங்களிலும் இரக்கமின்றி வாடகை வசூல் செய்யும் நில உடைமைதாரர்கள், அரசின் மானியத்தையும் நிவாரண உதவிகளையும் தாங்கள் பெற்றுக் கொண்டு இடர்ப்பாடுகளின் சுமையை வாடகை விவசாயிகளின் தலையில் கட்டிவிடுகின்றனர்.

இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பட்டியலில், வாடகை விவசாயிகளின் எண்ணிக்கை அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (என்சிஆர்பி) குறிப்பிடுகிறது.

ஏற்கெனவே மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தரவில், "விவசாயி' என்ற சொல்லுக்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. "சொந்த நிலத்திலோ அல்லது பிறருடன் இணைந்து பங்குதாரராகவோ சாகுபடியில் ஈடுபடும் நபரே விவசாயி' என மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. 
அதே வேளையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், விவசாயிகளுக்காக நடத்திய சூழல் மதிப்பீட்டு ஆய்வின் 59-ஆவது சுற்று "சொந்தமாகவோ, குத்தகை முறையிலோ, பிற வழிகளிலோ நிலம் வைத்து உழுபவர்கள் விவசாயிகள்' என்று சுட்டுகிறது.

"விவசாயி' என்ற பதத்துக்கான வரைவிலக்கணம் குறித்த விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் கூட எழுந்தது. அப்போது, இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய பாஜக உறுப்பினர் அஜய் பிரதாப் சிங், "விவசாயி' என்ற சொல்லுக்கான தெளிவான வரையறை குறித்து கேள்வி எழுப்பியது மட்டுமன்றி, நாட்டில் விவசாயத்தை சார்ந்து வாழும் குடும்பங்களைக் கணக்கெடுக்க ஆய்வு ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என்றும் வினவினார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சொந்தமாக சாகுபடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்களைப் பட்டியலிட்டாரே தவிர, "விவசாயி' என்ற வார்த்தைக்கான தெளிவான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடாமல், "விவசாயம் மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவகாரம்' எனக் கூறி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆகையால், நில உரிமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டு, மத்திய அரசால் வகுக்கப்பட்ட "விவசாயி' என்ற பதத்துக்கான வரைவிலக்கணங்களை முறைப்படுத்தும் அதேவேளையில், குத்தகைதாரர்களின் நலன் கருதி, குத்தகை முறையை சமன் செய்யும் அவசியத்தையும் மத்திய அரசு உணர வேண்டும். 

குறிப்பாக, "மாதிரி விவசாய நில குத்தகை சட்டம், 2016'-ஐ திறம்பட செயல்படுத்தும் பட்சத்தில், மத்திய அரசு வகுக்கும் திட்டங்களின் கீழ், சொந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்பவர்கள் மட்டுமன்றி, குத்தகைதாரர்களும் பயன்பெற வழிவகை செய்யலாம்.

மத்திய அரசு, "விவசாயி' என்ற சொல்லுக்கான புதிய வரைவிலக்கணத்தை வகுக்காத வரை, "உழுபவனுக்கே நிலம்' என்ற கோட்பாடு கானல் நீரே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT