நடுப்பக்கக் கட்டுரைகள்

அறியாமையின் வெளிச்சம்

14th Sep 2020 08:32 AM | எஸ். ராஜாராம்

ADVERTISEMENT

ஒரு மழை இரவில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். கதைகளின் வர்ணனையில் வரும் "கூடு திரும்பும் பறவைகள்போல' ஏராளமான வாகனங்கள் எதிர்ப்புறத்திலிருந்தும், என்னை முந்தியும் விரைகின்றன. எதிரே வருவது காரா, ஆட்டோவா, பேருந்தா என அறிய முடியாத வகையில், முகத்தில் அறைகிறது வாகனங்களின் முகப்பு வெளிச்சம். 
"ஹை பீம்' எனப்படும் அதிசக்தி வாய்ந்த விளக்குகளின் இரக்கமில்லா வெளிச்சத்தில் ஒவ்வொரு முறையும் ஐந்து நொடிகள் என் கண்கள் இருளைச் சந்திக்கின்றன. அந்த இடைவெளியில் எதிலும் மோதிக்கொள்ளாமலும், சாலையைவிட்டுப் பள்ளத்தில் இறங்காமலும் செல்வது உயிரைப் பணயம் வைக்கும் சாகசமாக இருக்கிறது.
எதிரே வரும் பத்து வாகனங்களில் எட்டு வாகனங்கள் அதிசக்தி வாய்ந்த விளக்கொளியுடன்தான் வருகின்றன. ஒரு வேகத்தடையில் வேகத்தைக் குறைத்த நான்கு சக்கர வாகன ஓட்டியிடம் "ஹை பீம் விளக்கை அணைக்கக் கூடாதா' என ஆதங்கத்துடன் கேட்டபோது, ஏதோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துவிட்டுச் சென்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 12 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து உயிரிழப்புகளில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பொதுவாக சாலை விபத்துகளுக்குக் காரணமாக இருப்பவை, அதிக வேகம், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாதது, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாதது போன்றவைதான். இவை காரணங்களாக இருந்தாலும், இரவு நேர விபத்துகளுக்கு முக்கிய காரணம் வாகனங்களில் பயன்படுத்தும் சக்திவாய்ந்த முகப்பு விளக்குகளே. 
ஹை பீம் விளக்குகளை எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும்? எந்த நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்பவை குறித்து பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்பதில்லை. வாகன முகப்பு விளக்குகளில் "ஹை பீம்', "லோ பீம்' எனப்படும் இருவகை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இந்த ஹை பீம் விளக்குகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு எமனாகவே அமைந்துள்ளன. ஹை பீம் விளக்குகளை எங்கே, எப்போது பயன்படுத்த வேண்டும் என மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் விளக்குகின்றன. அதன்படி, நகர எல்லைக்குள் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அங்கு சாலைகளில் போதிய வெளிச்சம் இருக்கும். 
நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். அதிலும், எதிரே 200 மீட்டர் தொலைவில் வாகனங்கள் வந்தால், ஹை பீம் விளக்குகளை அணைத்து லோ பீம் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எதிரே வரும் வாகன ஓட்டி சாலையைத் தெளிவாகப் பார்த்து வாகனத்தை இயக்க முடியும்; அதன் மூலம் விபத்தைத் தவிர்க்க முடியும். அதுபோல, வெளிச்சத்துக்கான வழியே இல்லாத, உதாரணமாக சாலையோர விளக்கு எதுவுமே இல்லாத பகுதியில் உள்ள சாலைகள், போக்குவரத்து இல்லாத பகுதிகளில் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்தலாம். 
காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ஹை பீம் விளக்குகளை அணைக்க வேண்டும். சிலர் மழையின்போதும், பனிக் காலத்திலும் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்வது தவறு. ஹை பீம் விளக்குகளிலிருந்து உமிழப்படும் சக்தி வாய்ந்த ஒளியானது மழை நீரில் அல்லது பனியின் ஈரத்தில் பட்டு பிரதிபலித்து மிகையான கண் கூச்சத்தையே ஏற்படுத்தும்.
ஒரு வாகனத்தில் 1.5 மீட்டர் உயரத்துக்குமேல் முகப்பு விளக்குகள் இடம்பெறக் கூடாது. மேலும், அதிகபட்சமாக நான்கு முகப்பு விளக்குகள்தாம் இருக்க வேண்டும்.  புதிதாக கார்களை வாங்கும் பலர் அதன்பிறகு கூடுதலாக சில விளக்குகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வெள்ளை வெளிச்சத்தை உமிழும் இந்த விளக்குகளைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதம்தான்.
நான்கு சக்கர வாகனங்களின் அத்துமீறல் ஒருவகை என்றால், இருசக்கர வாகனங்களும் இதில் சளைத்ததாகத் தெரியவில்லை. எல்இடி விளக்குப் பட்டைகளை இருசக்கர வாகனத்தின் பம்பர் அல்லது பின்புறத்தில் ஒட்டி பலர் இயக்குகின்றனர். இரவு நேரங்களில் இந்த இருசக்கர வாகனங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம்போல உலா வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டாலும், வாகன விளக்குகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு என்பது சாலைப் பாதுகாப்பு வாரத்தின்போது, முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஒட்டுவதுடன் நின்றுவிடுகிறது. விளக்குகளை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாகன முகப்பு விளக்குகள் வெளியிடும் ஒளியின் தீவிரத்தைக் கண்டறிய "லக்ஸ்' மீட்டர் என்கிற சாதனத்தை காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர். 
பரிந்துரைக்கப்பட்ட ஒளியின் அளவைவிடக் கூடுதலாக இருந்தால் அந்த வாகனத்தை உடனடியாக மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். இதுபோல எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தி நடவடிக்கை எடுத்தால் விளக்குகளின் முறைகேடான பயன்பாடு குறித்த தீவிரத்தை வாகன ஓட்டிகள் உணரக்கூடும். 
சட்ட விதிமுறைகளைத் தாண்டி வாகன ஓட்டிகளுக்கும் பொறுப்புகள் உள்ளன. முதலில் ஹை பீம் விளக்குகளை நாம் அணைப்பதா, எதிரே வருபவர் அணைப்பதா என்கிற பிடிவாதத்திலேயே வாகனங்கள் கடந்து சென்றுவிடுகின்றன அல்லது விபத்துக்குள்ளாகின்றன. ஹை பீம் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் அறியாமை இருள் படிந்தவர்கள்; அந்த ஒளிப் பாய்ச்சல் அவர்களது 
அறியாமையின் வெளிச்சம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT