நடுப்பக்கக் கட்டுரைகள்

வாழ்க்கை வாழ்வதற்கே

10th Sep 2020 01:28 AM | ஸ்ரீதர் சாமா

ADVERTISEMENT

 

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் லட்சத்து முப்பதாயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மராட்டிய மாநிலமும் தமிழ்நாடும் அதில் கிட்டத்தட்ட நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டன. அதுவும் குடும்பத் தற்கொலை என்கிற ஒரு மோசமான நிகழ்வில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது.

பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணம் தவறான புரிதல்தான். சித்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வந்தது. அவருக்கு இருந்தது வெறும் சிறுநீரகத் தொற்று. பரிசோதித்த மருத்துவர் அவரிடம் "எங்கு பார்த்தாலும் ஒரே நோய்த் தொற்றாக இருக்கிறது. நீங்கள் எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். இவர் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்தபோது தொலைக்காட்சியில் கரோனா குறித்த செய்திகளைப் பார்த்திருக்கிறார். "எனக்கு கரோனா வந்துவிட்டது. யாரும் என் அருகில் வராதீர்கள்' என்று புலம்பியபடி எதிரில் வருபவர்களை கல்லால் அடிக்க முற்பட்டாராம். சமாதானப்படுத்திய பிறகு இரவில் அதே பயத்தில் எல்லாரும் உறங்கிய பின் வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுக்கொண்டு இறந்து விட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருந்தால், கல்வியறிவின்மை, விழிப்புணர்வின்மை என்று சில காரணங்கள் சொல்லியிருக்கலாம். படிப்பறிவும் விழிப்புணர்வும் கணிசமாக உயர்ந்திருக்கிற இன்றைய காலகட்டத்தில் ஏன் இப்படி நடக்கிறது?

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்திய தற்கொலை சராசரியை விட தமிழ்நாட்டின் தற்கொலை அளவு சுமார் மூன்று மடங்கு அதிகம். அதிலும் சென்னையின் பங்களிப்பு அதிகம். 

உலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் உலகமெங்கும் அதிகரித்து வருவதால் உடனடி நடவடிக்கையாக 10 % தற்கொலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முற்படும்போதே, கரோனா தாக்கம், கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி நடத்துவதால் ஏற்பட்ட அழுத்தம் போன்ற காரணங்களும் சேர்ந்து விட்டன. எனினும் தற்கொலையை ஒற்றை உயிர் இழப்பாகக் கருதாமல் சமூகப் பிரச்னையாக எண்ணி அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் பேசுவதை யாராவது பொறுமையுடனும் கரிசனத்துடனும் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கும் ஆலோசகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆலோசனை வழங்குவதோடு சில நாள்கள் கழித்து மீண்டும் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மனநலன், உடல் நலன் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.  நோயாளியின் பெயர், முகவரி போன்ற பதிவுகளுடன் குறிப்புகள் தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மனநலத் துறை சார்பில் தற்கொலை தடுப்பு ஆலோசனை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. 104 என்கிற அரசு தொலைபேசி எண்ணிற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உதவி கேட்டு போன் செய்கிறார்கள்.  அதில் ஆலோசகர் நீண்ட நேரம் பேசமுடியாது என்பதால், தனியார் ஆலோசனை மையங்களுக்கும் தகவல் தரப்படுகிறது.  தனியார் ஆர்வலர்கள் நீண்ட நேரம் பேசி பாதிக்கப்பட்டவர்களின் மனத்தை நல்ல வழியில் திசை திருப்புகிறார்கள். இது ஓரிரு நாள்களில் முடிகிற கதை அல்ல. எனினும் தொய்வின்றி இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 தொழிலில் நட்டம், விவசாயம் பொய்ப்பது, தீராத நோய், மது, போதைப் பொருள் பழக்கம் போன்ற காரணங்களால் 18 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளாக உள்ள அதிகம் பேர் தற்கொலை செய்வதாகச் சொல்லப்படுகிறது. இவை தவிர நீர்த்துப்போன மற்றொரு காரணம் தேர்வில் தோல்வி. 

ஒரு தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்திருக்கிற ஆய்வறிக்கையில்,  1000 குடியிருப்புகளில் 14-18 வயதினரின் 25% மாணவர்களில் சற்று பெரிய ஆங்கில வாக்கியத்தை முழுமையாகப் படிக்க முடியவில்லையாம். இவர்களில் 17% பேர் இரண்டாம் வகுப்பு தமிழைக் கூட வாசிக்க முடியவில்லையாம். கழித்தல் தெரியாத 75% பேரும் வகுத்தல் புரியாத 53% பேரும் இருந்தார்களாம். அறிதிறன்பேசி பயன்பாடு, இணையப் பயன்பாடு குறித்து மட்டும் அனைவரும் நன்கு அறிந்திருந்தார்களாம். இப்படிப்பட்டவர்கள் பின் நாள்களில் ஏதோ ஒரு பிரச்னை என்றால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

தென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடப்பது வருத்தத்திற்குரிய விஷயம். படிப்பறிவில் நாம் முன்னேறி இருக்கிறோம். அதிக வெள்ளமோ உயிரோடு வறுத்தெடுக்கும் வெப்ப நிலையோ இங்கே கிடையாது. பஞ்சம், பட்டினி, கலவரங்கள் இங்கே அதிகம் இல்லை. அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தற்கொலைகள் நடப்பது ஏன் என்பது புரியாத புதிர். ஏதோ ஒரு தெரு ஓரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்டிக்கடை வைத்து தினம் நூறு ரூபாயாவது பார்க்கும் எண்ணற்ற மாந்தர்கள் இதற்கு சாட்சி.

நமக்கு யாரும் இல்லை என்கிற மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். வாழ்க்கை ரகசியங்களை நாம் கற்றுத் தேற வேண்டும். எல்லா இடத்திலும் நிமிர்ந்து நிற்கும் மரமாக இருக்காது, புயலுக்கு, வெள்ளத்திற்கு வளையும் நாணலாகவும் இருக்க வேண்டும். "வெற்றியாளர்கள் விலகுவதில்லை; விலகுபவர்கள் வெற்றியைச் சந்திப்பதில்லை என்ற வாசகங்கள் நமக்குத் தெம்பு ஊட்ட வேண்டும்.

சுரங்கத் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி பதினைந்து நாள்களுக்குப் பின்னர் உயிரோடு மீட்கப் பட்டதைப் பத்திரிகைகளில் படித்தோம். அதிக வெளிச்சமோ அதிகக் காற்றோ இல்லாத இடத்தில்கூட அவர்கள் அத்தனை நாள்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை வென்றது. நாமும் எந்தத் துயர் வந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். வாழ்வதற்குத்தான் வாழ்க்கை; தற்கொலை செய்துகொள்ள அல்ல!

இன்று (செப். 10) உலக தற்கொலை தடுப்பு நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT