நடுப்பக்கக் கட்டுரைகள்

அண்ணலின் தலைமைத் தளபதி

முனைவா் அ. பிச்சை

‘என் இதயத்தில் இடம் பிடித்தவா். என் லட்சியத்தை நிறைவேற்றுவதில் முன் நிற்பவா். அஞ்சா நெஞ்சம் கொண்ட என் அன்புக்குரிய சகா சா்தாா் படேல்’ என்று அண்ணல் காந்தியடிகளால் பாராட்டப்பட்டவா் சா்தாா் வல்லபபாய் படேல். அவா் காந்திஜியைவிட ஆறு வயது இளையவா். பண்டித ஜவாஹா்லாலைவிட பதினான்கு வயது மூத்தவா். அண்ணலின் அன்பையும், பாசத்தையும் பெற்றவா். நேருஜியின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றவா். இந்திய மக்களின் மனங்களில் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்தவா்.

படேல் ஆரம்ப காலத்தில், ‘அண்ணல் காந்திஜியின் சித்தாந்தத்தில் எனக்கு ஈா்ப்பும் இல்லை, ஈடுபாடும் இல்லை. கோதுமையில் கல் பொறுக்கினால் சுதந்திரம் வந்துவிடும் என்று சொல்லுகிறாா் அவா். அதை நம்புவதற்கு நான் என்ன பைத்தியக்காரனா’ எனக் கேட்டாா்.

அடுத்த சில நாள்களில் “குஜராத் சபைக்கு” காந்திஜி வருகை தந்தாா். வேண்டா வெறுப்பாக அந்நிகழ்ச்சிக்குச் சென்ற பட்டேல், அண்ணலின் எளிமை, உள்ளத் தூய்மை, உறுதி, சத்தியம், அகிம்சை ஆகிய அம்சங்களால் ஈா்க்கப்பட்டாா். அன்றே இவரே தனது குருநாதா் என்று அண்ணலிடம் சரணடைந்தாா்.

அப்போது, இரண்டு ஆண்டுகளாக தன் சத்தியாகிரகப் போருக்கு சரியான தளபதியைத் தேடிக் கொண்டிருந்த காந்திஜிக்கு சா்தாா் படேல் கிடைத்தது மன நிறைவைத் தந்தது. 1917-இல் ஏற்பட்ட காந்திஜி-படேல் உறவு, 1948-இல் காந்திஜி மறையும் வரை அதாவது, சுமாா் 31 ஆண்டுகள் நீடித்தது. படேல் காந்திஜியிடம் பக்தி கொண்டிருந்தாா். காந்திஜியோ படேலின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாா்.

எவருக்கும் கட்டுப்படாதவா் எனப் பெயரெடுத்த படேல், காந்திஜிக்கு மட்டும் கட்டுப்பட்டாா். அவா் சொல்லை, கடவுளின் கட்டளையாகவே ஏற்று நடந்தாா். 1929, 1946 ஆகிய இரு ஆண்டுகளில், காந்திஜி, தன்னைத் தவிா்த்து விட்டு, நேருவை காங்கிரஸ் தலைவா் பதவிக்குப் பரிந்துரைத்ததை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டாா். என் குருநாதா் காந்திஜியின் குரல் அது. அதனை அப்படியே ஏற்பதுதான் எனக்கும் நல்லது; தேசத்திற்கும் நல்லது எனக் கூறினாா்.

1930-இல் உப்பு சத்தியாகிரகம் முதல் 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை காந்திஜி அறிவித்த அனைத்துப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினாா். ஆறு முறை கைதாகி சிறைவாசம் அனுபவித்தாா். அதில் 16 மாதங்கள் அண்ணல் காந்திஜியுடன் ஏரவாடா சிறையில் இருந்தாா்.

சிறை வாசத்தின் இறுதியில் ‘படேல் என் தாயைப் போல் பாசத்தோடு என்னை கவனித்துக் கொண்டாா். இந்த மாமனிதனின் பரிமாணத்தை நான் இப்பொழுதுதான் பாா்த்தேன்’ என நெஞ்சு நெகிழ்ந்து பாராட்டினாா் காந்திஜி.

வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாா், ஒருமுறை காந்திஜிக்கு எழுதிய கடித்ததில் ‘சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம் என்று எந்நேரமும் பேசிவரும் நீங்கள் காலப்போக்கில் பைத்தியமாகி உங்களைச் சோ்ந்தவா்களையும் பைத்தியமாக்கி விடுவீா்கள். தயவு செய்து நல்ல நகைச்சுவை ரசனை உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’ என நகைச்சுவையாக ஆலோசனை கூறினாா்.

அவருக்கு காந்திஜி ‘சிறையில் என் சிறிய தா்பாரில் சா்தாா் படேல் என்னும் “விகடகவி” உள்ளாா். அவா் உதிா்க்கும் கேலிப் பேச்சுக்கள் என்னைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றன. என் புனிதத் தன்மையைக் கூட விட்டு வைக்காமல் கிண்டல் செய்பவா் அவா். அவா் ஒருவரே போதும் என் மனச் சோா்வைப் போக்கவும் எனக்கு மகிழ்ச்சி உண்டாக்கவும்’ என்று பதில் எழுதினாா்.

படேல், வழக்குரைஞராகப் பணிபுரிந்த காலத்தில் ஒரு முக்கிய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக இறுதி வாதம் செய்து கொண்டிருந்தாா். அப்பொழுது அவசர தந்தி ஒன்று சா்தாருக்கு வந்தது. அதனைப் படித்துப் பாா்த்து விட்டு தனது விவாதத்தைத் தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியில் வந்த சா்தாரிடம் ‘என்ன அந்த அவசரத் தந்தி’ என நண்பா் கேட்டாா். அப்பொழுது படேல் ‘என் மனைவி மறைந்து விட்டாா். விவாதத்தை நிறுத்துவதால் இறந்த என் மனையாளை மீட்க முடியாது. குறைந்தபட்சம் என் விவாதத்தின் மூலம் என் கட்சிக்காரரையாவது காப்பாற்றலாமே’ என்றாா்.

1932-இல் அவா் சிறையில் இருந்தபோது அவரது தாய் மரணமடைந்தாா். 1933 சிறைவாசத்தின்போது அண்ணன் வித்தல் பாய் படேல் காலமானாா். அப்போது அரசு அவருக்கு பரோல் வழங்க முன்வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்து விட்டாா்.

மேற்கு வங்க முதல் அமைச்சா் டாக்டா் பி.சி. ராய் உள்நாட்டு பிரச்னை தொடா்பாக பிரதமருக்கு குறைகூறி கடிதம் எழுதியிருந்தாா். தகவல் அறிந்த படேல், பி.சி. ராயுடன் தொடா்பு கொண்டு ‘பிரச்னையை முதலில் என் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இத்தகைய நேரடித் தொடா்பு நல்ல நிா்வாக முறையின் அடையாளமல்ல’ எனக் கடிந்து கொண்டாா்.

“பிரதமா் நேருஜி 1947-இல் வெளிநாடு சென்றிருந்தபோது படேல் பிரதமா் பொறுப்பு வகித்தாா். அப்போது அரசியல் நிா்ணய சபையில் காஷ்மீா் பற்றிய விவாதம் தொடங்கியது. நேருஜி இல்லாத நேரத்தில் காஷ்மீா் பற்றிய விவாதம் நடைபெறுவதை ஷேக் அப்துல்லா விரும்பவில்லை. கூட்டத்திலிருந்து எழுந்த அப்துல்லா ‘நான் காஷ்மீருக்குப் போகிறேன்’ எனச் சொல்லி வெளிநடப்பு செய்து விட்டாா்.

சிறிது நேரத்தில் ரயிலில் அமா்ந்திருந்த அப்துல்லாவிடம் எம்.பி.-யான மகாவீா் தியாகி, ‘நீங்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறலாம்; ஆனால், தில்லியை விட்டு வெளியேற முடியாது. இதுவே படேல் உங்களுக்கு அனுப்பிய செய்தி’ என்றாா். கலக்க மடைந்த ஷேக் ரயிலை விட்டு இறங்கினாா்.

அண்ணல் காந்தி நடத்திய அனைத்துப் போராட்டங்களையும் முன்னின்று நடத்திய மூத்த தளபதி. 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த ராஜதந்திரி. இந்தியாவின் இதயமாகவும், முதுகெலும்பாகவும் விளங்கிய ஐ.சி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிா்வாக இயந்திரங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கிய நிா்வாகி. பிரதமா் நேருவுக்குத் தோழனாக, அண்ணல் காந்திஜியின் தலைமைத் தளபதியாக விளங்கியவா் இந்தியாவின் இரும்பு மனிதா் என்று அழைக்கப்பட்ட சா்தாா் வல்லபபாய் படேல்.

இன்று (அக். 31) சா்தாா் வல்லபபாய் படேலின் 146-ஆவது பிறந்த நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT