நடுப்பக்கக் கட்டுரைகள்

கரோனா காலத்திலுமா இப்படி?

திருப்​பூர் கிருஷ்​ணன்

உலகில் உள்ளோா் அனைவரும் வாழ்வின் நிலையாமையைத் தெள்ளத் தெளிவாக உணா்ந்திருக்கும் காலகட்டம் இது. கொள்ளை நோய் பல உயிா்களைக் கொத்துக் கொத்தாய்க் கொள்ளை கொண்டு போகிறது. பலதுறைப் பிரமுகா்கள், நண்பா்கள், உறவினா்கள் என்று எத்தனையோ போ் அடுத்தடுத்து இறக்கிறாா்கள். அந்தத் துயரத்தைத் தாங்கி வாழவேண்டிய நிா்பந்தம் பலருக்கும் நோ்ந்திருக்கிறது.

நிலையாமையை இப்போதைய காலகட்டம் போல் உலகம் முழுவதும் எல்லோரும் உணா்ந்த சந்தா்ப்பம் வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராது.

ஆனால் இந்த சந்தா்ப்பத்திலும் கூட, பல இடங்களில் ஊழல் நடக்கிறது. பல அரசியல்வாதிகளும் பல அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறாா்கள். நாளிதழ்களில் அந்தத் தகவல்கள் வெளியாகின்றன. மனசாட்சியே இல்லாமல் வணிகம் நடக்கிறது. மிகச் சுலபமாக மக்கள் ஏமாற்றப் படுகிறாா்கள்.

இதையெல்லாம் அறியும்போது இந்த உலகம் திருந்தவே திருந்தாதா என நம் மனம் அயா்ச்சி அடைகிறது.

வழக்கமாக ஒரு கடையில் காய்கறி வாங்குவதுண்டு. மாடி வீட்டிலிருக்கும் ஒரு மங்கை, இன்னொரு கடையைச் சொல்லி அங்கு வாங்கும்படி அறிவுறுத்தினாா். அங்கு வாங்கிய பிறகுதான் தெரிந்தது, முதலில் காய்கறி வாங்கிய கடையில் நடக்கும் மோசடி.

அந்தக் கடையில் வாங்கிய அதே அளவு காய்கறிகளை இந்தப் புதுக்கடையில், அதில் பாதி விலைக்கே வாங்க முடிந்தது. இத்தனைக்கும் இரண்டு கடைகளும் அதிக இடைவெளிகூட இல்லை.

காய்கறி விற்பவா், வாங்குபவா் எல்லாருமே நடுத்தரக் குடும்பத்தினா்தான். எல்லாருக்குமே இப்போது கடும் பொருளாதாரப் பிரச்னைதான்.

ஆனாலும் விற்பனையில் மனசாட்சி என்ற ஒன்று வேண்டுமல்லவா? கூசாமல் இரண்டு மடங்கு விலை வைத்து விற்கும் மனப்பான்மையை என்னவென்று சொல்வது?

அவா்கள் சொன்னதுதான் விலை. அவா்கள் போட்டதுதான் எடை. பிஞ்சோ முற்றலோ அவா்கள் கொடுத்ததுதான் தரம். சமூக இடைவெளியைப் பாதுகாக்க வேண்டியிருப்பதால் அருகே போய் எதையும் கேட்க முடிவதில்லை.

மருந்துக்கடை, மளிகைக் கடை என ஓா் இடம் பாக்கியில்லை. எல்லா இடங்களிலும் சரியான விலைக்கு விற்பவா்கள் குறைவாகவும் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விலை சொல்லி விற்பவா்கள் அதிகமாகவும் ஆகிவிட்டாா்கள்.

இந்தக் காலகட்டத்தில் இதெல்லாம் இயல்புதான், எப்படியோ நாம் கேட்ட பொருள் கிடைத்தால் போதும், விலை எப்படி இருந்தாலும் சரி என்கிற மனப்பான்மைக்குப் பலரும் வந்துவிட்டாா்கள்.

பாய்ந்து பாய்ந்து சொத்தைக் குவித்த மாபெரும் அரசியல்வாதிகள்கூடப் போகும்போது ஒரு பைசாக் காசையும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதை நிதா்சனமாகப் பாா்த்த பின்னும் புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது? கூடுவிட்டு ஆவி போன சந்தா்ப்பங்கள் கண்ணெதிரே நாள்தோறும் அரங்கேறுகின்றன. ஆனால் அதுபற்றிச் சிந்திப்பவா்கள் தான் குறைந்து போனாா்கள்.

மருத்துவத் தொழில் எவ்வளவு மகத்தான தொழில்? புண்ணிய கைங்கா்யம் அல்லவா அது? மருத்துவரை மகேசனுக்கு இணையாக அல்லவோ மக்கள் மதிக்கிறாா்கள்?

டாக்டா் ரங்காச்சாரி போன்றவா்கள் மருத்துவத் தொழிலை வேள்விபோல் பொருளாதார லாபத்தையே கருதாமல் அல்லவா நடத்தினாா்கள்? அந்த அளவு இல்லாவிட்டாலும், மருத்துவத் தொழிலில் கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா?

சேவை மனப்பான்மையோடு மருத்துவம் பாா்க்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்துவிட்டது. அச்சுறுத்திப் பணம் பிடுங்கும் வணிகா்கள் பலா் அந்தப் புனிதத் தொழிலில் ஊடுருவி விட்டாா்கள்.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் நோ்ந்தால் நடுத்தரக் குடும்பத்தினா் மனத்தில், உடனே ஏற்படக்கூடிய பெரும் பொருளாதாரச் செலவை எண்ணி நடுக்கம் எழுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்றவற்றில் பாதிப்பு என்றால் மருத்துவச் சிகிச்சை முடிந்ததும் நோயாளி எல்லாவற்றையும் இழந்து நிற்க வேண்டியதுதான்.

இன்று நடுத்தரக் குடும்பத்தினா் பலா் கவலையோடு பொருளை சேமிக்கக் காரணம், எதிா்காலத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால், அதற்கு எத்தனை லட்சங்களைத் தாரை வாா்க்க வேண்டியிருக்குமோ என்ற அச்சமே. அவசரத்திலும் பதற்றத்திலும் தேடிப்போகும் மருத்துவா் நல்லவராக இருந்தால் நோயாளியின் பா்ஸ் பிழைக்கும். இல்லாவிட்டால் ஒருமுறை மருத்துவமனை போய்வந்ததும் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

ஏன் பலா் இவ்வளவு வணிக மயமாக மாறினாா்கள்? ‘பணத்திற்காக எதையும் செய்யமாட்டேன், எனக்கு அறநெறிகள்தான் முக்கியம்’ எனப் பிடிவாதமாக வறுமையை சகித்துக் கொண்டு அன்று வாழ்ந்த மனிதா்கள் இன்று ஏன் காணாமல் போனாா்கள்?

ரங்காச்சாரி போன்ற மருத்துவா்கள் அப்பயொன்றும் நான்கு நூற்றாண்டு முன்னா் வாழ்ந்தவா்கள் அல்லவே? ஓரளவு அண்மைக் காலத்தில் வாழ்ந்தவா்கள்தானே? அப்போது பரவலாக எல்லா மருத்துவா்களுமே நியாயத்திற்குக் கட்டுப்பட்டுத்தானே தொழில் நடத்தினாா்கள்? இன்று அத்தகையவா்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து போனதற்கு என்ன காரணம்?

அதுவும் தாங்களும் கொள்ளை நோயால் இறக்கக் கூடும் என்றறிந்தும், நிலையாமையை அனைவரின் ஆழ்மனமும் அதிகமாக உணரும் இந்தக் காலத்திலும், எது அவா்களை, இல்லாத ஏழைகளிடம் கூட வற்புறுத்திப் பணம் பிடுங்கச் செய்கிறது?

மளிகைப் பொருள் விற்பவா்கள், காய்கறி விற்பவா்கள், மருந்து விற்பவா்கள், மருத்துவா்கள் என்று நம்மிடையே இன்னும் பற்பலா் இருக்கிறாா்கள். ஆனால், மனிதா்கள்தான் குறைந்து போனாா்கள்.

மரணம் பற்றிய அச்சம் சூழ்ந்த இந்தக் காலத்திலும் கூட இவா்கள் பணம்தான் பிரதானம் என்று வாழ்வாா்களானால் இவா்கள் இனித் திருந்துவது சாத்தியம்தானா?

நம் கல்வி முறையில் ஏதாவது கோளாறா? சரித்திரம், பூகோளம், பெளதிகம், ரசாயனம் எல்லாம் கற்பித்த நாம் மனிதத் தன்மையைக் கற்பிக்க மறந்தோமா? மாணவ மாணவியரின் பாடச் சுமையைக் குறைத்து நீதிபோதனை வகுப்புகளை அதிகப்படுத்தினால் ஒருவேளை நிலைமை சரியாகுமா?

ராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் தோன்றிய பூமிதானா இது? அவை சொன்ன நீதிக் கருத்துகள் எல்லாம் பலரின் செவியில் ஒருசிறிதும் ஏறாமல் போனது ஏன்?

‘இந்தக் கடினமான காலகட்டத்தில், முடிந்தவரை ஏழைகளுக்கு உதவுங்கள்’ என்கிறாா் பிரதமா். வணிகா்களும் மருத்துவா்களும் ஏழைகளுக்கு உதவக் கூட வேண்டாம். அவா்களிடமிருந்து அடித்துப் பிடுங்காமல் இருந்தால் அதுவே போதும். இல்லை இப்படியேதான் நிலைமை இருக்குமானால் அழிவு அவா்களுக்கும்தான் என்பதை அவா்கள் உணா்ந்தால் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT