நடுப்பக்கக் கட்டுரைகள்

அதிருப்தி அளித்த அறிவிப்பு

ஆ. நங்கையார் மணி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணம் மற்றும் பயணச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளார். அமைச்சரின் அந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதைவிட விமர்சனங்களையும் அதிருப்தியையுமே ஏற்படுத்தியுள்ளது. 
இந்த விமர்சனங்களுக்குக் காரணம் இல்லாமல் இல்லை.  கரோனா காலமாகிய அசாதாரண சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகைக்காக ரூ. 5,675 கோடி செலவு ஆகும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு பயணச் சலுகையில் 12 சதவீதத் தொகை ஜிஎஸ்டி மூலம் மீண்டும் மத்திய அரசுக்கே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நிலைக்கு ஏற்ப விடுப்பு பயணச் சலுகையாக ரூ. 36 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் இந்த விடுப்பு பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள நிதி அமைச்சர், இந்த முறை பணத்திற்கு மாற்றாக பொருள்களாக பெறுவதற்கான கூப்பன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
பயணச் செலவைப் போல் மூன்று மடங்கு கூடுதல் மதிப்பிலான மற்றும் பயணச் சலுகைக்கு நிகரான மதிப்பு கொண்ட பொருள்களை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 சதவீத சரக்கு சேவை வரி கொண்ட பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில், விடுப்பு பயணச் சலுகைக்காக மத்திய அரசு செலவிடவுள்ள ரூ. 5,675 கோடியைப் போல மூன்று மடங்கு கூடுதலான தொகைக்கு பொருள்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதன் மூலம் 12 சதவீத ஜிஎஸ்டி தொகையாக ரூ. 2000 கோடி திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2021 மார்ச் 31-க்குள் சுமார் ரூ. 2000 கோடி ஜிஎஸ்டியாக மத்திய அரசுக்குக் கிடைக்கும் வகையிலேயே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். உணவுப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இந்த அகவிலைப்படி(அடிப்படை ஊதியத்தில் 1 முதல் 7 சதவீதம் வரை) கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. 
2020 ஜனவரிக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்துவதற்கு கடந்த பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. ஆனால் கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, 2020 ஜூலை மற்றும் 2021 ஜனவரி மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வும் கிடையாது என தெரிவித்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்ற சூழல் உருவாகியுள்ளது. 
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும், 38 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 12 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர். நாடு முழுவதும் கணக்கிடும்போது சராசரியாக 3 கோடி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் சுமார் 25 லட்சம் பேரும் பாதிப்புக்குள்ளாவார்கள். 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மத்திய - மாநில அரசுகளுக்கு சுமார் ரூ. 40ஆயிரம் கோடி வரை செலவு குறையும். 
ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.1,100 முதல் 6ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 540 முதல் ரூ. 3ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் என தொழிற்சங்கவாதிகள் கூறுகின்றனர். 
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட பண்டிகை கால முன் பணம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பண்டிகை கால முன்பணமாக வழங்கப்படும் ரூ.10ஆயிரம், 10  தவணையில் பிடித்தம் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தால் மத்திய அரசுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். 
அகவிலைப்படி உயர்வு ரத்து மூலம் ரூ. 40ஆயிரம் கோடி வரை நிதி இழப்பை மத்திய - மாநில அரசுகள் தவிர்த்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகைக்காக ரூ. 5,675 கோடி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் சுமார் ரூ. 2000 கோடி ஜிஎஸ்டி-யாகத் திரும்ப கிடைத்து விடும். அதேபோல், முன் பணமாக வழங்கப்படும் ரூ. 4 ஆயிரம் கோடியும் 10 மாதங்களில் திரும்ப கிடைத்துவிடும். 
ஊதியப் பிடித்தம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் ரூ. 6000 கோடி திரும்ப கிடைத்துவிடும் நிலையில், அந்த வருவாயைக் கணக்கில் கொள்ளாமல், ரூ. 9,675 கோடி செலவு என மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொருளாதார சீரமைப்புக்காக ரூ. 20 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டபோது தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. ஆனால், அந்தத் தொகையின் மூலம் தொழில் துறையினர் மற்றும் தொழில் முனைவோருக்கு நேரடியான பலன் கிடைக்கவில்லை என்ற சூழலில் அது விமர்சனமானது. 
அதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த முன்பணச் சலுகை மற்றும் விடுப்பு பயண சலுகை அறிவிப்பும் அதிருப்தியாக மட்டுமே எஞ்சியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT