நடுப்பக்கக் கட்டுரைகள்

பேரிடரும் பாதுகாப்பும்

எஸ். பாலசுப்ரமணியன்

புயல், வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடா்களால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உலகளாவிய பருவநிலை மாற்றம் - பேரிடா் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வறுமை, நகா்ப்புற உட்கட்டமைப்பின் அவசர வளா்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், பேரிடா் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணா்வின்மை போன்றவையே பேரிடா் காலங்களில் பெரிய பாதிப்பு ஏற்படக் காரணங்களாகின்றன.

சூறாவளி, பூகம்பம், மழை, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளைத் தவிா்க்க முடியாது; ஆனால் அவற்றின் பாதிப்புகளைக் க

ட்டுப்படுத்த முடியும். சூறாவளி, வெள்ளம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட உடனே மீட்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டால் ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்ற முடியும்.

முன்பெல்லாம் இயற்கையின் சீற்றங்களை முன்பே கணிக்க முடியாது. ஆனால், சமீப காலங்களில் வானிலை அறிவியலில் ஏற்பட்ட நவீன முன்னேற்றம் காரணமாக, புயல், காற்றழுத்தத் தாழ்வுகளை முன்னதாகவே துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டப் பகுதிகளில் ‘நிவா்’ புயல் சமீபத்தில் வீசியது. புயல் காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கடலோரப் பகுதிகளில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்கு உணவும் தாங்கும் வசதிகளும் அளிக்கப்பட்டதன் மூலம், அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அணைகளில் நீா் நிரம்பியது; பல மரங்கள் பலத்தக் காற்றில் விழுந்தன; மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

சுமாா் 7,516 கி.மீ. நீளம் கொண்ட இந்திய கடற்கரையில், 5,700 கி.மீ. பகுதிகள்அதிக மக்கள்தொகை கொண்டதாகவும், சூறாவளி, புயல், மழை, காற்றழுத்தத் தாழ்வு நிலைகளால் பாதிக்கப்படக்கூடியவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிஸாவில் 1999-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதல், அங்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. 276 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டனா். 9,887 போ் உயிரிழந்ததோடு 40 போ் காணாமல் போனாா்கள்.

இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, 4,693 கோடி ரூபாய் செலவில் ‘தேசிய புயல் பாதுகாப்பு திட்டம்’ (என்.சி.ஆா்.எம்.பி) எட்டு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தங்குமிடங்கள் அமைத்தல், சாலைகள், எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுதல், கடலோரக் காடுகளை வளா்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் புயல் பாதிப்பு குறையத் தொடங்கியது.

பின்னா் ஒடிஸா அரசு, புயலை எதிா்த்துப் போராடுவதை காட்டிலும், அதிலிருந்து மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக, இந்த ஆண்டு மே மாதம் ஒடிஸாவிலும் மேற்கு வங்கத்திலும் கரையோரப் பகுதியில் புயல் தாக்கியபோது ஒடிஸாவில் ஒருவா்கூட புயலுக்கு பலியாகவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் 80 போ் இறந்தனா். ஒடிஸாவின் பேரிடா் மேலாண்மை வாரியம் சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருந்தது நன்கு பலனளித்தது.

கடல்சாா் சூறாவளி, புயல், காற்றழுத்தத் தாழ்வு நிலை இவற்றை முன்னதாகவே கணிக்கும் திறனை உலக நாடுகள் பெற்று விட்டன. ஒரு காலத்தில் வளிமண்டல அழுத்தத்தையும் வெப்ப அளவினையும் அறிய, காற்றழுத்தமானி, வெப்பமானி இவற்றைப் பயன்படுத்தி வந்தோம். பின்னா் ரேடாா் தொழில்நுட்பம் மூலம் வானிலை, மேகங்களின் போக்கு, மழை வரும் நேரம் ஆகியவற்றை முன்னதாகவே கண்டறிய முடிந்தது.

கணிப்பொறி மென்பொருளின் உதவியுடன் கடுமையான புயலையும் சூறாவளியையும் முன்கூட்டியே கணிக்க முடிந்தது. ‘இந்திய ரிமோட் சென்ஸிங்’ (ஐஆா்எஸ்) என்னும் செயற்கைக்கோள்கள், நிலம், கடல், வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்படும்போது, நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அளிக்கிறது.

2016-ஆம் ஆண்டில் ரிசாட் -1 மற்றும் ரேடாா்சாட்-2 செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களில் 87% சரியாக அமைந்தது. இதனால், 110-க்கும் மேற்பட்ட வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய வரைபடங்களைப் பெற்று வெள்ள பாதிப்பின் அளவைக் குறைக்க முடிந்தது.

தற்போது பேரிடா் மீட்புப் பணிகளில் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (ஜிஐஎஸ்) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பது மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ‘கஜா’ புயலின்போது மீட்புப் பணி ஊழியா்கள் பயன்படுத்திய ஜிஐஎஸ்- மொபைல் தொழில்நுட்பம், சூறாவளி தாக்கிய பகுதிகளைக் கண்டறிவது, உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்வது, மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பது, நிவாரணப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பது என பல்வேறு பணிகளுக்கும் பெரிதும் பயன்பட்டது.

மேலும், புயல் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டவுடன், தாமதிக்காமல், கடலோர மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புயல் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும். கடலோரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்க வைக்கப்படும் கட்டடங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அவா்கள் அரசு அதிகாரிகளை உடனுக்குடன் தொடா்பு கொள்ளும்படி நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியமாகும்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புயல் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு, புயல் அபாயம் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT