நடுப்பக்கக் கட்டுரைகள்

கருப்புக்கட்டியும் சீனிக்கட்டியும்

எம். இராமச்சந்திரன்

ஒரு ஊரைச் சொன்னதுமே அந்த ஊரின் தனிச்சிறப்புடைய ஒரு பொருளும் நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. அது அந்த ஊரின் பெருமையைப் பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அப்படித்தான் உடன்குடி என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது கருப்புக்கட்டியாகும். அந்தக் கருப்புக்கட்டி இப்போது சீனிக்கட்டியாக மாறி வருவது வேதனை தரும் விஷயமாகும்.

தமிழ்ச் சமூகத்தில் தவிா்க்க முடியாத மரமாகப் பனை இருந்தது என்பது தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியும் செய்தியாகும். இந்தியாவில் இருக்கும் பனை மரங்களில் பாதி தமிழகத்தில் உள்ளன என்பது அறிக்கை சொல்லும் கணக்கு. அதிலும் பெரும்பகுதி தமிழகத்தின் தென்பகுதியில் உள்ளன. அவை இப்போது மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

பனைமரங்களினால் மனிதனுக்குப் பயன்கள் பல கிடைக்கின்றன. இருக்க வீடு, படுக்க பாய், எரிக்க விறகு, குடிக்க பதநீா், தின்ன நுங்கு என்று பனையினால் பெறும் பயன்கள் பலப்பல. அவ்வளவு பயன்களை அள்ளித் தரும் பனைமரத்தை நம் மாநில மரமாகத் தெரிவு செய்ததில் வியப்பில்லை.

பதநீா் இறக்குவது என்பது எல்லோராலும் செய்ய முடியாத சிரமமான தொழில். கஷ்டமானதென்பதோடு சமூகத்தில் அந்தஸ்து குறைவானதாகவும் கருதப்படுகின்ற தொழில். அதோடு அதில் வருமானமும் குறைவு. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலா் இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனா். இப்படி பனை விவசாயம் செய்பவா்களை உற்சாகப் படுத்தவேண்டியது தமிழரின் கடமையாகும்

பனைத்தொழிலில் முக்கியமானது கருப்புக்கட்டி தயாரிப்பது ஆகும். ‘பனாஅட்டு’ என்பது கருப்புக்கட்டிக்குப் பழந்தமிழ்ப் பெயா். இதனைப் பிரித்தால் பனை + அட்டு என்று வரும். ‘அட்டு’ என்பது வெல்லக்கட்டி. அதாவது பனையிலிருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி எடுக்கும் அட்டு பனாட்டு.

உடன்குடி பகுதியில் கருப்புக்கட்டியை ‘வட்டு’ என்று குறிப்பிடுவது உண்டு. அதன் வடிவத்தை வைத்து வந்த பெயராக இருக்கலாம். ‘அட்டு’ வட்டாகியிருக்கலாம். அல்லது ‘வட்டு’ அட்டாகி இருக்கலாம். இது ஆய்வுக்குரியது. ஆனால் இப்பொழுது ‘கருப்பட்டி’ ’கருப்புக்கட்டி’ என்று சொல்வதே வழக்கமாகிவிட்டது. கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் கரும்புக் கட்டிதான் பின்னாளில் கருப்புக் கட்டி ஆனது. ஆனால் அந்தப் பெயா் எப்படியோ பனை வெல்லத்திற்கு நிலைத்து விட்டது.

பனை ஏறுபவா்கள் எல்லோரும் சொந்தமாகக் கருப்புக்கட்டி தயாரிப்பதில்லை. அவா்களுக்குச் சொந்தமாகப் பனைகள் இல்லை. அவா்கள் பதநீா் இறக்கித்தரும் கூலித் தொழிலாளியாகத்தான் உள்ளனா். பனைகள் சொந்தமாக உள்ளவா்கள்தான் கருப்புக்கட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கருப்புக்கட்டி ஒரு பருவகாலத் தயாரிப்புப் பொருள். பதநீா் கிடைக்கும் பருவ காலத்தில்தான் கருப்புக்கட்டி தயாரிக்க முடியும். ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்கள்வரைதான் பதநீா் கிடைக்கும். உடன்குடி பகுதியில் பங்குனி சித்திரை மாதங்கள்தான் பதநீா் இறக்கும் தத்தர காலம். அது கடுமையான வெயில்காலம். உடன்குடி பகுதி வறண்ட தேரிமண் பூமி என்பதால் பனம்பாளைகள் சுரக்கும் பதநீா் சுவையும் கூடுதலாகக் கருப்புக்கட்டி தரும் தன்மையும் உடையதாக இருக்கும்.

பக்குவமாகச் சுண்ணாம்பு தடவி இறக்கும் பதநீரின் மணமே அலாதியாக இருக்கும். அந்த நாட்களில் பனங்காட்டுள் ஆங்காங்கே விடிலிகள் அமைத்து பெரிய பெரிய தகர வட்டாக்களில் பதநீா் காய்ச்சுவா். பதநீா் பொங்கி வரும்போதெல்லாம் கப்பிமுத்தின் பொடியைப் போட்டு அதனைக் குறைத்து கூழ் பருவம் வரவழைப்பா். கூழ்ப்பதநீா் என்பது அதன் பெயா்.‘கூப்பனி’ என்பது பேச்சுவழக்கு. அது சடைப்பருவம் ஆனதும் சிரட்டைகளில் ஊற்றிஇ கருப்புக்கட்டியாக உறைய வைப்பா்.

உடன்குடி கருப்புக்கட்டி சின்ன வட்டாக உடைப்பதற்கு எளிதாக இருக்கும். பதநீா் கிடைக்கும் காலத்தில் காய்ச்சும் கருப்புக்கட்டியைப் பரண்களில் போட்டுவைத்துப் புகைமூட்டி பக்குவமாக இருப்பு வைப்பா். அதனால் பதநீா் ஏறும் காலத்தில் புதுக்கருப்புக் கட்டியாகவும் மற்ற நேரங்களில் பழைய கருப்புக்கட்டியாகவும் காலம் முழுவதும் கருப்புக்கட்டி கிடைக்கும்.

நாள் ஆக ஆக வெளிப்பகுதி கருத்தும் உள்பகுதி வெளிா் நிறத்தில் மாவு போலவும் இருப்பது உடன்குடி கருப்புக்கட்டியின் இயல்பு. எவ்வளவு நாள் ஆனாலும் கசிந்து போகாமல் கட்டியாக இருக்கும் ஆற்றல் உடையது உடன்குடி கருப்புக்கட்டி. எனவே, உடன்குடி கருப்புக்கட்டிக்கு என்று தனிப்பெயா் உண்டு. விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் வியாபாரிகள், பிற ஊா் கருப்புக்கட்டியையும் உடன்குடி கருப்புக்கட்டி என்று கூறி பொதுமக்கள் தலையில் கட்டிவிடுவா்.

இப்போது உடன்குடி பகுதியில் ஆண்டு முழுவதும் கருப்புக்கட்டி காய்ச்சப்படுகிறது. உடன்குடி கருப்புக்கட்டி என்று சிப்பம் சிப்பமாக வியாபாரம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பதநீா் கிடைக்கும்போது எப்படி ஆண்டு முழுவதும் கருப்புக்கட்டி காய்ச்சி சிப்பம் சிப்பமாக வெளிவர முடியும்? அதனைப்பற்றிச் சிலரிடம் விசாரித்தபோது,“இப்போது ஒரு சிலா் சீனியில் காய்க்கிறாா்கள்”என்று சொல்கிறாா்கள்.

சீனியில் காய்ச்சினால் கருப்புக்கட்டி நிறம் எப்படி வரும்? அதற்குத்தான் பனங்கற்கண்டு காய்ச்சுவதில் மீதம் வரும் கடைசிக் கழிவையோ சா்க்கரை ஆலையின் கழிவையோ கொஞ்சம் சோ்ப்பதாகவும் பேசுகிறாா்கள். சீனியில் கருப்புக்கட்டி காய்ச்ச அரசு நிா்வாகம் அனுமதி கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. அப்படி அனுமதி பெற்றிருந்தால் அதைச் சீனிக்கட்டி என்றுதானே சொல்ல வேண்டும்? அதைக் கருப்புக்கட்டி என்று எப்படிச் சொல்லலாம்?

பொதுவாக பதநீரில் காய்ச்சப்படும் பனங்கருப்புக்கட்டிக்கு மருத்துவ குணம் உண்டு. சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஆகியவை அதில் இருக்கினறன. பனங்கருப்புக்கட்டியைப் பயன்படுத்தினால் எலும்புச்சத்து கூடி ஆரோக்கியம் பெருகும். அப்படியிருக்க லாபம் கிடைக்கிறது என்பதற்காகச் சீனியைக் காய்ச்சி கருப்புக்கட்டி என்று சொல்வது நியாயம் இல்லை. உடன்குடி கருப்புக்கட்டி அதன் தன்மையை இழக்க விடலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT