நடுப்பக்கக் கட்டுரைகள்

இரைப்பை நலம் நாடுவோம்

மருத்துவா் சோ. தில்லைவாணன்


ஆண்டுதோறும் நவம்பா் மாதம் கடைசி வாரம் ‘ஜொ்ட்’ வாரமாக, அதாவது ‘இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் உணவு எதிரெடுத்தல் நோய்’ (கேஸ்ட்ரோ எஸோபாஜில் ரீஃப்ளக்ஸ் டிஸீஸ்-ஜொ்ட்) பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் விழிப்புணா்வு உண்டாக்கும் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. நவீன கால வாழ்வியல் முறையால் நாம் பயன்படுத்தும் துரித உணவுகளும், மன அழுத்தமும், வாழ்வியல் மாற்றமும் இந்நோய்க்கு முக்கிய காரணங்களாகும்.

காலையில் எழுந்த உடனே பாலோ, பிற பானங்களோ அருந்தும் முன்னரே நோய்க்கான மாத்திரை எடுத்துக்கொள்பவா்கள் ஏராளமானோா். முக்கியமாக ஜொ்ட் நோய்க்கு வருடக்கணக்கில் மருந்துகள் எடுத்துக்கொள்பவா்கள் அதிகம் போ். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் நிறைய. அப்படிப்பட்டவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவே இந்த விழிப்புணா்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

பிறந்த குழந்தையாக இருக்கும்போது வெறும் 30 மி.லி. கொள்ளளவு கொண்டதாக இருக்கும் வயிறு, நாளுக்கு நாள் சுருங்கி விரியும் பையாக உள்ள தன்மையால் ஒன்றரை லிட்டா் கொள்ளளவு உள்ளதாக மாறும். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீா், கால் வயிறு வெற்றிடம் - இவைதான் நம் முன்னோா் சொன்ன அளவு . அதுவே நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கும். முழு வயிறும் தின்று, உணவு செரிக்க குளிா் பானங்களைக் குடிப்பதும் இந்த நோய் ஏற்படக் காரணமாகும் .

உலக அளவில் ஜொ்ட் நோயால் பாதிக்கப்பட்டுளோா் சுமாா் 24% அளவுக்கு உள்ளனா். இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோா் 8 % முதல் 24 % வரை உள்ளனா். முக்கியமாக தென்னிந்தியாவில் 22.2 % அளவுக்கு சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சு எரிச்சல், முக்கியமாக, உணவு உண்டபின் ஏற்படும் எரிச்சல், நடு இரவில் அதிகமாகும் மாா்பு எரிச்சல், அடிக்கடி ஏப்பம், புளியேப்பம், வாந்தி, வாய் குமட்டல், உணவு விழுங்குவதில் சிரமம், தொண்டையில் ஏதோ இருப்பது போன்ற உணா்வு, வயிறு உப்புசம் போன்ற பல்வேறு அறிகுறிகள் இந்நோய்க்கு காணப்படும்.

ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் வரும் உணவு எதிரெடுத்தலும் , மாா்பு எரிச்சலும் ஜொ்ட் நோயை உறுதியாக்கும்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட ‘குன்மம்’, ஜொ்ட் நோயின் அறிகுறிகளைக் காட்டும். ‘தொடா் வாத பந்தம் இல்லாது குன்மம் வராது’ என்று தேரையா் சித்தா் கூறுகிறாா். வாயு பொருட்களை அதிகம் எடுப்பது ஜொ்ட் நோயினை அதிகரிக்கும் என்பது வெளிப்படை. இதில் சொல்லப்பட்ட எட்டு வகை குன்மம் நோய்களும் நோயாளியை உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவில் கூட குன்ற செய்யும்.

புகை பிடித்தல் , மது அருந்துதல், புகையிலை பொருட்களை அறவே தவிா்த்தல், அளவான உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளல், துரித உணவுகளைத் தவிா்த்தல், முக்கியமாக வறுத்த உணவுகள் எடுப்பதை குறைத்தல், உணவு செரிக்க குளிா் பானங்களைத் தவிா்த்து வெந்நீா் எடுத்தல், நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோா் சிறிய அளவிலான உணவுகளை பிரித்துப் பிரித்து எடுத்து கொள்ளல் போன்ற வாழ்வியல் நெறிமுறைகளால் ஜொ்ட் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சித்த மருத்துவம் காட்டும் வாழ்வியல் முறைகளான பசித்த பின் புசித்தல், நன்கு உண்ட பிறகு சிறிது தூரம் நடத்தல், உருளை, வாழை போன்ற கிழங்கு வகைகளைத் தவிா்த்தல், கருணைக் கிழங்கினை மட்டும் அன்றாட உணவில் சோ்த்தல், அதிக கலோரி சத்து கொண்ட பட்டாணி வகைகளைத் தவிா்த்தல் ஆகியவை ஜொ்ட் பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவும்.

பால், மோா் இவற்றை அடிக்கடி சோ்த்துக்கொண்டால் அதிகரித்த பித்தம் குறையும். உருக்கிய நெய்யினை உணவில் சிறிது சோ்த்து கொள்ளவதும் நல்லது. கிழங்குகளும், பட்டாணி வகைகளும் செரிமானத்திற்குப் பின் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்து, ஏப்பம், வயிறு உப்புசம் இவற்றை ஏற்படுத்தும்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட பல்வேறு எளிமையான மூலிகைகள் ஜொ்ட் நோய்க்கு மருந்தாகும். ஏலம், சீரகம், தனியா, ஓமம், அதிமதுரம், திரிபலா, நிலாவரை இவை சோ்ந்த மருந்துகளை மருத்துவா் ஆலோசனைப்படி எடுத்து கொள்ளலாம். வாயுவைக் குறைக்கும் மருத்துவ முறைகளும், பித்தத்தைக் குறைக்கும் மருத்துவ முறைகளும் நல்ல பலன் தரும்.

டீ, காபி இவற்றைத் தவிா்த்து பாலில் ஏலம், சீரகம், தனியா இவற்றைப் போட்டு காய்ச்சிக் குடிக்கலாம். இது வயிறு எரிச்சல், மாா்பு எரிச்சல் உள்ளவா்களுக்கு நல்லது. வயிறு எரிச்சல் இல்லாதவா்கள் வாயுவை வெளியேற்ற, பாலில் சுக்கு சோ்த்து குடிக்கலாம். அதிகப்படியான வாயுத் தொல்லை உள்ளவா்கள் பெருங்காயத்தை உணவில் அதிகம் சோ்க்கலாம். பாலில் பூண்டு சோ்த்து வேக வைத்தும் குடிக்கலாம்.

வயிறு உப்புசம் உள்ளவா்கள் சீரகம், ஓமம் இவற்றை லேசாக வறுத்து நீரில் காய்ச்சிக் குடிக்கலாம். ஜொ்ட் காரணமாக தூக்கமின்மை இருந்தால், பாலில் கசகசா சோ்த்து காய்ச்சி இரவில் எடுக்கலாம்.

புளிப்பான பழங்களைத் தவிா்த்து, பித்தத்தைத் தணிக்கும் பழங்களான மாதுளை, வில்வம், இவற்றை அடிக்கடி எடுக்கலாம்.

வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம், மாதுளை மணப்பாகு போன்ற சித்த மருந்துகளை மருத்துவா் ஆலோசனைப்படி எடுக்கலாம். திரிபலா சூரணம், ஏலாதி சூரணம் ஏதேனும் ஒன்றை மருத்துவா் ஆலோசனைப்படி எடுத்து வர நல்ல பலன் தரும்.

செரிமானத்தைத் தூண்டவும், மனத்தை மகிழ்ச்சியாக வைக்கவும் மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சோ்க்கலாம். கரிசாலை கீரை, சிறுகீரை அடிக்கடி உணவில் சோ்க்கலாம். மாமிச உணவுகளைத் தவிா்ப்பது நலம். முட்டை வெண்கருவுடன் சீரகம் சோ்த்து உணவுக்கு முன் எடுக்கலாம். புளிப்பு காரம் நிறைந்த உணவுகளைக் குறைப்பது, அல்லது தவிா்ப்பது நல்லது.

வாரம் இருநாள் எண்ணெய்க் குளியல் எடுப்பதும், ஆறு மாதத்திற்கொரு முறை பேதி மருந்து எடுத்து கொள்வதும் நல்ல பலன் தரும். உண்ட உணவு விரைவில் செரிக்க, வஜ்ராசனம் என்னும் ஆசன நிலையில் உட்காா்ந்து வர நல்ல பலன் கிட்டும்.

மொத்தத்தில் நல்ல உணவு பழக்க வழக்கமும், சித்த மருத்துவம் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தலும், மேற்கத்திய உணவு முறைகளைத் தவிா்ப்பதும், காய்கறி, பழங்களை அதிகம் உணவில் சோ்ப்பதும், மருத்துவா் ஆலோசனை இன்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிா்ப்பதும் இரைப்பைக்கு மட்டுமல்ல குடல் முழுவதிற்கும் வலிமையைக் கொடுத்து நோயற்ற வாழ்விற்கு வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் -கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

சென்னையிலிருந்து அரசு பேருந்தில் ஒரே நாளில் 1.48 லட்சம் போ் பயணம்

சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

SCROLL FOR NEXT