நடுப்பக்கக் கட்டுரைகள்

பெருமை உடைத்து இவ்வுலகு! 

கிருங்கை சேதுபதி


அண்மையில் நண்பர் ஒருவர், "என்னதான் பொய்யாமொழிப்புலவர் என்று கொண்டாடினாலும் திருவள்ளுவரை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று நிறுத்திக் கொண்டார். அவர்தம் குரலில் வருத்தமும் கோபமும் கலந்து இழையோடின. "உங்களுக்கு வள்ளுவர்மேல் என்ன வருத்தம்? என்று கேட்டேன். 

"நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு -  என்கிறார் திருவள்ளுவர். அது பெருமையா? கொடுமையா?' என்றார். புரிந்துவிட்டது. அடுத்தடுத்து வெளிவரும் செய்திகளில் இந்தக் கரோனாத் தீநுண்மியின் தாக்கத்தால் நாம் இழந்த உறவுகளை, மகத்தான ஆளுமைகளை, எண்ணத்தில் கொண்டு அவர் எழுப்பிய கேள்விதான் அது. 

"கொடுமைதான்; அது நமக்கு. ஆனால், உலகத்திற்கு அது பெருமை' என்றேனோ இல்லையோ, " நீங்கள் திருவள்ளுவரை விட்டுக் கொடுப்பீர்களா? உங்ககிட்டே கேட்டேன் பாருங்க' என்றார். அவரது கோபம் நியாயமானதுதான். அதைவிடவும் அதிகமான கோபத்துடன்தான் திருவள்ளுவரும் இந்தக் குறளை எழுதியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இந்தக் குறள் இருக்கும் அதிகாரம் "நிலையாமை'. அது பற்றி, என்னதான் எழுதினாலும் பேசினாலும் படித்தாலும், அவரவர் சொந்த அனுபவங்களின் வாயிலாக உணர்கிற உண்மை இருக்கிறதே, அதைவிடவும் மகத்தான நல்லறிவு வேறொன்றும் இல்லை என்பதை மற்றெந்தக் காலத்தைவிடவும் இந்த நோய்த்தொற்றுக் காலம் மிக நன்றாய் உணர வைத்திருக்கிறது.

"இளமை நிலையாமை', "யாக்கை நிலையாமை', "செல்வம் நிலையாமை' என்று பேசிய அற இலக்கியங்கள் "வாழ்க்கை நிலையாமை' என்று வெளிப்படச் சொல்லவில்லை. உடம்பொடு உயிர் இணைந்து செயல்படும் வாழ்வியல் காலத்தில் தோன்றும் இளமையும் யாக்கையும் செல்வமும்தான் நிலையாது அழியுமே ஒழிய, அவற்றைக் கொண்டு செய்யப்பெறும் செயல்கள் நிலைத்துநிற்கும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. 

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நிலைத்து நிற்கிற மலைகளையும், நில்லாது ஓடி உயிர் வளர்க்கும் ஆறுகளையும், என்றும் உள்ள இயற்கையையும், சூழலையும் அழித்துச் சிதைத்து, பொருளிலாப் பொருளைப் பொருளென்று தேடி அழிந்துகொண்டிருக்கிறோம். அதன்வழி எய்தும் பிரபலத் தன்மையை "பெருமை' என்று கருதுகிறோம். "புகழ்' என்று மயங்குகிறோம். 

எப்பாடுபட்டேனும் பணம் பண்ணினால் போதும் என்கிற மனம் வந்துவிட்டபிறகு, அறமாவது? புண்ணியமாவது? என்கிற மனப்பான்மை வந்து மனிதத்தை மாண்பிழக்கச் செய்துவிட்டது.  

இது இன்று நேற்று வந்ததல்ல. அறத்திற்கென்றே தனித்த இலக்கியங்கள் தமிழில் தோன்றத் தொடங்கியபோதே, வந்துவிட்டது. நிலையிலா உலகில் நிலைபெறுவதற்குப் புகழ்தான் வழி என்று புறநானூறு பல சான்றுகள் காட்டி உணர்த்தியது. திருவள்ளுவரோ, இதை இன்னும் தெளிவுபடுத்தி, "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்' என்று அடையாளப்படுத்தினார்.  

"உயர்ந்த புகழ்' என்று அவர் சொல்கிறபோதே, "அற்பப் புகழ்'என்பதும் இருந்திருக்கிறது என்று அர்த்தம். அதற்கு ஆசைப்பட்டு அழிந்தவர்கள் மிகுதி என்பதைவிட, அதுகூடப் பெறாமல் முடிந்துபோனவர்கள் பலர் என்பதுதான் உண்மை. கம்பனும் தன் பங்குக்கு இதனைக் காட்டாமல் இல்லை.

"சீதையை விடுவதே மேல்' என்று தன் மகன் இந்திரஜித்தே தனக்கு அறிவுரை கூறியபோது சினந்த இராவணன், "என்னையே நோக்கி யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்' என்றான். எதற்கு? அழிவுக்குப் பின்னாலும் அழியாப் புகழ் தனக்கு இருக்கும் என்கிற உறுதிப்பாடு அவனுக்குள். 

அதனால்தான், "இன்று உளர் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?' என்றான். இன்று இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவது இறப்பு. இது பிறப்பு எய்திய உடனே நிச்சயிக்கப்பெற்ற மறைப்பு. எல்லாவுயிர்க்கும் இது பொது. ஆனால், மனிதப் பிறப்பு மகத்தானதாக இருக்க, அவனது இறப்பு புகழ் கொண்டு அமையவேண்டும். அதற்குத் தேவை செயலொடு கூடிய சிறப்பு மிக்க இருப்பு. அப்படி இருந்தவர்களே, இந்த உலகில் இறந்த பிறகும் இருக்க முடியும். அதனால்தான் "உளன் ஒருவன்' என்கிறார் திருவள்ளுவர். 

இலர் பலர். அவர்கள் எந்தக் குறிக்கோளும் அற்று இருப்பவர்கள்; இயங்குபவர்கள்; இவர்களை விடவும் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்று திருவள்ளுவர் காட்டுகிறார். அவர்கள் யார்? ஒருபொழுதும் ஒழுங்காக வாழ்வது அறியாமல் பல கருதிப் பொழுதையும் தன்னையும் போக்கடித்துக் கொள்கிறவர்கள். இவர்களுக்கு மத்தியில் நேற்று வரை இருந்துவிட்டு இன்று இல்லாமல் மறைகிறார்களே, அவர்களின் தோற்றத்தைப் புகழுடையதாக்கிவிடுகிறது, அந்த மறைவு.

"நிலையாமை'க்கு ஓர் அதிகாரம் படைத்த திருவள்ளுவர் "பெருமை'க்கும் தனி அதிகாரம் படைத்தளிக்கிறார். "நிலையாமை' வருவது அறத்துப்பாலில்; "பெருமை' இருப்பது பொருட்பாலில். நிலையாமை என்பது நிலைத்த அறம்; பெருமை என்பது செயலின் வரம். அதனால்தான், "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்' என்று திருவள்ளுவர் அதனை விளக்கமும் செய்கிறார்.

அது செயற்கருஞ்செயலாகத் தோன்றினாலும், மனிதர்களின் செயற்குரியதுதான் என்று செய்து காட்டியவர்கள் பெரியவர்கள். அதற்குக் கருவியாய் அவர்கள் வைத்திருந்தது, பெருஞ்செல்வம் என்று கருதுவது பேதைமை. மெய்யாகவே அவர்கள் தமக்குள் வைத்திருந்த பொய்யாமை என்னும் வாய்மைதான் என்பதைத் தொடரும் வரலாறு நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. 

வள்ளல்கள் என்று இலக்கியம் சொல்லிக் கொடுக்கும் பெயர்களில் மூவேந்தர்கள் இல்லை; பேரரசர்கள் இல்லை;  அவர்கள் குறுநில மன்னர்கள். அதிலும் குறிப்பாக, மலையாண்ட மன்னர்கள். உள்ளதை மறைக்காமல் அள்ளிக் கொடுத்து உதவுவதில் மலை மகத்தானது. அந்த மலைவாழ் மன்னர்களும் அப்படித்தான் இருந்தார்கள். 

"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எலாம் உளன்' என்ற திருக்குறளில் உள்ள "உளனையும்' "நெருநல்' என்று தொடங்கும் முந்தையத் திருக்குறளில் உள்ள "உளனையும்' ஒன்றுபடுத்திப் பார்த்தால், அண்ணல் காந்தியடிகள் நம் மனக்கண் முன் தோன்றுவார்; மரணமிலாப் பெருவாழ்வுக்கான மார்க்கத்தைச் சொல்லிக் கொடுத்த வள்ளலார் நிறைவார்.

ஆயுள் வளர்த்துக் கொள்ள உதவும் அரிய கருநெல்லிக் கனி தனக்குக் கிடைத்தவுடன் தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டி ஒளவைக்குத் தந்து தனிப் பெருமை கொண்டான் அதியமான். அவனின் பெருமையைப் புகழ்ந்து, 'நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே' என்று ஒளவை பாடினாரே, அந்த ஒப்பற்ற தன்மையை, இந்தத் திருக்குறளின் "ஒருவனோடு' வைத்து ஒப்பிட்டு உணர்ந்துகொள்வதே பொருத்தம். 

இன்று இருப்பவர்களுக்கு -  அதாவது இருந்தும் இல்லாமல் இருப்பவர்களுக்கு -   மத்தியில் நேற்று இருந்து இன்று தோற்றத்தால் இல்லாது மறைந்து உள்ளவர்கள் எவர்களோ, அவர்களைக் கொண்டு அமைவதுதான் உலகின் பெருமை. 

அது இன்றைக்கு இருந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை விடவும், இறந்து போனவர்களின் எண்ணிக்கையை விடவும் என்றென்றும் இறவாமல் புகழால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எண்ணிப் பார்த்த திருவள்ளுவர், "துறந்தார்ப் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று' என்றார். 

அத்தகு பெருமைக்குரிய "துறவு' என்னும் அதிகாரம் படைப்பதற்கு முன், திருவள்ளுவர் படைத்ததுதான், "நிலையாமை' என்னும் அதிகாரம். இந்தத் துறவு, சந்தர்ப்பவாதத் துறவல்ல; சமயநெறியாளர்களுக்கு மட்டும் உரிய துறவல்ல; சகலருக்கும் உரிய துறவு. "யான் எனது என்னும் செருக்கு அறுத்து', நாம் என்னும் நிலையில் தன்னலந்துறந்து பொதுநலம் விரும்பிச் செயல்படும் நிலைப்பாடு. 

அப்படிப்பட்ட செயலைத் தத்தம் நிலையில் செய்துகொண்டிருந்த உத்தமர்கள் பலரை, இந்தக் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக் காலத்தில் நாம் இழந்திருக்கிறோம்.

இன்னும் இருந்து பல நல்ல பணிகளைச் செய்யத் திட்டமிட்டு இருந்த அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்று சொல்வது ஒரு சம்பிரதாயம் அல்ல. அவர்கள் விட்ட இடத்தில் இருந்து பணி தொடரவோ, அவர்களைப்போல் பல நல்ல பணிகளை ஆற்றிடவோ, அடுத்த தலைமுறை எப்போது வரும் என்ற எண்ணம் தோன்றுகிறபோதே அவர்களின் இல்லாமையின் சுவடு வருத்தத்தை அளிக்கிறது. இருப்பின் பெருமிதமும் புரிகிறது.

இதில் பின்னதை விட்டு விட்டு முன்னதை நினைத்து எழுந்த வருத்தமிகு கோபத்தைத்தான் நம் நண்பர் வெளிப்படுத்தினார். அவரை விடவும் வருந்தியும் சினந்தும் துயருற்ற திருவள்ளுவரின் செயல், திருக்குறளாய் நின்று அறத்தை நிலை நிறுத்துவதை உணர்ந்து செயல்படுவது ஒன்றே இதற்குத் தீர்வு தரும் நல்ல வழி.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT