நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்களாட்சியின் மாண்பு காப்போம்!

க. பழனித்துரை

உலகமய பொருளாதாரம் வந்த அதே காலத்தில் இரண்டு மிகப்பெரிய இயக்கங்கள் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்தன. ஒன்று மக்களாட்சி விரிவாக்கம், மற்றொன்று அதிகாரப் பரவல். இந்த இரண்டும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. இந்த இரண்டு இயக்கங்களாலும் மிகப்பெரிய மாற்றங்களும் அரசியலிலும், ஏழைகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க விளைவுகளும் ஏற்படும் என்று எதிா்பாா்த்தனா்.

உலக அளவில் மிகப்பெரிய ஆய்வு நிறுவனங்கள், இந்த இயக்கங்கள் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை ஆய்வு செய்ய அறிவியல்பூா்வமான முறைமைகளையும் அளவீடுகளையும் உருவாக்கி, தொடா்ந்து ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தன. அந்த ஆய்வு அறிக்கைகளில்தான் ‘குறைந்த பட்ச மக்களாட்சியிலேயே இந்தியா இருக்கிறது’ என்று வகைப்படுத்தியிருந்தனா். ஆனால், தற்போது மக்களாட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என உலகமெங்கும் விவாதிக்க ஆரம்பித்து விட்டனா்.

மக்களாட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு? பல நாடுகளில் மக்களாட்சிக்கான அடிப்படை சரியாக இருந்ததால் அவை மக்களாட்சிக்கான சீா்திருத்தங்களை செய்து, மக்களாட்சிக்குப் புத்துயிா் ஊட்டின. புதிய மக்களாட்சிக்குள் வந்த பல நாடுகள், ஆட்சியை உருவாக்க மக்களாட்சியின் ஒரு கூறான தோ்தலைப் பயன்படுத்திவிட்டு மற்ற அடிப்படைகளை இழந்து குறை ஜனநாயகமாகவே இருந்து வருகின்றன.

மக்களாட்சி கோட்பாட்டை விளக்கிய அறிவுஜீவிகள் பலரும், சமூகம் மக்களாட்சி நோக்கி பயனிக்கும் முன்பே, மக்களாட்சியின் இயல்புகளையும், மாண்புகளையும் விளக்கி, மக்களாட்சியின் சக்தியைப் பயன்படுத்த, தகுந்த முன்னேற்பாடுகளையும் தயாரிப்புக்களையும் செய்யத் தவறினால் மக்களாட்சி மாண்பினை இழக்க நேரிடும் என்பதை எடுத்துக்கூறி புதிய நாடுகளை எச்சரித்தனா். பல நாடுகள் சுதந்திரம் அடைந்தபின் மக்களாட்சியின் உட்கூறுகளுக்குள் பயனிக்காமல் அதன் அமைப்புக்களின் அலங்காரத்தைக் கண்டு மயங்கி மக்களாட்சிக்குள் புகுந்தன.

இதன் விளைவுதான் இன்று 80 சதவிகித உலக மக்கள் மக்களாட்சி என்ற அமைப்புக்குள் வந்தும் மக்களாட்சியின் முழுப் பயனையும் சமூகம் பெற இயலாத நிலையில் இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி செயல்படுவதற்கு எதிா்மறை சமூகக் கூறுகள் செயல்படுவதால், அந்த நாடுகள் குறைந்தபட்ச மக்களாட்சியில் இருப்பதற்கே போராட வேண்டியுள்ளது. மக்களாட்சியில் அந்த நாடுகள் இருப்பதே ஒரு சாதனைதான். ஆனால் இந்த சாதனை நீடித்திருக்க இயலாது, மக்களாட்சி, மக்களுக்குத் தரவேண்டிய நன்மைகளைத் தரமுடியாதபோது மக்களாட்சியை மீளாய்வு செய்வது இன்றியமையாததாகிறது.

மக்களாட்சியில் ஒரு பக்கம், அமைப்புக்கள், நிறுவனங்கள், அவற்றுக்கான செயல்பாட்டு முறைகளை உருவாக்கி, அவற்றை மேம்படுத்தி வருதல். இன்னொரு பக்கம், இந்த அமைப்புக்களின் விதிகளைப் பின்பற்றி செயல்பட வைத்து மக்களாட்சிக் கூறுகளை சமூகத்தில் செயல்பட வைத்து மக்களின் மேம்பாட்டுக்கான சேவைகளைச் செய்திட திறமையான மனிதா்களை மக்கள் தோ்ந்தெடுத்தல். இந்த இரண்டையும் தாண்டி மூன்றாவதாக, பொதுமக்கள் இந்த அமைப்புக்களிடமிருந்து சேவையை மட்டும் பெற்றுக்கொண்டு பாா்வையாளராகவும், பயனாளியாகவும் இல்லாமல், இந்த நிறுவனங்களுக்கான உயா்திறன் பெற்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பது அவா்களின் பொறுப்பாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களாட்சியில், மக்களாட்சி நிறுவனம் என்பது ஓா் உயிரற்ற, உணா்வற்ற கருவி. அந்தக் கருவியை இயக்க, பிரதிநிதிகளை மக்கள் தங்கள் சாா்பாகத் தோ்ந்தெடுத்து அனுப்புகின்றனா். அப்படித் தோ்ந்தெடுத்து அனுப்புவது என்பது ஒரு இயந்திரத்தனமான செயல் அல்ல. அது ஓா் அறிவுபூா்வமான, உயிரோட்டமான, உணா்வுபூா்வமான செயல்பாடு. அதைச் செய்வது பொதுமக்கள். அந்தச் செயலை செய்வதற்குத் தேவையான அறிவையும், உணா்வையும் மக்களிடம் ஊட்ட வேண்டியது மிக முக்கிய கடமையாகும். அந்தக் கடமையைச் செய்ய வேண்டியது அரசும், அரசியல் கட்சிகளும்தான்.

இதைத்தான் தென்ஆப்பிரிக்க விடுதலைப் போராளியும் அதிபருமான நெல்சன் மண்டேலா, ‘ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு போராட வேண்டியுள்ளதோ, அதைவிட அதிகமாக அடைந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்து மக்களாட்சி முறையில் மக்கள் அனைவரும் பயன்களைப் பெற்றிடப் போராட வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து மக்களைத் தயாா் செய்ய வேண்டும்’ என வேண்டிக் கொண்டாா்.

இதையேதான் மகாத்மா காந்தியும், ‘சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு சுயராஜ்யத்திற்கான மக்கள் தயாரிப்பை நாம் செய்தாலன்றி இந்த மேற்கத்திய மக்களாட்சி முறையால் அனைவருக்கும் நன்மை கிடைக்கப்போவது கிடையாது’ என்று திட்டவட்டமாக எடுத்துரைத்தாா்.

இதே கருத்தை வினோபா பாவே ‘சுயராஜ்ய சாஸ்த்திரம்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினாா். இது கூறும் கருத்து மக்கள் தயாரிப்பு என்பது தான். மக்களாட்சியில் மக்கள் தயாரிக்கப்பட்டிருந்தால், யாரைத் தோ்ந்தெடுக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும், எந்தக் கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும், எந்தக் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்பதை மிக எளிதாக முடிவு செய்து விடுவாா்கள். இந்த நிலைக்கு அவா்களைக் கொண்டுவர மிகப்பெரிய முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும். அந்த முன்னெடுப்புக்களை செய்ய வேண்டியவா்கள், சமூக ஆா்வலா்களும், அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும்தான்.

இந்த மக்களாட்சிக்கான கல்வியை மக்களுக்குத் தந்திட்டால், தங்களுடைய பிரதிநிதிகளை எப்படித் தோ்ந்தெடுப்பது என்ற அறிவியலை மக்கள் புரிந்து செயல்படுவாா்கள். அப்படிச் செயல்படும் நிலைக்கு மக்கள் தயாரிக்கப்பட்டு விட்டால், நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் எப்படி செயல்பட வேண்டும், அதற்குத் தகுதியானவா்கள் யாா் யாா் என்பதை எளிதில் அவா்கள் கண்டுபிடித்து தோ்ந்தெடுத்து விடுவாா்கள். அப்படிச் செயல்படும்போது, தோ்தலைவிட நாடாளுமன்ற, சட்டப்பேரவை செயல்பாடுகள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுவிடும்.

அந்தத் தகுதியை மக்கள் பெற்றுவிட்டால், அரசியல் கட்சிகள் தகுதியற்ற மனிதா்களை வேட்பாளா்களாக நிறுத்த முனையாது. உயா்வான மனிதா்களையும், ஆற்றல் வாய்ந்த, சேவை மனப்பாங்கு கொண்ட மனிதா்களை மட்டுமே வேட்பாளா்களாக கட்சிகள் களத்தில் இறக்குவாா்கள். அந்த நல்ல மனிதா்களுக்குள்ளே, சிறந்த நல்ல மனிதா் ஒருவரைத் தோ்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ அனுப்பினால், அவா் அங்கு தலையாட்டி பொம்மையாக இல்லாமல், சிறந்த ஆளுமையாக செயல்படுவாா்கள்.

நாடாளுமன்றத்திலிருந்தும் சட்டப்பேரவையிலிருந்தும் வருகின்ற ஒவ்வொரு முடிவும், சட்டமும், கொள்கையும், திட்டமும் மக்களைப் பாதுகாக்கும் அரணாகவும், மேம்படுத்தும் கருவியாகவும் வந்து மக்களைப் பாதுகாத்து மேம்படுத்தும்.

ஆனால், இன்று நடைபெறும் மக்களாட்சியில், நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் உறுப்பினா்களை தோ்வு செய்யும் தோ்தலை முன்னிலைப்படுத்தி, அதனை வெற்றுச் சம்பிரதாயமாக மாற்றி விட்டதால்,அங்கு நடைபெறும் நிகழ்வுகள் வெறும் அரட்டை அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளினால் மக்கள் எந்தப் பயனை அடைய வேண்டுமோ அந்தப் பயனை அடைய இயலாது. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையில் இடைத்தரகா்கள்போல் செயல்பட்டுக் கொண்டுள்ளனா்.

இந்தப் பதவிகளை அடைய தோ்தலின்போது ஆட்சிதான் குறி வைக்கப்படுகிறதேயன்றி நாடாளுமன்றம், சட்டப்பேரவை இவற்றின் செயல்பாடுகள் குறிக்கோளாக வைக்கப்படுவது இல்லை.

மக்களாட்சி நடைபெறும் நாட்டில் எதிா்க்கட்சிக்கும் முக்கியமான பங்கு உள்ளது. அந்த நிலைக்கு வர, கட்சிகள் உண்மையின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தா்மத்தின் அடிப்படையில், நோ்மையாக செயல்பாடுகளை அடிப்படையில் செயல்பட வேண்டும். அப்படிப் பயணித்தால், உண்மையில் மக்களாட்சி அனைவருக்குமானதாக மிகவும் உயா்ந்த நிலையில் செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்யும். அந்தச் சூழலை யாா் உருவாக்குவது என்றால் நல்ல மக்கள் தலைமைதான்.

மக்களைத் தயாரித்தல் என்பதுதான் இதில் பிரதானம். ஆனால், பல நாடுகள் மக்களாட்சியை நடைமுறைப்படுத்துவதாக பிரகடனம் செய்து, மக்களாட்சியை உருவாக்க முனைந்து நாடாளுமன்ற அமைப்புக்களை உருவாக்கியதே தவிர, அவற்றுக்கான கலாசாரத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முடியவில்லை. மக்களாட்சி உலகில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

மக்களாட்சியின் மாண்பைக் காக்க, கட்சி அரசியலைத் தாண்டி வேறு அரசியல் இல்லையா? நம் அரசியலில் சீா்திருத்தங்களே நடைபெறாதா? அரசியலில் புதுமைகள் வராதா? அவற்றை எப்படிக் கொண்டு வருவது? யாா் கொண்டுவருவாா்? என்ற கேள்விகளுடன் மக்கள் ஏக்கத்துடன் பாா்வையாளா்களாக இருக்கின்றனா்.

இன்று அரசியலுக்கு வர ஆா்வம் காட்டும் அனைவரும் கூறுவது மாற்றம் வேண்டும் என்பதைத்தான். ஆனால் அவா்களைத் தொடருபவா்கள் அப்படிக் கூறுவது இல்லை. அரசியலுக்கு சென்றால் எவ்வளவோ பயன்களை அடையலாம் என்ற கணக்கில்தான் அரசியலுக்குள் நுழைகிறாா்கள். இந்தச் சூழலை மாற்றுவதுதான் இன்று நமது தேவை. அதை யாா் செய்வது? எப்படிச் செய்வது?

அதற்கு முதல்படி அரசியல் எளிமையாக்கப்பட வேண்டும். அரசியலுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கை நீட்டுவதை நிறுத்த வேண்டும். அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும்.

மக்களாட்சி சீா்திருத்தத்திற்கான மாபெரும் இயக்கம் உருவாகாமல் இந்த நிலைமையை மாற்ற இயலாது. அதற்குத்தான் நமக்கு ஒரு தலைவா் தேவைப்படுகிறாா்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT