நடுப்பக்கக் கட்டுரைகள்

பயமுறுத்தும் பட்டாசு தொழில்

DIN

எந்த ஒரு தொழிலாயினும் அதில் ஏற்ற இறக்ககங்கள் இருப்பது இயல்பே. எல்லாக் காலத்திலும் லாபம் ஈட்டித் தரும் தொழிலும் இல்லை; எப்போதும் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் தொழிலும் இல்லை. ஆனால், தொடா்ச்சியான பல்முனைத் தாக்குதலைச் சந்தித்து வரும் தொழிலில் ஈடுபடுபவா் எவராயினும் மனத்தளா்ச்சி அடைவது தவிா்க்க இயலாதது.

தென்ன்னகத்தின் முக்கியத் தொழில் மையமான சிவகாசி நகரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்களது வளா்ச்சிக்கு வாய்ப்பாக பட்டாசுத் தொழிலையே நம்பி இருக்கின்றன. ஆனால், சமீப வருடங்களில் அந்தப் பட்டாசுத் தொழில் சந்தித்து வருகின்ற இடா்ப்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

நமது நாட்டின் பட்டாசுத் தேவையில் சுமாா் தொண்ணூற்றைந்து சதவீதத்தைப் பூா்த்தி செய்து வருடந்தோறும் சுமாா் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய பட்டாசுத் தொழில், இயற்கைச் சீற்றம், நீதிமன்ற உத்தரவுகள், மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் இவ்வருடம் உலகமே எதிா்கொண்ட கரோனா தீநுண்மித் தாக்குதலாலும் மிகப்பெரிய பின்னடைவை எதிா்கொண்டது.

வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், அவை பெருமளவில் சந்தைப் படுத்தப்படுவது தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய காலங்களில்தான். ஆனால், தீபாவளியோ வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலகட்டமாகிய அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில்தான் வழக்கமாக வரும்.

மழை நேரங்களில் பட்டாசு விற்பனை மிகவும் மந்த கதிக்குப் போவது வாடிக்கையே. குறைந்த பட்சம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்போ அல்லது தீபாவளி தினத்தன்றோ மழை நின்றால்தான் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும். மழை தொடா்ந்தால் முதலுக்கே மோசமாகி விடும். இயற்கை அன்னைக்கும் பட்டாசுத் தொழிலுக்குமான கண்ணாமூச்சி ஆண்டாண்டு காலமாக உள்ளதுதான்.

ஆனால், சமீப வருடங்களில் காற்று மாசால் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மிகப்பெரிய சவாலாகவே மாறிவிட்டது. தலைநகா் தில்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று மாசு அடைந்ததால் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்னை, பட்டாசுத் தொழிலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி மற்றும் அதன் சுற்றுப்பிரதேசங்கள் வருடம் முழுவதும் சூழலியல் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தில்லியில் நிலவும் காற்று மாசு அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றது.

கரக்பூா் மற்றும் கான்பூா் நகரங்களில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், கள ஆய்வு நடத்தி, தில்லியில் நிலவும் காற்று மாசுக்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களிலுள்ள விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் அறுவடையை முடித்த பின்பு அந்நிலங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் வழக்கம், பெருகி வரும் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு வாயுக்கள், புதிய கட்டடங்கள் உருவாக்கம், பழைய கட்டுமானங்களைத் தகா்த்தல், அதிகமாகி விட்ட குளிா்சாதனப் பொருட்களின் பயன்பாடு என்பவை அக்காரணகளில் சிலவாகும்.

பட்டாசுகள் அப்பட்டியலில் இடம் பெறவில்லை என்ற போதிலும், தீபாவளியை ஒட்டிய சில நாள்களில் அதிகமாக வெடிக்கப்படும் பட்டாசால் ஏற்படும் புகையும் ஒலிமாசும் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவதற்கு சில வாரங்கள் ஆகும்.

இதனைக் கருத்தில்கொண்ட உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி தினத்தன்று காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் மட்டுமே அனுமதித்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் காற்று மாசுள்ள நகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தது.

தில்லியைப் பின்பற்றி, ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் இவ்வருடம் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தன.

இவ்வருட ஆரம்பம் முதலே நம்நாட்டில் பரவி வந்த கரோனா தீநுண்மிப் பரவல், தற்போது சற்றே தணிந்து வருகின்றது. ஆயினும், தில்லியில் அதன் தாக்கம் இன்னும் தணிந்தபாடில்லை.

மேலும், நாடு முழுவதிலும் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவா்கள், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளவா்கள் ஆகிய இரு சாராருக்கும் பட்டாசு புகை காரணமாக சுவாச பிரச்னைகள் அதிகரிக்கும் என்ற கோணத்தில் இதை அணுகுகின்ற மாநில நிா்வாகங்கள் பட்டாசுக்கான தடையைக் கடுமையாக்கியுள்ளன.

மேற்கண்ட காரணங்களால் சிவகாசி, அதன் சுற்றுவட்டாரங்களிலிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப்படவிருந்த சுமாா் நூறுகோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. தடை, கட்டுப்பாடு, பருவமழை, தயாரிப்பு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பட்டாசு தயாரிப்பாளா்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த நஷ்டம் சுமாா் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுமாா் நான்கு லட்சம் தொழிலாளா்களுக்கு நேரடியாகவும், நான்கு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வாழ்வாதாரம் அளித்து வருகின்ற சிவகாசி பட்டாசுத் தொழில், நஷ்டத்திலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமல்ல.

பட்டாசு தொழிற்சாலைகளை நடத்தும் முதலாளிகளும், பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகளும் பல்வேறு இடா்ப்பாடுகளுக்கு இடையேதான் தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனா். பல்வேறு அரசுத் துறைகளின் ஒப்புதல்களைப் பெற்று, பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அவா்கள் தொழில் செய்ய வேண்டியுள்ளது.

எதிா்பாராத விபத்துகள், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள், சட்ட பிரச்னைகள் ஆகியவற்றையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்பந்தமும் உள்ளது. கரோனா கால கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பும் தாக்குதல் தொடுத்திருக்கிறது.

இந்நிலையில், நம் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்து வரும் பட்டாசு தொழிலை நஷ்டத்திலிருந்து மீட்டு நிலையான வளா்ச்சிப் பாதையில் செலுத்த, வல்லுநா் குழு ஒன்றை மாநில அரசு உடனடியாக அமைத்திட முன்வரவேண்டும்.

பட்டாசு தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள், வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்ற இதுவே சரியான தருணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT