நடுப்பக்கக் கட்டுரைகள்

வெளிநாட்டு வாழ்க்கை: ஒரு பார்வை!

3rd Nov 2020 03:12 AM | கே.வி.கே. பெருமாள்

ADVERTISEMENT"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றார் ஒளவையார். ஆனால், "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் நாம் போய் வாழ வேண்டும் வெளிநாட்டில்?' என்ற அங்கலாய்ப்புக் குரல்களும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. 

பெற்றோர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாக் குழந்தைகளும் மருத்துவர்களாகவோ பொறியியலாளர்களாகவோ மட்டுமே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. அதேபோல, எல்லோருமே வெளிநாட்டில் சென்றுதான் படிக்க வேண்டும் என்றும்  நிர்பந்தமுமில்லை. 

ஒவ்வொருவரின்  தனிப்பட்ட திறமை, அவருக்குள்ள ஆர்வம், குடும்பச் சூழல் இவற்றையெல்லாம் பொருத்துதான் எந்தத் துறையில் படிப்பது, எங்கே படிப்பது என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டும். 

எந்தத் துறையும், எந்தப் பணியும் தாழ்ந்தது கிடையாது. இதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தனித்திறனோடுதான் பிறக்கிறது. அடிப்படையைக் கல்வியைக் கற்ற பிறகு, அந்தக் குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற வைக்க முயல வேண்டும்.  

ADVERTISEMENT

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எந்தத் துறையில் முன்னேற வேண்டுமென நினைத்தாலும் நிச்சயம் முன்னேற முடியும். அந்த அளவுக்கு வாய்ப்புகள் பல்துறைகளிலும் பெருகிக் கிடக்கின்றன. 

பெற்றோர் தங்கள் ஆசையைப் பிள்ளைகளின் மேல் திணிப்பது தவறான அணுகுமுறை. பெற்றோர் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இன்று நடக்கிற பல விபரீதங்களைத் தடுத்து நிறுத்த முடியும். 

உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ ஏற்பட்டு விடாமல் குழந்தைகளை வளர்ப்பதில் ஆசிரியர்களைவிட அதிகப் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. பெற்றோரைப் பள்ளிகளுக்கு அழைத்து ஆசிரியர்கள் இதனை ஒரு அறிவுரையாகச் சொல்ல வேண்டும்.   

மனிதன் கிணற்றுத் தவளையாய் வாழ்ந்த காலம் மாறி உலகமே நமது உள்ளங்கையில் சுருங்கி விட்ட நிலையில், நமது எண்ணங்களும், செயல்பாடுகளும் பரந்து விரிய வேண்டியது அவசியம். கல்வி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் சென்று குடியேறுவது இன்று சாதாரணமாகி விட்டது. 

வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பவர்களும், பணியாற்றுபவர்களும் இந்தியாவை வெறுப்பவர்களோ நாட்டுப் பற்று இல்லாதவர்களோ அல்லர்.  

ஒரு காலத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே வெளிநாடு சென்று படிக்க இயலும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ள இளைஞர்களும், பெண்களும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது இயல்பாகி இருக்கிறது. வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன் இதற்கு முக்கிய காரணம். 

வெளிநாடுகளில் படிக்கும் நமது மாணாக்கர்கள் மாலை வேளைகளில் பகுதி நேர வேலை செய்து ஊதியம் ஈட்டி அதன்மூலம் தங்களது செலவுகளை ஈடுகட்டிக் கொள்வது மற்றொரு காரணம். 

சர்வதேச அளவில் முதல் நூறு பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் எந்தவொரு பல்கலைக்கழகமும் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நமது பல்கலைக்கழகங்களைத் தரம் உயர்த்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 

ஒருபுறம், நமது பல்கலைக் கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். மறுபுறம், கல்வியில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களைத் தரம் உயர்ந்த, அவர்கள் மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தேடிச் சென்று கற்பதும் தொடர வேண்டும். 

நமது நாட்டுடன் ஒப்பிடுகையில், வளர்ந்து விட்ட நிலையில் உள்ள பெரும்பாலான நாடுகள் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக அதீதமான நிதியை  அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்கின்றன. அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் நமது மாணாக்கர்கள் ஆராய்ச்சிக்கான அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவதுதான் அறிவுடைமையாக இருக்க முடியும். 

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், நமது மாணாக்கரில் கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் சிலருக்கு மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு (நூறு சதவீத உதவித்தொகை) தரமான கல்வியை வழங்குகின்றன. அப்படிப் படிக்கிற மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களை நிர்வகித்தும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியும்  இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த கணித மேதை ராமானுஜன் பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றதால்தான் உலகளாவிய அளவில் அவரது திறமை தெரிய வந்தது. 

வெளிநாடுகளில் கல்வி கற்கின்ற இளைஞர்களுக்கு அங்கே மிக எளிதாக வேலை கிடைத்து விடுகிறது. நமது இளைஞர்கள் கணினித் துறையில் சிறந்து விளங்குவதால் பல மேலை நாடுகள் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, அன்னியச் செலாவணியும் நமக்கு வந்து சேர்கிறது. 

2018 டிசம்பரில் உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஓராண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அன்னியச் செலாவணித் தொகை  சுமார் 80 பில்லியன்  டாலர் (சுமார் ரூ. 6 லட்சம் கோடி). இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஏறத்தாழ மூன்று சதவீதம்.  

அதனால்தான் பொருளாதார நெருக்கடி மிகுந்த நேரத்தில்கூட நமது அரசிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்புக் கணிசமாக இருக்கிறது. 

மேலும் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதால், இந்தியாவின் "எண்மய திட்ட' நிதிக்கு ( டிஜிட்டலைசேஷன்  ஃபண்ட்)  10 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 74,500 கோடி) வழங்க முடிந்தது.  

அது மட்டுமல்ல, நம்மவர்கள் வெளிநாடுகளில் சென்று குடியேறுவதன் மூலம் நமது மொழியின் பெருமை உலக அளவில் பறைசாற்றப்படுகிறது. நமது கலைகளும் கலாசாரமும்  சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.  

நியூ ஜெர்சியின் தெருக்களில் நடந்து போனால் எம்.எஸ். சுப்புலட்சுமியின் "காற்றினிலே வரும் கீதம்' தேனாய் வந்து காதுகளில் பாய்கிறது. லண்டனின் "லிட்டில் இந்தியா' பகுதியில் உள்ள கலையரங்கங்களில் நமது சிறுமிகள் சலங்கை கட்டிக் கொண்டு பரத நாட்டியம் ஆடுவதைப் பார்த்து நமது மனம் மகிழ்கிறது. 

சில வெளிநாட்டு நகரங்களில் சொற்ப அளவிலேயே தமிழர்கள் வசித்தாலும், அங்கே தமிழ்ச் சங்கங்களை தொடங்கி, அதன் மூலம் நமது மொழியை, கலைகளை, கலாசாரத்தைப் பாதுகாக்கிறார்கள். இன்று உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்தியர்கள்  தொழில் துறையிலும் வணிகத்திலும் கோலோச்சுவதைப்  பார்க்க முடிகிறது.  

இந்தியர்கள், குறிப்பாக, தென்னிந்தியர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் உணவு விடுதிகளை நடத்துகிறார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தென்னிந்திய உணவான உப்புமாவுக்கு புகழாரம் சூட்டியது இங்கு நினைவுகூரத்தக்கது. நியூஸிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், ஆக்லாந்தில் உள்ள இந்திய கோயிலுக்கு விஜயம் செய்கிறார். 

பொங்கல் பண்டிகையின்போது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ்ப் பாரம்பரிய முறையில் வேட்டி, சட்டை அணிந்து, பொங்கல் வைத்து, "பொங்கலோ பொங்கல்' என்று குதூகலிக்கிறார். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமாண்ட நவராத்திரி கொலுக்  காட்சியை அங்கே வசிக்கும் பல நாடுகளைச் சார்ந்தவர்களும் வியந்து பார்த்து இந்தியர்களின் கலை ஆர்வத்தைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் வரிகள் செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.  

இன்று எத்தனையோ நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்தியர்கள் மிளிர்கிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் சுமார் முப்பது லட்சம் இந்தியர்களின் வாக்குகளைப் பெற அங்கே உள்ள பிரதானக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் போட்டி போடுகின்றன. இதனால் இந்தியாவோடு நல்லுறவைப் பேண வேண்டிய கட்டாயம் உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமானோர், இந்தியாவில் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு உதவி செய்கிறார்கள். சிலர், கிராமங்களில் உள்ள தங்கள் பள்ளிகளை இணையத்தின் மூலம் இணைத்துக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்றுத் தருகிறார்கள்.   

ஒரு சிலர், வெளிநாடுகளில் கால் பதித்தவுடன்  நமது மொழியை மறந்து விடுவதையும், குழந்தைகளை மேற்கத்திய பாணியில் வளர்ப்பதையும் நாம் மறுக்க முடியாது.   

வெளிநாடுகளில் வசிக்கின்ற, வசிக்க விரும்புகின்ற தமிழர்களுக்கு ஒரு வார்த்தை. "உங்கள் கிளைகள் எந்தெந்த நாடுகளில் பரவியிருந்தாலும் வேர்கள் இந்தியாவிலேதான் இருக்க வேண்டும். வசிக்கின்ற நாட்டிற்கு விசுவாசமாக இருக்கின்ற அதே வேளையில், மொழியால் தமிழர்
களாக, உள்ளத்தால் இந்தியர்களாக வாழுங்கள்!

கட்டுரையாளர்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).
 

ADVERTISEMENT
ADVERTISEMENT