நடுப்பக்கக் கட்டுரைகள்

நிம்மதிப் பெருமூச்சு...

11th Jun 2020 10:26 AM |  வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 மாணவர்கள் எந்த காரணத்துக்காகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வியாளர்கள் கவனமாக பல்வேறு திட்டங்களையும், கல்வி முறைகளையும் புகுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்பட்டனர் என்றே சொல்லலாம்.
 உலக நாடுகளை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. வளர்ந்த நாடுகள்கூட நோய்த்தொற்றைத் தடுக்க இயலாமல் திணறி வருகின்றன. முறையான சமூக இடைவெளி, பாதுகாப்பு ஏற்பாடுகள், சுயக் கட்டுப்பாடு முதலானவற்றால் மட்டுமே நோய்த்தொற்றை தடுக்க முடியும் என்பதால், உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. நோய்த்தொற்றின் தன்மையைப் பொருத்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
 தமிழகத்தைப் பொருத்தவரை மண்டலங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டுத் தலங்களை திறக்க தற்போது வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது. இதற்காக ஜூன் 8-ஆம் தேதி பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதுடன், பள்ளிகளில் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.
 தொற்று பரவக்கூடாது என்பதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அரசு, பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதால் தேர்வு எழுதவுள்ள சுமார் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த அரசு தீவிரம் காட்டுவது ஏன் எனப் பெற்றோர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வந்தது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை ஊடகங்கள், நாளிதழ்கள் முன்பெல்லாம் வெளியிட்டு வந்தன. அப்படி வெளியிடும் நிலையில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் எனக் கருதிய அரசு, அதுபோன்ற செய்திகளை, விளம்பரங்களை காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களில் வெளியிடக் கூடாது என அறிவித்தது.
 இப்படி, மாணவர்களின் மனஓட்டத்தை உணர்ந்து அறிவித்த அரசு, தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல், தேர்வை நடத்த முனைப்புக் காட்டுவதைப் பார்த்து மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டனர்.
 இதைத் தொடர்ந்து, ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் சார்பில் தேர்வை தள்ளிவைக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளும், பெற்றோர்களும் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை (ஜூன் 8) விசாரித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்களின் உயிரோடு விளையாட முடியாது. தேர்வை நடத்துவதற்கு ஏன் இந்த அவசரம்? நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், ஜூன் 15-ஆம் தேதி தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 2-ஆவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்த விவரத்தை ஜூன் 8-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
 இது தொடர்பாக முதல்வரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளையும் தெரிவித்து, இந்தத் தேர்வு முக்கியமான தேர்வு, இந்தக் காலகட்டம்தான் தேர்வு நடத்த சரியான நேரம். வரும் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தேர்வை தள்ளிவைக்க கூடாது எனத் தெரிவித்தார்.
 இதையடுத்து, வழக்கை ஜூன் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில், முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற்றது. இதையடுத்து, 10, 11-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், எஞ்சியுள்ள பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகவும், அதற்கான தேதி சூழ்நிலையைப் பொருத்து அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் அறிவித்தார்.
 மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகையின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பால், பத்தாம் வகுப்பு மாணவர்களைக் காட்டிலும், அவர்தம் பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பால் நீண்ட நாள்களாக நிலவி வந்த குழப்பமும், மன அழுத்தமும் நீங்கி மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 தேர்வு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு, தேர்வு ரத்து என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும்கூட, 80 சதவீத மதிப்பெண்களைவிட அதிக மதிப்பெண் எடுக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது வருத்தத்தை அளித்துள்ளது.
 பிளஸ் 1 சேரும்போது, ஏதேனும் ஓர் அடிப்படைத் தேர்வை நடத்தி அதில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு மேல்நிலை வகுப்புகளில் பாடப் பிரிவுகளை ஒதுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT