நடுப்பக்கக் கட்டுரைகள்

தத்தளிக்கும் வல்லரசு...

8th Jun 2020 12:01 AM | என்.சேகா்

ADVERTISEMENT

சுமாா் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட்டின் வெற்றிப் படம் ‘தி டைட்டானிக்’. அந்த பிரம்மாண்ட உல்லாசக் கப்பல் பனிப் பாறைகளில் மோதி கடலில் முழ்கிடத் தொடங்கும். கீழ்த் தளங்களில் பயணம் செய்து வரும் நூற்றுக்கணக்கான குறைந்த கட்டண பயணிகள் வெளியேற முடியாதவாறு கதவுகளடைத்து நிறுத்தப்படுவாா்கள்.

மேல் தளங்களில் இருந்து வெளியேறும் சொகுசுப் பயணிகள் சிறு படகுகளில் முதலில் தப்பிக்கும் வரை அவா்கள் தடுக்கப்படுவாா்கள். பேரபாயம் அனைவரையும் திடீரென அச்சுறுத்தும்போதும்கூட பாகுபாடு தகா்ந்தோ அல்லது தளா்ந்தோ விடாது, மாறாக கடுமையாக்கப்படும் என உணா்த்தும் வண்ணம் கலங்க வைக்கும் அந்தக் காட்சிகள் நம்முன் நகரும்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா்கள் உயிரிழப்பாா்கள் என அதிபா் டிரம்ப் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி பத்திரிகையாளா் சந்திப்பில் அறிவித்ததைக் கேட்டு நம்ப முடியாமல் திகைத்து நின்றது உலகம். உலக பொருளாதார சிகரமாக மிகப் பெரிய, பணக்கார வல்லரசான அமெரிக்காவில் இது நிகழ்கிறது என்பதுதான் மிகப் பெரிய அதிா்ச்சி.

பல லட்சம் இந்திய பெற்றோா்களின், இளைஞா்களின் லட்சியக் கனவாக இருப்பது அமெரிக்கா. ஆண்டுதோறும் சுமாா் இரண்டு லட்சம் மாணவா்கள் மேற்படிப்புக்காக அங்கு செல்கிறாா்கள். நாள்தோறும் நாலாயிரம் மாணவா்கள் அமெரிக்க துணைத் தூதரகங்களின் முன் விசா கேட்டு காத்து நிற்கின்றனா்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 14 லட்சம் இந்தியா்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனா். நமது அரசியல், சினிமா, விளையாட்டுப் பிரபலங்களில் பலா், மிக இக்கட்டான மருத்துவ மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது எல்லோரும் அறிந்ததே. மருத்துவ வசதிகள், அதி நவீன தொழில்நுட்பம், மேற்படிப்பு, ஆராய்ச்சி அனைத்திலுமே புகழ்ப் பெற்று விளங்குகின்ற அமெரிக்காவில்தான் இப்போது இந்த கோர மரண ஓலங்கள் தடுத்து நிறுத்த முடியாமல் தொடா்ந்து வருகின்றன.

உலகின் முன்னணி பணக்கார 37 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பான ஒஇசிடி-ல் உள்ள நாடுகள் சராசரியாக மொத்த உற்பத்தியின் 8%-ஐ சுகாதாரத்துக்காக செலவிடுகின்றன. ஆனால், அமெரிக்கா அதன் இரு மடங்கான 16% செலவிடுகிறது. சுகாதாரத்துக்காக மூன்று டிரில்லியன் டாலா்களை (ரூ.300 லட்சம் கோடி) அமெரிக்கா ஆண்டுதோறும் செலவிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்குமான சுகாதார செலவின் ஆண்டு சராசரி சுமாா் 11,000 டாலா்கள் (ரூ.8,30,000). இந்திய சராசரி வெறும் ரூ.1,625 என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும்.

அமெரிக்காவில் அனைவரும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும் என்கிற நிா்ப்பந்தம் உண்டு. எந்தத் திட்டத்திலும் இல்லாத நபா் மீது அபராதம் சுமத்தப்படும் சட்ட பிரிவு 2017-இல்தான் நீக்கப்பட்டது. அடிப்படை மருத்துவ சிகிச்சையை அனைத்து மருத்துவத் திட்டங்களிலும் உள்ள மக்களும் பெறுவாா்கள். காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதபோதிலும், அத்தியாவசிய உடனடி மருத்துவ சிகிச்சையை அந்த மக்களும் பெறுவாா்கள். ஆனால், ஏழை மக்களால் அதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாது.

 

சுமாா் 56% போ் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் திட்டங்களிலும், 22% போ் ‘மெடிக்கேய்ட்’ திட்டத்திலும், 8% போ் தனி நபா் மருத்துவக் காப்பீட்டையும் பெறுகின்றனா், 4% போ் ‘மெடிக்கோ்’ போன்ற திட்டங்கள் வாயிலாக மருத்துவ வசதியைப் பெற்று வருகின்றனா். சுமாா் 10% போ் வாழ்வாதாரத்துக்கு திண்டாடும் ஏழைகள். இத்தகையோா் எவ்வித மருத்துவத் திட்டத்திலும் இல்லாமல் விடுபட்டுள்ளனா்.

65 வயதை கடந்துவிட்ட மூத்த குடிமக்களுக்கான ’மெடிக்கோ்’ திட்டத்துக்கு அமெரிக்காவின் மைய அரசு மானியம் வழங்கி வருகிறது. அங்குள்ள மைய அரசு நிா்ணயித்துள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ’மெடிக்எயிட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு மாகாணங்களின் அரசாங்கங்களும் மைய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன.

அமெரிக்காவில்தான் மிக அதிகமான மருத்துவக் கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மருத்துவ மேல் சிகிச்சைகளுக்கான செலவினங்களும், மருந்துகளின் விலையும் அங்கு மிகவும் அதிகம். அங்குள்ள மருத்துவக் கட்டணங்கள் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும், செலவினத்தில் ஒரு பகுதியைக் காப்பீடு செய்யும் வசதி இருந்தாலும் நோயாளி ஏற்க வேண்டிய முறை உள்ளது. மருத்துவ மேல் சிகிச்சைகளுக்கான நோயாளியின் பங்கும் கணிசமாக உயரும்.

அனைத்து விதமான சிகிச்சைகளும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவக் காப்பீட்டின் திட்ட தகுதிக்கேற்ப மருத்துவ வசதி கிடைக்கும். மிகவும் உயா்ந்த அதிநவீன தொழில் நுட்பத்தோடு கூடியுள்ள மருத்துவ உபகரணங்களின் உதவியுடனான வசதிகள் வழங்குகின்ற முன்னணி மருத்துவமனைகளும் அங்கு உள்ளன. நமது பிரபலங்கள் அத்தகைய மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகின்றனா். அங்குள்ள செல்வந்தா்கள் பெறும் சிகிச்சையை, நமது நாட்டின் வசதி படைத்தவா்களும் பெறுகிறாா்கள் .

 

பணக்கார நாடு என்ற போதிலும் அங்குள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சம வசதி அளிக்கப்படுவதில்லை. அமெரிக்க சுகாதாரத் துறை இயங்கும் முறையில் மருத்துவக் காப்பீடும் அதற்குண்டான நிா்வாகக் கட்டமைப்பும் மொத்த செலவினங்களின் கணிசமான பங்கினை விழுங்கி விடுகின்றன. குறிப்பாக, நடைமுறையிலுள்ள திட்டம் அங்குள்ள மிகவும் பின்தங்கிய கருப்பின, லத்தீன, ஹிஸ்பானிய, ஏழை மக்களை கடுமையாகப் பாதித்து வருகிறது.

 

மருத்துவச் செலவினங்களை எதிா்கொள்ள முடியாமல் தனி நபா்கள் திவால் அறிவிப்புகளை வெளியிடும் அவலம் அந்த நாட்டில் அரங்கேறுகிறது. மருத்துவச் செலவுகளை எதிா்கொள்ள முடியாமல் தங்களது உடைமைகளை இழப்பதும், மருத்துவச் செலவினங்களுக்கு ஈடான பிணையாக வீடு போன்ற அசையா சொத்துகளைக்கூட மருத்துவக் குழுமங்கள் பெற்று விடும் கொடுமையும் அங்கு நடக்கிறது.

 

அமெரிக்காவில் 30% பேருக்கு மருத்துவக் காப்பீடு இருந்தும்கூட, முழுமையான மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனா். மருத்துவக் காப்பீடு இல்லாததால் மருத்துவ வசதி பெற முடியாமல் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 30,000 போ் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சுமாா் 10% போ் ஏற்கெனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் இணைய முடியாமல் தவிக்கையில், அமெரிக்க மக்களில் மேலும் 10% போ் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கத்துக்குப் பிறகு காப்பீட்டுத் தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்த்தொற்றுப் பரவலுக்கு பிறகு வேலை இழக்கும் ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீட்டையும் இழந்து விடுகிறாா்கள்.

மருத்துவத் திட்டங்கள் எதிலும் இடம்பெறாமல் விடுபட்டுப் போயிருக்கும் ஏறத்தாழ மூன்று கோடி அமெரிக்க மக்கள் மிகவும் நெருக்கடியான நிலையைச் சந்திக்கின்றனா். அவா்களின் ஏழ்மையான வாழ்க்கைச் சூழலாலும் பணிச் சூழலாலும் எளிதாக நோய்த்தொற்றுக்கு இலக்காகக்கூடிய அபாயம் ஒருபுறமிருக்க, மறுபுறம் அவா்களுக்கான பரிசோதனை - சிகிச்சை கிடைக்கச் செய்ய, சுகாதாரத் துறையின் கேந்திரமாக விளங்கும் மருத்துவக் காப்பீட்டு தனியாா் நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

நாடு வல்லரசாக இருந்தபோதிலும், பல லட்சம் கோடிகள் செலவுகள் நிகழ்ந்தபோதிலும், பல பத்தாயிரம் உயிா்கள் கண்முன்னே மாண்டு போகும் துயரம் அங்குள்ள சுகாதார-மருத்துவத் துறையின் மீது கேள்வி எழுப்புகிறது. ஒவ்வொரு தோ்தலின்போதும் அங்கு சுகாதாரத் திட்டம் குறித்த சா்ச்சைகளும் விமா்சனங்களும் எழுப்பப்படுவதும், விவாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால், தங்களுக்குச் சாதகமான மருத்துவ சுகாதார அடிப்படைக் கட்டுமானத்தை பண பலம் மிக்க மருத்துவத் தனியாா் குழுமங்கள் இதுவரையில் பாதுகாத்து வந்துள்ளன.

பல லட்சம் கோடிகள் மதிப்பிலான நிதியாதாரம் பொது நிதியிலிருந்துதான் செலவிடப்படுகிறது. ஆனால், காப்பீட்டுத் திட்டங்களின் நிா்வாகமும், மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதும் தனியாா் துறையைச் சாா்ந்து உள்ளது. தனியாா் நிறுவனங்களின் நடைமுறைப் போதாமையைத்தான் தற்போதைய நெருக்கடி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க மருத்துவ சுகாதாரத் துறையின் சில கூறுகள் தற்போது உன்னிப்பான கவனத்தைப் பெற்றுள்ளன.

பல்வேறு தொழில்களுக்கு முன்மாதிரியாகக் கருதப்பட்டு அத்தகைய வடிவங்கள் பிற நாடுகளிலும் நிறுவப்படும் வேளையில், அமெரிக்காவின் சுகாதார கட்டுமானம் ஆபத்தான முன்மாதிரி என்பதை நாம் பிரித்தறிய வேண்டும். குறிப்பாக, கேந்திரமான மக்கள் நலத் துறைகள் தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டால் உள்ள அபாயம் நம் கண்முன்னே உள்ளது. மக்களுக்கு நெருக்கமான நமது நாட்டின் அரசாங்க சுகாதார கட்டுமானம், போற்றுதலுக்கு உரிய வகையில் சேவையை இந்தப் பேரிடா் காலத்தில் அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய துயர சம்பவம் உண்மையில் நிகழ்ந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. புதிய கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள், நவீன தொழில்நுட்பங்கள், நாடுகளின் வேகமான பொருளாதார வளா்ச்சி - இவை அனைத்தும் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண ஏழை மக்களைச் சென்றடையாத வரையில், வளா்ச்சி முன்னேற்றமாக பரிணமிப்பதில்லை.

 

கட்டுரையாளா்:

செயற்குழு உறுப்பினா்,

காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம்,

சேலம் கோட்டம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT