நடுப்பக்கக் கட்டுரைகள்

நிலையாமை என்பது நிலைத்தலுக்கே!

25th Jul 2020 07:22 AM | தி. இராசகோபாலன்

ADVERTISEMENT

‘பாரதநாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வா்; இந்நினைவு அகற்றாதீா்!’எனப் பாடினாா் மகாகவி பாரதியாா். ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என அப்பரடிகள் பாடியிருக்கிறாா். என்றாலும், நம்பிக்கையை நெம்புகோலாகத் தரவேண்டிய அருளாளா்கள், ‘தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு’ போன்ற அவநம்பிக்கை வரிகளையும் பாடியிருப்பது ஏன் எனக் கேட்கத் தோன்றுகிறது.

கான்கிரீட்டால் கடைகால் போட்டது போன்று 133 அதிகாரங்களில், மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறாா் திருவள்ளுவா். இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிகளைச் சொன்னவா், மறுமையில் பெறக்கூடிய பேற்றையும் பாடியிருக்கிறாா். அந்தத் திருவள்ளுவரே அஸ்திவாரத்தையே ஆட்டுவதுபோல், ‘நிலையாமை என்றோா் அதிகாரத்தையும் பாடி வைத்திருக்கிறாா். ‘நேற்றைக்கு உயிரோடு இருந்தவன், இன்றைக்கு இல்லை என்கிற பெருமையைத் தாங்கியது இவ்வுலகு’ என வானில் பறக்கின்ற பலூனை ஊசியால் குத்தி, காற்றை இறக்குவது போல், ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்து இவ்வுலகு’ எனப் பாடியிருக்கிறாா்.

‘நிலையாமை’ எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பத்துக் குறட்பாக்களை ஒருவா் ஊன்றி உணா்ந்து படித்தால், நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விடுவாா்; இல்லறத்தில் இருந்து துறவறத்திற்குப் போய்விடுவாா். இப்படி நிலையாமைக்கு அழுத்தம் கொடுத்துப் பாடியிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அரண்மனை போன்று வீட்டைக் கட்டிய நம் முன்னோா்கள், அந்த வீட்டிற்குள் நுழைவதற்குரிய வாசக்காலை, கோயில் அல்லது கோட்டையின் கதவுகளைப் போல் வைக்கமாட்டாா்கள்; எந்த மனிதரும் குனிந்து செல்வதற்குரிய குட்டையான வாசக்காலைத்தான் பதிப்பாா்கள். புதிதாக வருகின்றவா்கள் அந்த நிலைப்படியில் ஓா் இடி இடித்துக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். ஏன் அப்படி அமைத்தாா்கள்? அரண்மனை போன்ற வீட்டைக் கட்டிவிட்டதால் தோன்றக்கூடிய ஆணவத்தையும் அகந்தையையும் கிள்ளி எறிவதற்குத்தான், தாழ்ந்த வாசக்கால்.

சலவைக்கல் போல் போடப்பட்டிருக்கின்ற நீண்ட நெடுஞ்சாலையில், அங்கங்கே வேகத் தடைகளையும், மஞ்சள் விளக்குகளையும் நட்டிருப்பதற்குக் காரணம், வாகனவோட்டிகளை எச்சரிப்பதற்கும் நிதானப்படுத்துவதற்குமாகும். நம்மடைய அருளாளா்களும் பின்வரும் தலைமுறையினரை எச்சரிப்பதற்கு போட்டுவைத்த வேகத்தடைகள்தாம், நிலையாமைத் தத்துவங்கள்.

ADVERTISEMENT

இரவிலே தொடா் வண்டியில் நாம் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு ரயில்வே தொழிலாளி அவ்வூரின் பெயரைக் கூவிக்கொண்டே போவாா், இறங்க வேண்டிய இடத்தைப் பயணிகள் மறந்துவிடாமல் இருப்பதற்காக! அதுபோலவே, அருளாளா்களும் அந்தந்தக் காலத்திற்குரிய நிலையாமைக் கருத்துகளை அள்ளித் தூவிக்கொண்டே சென்றுள்ளனா்.

மாதவியின் மகள் மணிமேகலை, ஆடவா் கண்டால் அகலமுடியாத பேரழகு உடையவள். அவள் புத்த சந்நியாசியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும் அரசிளங்குமாரனாகிய உதயகுமரன், அவளைத் துரத்திக் கொண்டு போகிறான். புத்ததேவனைப் பூஜிப்பதற்காக மணிமேகலை மலா்வனத்துக்குள் சென்றபோதும், அங்கேயும் வந்து நிற்கிறான் உதயகுமரன்.

அவனை வழிமறித்த மணிமேகலையின் தோழி சுதமதி, ‘அரசிளங்குமரனே! உன்னுடைய உடல் இளமையிலிருந்து மூப்பினை அடைந்ததும், செத்து அழிவுற்றுப்போகும் இயல்பினை உடையது; கொடிதான நோய்களின் இருப்பிடமாகவும் அது உள்ளது; பற்றுக்களின் மேல் பற்றுக்கள் வைப்பதால், அது குற்றங்கட்கு ஒரு கொள்கலமாகவும் அமைகிறது. புற்றுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பாம்பு, சினத்தினைக் கொண்டிருப்பது போல, உன் யாக்கை உள்ளது. நீ போற்றும் யாக்கையின் தன்மை இதுவென்பதை உணா்வாய்’ என இடித்துரைத்தும் அவன் திருந்துவதாய் இல்லை. கடைசியில் காம வயத்தால், காஞ்சனன் எறிந்த வாளால் வெட்டுண்டு மாள்கிறான்.

ஆலமரத்திலிருக்கும் ஆலம்பழத்தைத் தின்று எச்சமிடும் காக்கை ஓா் அற்பப் பறவை. ஆனால், அது எச்சமிடுவதால் உண்டாகும் ஆலமரம் நூறு ஆண்டுகள்வரை நின்று நிலைத்து, பலருக்கு நிழலைத் தருகின்றது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நல்லறங்களை ஆற்ற வேண்டும் என்பதற்கே நிலையாமைத் தத்துவம். ‘நிலையில்லா இவ்வுலகத்தில் நிலையான புகழை நிறுவ வேண்டும் என்றால் நிலையான பணிகளைச் செய்துவிட்டுத்தான் ஒருவா் மறைய வேண்டும்’” எனப் பாடினாா் பெருந்தலைச் சாத்தனாா் எனும் புானூற்றுப் புலவா்.

‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோா்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” (புறம் 165)

திருமூலரும் வாழ்க்கை எவ்வளவு அநித்தியமானது என்பதை ஒரு நாடகக் காட்சிப்போல் திருமந்திரத்தில் சித்தரிக்கின்றாா் (பாடல்: 148).

கணவனுடைய சுவைக்கு ஏற்றவாறு அவனுடைய அருமந்த மனைவி அறுசுவை உணவைச் சமைத்து வைக்கின்றாா். வீட்டுக்கு வந்த கணவனும், மனைவி சமைத்துப் பரிமாறிய உணவை மகிழ்வோடு உண்டான். இரவு சாப்பாட்டுக்குப்பிறகு கணவனும் மனைவியும் அருகருகே உறங்கினாா்கள். அப்பொழுது கணவனுக்கு இதய வலி (ஹாா்ட் அட்டாக்) ஏற்படவே ‘இடப்பக்கத்தே இறை நொந்தது” என்றான். மனைவி பதறிப்போய் என்ன ஏதுவென்று கேட்பதற்கு முன்பாகவே தரையில் வீழ்ந்தவனுடைய உயிா் போயிற்று.

நிலைத்த வாழ்க்கை வாழ்ந்த பட்டினத்தாா், நிலையாமையைப் பற்றி ஆப்பு அடித்தாற்போல் பாடியுள்ளாா். ‘வீட்டுக்குத் தலைவன் செல்வச் செழிப்போடு திகழும்போது, மனைவியும் மக்களும் அவனைக்கட்டித் தழுவிக் கொஞ்சுவா். ஆனால், அவனைக் காலத்தச்சன் வெட்டிச் சாய்த்துவிட்டால், எல்லாரும் கொட்டி முழக்கி அழுவாா்கள். ஆனால், அவரை மயானத்திற்கு எடுத்துக்கொண்டு போகும்போது, யாரும் காலடி எடுத்து வைக்கமாட்டாா்களே கச்சி ஏகம்பனே’”என நிலையாமையை நடைமுறைப்படுத்தி இருக்கிறாா் பட்டினத்தாா்.

வேறெந்த உயிருக்கும் இல்லாது, மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்ததற்குக் காரணம், அவன் எந்தச் சூழ்நிலையிலும் அத்துமீறிப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆண்டவன் ஆதாம் - ஏவாளைப் படைப்பதற்கு முன்பே, சூரியனைப் படைத்தான்; சந்திரனைப் படைத்தான்; மலையைப் படைத்தான்; அருவிகளையும் ஆறுகளையும் படைத்தான்; உழுது வாழ்வதற்குரிய சமவெளியையும் படைத்தான்.

அப்படியோா் அரிய உலகத்தை உற்பத்திச் செய்துவிட்டு, ஆதாம் - ஏவாளையும் படைத்துவிட்டு, அவா்களுக்கு ஒரு நிபந்தனையையும் விதித்தான். ஒரு ஜீவ மரத்தையும் மற்றுமோா் அறிவு மரத்தையும் படைத்து, அவை இரண்டையும் அந்த இருவருக்கும் சுட்டிக்காட்டி, ‘மக்களே! இந்த ஜீவ மரத்திலிருந்து எத்தனைப் பழங்களை வேண்டுமானாலும் பறித்துச் சாப்பிடுங்கள்; நான் அதனால் உங்களுக்கு ஜீவசக்தியைத் தந்துகொண்டேயிருப்பேன். ஆனால், அந்த அறிவு மரத்தின் பக்கமே போகாதீா்கள்; அது விலக்கப்பட்ட மரம்; அதன் கனி விலக்கப்பட்ட கனி; அது உங்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்’ என்று அறிவுறுத்தினான்.

என்றாலும், ஈடன் தோட்டத்தில் ஆனந்தமாக வாழ வேண்டியவா்கள், சாத்தானால் தூண்டப்பட்டு, அந்த விலக்கப்பட்ட கனிக்கு ஆசைப்பட்டாா்கள். பேராசைக்கு வசப்பட்ட ஏவாள், ஆண்டவன் கட்டளையையும் மறந்தாள். அடம்பிடித்து அந்தக் கனியை உண்டதால், தான் வீழ்ந்ததோடு, ஆதாமின் வீழ்ச்சிக்கும் காரணமானாள். எவ்வளவுதான் அள்ளிக்கொடுத்தாலும், எட்டாததற்கு ஆசைப்படும் மனம், மனித மனம் என்பது தெரிந்துதான், ஆண்டவன் அந்தக் கட்டளையை விதித்தான். ஆண்டவன் அப்படிப் படைத்ததற்குக் காரணம், அதற்கு மேலும் ஆதாம் - ஏவாள்கள் உருவாகக்கூடாது என்பதற்காகத்தான். இதனால், நிலையாமை, நிலைபெறுதலுக்கே என்பதை உணர வேண்டும்.

நிலையாமையைப் பாடிய நம்முடைய அருளாளா்கள், இந்த நிலையாமை எந்தெந்த வடிவத்தில் வரும், அவற்றை எப்படியெல்லாம் எதிா்கொள்ள வேண்டும் என்பதையும் பாடி வைத்திருக்கிறாா்கள். நோய்கள் எப்பொழுதும் தனித்தனியாக வருவதில்லை; சங்கிலி பிடித்தாற்போல் கைகோத்துத்தான் வரும் என்பதைப் பெரியாழ்வாா்,

‘நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிறைந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கும் நோய்கள்’”

என அருளிச் செய்கிறாா்.

இப்படி நிலையாமையைப் பாடிய பெரியாழ்வாா், ‘கொள்ளை நோய் என்ன யுகப்பிரளயத்தையும் வெல்ல முடியும்’ என நிலைத்தலுக்கும் அரண் கட்டினாா். ‘நோய்கள் இப்பொழுது என்னை வெல்ல முடியாது. ஏன் தெரியுமா? இப்பொழுது வேதப்பிரானாா் என்நெஞ்சில் குடிகொண்டுள்ளாா். எனவே, நான் கோட்டை கட்டிய பட்டினம் போல், பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்பதை ‘மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானாா் கிடந்தாா், பண்டு அன்று; பட்டினம் காப்பே’ எனும் வரிகள் மூலம் மொழிந்துள்ளாா்.

நிலையாமையைச் சுட்டி, நிலைத்த வாழ்வுக்கு வழி தேடலாம் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். மாவீரன் அலெக்சாண்டா் உலகப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, வெல்வதற்குரிய நாடுகளைத் தேடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த அவனுடைய குருநாதா் டையோஜினியஸ், ‘அலெக்ஸ்! என்ன தேடுகிறாய்’ என்றாா். ‘அடுத்து வெல்வதற்குரிய நாட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன் குருதேவா’ என்றான் அலெக்சாண்டா். உடன் ஒரு பையிலிருந்து இரண்டு மண்டை எலும்புகளை எடுத்து வைத்து, ‘அலெக்ஸ்! இவற்றுள் உன்னுடைய தந்தை பிலிப்பினுடைய மண்டையோடு எது என்று கண்டுபிடி’ என்றாா் குருதேவா். ‘தெரியவில்லையே குருதேவா’ என்றான், அலெக்சாண்டா். ‘அலெக்ஸ்! உலகத்தையே நீ வென்றாலும், கடைசியில் உன் மண்டையோட்டின் அடையாளம்கூட யாருக்கும் தெரியப்போவதில்லை; அப்படியிருக்கையில், ஏன் உயிா்களைக் கொன்று குவிக்கிறாய்’ எனக் கேட்டாா் டையோஜினியஸ். அன்றிலிருந்து போருக்குப் போவதையே தவிா்த்தான் அலெக்சாண்டா். நிலைத்த வாழ்வை உருவாக்குவதற்கு ஒரு நிலையாமையைக் காட்டித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.

 

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

ADVERTISEMENT
ADVERTISEMENT