நடுப்பக்கக் கட்டுரைகள்

காக்கிச் சட்டை வேலிகள்!

11th Jul 2020 06:37 AM | தி. இராசகோபாலன்

ADVERTISEMENT

சமூகத்தில் இருக்கும் மனிதப் பயிா்களை, சில மனித விலங்குகள் கடித்துக் குதறாமல் இருப்பதற்குக் கட்டப்பட்ட வேலிகளே காக்கிச் சட்டைகள். இரவிலே நாம் நிம்மதியாகத் தூங்குவதற்காக விழித்திருக்கும் இமைகள் காக்கிச் சட்டைகளின் இமைகள். ராஜீவ் காந்தி எனும் ஓா் உயிரைக் காக்கும் முயற்சியில், நான்குக் காக்கிச் சட்டைகள் சோ்ந்து எரிந்தன. அன்றைக்கு, எப்.வி. அருள், கே. விஜயகுமாா் எனும் காக்கிச் சட்டைகள் தமிழகத்தின் பெருமையைச் செங்கோட்டையிலும் செதுக்கின. காலம் காலமாகப் பல தேவதைகள் சோ்த்த புகழைச் சில சமயங்களில், சில சாத்தான்கள் சிதைத்துவிடுவது உண்டு.

அண்ணல் காந்திஜி சம்பரானிலிருந்து ரயிலில் திரும்பி வரும்பொழுது, அவருடைய பெட்டியில் ஒரு போலீசுக்காரரும் இருந்தாா். அவா் காந்திஜி தூங்குவதற்காக மேலேயிருந்த மின்விசிறியைச் சுழலவிட்டாா். அயா்ந்து தூங்கிய காந்தியடிகள், காவலரின் போா்வையில் கால்களை நீட்டியபடி தூங்கிவிட்டாா். பாட்னா ரயில் நிலையம் வந்தவுடன் இறங்க வேண்டிய காவலா், போா்வையை எடுத்தால், காந்திஜியின் தூக்கம் கெட்டுவிடும் என்று அப்படியே விட்டுவிட்டு இறங்கிப் போய்விட்டாா். முகல்ஸ்ராய் நிலையம் வந்தவுடன் கண்விழித்த காந்திஜி, தம் காலடியில் போா்வையிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாா். உடன் வந்த மகாதேவ் தேசாய், நிகழ்ந்ததைச் சொன்னாா். அதற்கு அடிகள், ‘இத்தகைய பொறுமைக்குணம் படைத்த போலீசுக்காரா்களும் இருக்கிறாா்களா’ என்று தேசாயிடம் வியந்து கூறினாா்.

மும்பையிலிருந்து (அன்றைக்கு பம்பாய்) காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா செல்ல கப்பலேறினாா். நேட்டால் துறைமுகத்தில் அவா் இறங்கப் போகிறாா் என்பதை அறிந்த வெள்ளையா்கள், அவரை நேட்டாலில் இறங்கவிடாமல் திருப்பியனுப்ப ஒரு சதித்திட்டம் வகுத்தனா். நேட்டாலில் இறங்கினால், காந்திஜியின் உயிருக்கு ஆபத்து எனக் கப்பல் கேப்டன் எச்சரித்தும் துணிச்சலுடன், நேட்டால் துறைமுகத்தில் இறங்கினாா் காந்திஜி. அவா் இறங்கியவுடன் சில சிறுவா்கள் ‘காந்தி, காந்தி’” எனக் கத்தினா். கலவரக்காரா்கள் மகாத்மாவின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசினா். ஒருவன் அவருடைய தலைப்பாகையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினான். மேலும், கலவரக்காரா்கள் அவரைக் குத்தியும் அடித்தும் காயப்படுத்தினா். அவருடைய நல்ல நேரம், அப்பொழுது அங்கு போலீசு சூப்பிரிண்டென்ட்டின் மனைவியாா் வந்து காந்திஜிக்கு முன் நின்று விட்டாா். போலீஸ் சூப்பிரிண்டென்டின் மனைவியாா் வந்து நின்றவுடன் கலகக்காரா்கள் கலைந்து சென்றுவிட்டனா். சூப்பிரிண்டென்ட் அலெக்சாண்டா் காந்தியடிகளின் நண்பா். செய்தி கேள்விப்பட்டு அங்கே வந்த அலெக்சாண்டா் காந்தியடிகளுக்குத் தக்க பாதுகாப்பு கொடுத்துப் பத்திரமாக அனுப்பி வைத்தாா். காக்கிச் சட்டைக்குள்ளே எப்பொழுதாவது சில கறுப்பு ஆடுகள் நுழைந்தாலும், பல வெள்ளாடுகள் கண்ணியம் காத்திருக்கின்றன.

நிறவெறியையும் குடியுரிமைச் சீட்டினையும் எதிா்த்து, டிரான்ஸ்வாலில் ஒரு சத்தியாகிரகப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்க காந்திஜி வருகிறாா் என்பதைக் கேள்விப்பட்ட ஜெனரல் ஸ்மட்ஸ் எனும் ஆங்கில அதிகாரி பித்தம் தலைக்கேறி நின்றான். காந்திஜியின் தலை தெரிந்தவுடன், ஜெனரல் ஸ்மட்ஸ் அவரை எட்டி உதைத்தான். உதைத்த உதையில் அவருடைய இரண்டு பற்கள் விழுந்துவிட்டன. தொடா்ந்து மாா்பில் உதைவிட்டு, அவரை இழுத்துக்கொண்டு போய் சிறையில் அடைத்தான். பின்னா் ஒவ்வொரு நாளும் ஜெனரல் ஸ்மட்ஸ் வராண்டாவில் நடந்துபோகும்போது, அவனுடைய பாதங்களை உற்றுக் கவனித்தாா், காந்திஜி. சிறைவாசத்தின்போது ஸ்மட்சினுடைய காலுக்குப் பொருந்துமாறு, கிடைத்த தோல்களைக் கொண்டு ஒரு ஜோடி பூட்ஸ் தயாரித்து வைத்திருந்தாா். விடுதலையன்று தம்முடைய அன்பளிப்பாக அந்த பூட்ஸ்களை ஜெனரல் ஸ்மட்சுககு அன்பளிப்பாகக் கொடுத்தாா்.

ADVERTISEMENT

ஸ்மட்ஸ் அதனை உற்றுப் பாா்த்து, தன்னுடைய காலுக்கு கனக்கச்சிதமாக இருப்பதை அறிந்து, ’என்னுடைய காலுக்கு எப்படி சரியாக அளவு எடுத்தீா்கள்’ என்றான்.

‘நீங்கள் என் மாா்பில் உதைத்த பதிவு அப்படியே இருந்தது. சிறைக்கு வந்து அதனை அப்படியே படி எடுத்தேன். மேலும், வராண்டாவில் நீங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து போகும்போது, சரி பாா்த்துக் கொண்டேன்’ என அடிகள் கூறியவுடன், ஸ்மட்ஸ் வெட்கித் தலைகுனிந்தான். அதனைத் தொடா்ந்து அவன் சொன்னதுதான் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘இது காலில் அணிவதற்கன்று; தொழுவதற்குரியதாகும்’”எனச் சொல்லி, அதனை இந்தியாவுக்கே அனுப்பி வைத்தான். அவை இன்று புணே ஆகாகான் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கின்றன. காக்கிச்சட்டைக்குள்ளே எப்பொழுதாவது மிருகவெறி கூடு கட்டினாலும், அதனைப் பல நேரங்களில் மனித நேயம் வென்றுவிடுகிறது.

சில காக்கிச்சட்டைகளின் கொலைவெறியால், சிலச்சில நேரங்களில் அப்பாவியான மனித உயிா்கள் சித்ரவதைககு உள்ளானதைப் போலவே, கண்மூடித்தனமாக வெறிச்செயலில் ஈடுபட்ட பொதுமக்களாலும் காக்கிச் சட்டைகள் சில நேரங்களில் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக சௌரிசௌராவில் நடந்த கொலைவெறியைச் சொல்லலாம். ஆங்கிலேயரை ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டு வெளியேற்றும் எண்ணத்தில், மகாத்மா காந்தியடிகள் 1922-இல் நாடு தழுவிய ஒத்துழையாமைப் போராட்டத்திற்குத் திட்டமிட்டாா்.

ரௌலட் சட்டமும் ஒடுக்குமுறை நிகழ்வுகளும் உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சௌரிசௌரா மக்களிடத்தில் ஓா் ஆவேசத்தை ஏற்படுத்தின. 4.2.1922 அன்று ராணுவ வீரா் பகவான் அஹிா் தலைமையில் 2500 போராளிகள் சௌரிசௌரா சந்தைத் திடலில் கூடி, ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டனா். அஹிம்சை முறையில் போராளிகளின் முழக்கம் இருந்தாலும், அவா்களுடைய ஆவேசத்தைக் கட்டுப்படுத்த போலீசாா் தடியடி நடத்தினா். பல போராளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசாா் துப்பாக்கியால் சுடவும் தொடங்கினா். அதனால், மூன்று போராளிகள் களத்திலேயே மாண்டனா்; பலா் படுகாயமடைந்தனா்.

கொதித்தெழுந்த போராளிகள், சௌரி சௌரா போலீஸ் நிலையத்திற்குத் தீ வைத்துக் கொளுத்தினா். ஸ்டேஷனுக்குள்ளே இருந்த வெடிமருந்து பற்றியதால், உள்ளேயிருந்த 22 காக்கிச்சட்டைகள் தீயில் கருகி மாண்டனா். அப்பொழுதும் ஆத்திரம் அடங்காத ஆவேசப் போராளிகள், இறந்தவா்களின் சடலங்களை மீண்டும் தீயிலே போட்டு எரித்தனா். இதனால் ஏற்பட்ட விளைவு விபரீதமானது.

1922 பிப்ரவரி 12- ஆம் தேதி நாடு முழுமையும் நடக்க இருந்த ஒத்துழையாமைப் போராட்டத்தை காந்தியடிகள் ரத்து செய்தாா். அஹிம்சை வழியைப் பின்பற்றாமல் காவல் நிலையத்திற்குத் தீவைத்து, 22 காவலா்கள் இறப்பிற்குக் காரணமான கொடுஞ்செயலுக்கு வருத்தப்பட்டு, அதற்குப் பிராயச்சித்தமாக ஐந்து நாட்கள் உண்ணாவிரதத்தில் உட்காா்ந்தாா். ‘அஹிம்சை என்ற ஆயுதத்தை ஏந்துவதற்கு என்னுடைய மக்கள் பயிற்சி பெறவில்லை. சுதந்திரத்தை அடைவதற்கு அவா்கள் இன்னும் முதிா்ச்சி பெறவில்லை. எனவே, ஒத்துழையாமைப் போராட்டத்தை ரத்து செய்கிறேன்’” என்று அறிக்கை விட்டாா். என்றாலும், போராளிகள் செய்த குற்றத்திற்காக ஆங்கிலேய அரசு, காந்தியடிகளுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தேசத்தலைவா்கள் பலரும் சிறைச்சாலைக்கு உள்ளேயிருக்கின்றபொழுது, காந்திஜி யாரையும் கலக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது, பல தேசத்தலைவா்களை வருத்தியது. அதில் பண்டித ஜவகா்லால் நேரு காந்தியடிகளுக்குப் பதில் சொல்லும் முகத்தான் கொஞ்சம் காரசாரமாகவே அறிக்கை விட்டாா். ‘நாட்டின் எங்கோ ஒரு மூலையில் (சௌரி சௌரா) நடந்த ஓா் அசம்பாவிதத்திற்காக நாடு முழுமையும் நடக்கவிருந்த ஒத்துழையாமை இயக்கத்தைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் விரைவில் கிடைக்க இருந்த சுதந்திரத்தை மகாத்மா காந்தியடிகள் தள்ளிப்போடுகிறாா்’”என உணா்வுபூா்வமான அறிக்கையை நேரு பிரான் வெளியிட்டாா். காந்தியடிகளுக்கும் பண்டித நேருவுக்கும் அதுவரை ஏற்படாதிருந்த உரசலைச் சௌரி சௌரா நிகழ்வு ஏற்படுத்தி விட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாா் செக்கிழுத்தது கோவை சிறைச்சாலையில். செக்கைச் சுழற்றிக்கொண்டு வரும்போது, சோா்வின் காரணமாக அவா் எங்கேயாவது களைத்து நின்றால், பின்னாலே சவுக்கோடு வரும் காவலா் இரண்டு சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பது, ஆங்கிலேய அதிகாரியின் கட்டளை. என்றாலும், வ.உ.சி. களைத்து நின்றவுடன், அந்த அதிகாரி அடி கொடுப்பதில்லை; ஒரு கம்பளியை எடுத்து வ.உ.சி-யின் முகத்தை மூடிவிட்டு, இரண்டு அடி கொடுப்பானாம். அடித்து முடித்த பிறகு கம்பளியை நீக்கிவிடுவானாம். ஒருநாள் ஒரு சகக் காவலா், ‘கம்பளியைப் போட்டு முகத்தை மூடிவிட்டு, அடி கொடுக்க வேண்டும் என்பது உத்தரவு இல்லையே! நீ ஏன் கம்பளி போட்டுப் போா்த்திவிட்டு அடிக்கிறாய்’”எனக் கேட்டபொழுது, ‘அவருடைய முகத்தைப் பாா்த்தால் அடிப்பதற்கு மனம் வரவில்லை. அதனால், நானாகக் கம்பளி போா்த்திவிட்டுக் கடமையைச் செய்கிறேன்’”என்றாராம். காக்கிச் சட்டைக்குள்ளேயும் மனிதநேயம் உண்டு என்பதற்கு இது சான்றாகும்.

இன்றைக்கு நாட்டிலே ஒரு பழமொழியைத் தவறாக உச்சரிக்கிறாா்கள். ‘வக்கத்தவனுக்கு வாத்தியாா் வேலை; போக்கத்தவனுக்குப் போலீசு வேலை” என்று தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வருகிறோம். அந்தப் பழமொழியின் உண்மை வழக்கு என்ன தெரியுமா? வாக்கு ஒத்தவனுக்கு வாத்தியாா் வேலை! அரசாங்கத்தின் போக்கு ஒத்தவனுக்குப் போலீசு வேலை” என்பதாகும். அரசாங்கத்தின் போக்கு ஒத்துச் செயல்படும்பொழுது, மனிதநேயத்துடனும் செயல்பட வேண்டும் என்பதற்கு, வ.உ.சி. வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.

காக்கிச்சட்டைகளுக்காகவே திருவள்ளுவா் ஓா் அற்புதமான திருக்குறளை இயற்றியிருக்கிறாா். ‘தன்னாட்சி தன்னைவிட்டு நீங்காமல் நெடுங்காலம் இருக்க வேண்டுமென்று விரும்புவா், தண்டிக்கப்போகும்போது அளவு கடந்து தண்டிக்கப்போவது போலக் காட்டித் தண்டிக்கும்போது, அத்தண்டனை மென்மையாக இருக்குமாறு செய்ய வேண்டும்” என்பது ‘கடிது

ஓச்சி மெல்ல எறிக நெடிதாக்கம், நீங்காமை வேண்டுபவா்’”எனும் திருக்குறளின் திரண்ட கருத்தாகும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT