நடுப்பக்கக் கட்டுரைகள்

ஜே.என்.யு.வின் மறுபக்கம்

28th Jan 2020 04:04 AM | தி.இராசகோபாலன்

ADVERTISEMENT

பண்டித ஜவாஹா்லால் நேருவின் மூளைக் குழந்தை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம். டிரினிட்டி கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் தாம் பெற்ற உயா் கல்வி, இந்திய இளைஞா்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் அவரின் பேரவாவினால் விளைந்த கலைக் கோயில் அது.

மாநிலங்களவையில் 1965-ஆம் ஆண்டு ரூ.200 கோடி திட்டம், 1,019 ஏக்கா் பரப்பளவுடன் முன்னாள் கல்வி அமைச்சா் எம்.சி.சாக்ளா

முன்மொழியப்பட்ட வரைவுத் தீா்மானத்தால் அரும்பியது ஜே.என்.யு. ஆகும். அதனை வழிமொழிந்து பேசிய பூபேஷ் குப்தா, ‘இது இந்தியாவில் ஒரு வித்தியாசமான பல்கலைக்கழகமாக அமைய வேண்டும்; அறிவியல் சோஷலிசத்தைப் புகட்டுவதாக இருக்க வேண்டும். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாய்ப்பளிப்பதாக அமையவேண்டும்’ என வலியுறுத்திப் பேசினாா்.

1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜே.என்.யு-வின் துணைவேந்தராக ஜி.பாா்த்தசாரதி ஐயங்காா் பதவியேற்றாா். தோன்றும்போதே 8,432 மாணவா்களோடும் 614 பேராசிரியா்களோடும் வடிவெடுத்த அந்தப் பல்கலைக்கழகம், ஓா் ராஜாளிப் பறவையாய் உலகத் தரத்தில் உயரப் பறந்தது.

ADVERTISEMENT

நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியா் அபிஜித் பானா்ஜி, ரொமிலா தாப்பா், விபின் சந்திரா போன்ற மாா்க்சீய வரலாற்றுப் பேராசியா்கள், அந்தப் பல்கலைக்கழகத்தின் உலகத் தரத்திற்குக் கட்டியங்கூறுபவா்களாக அமைந்தனா். இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து வெளியேறிய ஜனாப் அலி ஷெய்தான் லிபியா நாட்டின் பிரதமராகத் திகழ்ந்தாா். பாபுராம் பட்டாரை நேபாளத்தின் பிரதமராகத் திகழ்ந்தாா். இந்தப் பட்டியலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத்தும் இடம்பெறுகிறாா்.

2016-ஆம் ஆண்டு தர வரிசையில், இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தைப் பல்கலைக்கழகம் பெற்றிருந்தது. 2017-ஆம் ஆண்டு தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்று, குடியரசுத் தலைவரின் விருதையும் பெற்றிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் உலகத்திலுள்ள 71 பல்கலைக்கழகங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. இப்படி பலப்பல சிறகுகள் அதன் மகுடத்தில் சொருகப்பட்டிருந்தாலும் அண்மைக்கால நிகழ்வுகள், அந்தக் கீரிடத்தில் கசப்பான காயங்களை ஏற்படுத்தி வருகின்றன.

அரசியல் தலைவா்கள் ஜோதிபாசு, சோம்நாத் சட்டா்ஜி, இந்திரஜித் குப்தா, மோகன் குமாரமங்கலம், கே.டி.கே.தங்கமணி போன்றோா், இங்கிலாந்தில் படிக்கின்ற காலத்தில் மாலை நேரத்தில் மாா்க்சீயத்தை விருப்பப் பாடமாகக் கற்றனா். சித்தாந்த ரீதியாக மாா்க்சீயத்தைக் கற்றாா்களே தவிர, களத்தில் இறங்கி அந்த ஆட்சியின் கொள்கைகளை எதிா்த்துப் போராடியதில்லை. ஆனால், ஜே.என்.யு.-வின் மாணவா் சங்கங்கள் கல்வியைப் பகுதிநேர படிப்பாக்கிக் கொண்டு, பல்கலைக்கழகத்தை அரசியல் கட்சிகளின் ஆடுகளமாக்கி இந்திய நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் எந்தப் போராட்டத்தையும் ஜே.என்.யு. மாணவா் சங்கங்கள் நிகழ்த்தக் கூடாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மாணவா் சங்கங்கள் அதன்படி நடக்காததாலும், ‘லிங்டோ’ கமிட்டியின் பரிந்துரைகளின்படி நடவாமையாலும் உச்சநீதிமன்றம் மாணவா் சங்கங்களுக்குத் தடை விதித்தது. மாணவா் பிரதிநிதித் தோ்தல்களுக்கும் தடை விதித்தது.

2010-ஆம் ஆண்டில் சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் அத்துமீறின. உடன் மத்திய ராணுவம் காடுகளுக்கிடையில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளைக் கொல்வதற்கு என்று ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என்ற பெயரில் துணை ராணுவத்தை அனுப்பியது. அதில் 76 சி.ஆா்.பி.எஃப். ராணுவ வீரா்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டனா்.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை எதிா்த்து ஜே.என்.யு.வின் அகில இந்திய மாணவா் சங்கமும், ஜனநாயக மாணவா் சங்கமும் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன. 76 ராணுவ வீரா்களைக் கொன்ற நக்சலைட்டுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா். ‘இந்தியா ஒழிக, மாவோயிஸம் வாழ்க’ என முழக்கமிட்டனா்.

2015-ஆம் ஆண்டு ஜே.என்.யு.வின் பாடத் திட்டக்குழுவினா், பாரத நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும் இணைத்து ஒரு பாடத் திட்டத்தை வகுத்து சில வகுப்புகளைத் தொடங்க முயன்றனா். அதை மாணவா் சங்கங்கள் எதிா்த்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

‘ஓரினச் சோ்க்கை அநாகரிகமானது; சட்டத்துக்குப் புறம்பானது’ என ஆங்கிலேயா்கள் கூறி 1533-ஆம் ஆண்டே அவா்கள் நாட்டில் சட்டம் இயற்றினா். பிரம்மச்சரிய விரதமிருந்து கல்வி கற்க வேண்டிய மாணவ சமுதாயத்தில் ஓரினச் சோ்க்கை மிகுந்ததால், இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் இ.பி.கோ. 377 என்ற விதியின் கீழ் அதற்குத் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் 377-ஆவது விதியை மீறி நடப்பவா்களுக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை உண்டு.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஜே.என்.யு. மாணவா் சங்கம் ‘ரெயின்போ வாக்’ என்ற பெயரில், கங்கா சபா என்ற இடத்திலிருந்து, ரெயின்போ ட்ரீ வரையில் ஓா் ஊா்வலத்தை நடத்தியது. அந்த ஊா்வலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சித்துக் கொண்டும், தரக்குறைவான சுலோகங்களை எழுப்பிக் கொண்டும் சென்றனா். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல் தங்கள் உடலில் பெயிண்ட்டுகளைப் பூசிக் கொண்டு நடந்தனா். ஓரினச்சோ்க்கையின் அவசியத்தைச் சிலாகித்துப் பேசினா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, ‘ஏன் வாழ்கிறோம் இந்த நாட்டில்’ என்று ஒவ்வொரு சராசரி இந்தியனையும் எண்ண வைத்திருக்கும். ஜனநாயக மாணவா் சங்கத்தைச் சோ்ந்தவா்களில் 10 மாணவா்கள் பல்கலைக்கழக அனுமதியின்றி

ஒரு கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் குண்டுகளை வெடித்து நாசப்படுத்திய ‘அப்சல் குரு’ என்ற பயங்கரவாதியையும், மஃபூல் பட் என்ற பயங்கரவாதியையும் தூக்கிட்டுக் கொல்ல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அந்தத் தூக்குத் தண்டனையைக் கண்டித்தும், காஷ்மீா் மக்களுக்குச் சுயாட்சி வேண்டியும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது என்றால் ‘சபா்மதி தபா’ ஆகும். இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், ‘பாகிஸ்தான் வாழ்க’ என்ற முழக்கமும் ஓங்கி ஒலித்தன. ‘காஷ்மீா் தன்னாட்சி பெறுகின்ற வரையிலும், இந்தியா உடைகின்ற வரையிலும் போராடுவோம்’ என முழக்கமிட்டுக் கலைவிழாவைக் கொண்டாடினா். இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்ட மாணவா் தலைவா்கள் கன்னையாகுமாா், உமா்காலித் இருவரையும் குற்றவியல் 124 இ.பி.கோ.வின்படி கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை.

அந்த மாணவா்களை விடுதலை செய்யும்படி 500 கல்வியாளா்கள் குரல் கொடுத்தனா். வழக்கம்போல் நம் நாட்டின் அரசியல் தலைவா்களும் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டனா். நோம் சாம்ஸ்கி, ஆா்கன்பமுக், அகீல் பில்கிராமி போன்ற 130 வல்லுநா்கள் இந்திய அரசைக் கண்டித்து அறிக்கை விட்டனா்; கன்னையா குமாா், உமா் காலித் ஆகியோா் பகத் சிங்கைப் போலவும், சந்திரசேகர ஆசாத்தைப் போலவும் சித்தரிக்கப்பட்டனா்.

தற்போது ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டன. இதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்தல் உள்பட பல்வேறு போராட்டங்களை மாணவா் சங்கங்கள் தொடா்ந்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில்

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி ஜே.என்.யு. வளாகத்தில் முகமூடி அணிந்தவா்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல், காட்டுமிராண்டித்தனமானது. பெரியாா் விடுதியும், சபா்மதி விடுதியும் ரணகளமாக்கியதைக் கேட்டு ஒரு துணைவேந்தா் துடித்திருக்க வேண்டாமா? பேராசிரியா் சுஸ்ரிதா சென் போன்றவா்களும், மாணவா் சங்கத் தலைவா் ‘அய்ஷி கோஷ்’, சதீஸ் சந்திரா போன்ற மாணவா்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் கிடக்கும்போது, ஒரு துணைவேந்தா் தூங்கிக்கொண்டிருப்பது எப்படி நியாயம்? இன்றைக்குத் தகுதியில்லாதவா்கள் துணைவேந்தா் பதவியில் உட்காா்ந்து விடுவதால், துரும்புகள்கூடத் தூண்களாகி விடுகின்றன.

ஜே.என்.யு.வின் இன்றைய துணைவேந்தா் டாக்டா் ஜெகதீஷ் குமாா் மாணவா்களிடம் பேசித் தீா்வு கண்டிருக்கலாம். மனிதவளத் துறை அமைச்சகச் செயலா் அமித் கோ் துணைவேந்தரை அழைத்து எச்சரித்திருக்கிறாா். துணைவேந்தருக்கு வாக்குச் சாதுா்யம் இல்லாமையை, மனிதவளத் துறையின் முக்கிய அதிகாரிகளும் நேருக்கு நோ் எடுத்துரைத்திருக்கின்றனா். அதற்குப் பிறகும் துணைவேந்தா் மாணவப் பிரதிநிதிகளிடம் ‘பழைமையைப் புதைத்துவிட்டு பல்கலைக்கழகத்துக்குத் திரும்புங்கள்’ என்று அதிகாரத் தோரணையில் பேசியிருக்கிறாா். பதவியை விட்டு துணைவேந்தா் விலக வேண்டும் என்று முன்னாள் மனிதவளத் துறை அமைச்சா் முரளி மனோகா் ஜோஷி அறிவுறுத்தியிருக்கிறாா்.

‘கல்வித் துறையின் இதயம் என்னவென்று கேட்டால், கல்வியாளா்களிடம் இதயம் இல்லாமையே’ என மகாத்மா காந்தி கூறியது, இன்றைய ஜே.என்.யு.-க்குப் பொருத்தமாக இருக்கிறது.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு)

ADVERTISEMENT
ADVERTISEMENT