நடுப்பக்கக் கட்டுரைகள்

அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு...

8th Jan 2020 02:56 AM | எம்.ஆர். சிவராமன்

ADVERTISEMENT


மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே உள்ளது. சர்வதேச அளவில் அனைத்து அரசுகளுக்கும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவும் பல ஆண்டுகளாக மிகை வருவாய் என்ற நிலையை எட்டியதே இல்லை. எனவே, வரும் பட்ஜெட்டில் இந்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. 

மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலர், மிகப் பெரிய மாநிலத்தின் நிதித் துறைச் செயலர் எனப் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சருக்கு எனது சார்பில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.

1. அண்மைக்கால  நிதிநிலை அறிக்கைகளில் வளர்ச்சி குறித்து மிகவும் மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களும், வரி வருவாய் குறித்து அதிகரித்துக் காட்டப்படும் தகவல்களும் உள்ளன. தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்கள், எதிர்கொள்ள வேண்டிய செலவுகள் தொடர்பான உண்மையான மதிப்பீடுகளை ஒளிவு மறைவில்லாமல் அரசு அறிவிக்க வேண்டும். உண்மை நிலவரத்தின் அடிப்படையில் திட்டமிடுவதும், நிதியாதாரத்தைப் பங்கிடுவதும் தெளிவான பொருளாதார இலக்கை நோக்கிப் பயணிக்க மிக மிக அவசியம்.

2.  நிதிநிலை அறிக்கை செலவினங்களை ஈடு செய்ய முடியாத இக்கட்டான சூழலில்தான் அரசு உள்ளது. முதலில் தனது தேவையில்லாத செலவினங்களை அரசு குறைக்க வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

3. செலவினங்களின் அடிப்படையிலான நிதிநிலை அறிக்கையை உருவாக்குவது புத்திசாலித்தனமான அணுகுமுறை. ஓராண்டு காலம் வரை செயல்படுத்தப்படும் நீண்டகாலத் திட்டங்களுக்கான செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதை முதலிலேயே கருத்தில் கொள்ளத் தேவையில்லை. பல்வேறு மூலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் திட்டங்களை அமல்படுத்துவதற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ள முடியும். அடிப்படைச் செலவுகளின் மீது முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

4. அடுத்ததாக ஒப்பந்தங்களுக்காகச் செலுத்த வேண்டிய தொகைகள் அனைத்தையும் எவ்வித காலதாமதமும் இன்றி அரசு செலுத்திவிட வேண்டும். இது அரசு மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அரசிடம் பணத்தைப் பெறுபவர்கள், அவர்கள் அளிக்க வேண்டியவர்களுக்கு பணத்தை அளிப்பார்கள். இந்தப் பணம் சமுதாயத்தின் அடிமட்டம் வரை புழக்கத்துக்குச் செல்லும் என்பதால், பொருள்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட பலவற்றுக்கு அரசு செலுத்த வேண்டிய ஒப்பந்த நிதியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்).

5. எந்த வகையிலான செலவுகளை அரசு குறைத்தால் அது மக்களைக் கவரும் வகையில் அமையுமோ, அதுபோன்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளிநாட்டுப் பயணத்துக்காக பிரம்மாண்டமான விமானங்களைப் பயன்படுத்துவதை பிரதமர் நிறுத்தலாம். இதுபோன்ற ஆடம்பர விமானப் பயணங்களை அமைச்சர்களும் தவிர்க்க வேண்டும். மேலும், உள்நாட்டில் பயணிக்க பொதுத்துறை விமான சேவைகளைப் பயன்படுத்தலாம். அரசு செலவுகளைக் குறைப்பது தொடர்பாக அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சில வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்.  இதன் மூலம் தேவையற்ற செலவுகளை அரசு குறைப்பது மட்டுமின்றி, அது குறித்து மக்கள் மத்தியில் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.

6. பெட்ரோல், டீசல், அது சார்ந்த பொருள்களை அரசுத் துறைகள் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவு குறைவதுடன், கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியும் மிச்சமாகும். 

7. அரசு மேற்கொள்ள இருக்கும் ஒப்பந்தங்களில், முக்கியமாக பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களில் தனது பேரம் பேசும் திறனை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் பெரிய அளவிலான செலவினங்களைக் குறைப்பதுடன், தவணை முறையில் பணத்தை எளிதாகச் செலுத்த முடியும்.

8. வருவாயை அதிகரித்துக் கொள்வதில் அரசுக்குப் புதிய சிந்தனைகள் தேவை. அமைச்சகங்கள், அரசுத் துறைகள் விதிக்கும் பல்வேறு கட்டணங்கள், அதற்கான சேவைகளை ஈடுகட்டும் விதத்திலும் நெருக்கடி ஏற்படும்போது சமாளிக்க குறிப்பிட்ட அளவு நிதி இருக்கும் வகையிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் உள்ள மிகுதியான தொகையை அரசு தன்வசப்படுத்தத் தயங்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணையம் (செபி) ரூ.3,000 கோடி உபரியாக இருப்பதாக அறிவித்துள்ளதால், அதை எளிதாக (ஆர்பிஐ தனது உபரியை அரசுக்கு மாற்றுவதுபோல) அரசுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

மத்திய வங்கியில் இருந்து பணத்தை அரசு தனக்கு மாற்றிக் கொள்வது அந்த வங்கியின் நிதி தன்னாட்சியைப் பாதிக்கும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் மத்திய வங்கியில் உள்ள மிகுதியான நிதி அனைத்தும் அரசுக்கு மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9. நீதிமன்றங்களில் செலுத்தப்படும் பல்வேறு கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனை மத்திய அரசு பரிசீலித்து பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெறவும், அங்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

10. அமைச்சக அளவில் உரிய ஒப்புதல் இல்லாமல் அதிரடி சோதனைகளை விசாரணை அமைப்புகள் நடத்துவதை அரசு நிறுத்த வேண்டும். பல்வேறு விசாரணை அமைப்புகள் எத்தனை சோதனைகள் நடத்தியுள்ளன. சோதனை நடத்தப்பட்ட நாள், சோதனைக்குள்ளான நிறுவனங்கள், தனிநபர்களின் வீடுகள், அவர்கள் செய்த குற்றங்கள், சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருள்களின் விவரம், சோதனைக்குப் பிறகு எத்தனை பேர் காவலில் வைக்கப்பட்டார்கள், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை நிலை என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்மூலம் அரசின் செயல்பாடுகள் மீதான வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். சட்டத்தை மீறி முறைகேடாகச் செயல்படுபவர்களுக்கு எதிராகத்தான் விசாரணை அமைப்புகள் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்கின்றன என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அரசியல் எதிரிகள் மீது வேண்டுமென்றே விசாரணை அமைப்புகளை ஏவிவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

11. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ஜிஎஸ்டி விகிதம், அமல்படுத்தும் நடைமுறை எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. இதனால், அதில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளவர்களையும் பாதித்துள்ளது. இதன் மூலம் அதில் முறைகேடுகள் நடப்பதும், அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதும் அதிகமாகிறது. இதனை மாற்ற ஜிஎஸ்டியை முடிந்த அளவுக்கு குறைந்தபட்ச அளவில் நிர்ணயிக்க வேண்டும். ரூ.25 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துகொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் உள்ளீட்டு வரி வரவு முறைகேட்டில் ஈடுபடுவது மிகவும் கடினமாகும்.

12. வருமான வரி விகிதங்களைப் பொருத்தவரையில், முதலில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படாது என்பதை நிதிநிலை அறிக்கையிலேயே உறுதியாக தெரிவித்துவிட வேண்டும். அதே நேரத்தில், தனிநபர்கள், பெரு நிறுவனங்களுக்கான வரிவிலக்குச் சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிட்டு, குறைந்தபட்ச வரி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்.

13. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் மூலம் அந்நியச் செலாவணியும் அதிகம் கிடைக்கும். வர்த்தகப் பொருள் வணிகத்தில் இந்தியா 4,000 கோடி டாலர் (சுமார் ரூ.2,87,314 கோடி) என்ற அளவை இதுவரை கடக்கவில்லை. 2020-21-ஆம் நிதியாண்டில் இந்த இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். இதற்காக அனைத்து ஏற்றுமதி வாரியங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான உள்ளீட்டுச் செலவுக்கு வரிகள் கிடையாது என்ற பாதுகாப்பு உணர்வை ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

14. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை உச்சத்தில் இருக்கும்போது அதில் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இப்போது தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொண்டுள்ள அந்தத் துறையில் மாற்றங்கள் சுமுகமாக நடைபெற நல்லதொரு சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். தாங்கள் இப்போது பயன்படுத்தும் வாகனங்களைப் புதிய விதிகளுக்கு உட்பட்டு எவ்விதப் பிரச்னையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம் என்ற பாதுகாப்பு உணர்வை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். 

பேட்டரி வாகன உற்பத்தி தொடர்பாக தனிக் குழுவை அரசு அமைக்க வேண்டும். பேட்டரி வாகனங்கள் அறிமுகத்தால் வேலைவாய்ப்புகளும், ஏற்கெனவே செய்துள்ள முதலீடுகளும் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும்.

15. ரயில்வே துறையில் அளிக்கப்படும் சலுகைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். சலுகைகள் மூலம்தான் ரூ.35,000 கோடி அளவுக்கு நஷ்டத்தை ரயில்வே துறை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. ரயில் கட்டணம் குறைவாக இருக்கும் அதே நேரத்தில் அன்றாட ரயில் இயக்கச் செலவுகள், தேய்மானத்தை ஈடுகட்டும் அளவுக்கு இருக்க வேண்டும். இதன் மூலம் ரயில்வே துறை வேகமாக நவீனமயமாவதுடன், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளையும் ஏற்படுத்தித் தர முடியும்.

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), பெரும் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக  அமைகிறது. தனது கொள்கைகளில் சிறப்பானதொரு மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல முடியும்.


கட்டுரையாளர்:
மத்திய வருவாய்த் துறை
முன்னாள் செயலர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT