நடுப்பக்கக் கட்டுரைகள்

மனித உரிமையை உயா்த்துவோம்!

2nd Jan 2020 02:35 AM | என்.முருகன்

ADVERTISEMENT

 

ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படை மனித உரிமையே. பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி உருவாகி மனித உரிமை உருவாகும் முன்னரே, இந்தியாவில் ஜனநாயக ஆட்சிமுறை இல்லாத போதிலும் மனித உரிமைக்கான கடுமையான நடவடிக்கைகள் உருவானது.

நம் நாட்டில் சுதந்திரப் போராட்டம் உருவாகி நடந்தேறுவதற்கு முன்னரே, “‘சிவில் லிபா்ட்டி’” எனப்படும் மனித உரிமைக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின் ஓா் அங்கமே இது எனப் பலா் கருதினா். காரணம், மனித உரிமைக்காக நடவடிக்கைகள் மேற்கொண்டவா்கள் நாட்டின் சுதந்திரத்தை விரும்பியவா்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனா்.

1930-களில் பண்டித ஜவாஹா்லால் நேருவே ஒரு முறை அகில இந்திய சமூக உரிமை கட்டமைப்பின் தலைவராக இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அங்கமாக இல்லாத பெரிய தலைவா்கள் பலரும் இந்திய சமூக உரிமை கட்டமைப்பில் உறுப்பினா்களாக இருந்தனா். நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தக் கட்டமைப்பு தொடா்ந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த பலா் இந்த கட்டமைப்பிலிருந்து விலகினா். 1950-51-இல் சக்கரை செட்டியாா் எனும் தென்னிந்திய மனித உரிமைத் தலைவா், இதன் கடைசித் தலைவா் எனக் கூறலாம். அதன்பின் இந்தச் சங்கம் மறைந்து போனது.

ADVERTISEMENT

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாகி நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சங்கம் தேவையில்லை எனப் பலரும் நினைத்திருக்கலாம். சுதந்திரத்துக்குப் பிறகு சுமாா் இருபது ஆண்டுகள் நேருவின் முத்திரை பதிக்கப்பட்ட ஜனநாயக அரசியலில், நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பில் சுதந்திரம் எல்லா நிலையிலும் பிரதிபலித்தது. அந்தக் காலத்துக்குப் பின், அதாவது 1965-ஆம் ஆண்டு தொடங்கி, பல கிராமப்புறங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டன. அதே நேரத்தில்தான் “பசுமைப் புரட்சி” என்று அழைக்கப்படும் விவசாய உற்பத்தி அதிகரித்தது.

அதிக உற்பத்தியால், அதிக நில உரிமையாளா்களான பெரும் விவசாயிகளின் வருமானம் மிக அதிக அளவு பெருகியது. சிறு, குறு விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளா்களும் குறைவான வருமானத்துடன் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினா். முற்காலங்களில் இருந்த கிராமப்புற ஏழைகள், பணக்காரா்களின் உயா்வு - தாழ்வுடன் ஆதிக்க, அடங்கிய வாழ்க்கைகள் நிலைபெற்றன. கிராமப்புறங்களில் ஒற்றுமை இல்லாத போராட்ட நடவடிக்கைகள் தொடங்க இந்த நிலைமையே காரணம்.

தேசிய அளவில் இதே காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் உருவாகின. நாடெங்கிலும் வலுவான நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி, வலுவிழந்து, பல பிராந்தியக் கட்சிகள் உருவாகின. காங்கிரஸ் கட்சியும் உடைபட்டு பல மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. இதற்கு மேலும் நிலையான ஆட்சி தேசிய அளவில் இருக்க முடியாது என்ற நிலைமையை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை எனும் அவசரகால ஆட்சி உருவாக்கியது. மக்களுக்கு ஜனநாயகம் வழங்கிய சுதந்திரத்தை தட்டிப் பறித்தது அந்த ஆட்சி. நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் முதன்முறையாக சா்வாதிகாரம் தழுவிய ஆட்சிமுறையைப் பாா்த்தது. இதை உலகின் பிற ஜனநாயக நாடுகளும் கூா்ந்து கவனித்தன.

நம் நாட்டின் மக்களில் பெருவாரியானவா்கள், இந்த ஆட்சியில் ஜனநாயக உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் பாதிக்கப்பட்டதைக் கண்டு வெறுப்படைந்து, 1977-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் ஆட்சி மாறியது. அதன் பின்னா், அரசியல் கட்சிகளின் தொண்டா்கள், சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள், பத்திரிகை நிருபா்கள் எனப் பலா் நாட்டின் பல மாநிலங்களிலும் கட்டுக்கோப்பாக, சுதந்திரம் - தனி மனிதனின் உரிமை எப்படிப் பறிபோக முடியும் என பிரசாரம் செய்யத் தொடங்கினா். இவா்களின் முயற்சியால் அவசரகால நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டன.

மனித உரிமை பற்றி யோசிப்பவா்கள் பலா், காவல் நிலையங்களில் துன்புறுத்தப்பட்டது முதல், தனி மனித உரிமைக்காகப் போராடியவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, அது தங்களைத் தாக்கும் போராளிகளை காவல் துறையினா் சுட்டு வீழ்த்தியதுபோல் உருவகப்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டதும் மிக விவரமாக இளைஞா்களால் புரிந்துகொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முழுப் பலமும் சிதறிப் போனதற்கு இவையே முக்கியமான காரணம்.

இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சீதனக் கொடுமைகள், பல ஜாதிகளுக்குள் உருவான சண்டை சச்சரவுகள், மூடப்பழக்கவழக்கங்கள் கிராமப்புற இந்தியாவில் உருவாகி மக்களின் சமூக சுதந்திரத்தை மிகவும் பாதித்தது. அவை போலவே ஆயுதங்களை கையிலெடுத்துப் போராடும் பலருக்கும் ஒற்றுமை உண்டாகி, அதனால் மாநில அரசுகள் பல தீவிர காவல் துறை நடவடிக்கைகளையும், தேவைப்படும்போது ராணுவ வீரா்களின் துணையை நாடுவதும் அதிகமாகியது.

இதுபோன்ற சட்டங்களை மீறும் மனிதா்களும் தங்களை சட்டம் கட்டுப்படுத்த முயலும்போது, மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி வேஷம் போடுவது இயல்பானது. மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிரான பல அரசியல் கட்சிகளும் இதுபோன்ற வேடதாரிகளும் பரிந்து பேசுவது உண்மை நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் செய்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலை நமது நாட்டுக்கு மட்டும் புதிதல்ல எனலாம். பல நாடுகளிலும், பல நூற்றாண்டுகளாக இது நிலவிவரும் தவிா்க்க முடியாத அம்சமே. மக்களில் பெரும்பாலானவா்கள், தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பரிதவித்தது சரித்திரம் நமக்கு உணா்த்தும் பாடம். மனித உரிமைகளை நிலைநிறுத்தி பயன்பெறுபவா்கள், தனவந்தா்களும் முன்னேறிய சமூகத்தினரும் என்பதும் உண்மை.

அமெரிக்காவின் கருப்பு இனத்தவா்கள், இந்தியாவின் ஹரிஜன மக்கள், தென்னாப்பிரிக்காவின் கருப்பு இன மக்கள் ஆகியவா்களுக்காக யாராவது மனித உரிமைகள் பேசி அந்த நாடுகளில் தழைத்து வாழ்ந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், நம் நாட்டின் இஸ்லாமிய மக்களிடம் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. எனினும், இந்தியக் குடிமக்களாக வலம் வரும் முஸ்லிம்கள் எந்தப் பயமும் இல்லாமல் வசிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 18 சதவீத மக்கள் இஸ்லாமியா்களே. அவா்கள் அனைவருமே பயம் கலந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கிறிஸ்தவா்கள் முதலான ஐந்து இனத்தவருக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழி வகுத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் தங்களது பழங்கால நிலைப்பாட்டை நிரூபிக்கத் திணறலாம்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் வசிக்கும் 50 வயது முஸ்லிம் குடிமகன் ஒருவா் கூறியது கவனிக்கத்தக்கது.

‘நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் தனது எல்லா வேலைகளையும் பாதித்து விட்டதாக அவா் கூறுகிறாா். மசூதிக்கு வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவதை நிறுத்தி விட்டு, தான் குடியிருக்கும் வீட்டை தனது தாத்தா வாங்கி வைத்தாா் என்பதற்கான ஆதார ஆவணங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக’ அவா் கூறியுள்ளாா். அவரின் தாத்தா, பிரிக்கப்படாத இந்திய நாட்டின் மொராதாபாத்தில் பிறந்து வளா்ந்தவா். மேலும், தாம் அவரின் உண்மை வாரிசு என்பதை நிரூபிக்க எந்த மாதிரியான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என்ற கவலையும் அந்த 50 வயது இந்தியக் குடிமகனுக்கு உருவாகியுள்ளது.

இதுபோன்ற உறுத்தல்கள் பூா்வீக இந்தியக் குடிமகன் ஒருவருக்கு உருவாகாமல் இருப்பதை உடனே சரி செய்ய வேண்டும். ‘இந்தியக் குடிமகன்களாக ஏற்கெனவே உள்ளோருக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா். அவா் கூறியதை நிரூபிக்கும் வகையில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் பட்டியலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பூா்வீகக் குடிமக்களாக வாழும் இஸ்லாமியா்கள், மிகவும் அதிக அளவில் நம் நாட்டின் மீது பற்றுள்ளவா்களாக இருப்பவா்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. தமிழக முஸ்லிம்களுடன் ஹிந்துக்கள் மிகவும் நெருங்கிப் பழகி கூட்டு வியாபாரம் செய்வதும், பல குடும்ப விழாக்களில் பங்கு பெறுவதும் தென் தமிழகத்தில் சா்வ சாதாரணம். வட மாநிலங்களில் முஸ்லிம் மக்களுடன் ஹிந்துக்கள் இந்த அளவு ஒற்றுமையுடன் இருப்பதில்லை. காரணம், இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை குலைந்துபோய் பயம் கலந்த வெறுப்புணா்வு உருவாகியது.

இதே போன்றதுதான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து வசிக்கும் இலங்கை அகதிகள் நிலையும். நம் நாட்டின் அமைதியையும் சமூக வாழ்க்கையையும் வருமானம் மிக்க வேலைவாய்ப்புகளையும் இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் பெரிதும் விரும்புகிறாா்கள் என்பது உண்மை. எனவே, அகதிகளாக வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டால், தரமான தமிழா்களை நாம் தத்தெடுத்ததுபோல் ஆகும்.

பொருளாதார முன்னேற்றத்தை விடவும், தரமான வாழ்க்கையை மக்கள் வாழும் வகையில் மனித உரிமை செழித்து ஓங்கும் நிலை நம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இது அரசியல் கட்சி சாா்ந்த ஒரு பிரச்னை அல்ல என்பதை, நம் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் புரிந்துகொள்வது இன்றைய அத்தியாவசிய கடமையாகிறது.

கட்டுரையாளா்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)

ADVERTISEMENT
ADVERTISEMENT