நடுப்பக்கக் கட்டுரைகள்

வருமான வரி எளிதாக்கல் அல்ல

21st Feb 2020 02:46 AM | ச. சேகர்

ADVERTISEMENTநாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை (2020-21) அண்மையில் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்கவும், மேலும் வருமானவரி கணக்கீட்டு முறையை எளிமைப்படுத்தவும் சட்டப் பிரிவுகளில் இதுவரை இருந்துவந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட விலக்குகளையும், கழிவுகளையும் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

வருமான வரி செலுத்துவோர் புதிய முறையையோ அல்லது ஏற்கெனவே உள்ள பழைய முறையையோ ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். வருமான வரிச் சட்டத்தில் 100-க்கும் மேலான சலுகைகளும், கழிவுகளும் இருந்ததைக் கண்டு வியப்பு அடைந்ததாகக் கூறிய நிதியமைச்சர், மீதமுள்ள கழிவு - விலக்கு அளிக்கின்ற பிரிவுகளும் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்; அத்துடன் வருமான வரியும் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கடினமாக இருந்த வருமான வரி கணக்கீட்டு முறை, உடனடியாக மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகிறார்.
அமைச்சருக்கு வியப்பை அளித்த அந்த 100-க்கும் மேற்பட்ட கழிவுகளும், விலக்குகளும் வரிக் கணக்கீட்டினை கடினமாக்கி வேலையை மட்டும்தான் செய்தனவா? சட்டத்தின் பிரிவுகளில் இவை நுழைக்கப்பட்ட காரணங்கள்தான் என்ன?  வருமான வரிச் சட்டத்தில் இதுவரை இடம்பெற்ற கழிவுகள், விலக்குகள் சிலவற்றைப் பார்ப்போம்.

சட்டப் பிரிவு 80சி, ஆயுள் காப்பீடு பிரிமியம், பள்ளி - கல்லூரிக் கட்டணம், சேமநல நிதி சந்தா, வீட்டு வாடகை போன்றவற்றுக்கு விலக்கு அளித்தது. சட்டப் பிரிவு 80டி, மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான பிரீமியம் மீது கழிவு வழங்கியது.

புதிய பென்ஷன் திட்டத்தில் செலுத்தும் தொகையில் 50,000 ரூபாய் வரை 80சிசிடி பிரிவின்படி கழிவு இருந்தது. இப்போது, இதில் ஊழியரின் பங்கு விலக்கு பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வீட்டுக் கடன் மீதான அசல் (பிரிவு 80சி), வட்டி (பிரிவு 24) தொகைகளுக்கு சட்டத்தில் கழிவு இருந்தது. உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கடன் மீதான வட்டித் தொகை முழுமைக்கும் பிரிவு 80இ கழிவு வழங்கியது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புச் செலவினங்கள், கட்டுமானத் துறை போன்று குறிப்பிட்ட சில துறைகளில் செய்யப்படும் முதலீடு, குறிப்பிட்ட அளவு வரையிலான வங்கி டெபாசிட்டுகள் மீதான வட்டி வருமானம், வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பெறப்படும் வட்டி முதலான குறிப்பிட்ட விலக்குகள், கழிவுகள் சில அளவுகோல்களுடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வந்துள்ளன. இவற்றுக்கு சலுகை அளிக்கப்படுவதற்கான காரணங்கள் இருந்தன.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வேண்டுமென்பதை அரசும் விரும்பும். அப்படி இருக்க, 80சி பிரிவு  தொடர்வதுதானே நியாயம்?
தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாடற்ற கட்டணங்களை அனைவராலும் செலுத்த முடியாது. ஆக, மருத்துவக் காப்பீடு இருந்தால்தான் தனியார் மருத்துவ சேவையைப் பெற முடியும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, பிரிவு 80டி தொடர்வதுதானே சரி?
வருமானம் ஈட்டக்கூடிய வயதில் அதன் ஒரு பகுதியை வாழ்வின் பிற்பகுதிக்கு சேமித்தல் சிறப்பு என்பதால்தான் 80சிசிடி  நுழைக்கப்பட்டது.  
கட்டுமானத் துறை பெருகினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் விரிவடையும் என்பதால்தான் திரும்பச் செலுத்தப்படும் வீட்டுக் கடன் மீதான அசலுக்கும் வட்டிக்கும் சலுகை வழங்கப்பட்டது.

கல்வித் துறையில், குறிப்பாக நமது நாட்டின் உயர் கல்வி தனியார் குழுமங்களின் ஏகபோக வணிக நிறுவனங்களாகக் காட்சியளிக்கின்றன. மிக அதிக அளவாக உயர்ந்துள்ள உயர் கல்விக் கட்டணத்துக்கு கடன் வழங்கப்பட்டு, அந்தக் கடன் மீதான வட்டித் தொகைக்கு முழுக் கழிவு வழங்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டு. இவை ஒவ்வொன்றிலும் நிகழ்கால நாட்டு நிலைமை மாறிவிட்டதா? அல்லது அரசு செய்த பரிசீலனைகளின் ஒரு பகுதியாக உண்மை நிலைமை விரிவாகக் கண்டறியப்பட்டு தகவல்களை அரசு சேகரித்துள்ளதா? ஆனால், அவ்வாறு அரசு எதுவும் அறிவிக்கவில்லையே?
கழிவுகள், விலக்குகள், சலுகைகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆறுதல் மட்டுமே அளித்து வந்தன. உள்நாட்டு நிதி சேமிப்பு எத்தகைய வழிகளில் செல்ல வேண்டும் என்பதற்கு இவை உதவின.
வரி செலுத்துவோர் அவர்களின் அடிப்படைத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொண்டால், தன் முழு கவனத்தையும் கடைக்கோடியில் உள்ள, விளிம்புநிலை மக்கள் மீது அரசு செலுத்த முடியும். ஒரு சேமநல அரசின் இன்றியமையாத நிர்வாகப் பகுதியாக வருமானவரி சட்டப் பிரிவுகள் கருதப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சலுகைகளும் கழிவுகளும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு சேமிப்பை ஊக்குவித்தன. இங்கிலாந்து (12.0), அமெரிக்கா (18.60) போன்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்  (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத அடிப்படையில்) நமது உள்நாட்டு சேமிப்பு (29.7) கூடுதலாகும்.  இந்த உள்நாட்டு சேமிப்பு விகிதம்தான் உலக அளவில் நாம் பெருமிதம் கொள்ளத்தக்க பொருளாதார வளர்ச்சி ஈட்டுவதற்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்துள்ள வருமான வரி மாற்றங்கள் வெறும் வரி கணக்கிடப்படும் முறையையோ, தாக்கல் செய்யப்படும் முறையையோ எளிமையாக்கும் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல இது வெறும் தனிநபர் வருமான வரி தொடர்பான விஷயம் மட்டுமல்ல.

இந்த மாற்றங்களால் ரூ.40,000 கோடி வரி வருவாயை அரசு இழக்கும் என அறிவித்துள்ளார் நிதியமைச்சர். பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் நிறைவு பெற வேண்டும் என்ற ஒரு மக்கள் நல அரசின் தொலைநோக்குப் பார்வையையும் இந்த மாற்றம் இழக்கச் செய்திடாதா?


 

ADVERTISEMENT
ADVERTISEMENT