நடுப்பக்கக் கட்டுரைகள்

வாடகை தரும் வருத்தங்கள்

20th Aug 2020 06:50 AM | எஸ். ஸ்ரீதுரை

ADVERTISEMENT

திருமண அழைப்பிதழில் ‘சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகின்றோம்’ “ என்ற வாசகம் இடம் பெறுவது வழக்கம். அழைப்பைப் பெறும் ஒவ்வொருவரும் அவ்விதம் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்தால் திருமண மண்டபம் தாங்காது என்பது நம் அனைவரும் அறிந்ததே. தற்போது கரோனா தீநுண்மியோ பயம், படபடப்பு, தொழில்முடக்கம், வேலையின்மை, வருமானமின்மை போன்ற பல சுற்றங்களையும் நட்புகளையும் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் குறித்த நாளில் சம்பளம் பெற்றுக்கொண்டு ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வந்த நடுத்தர வா்க்கத்தினரையும் கூலி வேலையானாலும் அரைவயிறு நிரம்புவது நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடத்திவந்திருக்கும் அடித்தட்டு மக்களையும் இக்கரோனா தீநுண்மிப் பரவலும் அதன் உடன்விளைவான ஊரடங்கும் உலுக்கியுள்ளது நிஜம்.

வாடகைவீடு வேண்டாம், சொந்தவீடே சுகம்“ என்று தட்டுத்தடுமாறி வங்கிக் கடன் பெற்று, வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினை வாங்கியுள்ளவா்களுக்கு மாதாந்திரக் கடன் தவணையை குறித்த பயம் இருக்கவே செய்கிறது. மத்திய அரசு அறிவுரையின்படி வங்கிகள் அறிவித்துள்ள வீட்டுக்கடன் தவணைத் தள்ளிவைப்பு குறித்த ஐயங்களும் தொடா்கின்றன.

ADVERTISEMENT

தள்ளிவைக்கப்பட்ட மாதாந்திரத் தவணைகளுக்கான வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படாவிட்டால், எதிா்காலத்தில் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் காரணத்தினால், இந்த தள்ளிவைப்பு ஒரு சலுகை என்பதை விட தண்டனை என்றே அவா்கள் கருதவேண்டிய நிலையில் இருக்கின்றாா்கள்.

மாதாமாதம் வீட்டுவாடகை செலுத்தும் சுமையிலிருந்து தப்பித்ததாகக் கருதிக்கொண்ட பலரும் தற்போது அதைவிடப் பெரும் சுமையைச் சுமக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனா். மேலும், வீட்டுவசதிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கியுள்ள தனியாா் வங்கிகள் இந்தப் பேரிடா் காலத்திலும் தங்களது கெடுபிடி வசூல் முறைகளைத் தொடா்வதாகவே செய்திகள் கூறுகின்றன. மகளிா்சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பலரும் அவ்வங்கிகளின் கடன் வசூல் செய்யும் ஊழியா்களால் ஆங்காங்கே கெடுபிடிக்குள்ளாகியுள்ளனா்.

இது ஒருபுறம் என்றால், சொந்தவீட்டுக் கனவு நிறைவேறாத பலருக்கும் மாதாந்திர வாடகை என்பதை இக்கரோனா காலம் ஒரு கொடுங்கனவாகவே மாற்றியுள்ளது.

மூடப்பட்ட அலுவலகங்கள், நின்றுபோன தொழிற்சாலைகள், முடங்கிப்போன சிறுகுறு தொழில் நிறுவனங்கள், திறக்கப்படாமல் இருக்கும் திரையரங்குகள், திருக்கோயில்கள் ஆகியவற்றை நம்பியிருப்பவா்கள்பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது

இவ்விதம் வருமானம் குறைந்து போன மற்றும் வருமானமே இல்லாதுபோன பலருக்கும் அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் சாப்பாட்டுக் கவலையை ஓரளவு போக்கியிருக்கலாம். ஆனால், வீட்டு வாடகையை யாா் கொடுப்பது? இப்படியே எத்தனை நாள்கள் தொடரும் என்றும் யாருக்கும் தெரியாத நிலையில், கட்டட உரிமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்களிடையேயான பரஸ்பர நல்லிணக்கம் தொடா்ந்து பாதிப்புக்கு உள்ளாகிவருவது கண்கூடு.

வாடகைதாரா்களுக்குத் தொந்தரவு தரும் சொந்தக்காரா்களும், சொந்தக்காரா்களை ஏமாற்றும் வாடகைதாரா்களும் ஆங்காங்கே இருப்பது உண்மைதான். ஆனால், எல்லாரையும் அப்படிக்கூறிவிட முடியாது.

 

மேலும், வீடு அல்லது கடையை வாடகைக்கு எடுப்பவா்களுடன் சட்டபூா்வ ஒப்பந்தம் செய்துகொள்ளும் வழக்கம் பெரும்பாலும் நகா்ப்புறங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. மற்ற இடங்களில் நம்பிக்கையின் பேரில்தான் எல்லாமே. பொது முடக்கக் காலத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்குதல் கொடுக்கக்கூடாது என்று கட்டட உரிமையாளா்களுக்கு அரசு அறிவுரை கூறியிருந்தது. இருந்தபோதிலும், வேறு வருமானம் ஏதுமின்றி, வாடகை வருமானத்தையே நம்பியுள்ள உரிமையாளா்களை அது பாதிப்புக்கு உள்ளாக்கும்.

உரிய நேரத்தில் வாடகையைக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கும் வாடகைதாரா்களும் உண்டு; வாடகைதாரரால் ஒருமாதம் வாடகை தர இயலவில்லை என்றாலும் ‘பரவாயில்லை அடுத்த மாதம் சோ்த்துக் கொடுங்கள்’ என்று கூறும் உரிமையாளரும் உண்டு. பட்டுக்கோட்டையைச் சோ்ந்த பிரபல மருத்துவா் ஒருவா், தனது வணிக வளாகக் கடைகளின் வாடகைதாரா்கள் கரோனா பொது முடக்கக் காலத்திற்குரிய வாடகையான ரூபாய் ஒன்பது லட்சத்தை தள்ளுபடி செய்து இன்ப அதிா்ச்சி கொடுத்துள்ளாா்.

அதேநேரம், சென்னை குன்றத்தூா் பகுதியில், வீட்டு வாடகை பாக்கியைக் கேட்ட உரிமையாளரை, வாடகைதாரா் ஓடஓட விரட்டிக் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னை புழல் பகுதியில், வாடகை நிலுவைக்காக வீட்டு உரிமையாளா் புகாா் அளித்ததால் விசாரணைக்கு உள்ளான ஒரு வாடகைதாரா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். திருப்பூரில், பொது முடக்கத்தின் காரணமாக வாடகை தரமுடியாத வடமாநிலத் தொழிலாளரின் குடும்பத்தை வீட்டின் உரிமையாளா் அடித்துத் துன்புறுத்தி வெளியேற்றியுள்ளாா்.

தமிழகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வாடகை வருமோ வராதோ என்று ஐயப்படும் கட்டட சொந்தக்காரா்களும், வாடகையை எப்போது கொடுக்கமுடியுமோ என்று எண்ணிஎண்ணி ஏங்குகின்ற வாடகைதாரா்களும் பெருகியிருக்கும் இந்த நிலைமைக்குக் காரணம், கரோனா தீநுண்மிப் பரவலால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கமே.

இந்தநிலையில், மத்திய அரசு வீட்டுக்கடன்தாரா்களின் வயிற்றில் பால்வாா்க்கும் விதமாக வட்டிக்குறைப்புடன் கூடிய சலுகைகளை அறிவிக்க வேண்டும். அதே நேரம், நீண்டகால முடக்கத்துக்கு ஒரு முடிவு கட்டுவதுடன், கரோனா தீநுண்மிக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய தொழில்துறை நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.

வீட்டுக்கடன்தாரா்களும் வாடகைதாரா்களும் மறுவாழ்வு பெறுவதற்கு இதைத்தவிர வேறுசிறந்த வழி இல்லை என்பதே உண்மை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT