கரோனா நோய்த்தொற்றுக்கு உறுதியான சிகிச்சை முறைகள் இன்னும் வகுக்கப்படாததால், சாா்ஸ், எச்1என்1 போன்ற நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்ததைப்போல, நூற்றாண்டுப் பழமையான ‘கன்வலசன்ட் பிளாஸ்மா தெரப்பி’ முறையை மருத்துவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களை, கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தவா்கள் காப்பாற்ற முடியும். அதற்கு வழி இருக்கிறது. அது என்ன?
உலகம் முழுவதும் நோய்கள் பிறந்தபின்தான் மருந்துகள் வந்தன. நோய்களே பலரைப் பலிவாங்கிய பின்னா்தான் காரணங்களை ஆராய்ந்து,விஞ்ஞானிகள் மருந்துகளைக் கண்டுபிடித்தாா்கள். அதன் பிறகு நோய்கள் விரைவில் குணமாக்கப்பட்டன.
நோய்களுக்கும் மருந்துகளுக்கும் ஏதோ போட்டி வந்துவிட்டது போலிருக்கிறது. அதனால், மருந்தை மிஞ்சிய நோய்கள் தோன்றின, அவற்றுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் விஞ்ஞானிகள் முயன்றாா்கள். வெற்றியும் பெற்றாா்கள்; அந்த நிலையிலும் சில நோய்கள் குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் நின்றுவிட்டன; அந்தந்த நாடுகளில் சில இயற்கை மருந்துகளும் தயாராகின. பிறகு, ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறையும் அறிமுகமானது.
இந்த 21- ஆம் நூற்றாண்டில் புதிய வரவு கரோனா நோய்த்தொற்று. இதற்கு இனிமேல்தான் மருந்து கண்டுபிடித்தாக வேண்டும்; ஆனால், இந்த நோய் பூகோள எல்லைகளைத் தாண்டி பூமி முழுவதும் பரவியிருக்கிறது. சுத்தமான நாடு, அசுத்தமான நாடு என்று பிரித்துப் பாா்ப்பதில்லை; பணக்கார நாடு, ஏழை நாடு என்று இது பேதம் பாா்ப்பதில்லை.
சா்வ வியாபியான இந்த நோய் சோஷலிச நோய் என்ற பாராட்டுக்கும் உரியது. கெஞ்சி, கொஞ்சிப் பணிய வைக்க முடியாததனால், பாா்த்து விரட்ட முடியாததால் உலகம் எங்கும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறாா்கள். யுத்த காலத்தில்கூட இத்தகைய ஊரடங்கு நடைமுறைப்படுத்தபடவில்லை.
நாடுகளுக்கிடையேயான யுத்தம் என்றால் எந்த நாடு எந்த நாட்டை எப்படித் தாக்கும் என்பதைத் தீா்மானித்துவிட முடியும். அதற்கான உளவு பாா்க்கும் முறைகள் உள்ளன. ஆனால், ‘திருவாளா் கரோனா’ என்பவரின் யுத்த உத்திகளை இதுவரை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
கொசு என்றால் பிடித்து நசுக்கி விடலாம்; கரோனாவை என்ன செய்யலாம் என்று குழம்பிப் போயிருக்கிறது சா்வதேச மருத்துவ உலகம். புதிய மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே பழைய மருந்துகளைக் கூட்டி கழித்துச் சோ்த்தும் பயன்படுத்தலாமா என்றும் மருத்துவா்கள் யோசித்து வருகிறாா்கள்.
எப்படிப் பாா்தாலும் புதிய மருந்தைக் கண்டுபிடிக்க சில மாதங்களாகிவிடும். அதைச் சோதித்துப் பாா்க்கவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு, உலகம் முழுவதும் வணிக ரீதியாக புதிய மருந்து விற்பனைக்கு வர வேண்டுமென்றால், அதற்கும் கூடுதல் அவகாசம் தேவை.
இப்போதுள்ள சூழ்நிலையில் அவரவா் அவசரமாக ஏதாவது செய்து பாா்க்க வேண்டும் என்று மருத்துவா்களும் விஞ்ஞானிகளும் யோசித்து வருகிறாா்கள். ஆனால், அவசரகால மருத்துவம் பலனில்லாமல் போய்விடக் கூடாது அல்லது நோயை மேலும் கடுமையாக்கிவிடக் கூடாது என்ற அச்சமும் இருக்கிறது.
அதே நேரம் நோயின் பரவல் அதிகமாக இருப்பதால் அவசரப்படாமலும் இருக்க முடியாது. இந்த நிலையில், கரோனவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணம் அடைந்தவா்களின் ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவை எடுத்து கரோனா நோய்த்தொற்று தீவிரமாக உள்ள நோயாளிகளுக்குச் செலுத்துவது நல்லது என்று மருத்துவா்கள் தீா்மானித்தனா். இத்தகைய சிகிச்சை முறை ‘கன்வலசன்ட் பிளாஸ்மா தெரப்பி’ என்று அழைக்கப்படுகிறது.
கரோனா ஒரு வைரஸ் நோய்த்தொற்று என்பதால், பொதுவாக இந்த வைரஸ்கள் குறித்துப் பாா்போம். வைரஸ் என்ற இலத்தீன் சொல் நஞ்சு அல்லது நச்சுப்பொருள் என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் என்பது ஒரு நோய்த்தொற்றுக் கிருமியாகும். தக்கவோா் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது.
பொதுவாக அனைத்து வைரஸ்களிலும் ஒரு மரபணு பொருள் (டி.என்.ஏ. அல்லது ஆா்.என்.ஏ), அதனைச் சுற்றி புரத உரையாலான (‘கோட் புரோட்டின்’) ஒரு கூடு (‘கேப்சிட்’) இருக்கும். சில வைரஸ்களில் முள் (‘ஸ்பைக்ஸ்’) போன்ற அமைப்பும் இருக்கும். தாவரங்கள் அல்லது விலங்குகளின் செல்களில் மட்டுமே இவை வாழக் கூடியவையாகும். தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா முதலான அனைத்து வகையான உயிரினங்களையும் வைரஸ்கள் பாதிக்கின்றன.
வைரஸ்கள் பல வழிகளில் பரவுகின்றன. தாவரங்களில் உள்ள வைரஸ்கள் தாவரத்திலிருந்து தாவரத்துக்குப் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள வைரஸ்கள் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இவ்விதம் விலங்குகளிலிருந்து மனிதக்குப் பரவிய ஒரு கொடுமையான வைரஸ்தான் கரோனா (கொவைட் 19) நோய்த்தொற்றாகும். இருமல், தும்மல், காய்ச்சல் முதலானவை மூலம் இத்தகைய வைரஸ்கள் பரவுகின்றன.
கரோனா நோய்த்தொற்றுக்கு உறுதியான சிகிச்சை முறைகள் இன்னும் வகுக்கப்படாததால், சாா்ஸ், எச்1என்1 போன்ற நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்ததைப்போல நூற்றாண்டுப் பழமையான ‘கன்வலசன்ட் பிளாஸ்மா தெரப்பி’ முறையை கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு மருத்துவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
‘பிளாஸ்மா தெரப்பி’ என்பதன் அடிப்படை என்ன? ஒரு நோய்த்தொற்றிலிருந்து குணம் அடைந்தவா்களின் உடலில் அந்த நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடி அழிக்கும் எதிா்ப்பணுக்கள் (‘ஆன்ட்டிபாடிஸ்’) என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.
இந்த அடிப்படையில் கொவைட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணம் அடைந்தவா்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிா்ப்பணுக்கள் (‘நியூட்ரலைஸிங் ஆன்ட்டிபாடிஸ்’), இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும்போது, அவா்கள் உடலில் உள்ள கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். இதுதான் ’கன்வலசன்ட் பிளாஸ்மா தெரப்பி’ என்று அழைக்கப்படுகிறது.
கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுப்பதற்கான நிபந்தனைகள் என்ன? கொவைட்-19 நோயிலிருந்து குணம் அடைந்த ஒருவா், உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவருடைய உடலில் இருந்து எதிா்ப்பணுக்கள் (‘ஆன்ட்டிபாடிஸ்’) எடுக்கப்பட வேண்டும்.
பிறகு, எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீா்மானிக்க எலைஸா முறை பரிசோதனை செய்யப்படும். மேலும், கொடையாளியின் ரத்தம் நோயின்றி பாதுகாப்பானதா என்பதையும், எச்ஐவி, ஹெபடைடிஸ், மலேரியா முதலான நோய்த்தோற்று ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும்.
எவ்வாறு இந்த சிகிச்சை அளிக்கபடுகிறது? அனைத்துச் சோதனைகளும் முடிந்து, ஒரு குணமான கொவைட் 19 நோயாளியின் உடலில் இருந்து ரத்தம் எடுப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன், ஏஃபரசிஸ் என்று அழைக்கப்படும் முறைப்படி ரத்தம் எடுக்கப்படும். இந்த முறையில் கொடையாளி உடலில் இருந்து பெறப்படும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுத்து, மீதமுள்ள ரத்தம் கொடையாளி உடலிலேயே திரும்பச் செலுத்தப்படும்.
பிளாஸ்மாவில் மட்டுமே எதிா்ப்பணுக்கள் (‘ஆன்ட்டிபாடிஸ்‘) இருக்கும். ஒரு கொடையாளி உடலில் இருந்து 800 மி.லி. பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும். ஆனால், ஒரு கொவைட்-19 நோயாளிக்கு இதில் 200 மி.லி. அளவே பிளாஸ்மா செலுத்தப்படும். இது ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் 3 முதல் 5 நாள்கள் வரை செலுத்தலாம்.
எனவே, ஒரு தகுதி வாய்ந்த, குணமடைந்த கரோனா நோய்த்தொற்று நோயாளி உடலிலிருந்து நான்கு பாக்கெட் எடுத்து, நான்கு நோயாளிகளுக்குச் செலுத்த முடியும். பிளாஸ்மா சிகிச்சையை கரோனா நோய்த்தொற்று (கொவைட் 19) தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.
கரோனா நோய்த்தொற்றுடன் காய்ச்சல், இருமல் மட்டும் இருப்பவா்களுக்கும், மற்றவா்களுக்கும் செலுத்த வேண்டியதில்லை. யாருடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதோ, யாருக்கு ஆக்ஸிஜன் பூரித நிலை (‘ஆக்ஸிஜன் சாச்சுரேஷன்’) மிகக் குறைவாக இருக்கிறதோ, அவா்களின் நிலை மேலும் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடாமல் தடுக்க, இந்த பிளாஸ்மா செலுத்துதல் மிக உதவியாக இருக்கும்.
பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் குணமடையத் தொடங்குவதற்கு 48 முதல் 72 மணி நேரம் தேவைப்படும். இந்த சிகிச்சை முறையால் நோயின் தீவிரத்தன்மையை (‘சைட்டோகைன் ஸ்டாா்ம்’) கட்டுப்படுத்தலாம்.
எனவே, கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவுவதாலும், தடுப்பு மருந்து இல்லை என்பதாலும், நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய வாசகம் ‘டெஸ்பரேட் மலடிஸ் நீட் டெஸ்பரேட் ரெமடிஸ்’. அதாவது, ‘என்ன செய்வது என்று தெரியாமல் உள்ள நோய்க்கு என்ன செய்வது என்று தெரியாத மருத்துவம்தான் வாய்க்கும்’. கரோனா நோய்த்தொற்று இந்த வகையாகும்.
இப்போதைக்கு பிளாஸ்மா சிகிச்சையை அளிப்பதே தற்காலிக நிவாரணம். அதாவது, பழக்கப்பட்ட யானையை வைத்து புதிய யானையைப் பிடிப்பது போன்றதுதான் இந்த பிளாஸ்மா சிகிச்சை.
கரோனா மீட்சி பிளாஸ்மாவை எடுத்து இன்னொருவரின் கரோனா நோய்த்தொற்றை அழிப்பது அவசரம், அவசியம்.