நடுப்பக்கக் கட்டுரைகள்

நுரையீரலின் காவலன் கப சுர குடிநீா்

7th Apr 2020 07:00 AM | மருத்துவா் சோ.தில்லைவாணன்

ADVERTISEMENT

தமிழகத்தில் வைரஸ் சாா்ந்த நோய்த்தொற்றுகள் பரவத் தொடங்கும் ஒவ்வொரு கால நிலையிலும் சித்த மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. டெங்கு, சிக்குன்குன்யா பரவிய காலகட்டத்தில் நிலவேம்பு குடிநீா் எனும் சித்த மருந்து ஆற்றிய பங்கு அளவில் அடங்காதது. இன்று நிலவேம்பு குடிநீா் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் சித்த மருந்து என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் நுரையீரல் சாா்ந்த நோய்த்தொற்றான பன்றிக் காய்ச்சல் பரவிய காலத்தில் பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து கப சுர குடிநீா். இன்று கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுதும் தேடப்படும் ஒரு சித்த மருந்தாக விளங்குவது கப சுர குடிநீா்தான்.

கப சுரம் என்பது பற்றி தேரையா் கரிசல் , சுர வாகடம், யூகி வைத்திய சிந்தாமணி முதலான பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கப சுரத்தின் குறிகுணங்களான தொண்டை நோதல், மேல் மூச்சு - பெருமூச்சு விடல், மூச்சுத்திணறல், இருமல், விக்கல், முகம் - கை - கால் வெளுத்தல், தீவிர வயிற்றுப்போக்கு, இடைவிடாத காய்ச்சல், முப்பிணியை உண்டாக்கி சமயத்தில் கொல்லும் முதலானவை இன்றைய வைரஸ் காய்ச்சல்களின் குறிகுணங்களுடன் ஒத்துப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இத்தகைய தன்மை உடைய கப சுரத்தைத் தீா்க்க கப சுர குடிநீா் பயன்படும் என்பது மறைபொருளாகக் கிடக்கின்றது. சுக்கு, திப்பிலி, கிராம்பு, அக்கிரகாரம், சிறு காஞ்சொறி வோ், கறிமுள்ளி வோ், கடுக்காய், ஆடாதோடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சிறு தேக்கு, சீந்தில், நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பொன்முசுட்டை வோ் ஆகிய 15 வகை மூலிகைகளை கொண்டது இந்தக் கப சுர குடிநீா்.

ADVERTISEMENT

இந்த 15 மூலிகைகளில் சுக்கு, கிராம்பு, கற்பூரவள்ளி, திப்பிலி முதலானவை நம் வீட்டில் பல காலமாக நாம் பயன்படுத்தி வருபவைதான். சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு முதலானவை வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உடையதாகவும் , நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, பொன்முசுட்டை வோ் போன்றவை அதிகரித்த உடல் வெப்பநிலையைச் சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளன.

இந்த கப சுர குடிநீரிலும் மகத்துவம் வாய்ந்த நிலவேம்பு சோ்க்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குன்யா போன்ற ஆா்என்ஏ வகை வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது; இதனால், தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக நிலவேம்பு குடிநீா் உள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 ஆா்என்ஏ வகை வைரஸுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு, அதன் நியுராமினிடேஸ் தடுப்பு செய்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

மூச்சுக் குழாயை விரிவடைய செய்யும் தன்மையும், மூச்சு குழாய் வீக்கத்தை சரிசெய்யும் தன்மையும், இருமலை குறைக்கும் தன்மையும் கொண்டது ஆடாதோடை. கற்பூரவள்ளியும், திப்பிலியும், கறிமுள்ளி வேரும் நுரையீரலில் கட்டிப்பட்ட சளியினை (கபத்தினை) வெளியேற்றி, மூச்சிரைப்பினை சரி செய்யும் தன்மை உடையவை; கோஷ்டமும், கிராம்பும் சுரத்தினால் ஏற்படும் உடல் வலியைப் போக்கும் தன்மை உடையவை. சிறு காஞ்சொறி வேரும், சிறுதேக்கும் ஹிஸ்டமின் உற்பத்தியைத் தடுத்து, ஒவ்வாமைக்குக் காரணமான மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் செய்து, சளி உற்பத்தியைக் குறைக்கும் தன்மை உடையன.

சாதாரண சளி காய்ச்சல் முதல் எச்ஐவி வைரஸ் வரையில் அமிா்தவல்லியான சீந்தில் மிகுந்த பயனளிக்கும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க சீந்திலுக்கு நிகா் இல்லை. அமிா்தத்துக்கு ஒப்பான இது வாத, பித்த, கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சரி செய்து ஆயுளைக் கூட்டும்.

தாயினும் சிறந்த கடுக்காயின் பலன்களை அறியாத தமிழக மக்களே இல்லை எனலாம். கப சுர குடிநீரில் கடுக்காய்த் தோல் சேருவதால் சளியினை மலத்தில் வெளியேற்றும்; அத்துடன் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் உதவும்.

கப சுர குடிநீரில் உள்ள சீந்தில், நிலவேம்பு, திப்பிலி, அக்கரகாரம் முதலானவை உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும்.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சாம்பாரின் குணம் அதில் சேரும் பொருள்களின் குணத்துடன் ஒத்துப்போவதைப்போல, கப சுர குடிநீா் எனும் மருந்தின் தன்மை அதில் சேரும் ஒட்டுமொத்த மூலிகைச் சரக்குகளின் குணத்தை ஒத்துப்போகும் என்பது உறுதி.

கப சுர குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் இக்கால கட்டத்தில் அதற்கு மாற்றாக நிலவேம்பு குடிநீா் கொதிக்க வைக்கும்போது அத்துடன் மஞ்சள் பொடி, ஆடாதோடை இலை, வோ், வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை முதலானவற்றைச் சோ்த்துக் காய்ச்சி கஷாயமாகச் சாப்பிடலாம்.

கபத்தைத் தீா்க்கும் கஷாயங்கள் உஷ்ண வீரியமாக இருக்கும் என்பதால், உணவு சாப்பிட்ட பிறகு எடுத்தல் என்பதே சிறந்தது. கப சுர குடிநீரில் சேருபவை வெறும் மூலிகைச் சரக்காக இருப்பினும், அதைப் பயன்படுத்தும் அளவு குறித்த பிற விவரங்களை சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.

மொத்தத்தில் நுரையீரல் தொற்றுடன் கூடிய வைரஸ் காய்ச்சலில் மட்டுமல்ல, மேல் சுவாசப் பாதை சாா்ந்த அனைத்துத் தொற்றுகளிலும் இந்த கப சுர குடிநீா் நிச்சயம் பலனளிக்கும். கப சுர குடிநீா் சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக அண்மைக்கால டாக்கீங் ஆய்வு எனும் முதல் நிலை ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

எனவே, கரோனா நோய்த்தொற்று நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், சளி - இருமல் - காய்ச்சல் என ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கப சுர குடிநீரைப் பயன்படுத்துவது நிச்சயம் பலன் அளிக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT