மனக் கதவை திறப்போம்!

உயிரினங்களில் பகுத்தறிவு பெற்று உயர்ந்து விளங்கும் ஒரே இனம் மனித இனம். இந்த மனித இனம் வாழ்வில் அன்பு வழியையும் அறவழியையும்

உயிரினங்களில் பகுத்தறிவு பெற்று உயர்ந்து விளங்கும் ஒரே இனம் மனித இனம். இந்த மனித இனம் வாழ்வில் அன்பு வழியையும் அறவழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நல்லறத்தைப் போதிப்பதற்காகவே உலகில் சமயங்கள் பல தோன்றின.
ஆனால், மனிதர்களோ பிறப்பால் எல்லா மனிதரும் ஒத்த நிலையினரே என்னும் பேருண்மையை உணராமல் ஜாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும், நிறத்தின் பெயராலும் தங்களுக்குள் பிரிவினையை வகுத்து, ஜாதி சமய வேறுபாட்டுணர்வுடன், மனிதநேய மாண்பினைப் புறந்தள்ளி போலி கௌரவ வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான வேற்றுமையிலிருந்து மானுடத்தை மீட்டெடுக்க உலகெங்கிலும் சமூக சீர்திருத்தவாதிகளும் தோன்றி பாடுபட்டனர். குறிப்பாக தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியை சான்றோர் பலர் தோற்றுவித்தனர். அவர்களுள் திருமந்திரம் அருளிய சித்தர் திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் அறவுரையைப் பகன்று, மக்கள் சகோதரத்துவமும் ஒற்றுமையுணர்வும் பெற்று மனித வாழ்வை அர்த்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த உலகில் மனிதர்களாய் பிறக்கும் அனைவரும் பிறப்பால் சமம் என்பதையும் அவரவர் செய்யும் தொழில்களில் பெருமை, சிறுமையால் உயர்வும் தாழ்வும் அமையாது என்ற உண்மையையும் உணர்ந்து மனிதர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் திருவள்ளுவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்னும் குறளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் படைத்தார்.
மனித குலத்தில் பிறர்க்கு கொடுத்து வாழ்பவர் உயர்ந்தோர், கொடுக்க மனமின்றி வாழ்பவர் தாழ்ந்தோர் என்ற இரு ஜாதிகளைத் தவிர வேறில்லை என்பதை, ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று மொழிந்தார் அருந்தமிழ் ஒளவை மூதாட்டி.
ஜாதி சமய வேறுபாடுகளும் வெறுப்புணர்ச்சியும், தெய்வத்தோடு ஒப்பிடப்படும் குழந்தைகளின் மனதில் படிந்துவிடக் கூடாது என்று அஞ்சிய மகாகவி பாரதியார், மனிதர்களிடையே பிறந்த குலத்தின் அடிப்படையை முன்நிறுத்தி உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று வேறுபடுத்திச் சொல்வது பாவச் செயல் என்பதோடு மட்டுமல்லாமல் நியாயம், செழுமை மிக்க அறிவு, கல்வி, அன்பு ஆகியவை எவரிடம் மேலோங்கிக் காணப்படுகிறதோ அவர்களே உயர்ந்தவர்கள் என்னும் அரிய கருத்தினை குழந்தைகள் உணர்ந்து நடை போடும் வண்ணம், ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி, உயர்ந்தமதி, கல்வி மற்றும் அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று பாடினார்.
ஆனால், இன்றோ அறம் செய விரும்பு என்று உச்சரித்துக் கொண்டும், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிக் கொண்டும் பள்ளிக்கூடம் செல்லக் கூடிய மாணவச் செல்வங்களின் கரங்களில், பெற்றோர் ஜாதிகளை அடையாளப் படுத்தும் கயிறுகளை அணிவித்து அனுப்பும் விபரீதங்கள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுவது சில நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்டு கல்வி அதிகாரிகளாலும், அரசாலும் இந்த வழக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகளால் நாம் சற்றே நிம்மதியடைந்தாலும், எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகும் சிற்பிகளான இன்றைய மாணவச் செல்வங்களின் மனதில் இப்படிப்பட்ட ஜாதிய வேறுபாடுகள் என்னும் அழுக்குபடியா வண்ணம் அவர்களை வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களாக உருவாக்கும் ஆக்கப் பணிகளை கல்வியாளர்களும் அரசும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இது ஒருபுறமிருக்க, சமூக நீதியும் மனித உரிமைகளும் கேள்விக்குறியாகும் வகையில், வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் உடலை அடக்கம் செய்ய அண்மையில் சென்றபோது அவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தை முன்நிறுத்தி வேறு பிரிவினரால் பொதுப் பாதை மறிக்கப்பட, இறந்த அவரின் உடலை கயிறுகட்டி பாலத்தில் இருந்து கீழே இறக்கி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் செய்தி உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, நீதிமன்றம் தாமாகவே முன் வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி மயானத்தை ஏன் அரசு அமைத்துக் கொடுக்கிறது? இறந்த உடலில்கூட ஜாதிப் பாகுபாடா என்று வினா எழுப்பி தன் கவலையைப் பதிவு செய்துள்ளது.
அண்மையில் உணவு விடுதியில் இருந்து ஒருவர் உணவை வரவழைக்க, அந்த உணவை விநியோகிக்க வருபவர் வேறு ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்து, அவர் அந்த நபரை அனுப்பக் கூடாது என்று அந்நிறுவனத்திடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்நிறுவனம், அதிருப்தியை வெளிப்படுத்திய அந்த நபரிடம் உணவுக்கு மதம் எதுவும் இல்லை என்று பதிலடி கொடுத்தது. இப்படிப்பட்ட வேற்றுமையுணர்வு தமிழகம் மட்டுமன்றி வட மாநிலங்களிலும் வியாபித்து ஆணவக் கொலைகள், கும்பல் கொலைகள் போன்ற சமூக ஒற்றுமையைக் குலைக்கும் விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
மனிதர்களைப் பிளவுபடுத்தும் ஜாதி மத வேறுபாடுகள் அகல வேண்டும் என்ற நோக்கோடுதான் திருஅருட் பிரகாச வள்ளலார், ஜாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர், அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே என்ற நல்லறத்தைப் பகன்றார்.
எனவே, சான்றோர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் இந்தச் சமூகத்துக்கு வகுத்தளித்துள்ள அறநெறிகளைக் கருத்தில் கொண்டு மதக் கதவை மூடி மனக் கதவைத் திறந்து மானுடம் சமூக நீதிப் பாதையில் இனிதே நடைபோட வேண்டும்.
மேலும், மகாத்மா காந்தி அகிம்சை வழி நின்று பெற்றுத் தந்த சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை உயர்ந்தவன், தாழ்ந்தவன், சமய வேறுபாடின்றி எல்லா மனிதர்களையும் சென்றடைந்து சமத்துவ வாழ்வு  பெற, காந்திய சிந்தனையோடு ஆட்சியாளர்களும் அருந்தொண்டாற்றி, இந்த உலகில் உயர்ந்த பண்பாடுமிக்க பாரதத்தின் பெருமைகளை மேலும் சிறக்கச் செய்தல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com