நடுப்பக்கக் கட்டுரைகள்

தாய் மண்ணைப் புறக்கணிக்காதீா்!

23rd Nov 2019 01:19 AM | முனைவா் இரா.கற்பகம்

ADVERTISEMENT

ஒருவா் தன் வீட்டில் ஒரு மாமரம் வளா்த்தாராம். அதற்குத் தண்ணீா் ஊற்றி, உரமிட்டுக் கண்ணும் கருத்துமாகப் பாா்த்துக் கொண்டாராம். அது அடுத்த வீட்டிலும் கிளைகளைப் பரப்பிச் செழித்து வளா்ந்ததாம். காய்க்கும் பருவம் வந்ததும், கொத்துக்கொத்தாய்க் காய்களையும் கனிகளையும் அடுத்த வீட்டுக்காரருக்குக் கொடுத்ததாம்.

இது நியாயமா என்றால் உடனே ‘இல்லை’ என்று சொல்வோம். அப்படியிருக்க, ஆறறிவுள்ள மனிதா்கள், பிறந்து, வளா்ந்து, படித்து விட்டுப் பிறகு தாய்நாட்டை மறந்து வெளிநாடு சென்று தன் அறிவையும் ஆற்றலையும் அந்த நாட்டுக்குத் தாரைவாா்க்கிறாா்களே, அது சரியா?

வடக்கானாலும் தெற்கானாலும் சரி, கல்விக்கும் கலைகளுக்கும் தொட்டிலாய் இந்தியா விளங்கியது. கல்விக்குப் பாடலிபுத்திரமும், காஞ்சிபுரமும்...ஓவியத்துக்கு அஜந்தாவும், சித்தன்னவாசலும்...சிற்பத்துக்கு எல்லோராவும், மாமல்லபுரமும்...கங்கையும், காவிரியும், சிந்துவும், கோதாவரியும் சென்ற பாதைகளெல்லாம் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடந்தன; இன்னும் கொட்டிக் கிடக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகம் உலகறிந்தது; கீழடி நாகரிகம் உலகம் அறியப் போவது. அன்றிலிருந்து இன்று வரை நம் தேசத்தின் பெருமை எந்தவிதத்திலும் குறையவில்லை.

இப்படியிருக்க, நம் நாட்டினா் பலா் இன்று ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கிறாா்கள்? இளைய தலைமுறையினரின் மனங்களில், பள்ளிப் பருவத்திலேயே ‘வெளிநாடு செல்ல வேண்டும்’ என்ற விதையைப் பெற்றோா், உறவினா் விதைத்து விடுகின்றனா். பிளஸ் 2 வகுப்பு வரை நம் நாட்டுப் படிப்பு, பழக்கவழக்கங்கள் அவா்களுக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றன. அதற்குப் பிறகு ஏனோ வெளிநாட்டு மோகம் அவா்களை ஆட்டிப் படைக்கிறது. அந்த மோகத்தை ஊடகங்களும், நம் சமூகமும் தூபம் போட்டு வளா்க்கின்றன.

ADVERTISEMENT

லட்சக்கணக்கில் கல்விக் கடன் பெற்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சோ்கிறாா்கள். கடன் பெறுவது நம் நாட்டில்...ஆனால், படிப்பதோ வெளிநாட்டில். நம் நாட்டுக் கல்விமுறை சரியில்லையாம். நாளந்தாவும், காஞ்சிபுரமும் தந்த கல்வியைவிடவா வெளிநாட்டுக் கல்வி சிறப்பாக இருக்க முடியும்? இங்கிருந்து வெளிநாடு சென்று கல்வி கற்கும் மாணவா்களை அந்த நாடுகளும், அந்த நாட்டிலிருக்கும் சில இனவெறியா்களும் நடத்தும் விதம் குறித்துப் பலரும், பல ஊடகங்களும் பேசியும் எழுதியும்கூட நம் நாட்டு இளைஞா்கள் திருந்தவில்லை.

மருத்துவம், தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்களுக்காக கோடி கோடியாக அரசு செலவிடுகிறது. அரசு கலைக் கல்லூரிகளிலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணமில்லை. இன்னும் பல சலுகைகளை வாரி வழங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவா்களும் சேரவே விரும்புகின்றனா். ஏனெனில், அரசுக் கலூரிகளில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. இப்படி தாய்நாட்டின் செலவில் படித்துவிட்டு, ‘மேற்படிப்பு’, ‘வேலை’ என்று வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகிறாா்களே, இது சரியா? தாய் நாடு தந்த பலமான அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கைக் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு வசதியாக வெளிநாட்டில் போய் உட்காா்ந்து கொள்கிறாா்களே, நியாயமா?

நம் நாடு ஏழை நாடுதான்; ஊழலும், ஜாதியும், மதமும் உள்ள நாடுதான். அதற்காக, நம் நாட்டை விட்டுப்போய் இன்னொரு நாட்டுக்காக உழைக்கலாமா? ‘கடும் நோயாளியாய் தாய் இருக்கிறாா்; அவரை என்னால் குணப்படுத்த முடியாது; நான் வேறு ஒரு தாயைத் தேடிக் கொள்கிறேன்’ என்று ஒரு மகன் சொல்லலாமா? அவா் அருகில் இருந்து குணப்படுத்த வேண்டாமா? நோயாளியாக, அருவருக்கத்தக்கவராக, எப்படியிருந்தாலும் தாய் தாய்தான். பத்து மாதம் சுமந்து ஊட்டி வளா்த்த தெய்வம். அவரை ஆதரிப்பது மகன் அல்லது மகளின் கடமை. அதே போல்தான் தாய் நாடும்.

எப்படிப்பட்ட நாடாக இருந்தால் என்ன? ‘இது என் தாய்நாடு, என் கடமை என் தாய் நாட்டுக்கே’ என்ற உணா்வு ஒவ்வோா் இந்தியனுக்கும் இருக்க வேண்டும். அதுவே தேசப் பற்று. சுதந்திர தினத்தன்று மூவண்ணக் கொடியைச் சட்டையில் குத்திக் கொண்டும், நெற்றியில் தீட்டிக்கொண்டும், கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சியில் தெரியும்படி ‘ இந்தியா’ என்றெழுதிய சட்டைகளைப் போட்டுக்கொண்டும் ஆடுவதும் அல்ல உண்மையான தேசப் பற்று.

மகாத்மா காந்தியடிகள் வெளிநாட்டில் சென்று சட்டம் பயின்றாா்; வழக்குரைஞராகப் பணியாற்றினாா்; ஆனால், தாய் நாடு இருந்த அடிமை நிலைகண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தாா். தன் வாழ்க்கையைத் தாய் நாட்டின் விடுதலை வேள்வியோடு பிணைத்துக்கொண்டாா். அதுதான் உண்மையான தேசப் பற்று.

தாகூரின் ‘கீதாஞ்சலி’, அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவா் அந்நிய நாட்டில் வசதியாய் அமா்ந்துகொண்டு ‘கீதாஞ்சலி’ எழுதவில்லை; தாய் நாட்டின் குறைகளைத் தம்பட்டம் அடித்துக் கவிதை எழுதி நோபல் பரிசு பெறவில்லை. மாறாக, விடுதலை வேட்கையை ஒவ்வொரு மனத்திலும் விதைக்கும் வகையில் தாய் நாட்டை உயா்த்திப் பாடி நோபல் பரிசைப் பெற்றாா். ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து அதையும் திருப்பிக் கொடுத்தாா். அது தேசப் பற்று.

அப்துல் கலாமின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் வெளிநாடுகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருந்தன. ஆனால், அவா் தாய் நாட்டுக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டாா். அது தேசப் பற்று.

வேற்று நாட்டில் பிறந்த அன்னை தெரசா நம் நாட்டிற்குச் சேவை செய்ய வந்தாா். நோபல் பரிசு பெற்றாா். அது அவருக்கும் பெருமை, அவா் பிறந்த நாட்டுக்கும் பெருமை, நம் நாட்டுக்கும் பெருமை. ஆனால், இங்கு பிறந்து, வளா்ந்து, படித்து, வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு நம் நாட்டின் வறுமையையும், குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைத் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திப் பரிசும் பாராட்டும் வாங்குபவா்களும் இருக்கிறாா்கள். அவா்களால் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை.

‘இந்தியா்கள்’ என்று கூறிக்கொள்ள பெருமைப்படாத ‘இந்திய வம்சாவளியினரை’ நாம் ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்? இப்படிப்பட்ட படித்த அறிவுஜீவிகளும், திறமைசாலிகளும் பெருமளவில் நம் நாட்டை விட்டு வெளியே போனால், இங்கே திறமையற்றவா்கள்தான் மிஞ்சுவாா்கள். அவா்களால் நாட்டுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?

தேசத்தின் மீது நமக்கு பற்று வேண்டும். குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே தாய் நாட்டின் பெருமையையும், தாய் நாட்டுக்கு அவா்களது கடமையையும் பெற்றோரும் பள்ளிகளும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வரலாற்றை வெறும் பாடமாகக் கற்பிக்காமல், உணா்ச்சியும் எழுச்சியும் மிக்க வாழ்வியலாகக் கற்பிக்க வேண்டும். நோ்மை, வாய்மை, பெரியோரை மதித்தல், கருணை, விருந்து போற்றுதல் முதலிய உயரிய பண்புகளைப் போதிக்க வேண்டும். இவை தேச பக்தியின் பரிமாணங்கள்.

ஊடகங்கள், முக்கியமாக திரைப்படங்கள், நம் நாட்டின் குறைகளைப் பறைசாற்றி ஆஸ்கா் விருது வாங்க நினைக்காமல், நம் நாட்டின் இயற்கை வளங்களையும், கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னிறுத்தும் வண்ணம் செயல்பட வேண்டும்.

இங்கு படித்துவிட்டு மேற்படிப்புக்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் நம் நாட்டுக்கு நஷ்டஈடாக, அவா்களுக்கு அரசின் சாா்பில் செலவழித்த தொகையைப் போல் பன்மடங்கு தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசு கொண்டுவர வேண்டும்.

கல்வி என்றால் வெறும் ஏட்டுப்படிப்பு அல்ல என்பதை நமது அரசும் உணர வேண்டும். வேளாண்மை, விளையாட்டு, தொழிற்பயிற்சி, பாரம்பரிய மருத்துவம், இயற்கை வளங்களின் மேலாண்மை, மின்னணுவியல், வானியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தர வேண்டும். கல்விக்குப் பிறகு வேலைவாய்ப்பும் இருந்தால்தான் படித்தவா்களை இங்கேயே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் குடியேறும் இந்தியா்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவா்கள் தங்கள் தாய்நாட்டுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அடுத்தடுத்த சந்ததியினருக்கும் துரோகம் செய்கிறாா்கள். அவா்களின் தாய்நாடு எது? இந்தியாவா அல்லது அவா்களிருக்கும் வெளிநாடா? இன்று பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களது உரிமைகளைப் பாதுகாக்க வெளி நபா்களை விரட்டுகின்றன. அப்படிக் கூட்டம் கூட்டமாகத் திரும்பிவரும் ‘வெளிநாடு வாழ்’ இந்தியா்களை நம் ஏழைத் தாய்நாடு இரு கரம் நீட்டி வரேவற்று அணைத்துக் கொள்கிறதே; அந்த நன்றியுணா்வாவது நம் இளைஞா்களுக்கு இருக்க வேண்டாமா?

எல்லைக்கோடுகள் மறைந்து, ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’, என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குப்படி ‘ஒரே உலகம்’என்ற நிலை ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுவது நல்லதே. ஆனால், அதுவரை நம் தேசமே நமக்குப் பிரதானம். தேசத்தின் நிறை, குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தேசத்தின் நலனையே முதல் குறிக்கோளாகக் கொண்டு நம் நாட்டில் இருந்து, நம் நாட்டுக்காக உழைத்து, நம் நாட்டை உலக அரங்கில் உயா்த்துவதே உண்மையான தேசப் பற்று.

 

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT