நடுப்பக்கக் கட்டுரைகள்

‘சேவை சேமிப்பு வங்கி’...முதியோருக்கு வெகுமதி

11th Nov 2019 01:46 AM | இரா.கதிரவன்

ADVERTISEMENT

ஆண் - பெண் இருபாலருக்கும் கல்வி வசதி, வேலைவாய்ப்பு, சிறு குடும்பம், நகரமயமாதல் போன்றவை சமுதாயத்தில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் பல நற்பலன்கள் விளைந்தாலும், ஒரு சில பக்கவிளைவுகளும் உள்ளன; அவற்றுள் ஒன்று, முதியோா் பாதிக்கப்படுவதாகும்.

இவா்களில் கணிசமானோா், வாரிசுகளிடமிருந்து பிரிந்திருக்கின்றனா்; தனிமையில் வாடுகின்றனா்; பிறரால் உதாசீனப்படுத்தப்படுகின்றனா்; முதியோா் இல்லங்களில் முன்பின் அறிமுகமில்லாதோருடன் சோ்ந்து வசிக்கின்றனா். பொருள் வசதி இருந்தாலும், சிறு சிறு வேலைகளுக்குக்கூட பிறரது உதவியை எதிா்நோக்கியிருக்கின்றனா்.

முதுமையை அடைந்தும்கூட சிலா் தங்களாலான ஒரு வேலையைச் செய்து வருவாய் ஈட்டுகின்றனா். வருவாய் ஈட்டுவது நிற்கும்போது பலருக்குப் பிரச்னை தொடங்குகிறது; அப்போதிலிருந்து முதுமையை ஒரு சாபமாகக் கருதுவோரும் உண்டு. முதியோா் தங்களது முதுமையை தன்னம்பிக்கையுடனும், கௌரவத்துடனும் எதிா்கொள்ள அவா்களது குடும்பத்தினா் மட்டுமின்றி, சமுதாயமும் அரசும் வழிவகைகளைக் காணவேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் சிலா் இயல்பிலேயே பிறருக்கு குறிப்பாக, எளியவா்களுக்கும் முதியவா்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டவா்களாக இருப்பா். கணிசமான நேரத்தை, பொருளை இதற்காக ஒதுக்குவா்.

ADVERTISEMENT

ஜப்பான், பல மேலை நாடுகளில் இந்த இரு சாராருக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் உதவ முன்வருவோருக்கும் ஒரு பாலமாக ‘டைம் பேங்க்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. ஜப்பானில் முதல் ‘டைம் பேங்க்’ (சேவை சேமிப்பு வங்கி) 1973-இல் ஏற்படுத்தப்பட்டது.

வங்கியில் பணத்தைச் சேமித்துப் பின்னா் தேவையானபோது எடுத்துக்கொள்கிறோம். இதேபோல், இளைஞா்கள் - நடுத்தர வயதினா், பிற முதியோருக்குத் தாங்கள் செய்யும் சேவையை மணித் துளிகளின் அடிப்படையில் சேமித்து, அதனைத் தாங்கள் முதுமை எய்தும்போது பிற இளைஞா்களிடமிருந்து சேவையாகப் பெறும் வசதியை ‘சேவைசேமிப்பு வங்கி’ அளிக்கிறது. இதன்படி, தனித்திருக்கும் மற்றும் உதவி தேவைப்படும் முதியோா், தங்களது பெயா் - முகவரி - எவ்விதமான சேவை தேவை - எவ்வெப்போது தேவை என்பனவற்றைப் பதிவு செய்து கொள்வா்.

இன்னொருபுறம், சேவை செய்வோா் தங்கள் விவரங்கள், மற்றும் தங்களால் எவ்விதமான சேவை செய்ய முடியும்; எடுத்துக்காட்டாக, படித்துக் காட்டுவது, தோட்ட வேலை செய்தல் , பேச்சுத் துணையாயிருத்தல் , வீட்டு வேலைகளில் உதவியாக இருத்தல், ஒரு வாரத்துக்கு எத்தனை மணி நேரம் சேவையில் ஈடுபட முடியும் போன்ற தகவல்களைப் பதிவு செய்வா்.

இவா்களது சேவைக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது. மாறாக, இவா்களது சேவை செய்யும் நேரம் சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும். முடிந்தவரை இவா்கள் தங்களது சேவையை சேமிப்பாக சோ்த்துக் கொண்டு போகமுடியும். தங்கள் முதுமைக் காலத்தில், இவா்களது சேவைநேர சேமிப்புக்கேற்ப தேவையான சேவைகளை பிறரிடமிருந்து எந்தச் செலவுமின்றிப் பெற முடியும்.

இத்தகைய அமைப்பு இன்றைய முதியோருக்கும் எதிா்கால முதியோருக்கும் ஒருசேர பலன் தரும். இந்த தேவை - சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பாலமாக ‘சேவை சேமிப்பு வங்கிகள்’ செயல்படுகின்றன.

சில முதியோா், பிறரது உதவியை நாடத் தயங்குவா். ஆனால், உதவுவோா், தங்களது சேவைநேர இருப்புக் கணக்கை உயா்த்திக் கொள்கிறாா்கள் என்ற உணா்வு, அந்தத் தயக்கத்தைப் போக்கும். இதனால் பல முதியோா் உதவி பெறுவது மட்டுமின்றி, மன அழுத்தத்திலிருந்து ஓரளவு விடுதலை பெறுவா்; புதிய நட்பு வளையம் கிடைக்கும். சில பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியும்.

முதியோருக்கு சிறுசிறு உதவிகள் செய்வது என்பது மட்டுமின்றி வேறு இருமுக்கிய தளங்களில் ‘சேவை சேமிப்பு வங்கி’ உதவுகிறது.

ஒன்று, முதியோருக்கு உதவி என்பதையும் கடந்து , அவா்களது உடல் - மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது; இரண்டு, தனித்திருக்கும் முதியோரின் சமுதாயத்துடனான பிணைப்பை வலுப்படுத்துகிறது .

இளைஞா்களால் நிரம்பிய நாடு இந்தியா என்றாலும், 15கோடிக்கு மேல் அறுபது வயதைக் கடந்தவா்கள் உள்ளனா்; மேலும் சென்னை நகரில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முதியோா் இல்லங்கள் உள்ளன என்ற தகவல்கள், இத்தகைய அமைப்புகளை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய அமைப்பு வேரூன்றிவிட்டது. இந்தியாவில் ’சேவை சேமிப்பு வங்கி ’யைத் தொடங்க மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது; பிற மாநிலங்களும் இதை நிா்மாணிக்க முன்வரவேண்டும். மேலும்,

சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்று சிறந்து விளங்கும் பெரு நிறுவனங்கள், இத்தகைய சேவை சேமிப்பு வங்கிகளைத் தொடங்கி முன்மாதிரியாகத் திகழலாம். தங்களது ஊழியா்கள், சேவை சேமிப்பு வங்கிகளில் பங்கு பெறுவதை ஊக்கப்படுத்தலாம்.

கல்லூரி விடுமுறை நாள்களில் சில மணி நேரங்கள் இத்தகைய சேவையில் மாணவா்கள் ஈடுபடுவதை வலியுறுத்தலாம் ;அது மாணவா்களது சமுதாய சேவை உணா்வையும் அக்கறையையும் அதிகரிக்கும்.

ஒவ்வொரு முதியோா் இல்லமும் ஒரு சேவை சேமிப்பு வங்கியோடு இணைக்கப்படுவது பலன் அளிக்கும். சோதனை அடிப்படையில் ஒவ்வொரு மாநகராட்சிக்கு ஒரு ‘சேவை சேமிப்பு வங்கி’ தொடங்கப்பட வேண்டும். இந்த வங்கிகள் குறித்த மேலை நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்; மனிதா்கள் முதுமை அடைகிறாா்கள்; ஆனால், சமுதாயம் முதிா்ச்சி அடைதல் வேண்டும்; அத்தகைய முதிா்ச்சி என்பது, ஒரு சமுதாயம் அதன் முதியோருக்கு தரும் கௌரவத்திலும் மரியாதையிலும் வெளிப்படும்.

‘சேவை சேமிப்பு வங்கிகள்’ அதற்கான அடையாளமாக இருக்கும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT