திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

புதிய அரசுக்கு விண்ணப்பம்!

By எஸ்.வி. சுவாமிநாதன்| DIN | Published: 20th May 2019 03:29 AM

இன்னும் சில நாள்களில் தில்லியிலிருந்து நம்மை யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும். இந்தியாவை   வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல சில அத்தியாவசியமான பணிகளை ஆட்சிப் பொறுப்பை புதிதாக ஏற்பவர்கள் நிறைவேற்ற வேண்டும். 

மக்கள்தொகைப் பெருக்கம்--ஆட்சி செய்த எந்த அரசும் இதை தொலைநோக்குப்பார்வையோடு அணுகவில்லை.  இன்று நாம் சந்திக்கும் வேலைவாய்ப்புப் பிரச்னைகள்,  அளவிடமுடியாத மாசு, குப்பை, எங்கு சென்றாலும் இடமே இல்லாததுபோல்  ஓர் உணர்வு- என்று பலவகையான அவதி -சிற்றூர்களில் கூட...நாடு முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம். எல்லோருக்கும் தண்ணீரே கிடைக்கவில்லையென்றால், வேலை எங்கிருந்து கிடைக்கும்?   வேலையில்லாத இளைஞர்கள் அதிகமாக இருந்தால், அதுவே  பிரச்னைகளை உண்டாக்கும்.

குறிப்பாக, ஏழை மக்கள்தான் குழந்தைகள் அதிகம் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நல்லதொரு ஊக்கத்தொகை அளித்தும்கூட குடும்பக்கட்டுப்பாடு செய்யலாம். குடும்பக் கட்டுப்பாடு என்பது அனைத்து இந்தியர்களுக்கும் கட்டாயமாகவும், பொதுவாகவும் இருக்க வேண்டும். 

அடுத்த பிரச்னை, மாசடைந்த நதிகள். இந்தியாவில்  நதிகள் உற்பத்தியாகும் இடங்களில் மட்டுமே தூய்மையாக உள்ளன. அங்கிருந்து விலகிச் செல்லும்போது மாசடையத் தொடங்குகின்றன. . இதற்கு முக்கியக் காரணம், பெருகிவரும் மக்கள்தாகைக்கேற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு  ஆலைகள் போதிய அளவு இல்லாததே ஆகும். இந்தியா முழுவதும் நிறைய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட வேண்டும். இதைச் செய்தால், நதிகள் மீண்டும் தூய்மையாகும். குப்பைகளும் கழிவுகளும் நதிகளைச்  சென்றடையாமல் தடுப்பது மக்களின் கடமை. அதற்கு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையும் தேவையான சட்ட நடவடிக்கைளை எடுப்பது அவசியம்.

அடுத்து, இந்தியாவின் ஊழலும் லஞ்சமும்  உலகம் அறிந்தது. லஞ்சம் வாங்குபவர்கள்  கடுமையான தண்டனை  பெற்றாலொழிய லஞ்சத்தை ஒழிக்க முடியாது.  அரசு அளவில் வழக்கத்தில் உள்ள லஞ்சம் பெற்றால் "தற்காலிக பணிநீக்கம்' என்பதை மாற்றி, லஞ்சம் வாங்கியவர்கள் பிடிபடும்போது, அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்தாலே கணிசமாக லஞ்சம் குறையும்.  திருச்சி விமான நிலையத்தில் கடத்தப்பட்டு வந்த தங்கம் கைப்பற்றப்பட்டு, அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில்  வைக்கப்பட்டிருந்தது; அது பின்னர் கிலோ கணக்கில் திருடப்பட்ட செய்தியை  நம்ப முடிகிறதா? ஆனால், அதை யார்செய்தார்கள் எனக்  கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.  இப்படி இருந்தால் லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்? அரசியல்வாதிகள் உள்பட யாராக இருந்தாலும், ஊழல் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டித்தாலொழிய லஞ்சத்தை ஒழிக்க முடியாது. 

தேர்தல் விதிமுறைகள் சிலவற்றையும் மாற்ற வேண்டியது அவசியம். ஒரு வாக்குச் சாவடியில், ஒருவர் வாக்களிக்கச் சென்றால், அவர் முன்பு  மூன்று அல்லது நான்கு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தால், அவருக்குக் கண்டிப்பாக  தயக்கம் ஏற்படும்;  வாக்களிக்க நேரமும் அதிகம் தேவைப்படும். ஓரிடத்தில் ஒரு இயந்திரம்தான் என்ற ஏற்பாடு வரவேண்டும். பல வாக்குச்சாவடிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். சுயேச்சையாக எவ்வளவுபேர் வேண்டுமானால் விண்ணப்பிக்கட்டும்; ஆனால், அவர்களில் மூவரைமட்டுமே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சுயேச்சை வேட்பாளராக்க வேண்டும். அதே சமயம், முந்தைய தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்குக்கு குறைவாக வாக்குகள் வாங்கிய கட்சிக்கு, அந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. இப்படிச் செய்தால், ஓரிடத்தில் வைக்கவேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை குறையும்; நம் நாடு முழுவதும் தேர்தல் நடத்தத் தேவையான நாள்களும் குறையும்.

அரசு ஊழியர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிய வேண்டும். அரசாங்க அலுவலகங்களில் பல நாற்காலிகள் வேலை நேரத்தில் காலியாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஒருவர் எப்படி வேலை செய்கிறார் என்பதைச் சரியான முறையில் கண்காணித்து, நன்றாக வேலைசெய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

பொறுப்புணர்ச்சி-இந்தியாவின் தலையாய பிரச்னை இதுதான். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு காரியத்தைச் செய்து கொடுப்பேன் என்று ஒருவர் சொன்னால், அதனை அப்படியே செய்து கொடுப்பவர்  மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பர். வேலையை முடிக்காமல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமாளிப்பவர்கள் பலர். ஆனால், இந்தியாவும் தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்தால், தம்மை விட்டுப் போய் விடுவார்கள் என்னும் அச்சம் சேவை செய்பவர்களுக்கு  வரத் தொடங்கியிருக்கிறது.   பொதுத்துறையில் எவ்வளவு கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில், அதற்கென்று  ஒதுக்கப்பட்ட  பணத்தில், நேரத்தில் முடிக்கப்பட்டிருக்கின்றன? ஏன்  இந்த நிலை? பலருக்கும் பணியில் முழுமையான கவனம் இல்லாமைதான்.  மெட்ரோ ரயில் நிர்வாகம் போன்று பொறுப்புணர்ச்சியுடன் பணிசெய்தால்,  நாடு இன்னும் வேகமாக வளரும்.

வெளிநாடு சென்று வருபவர்கள் பலருக்கும் அங்குள்ள கட்டமைப்பு மட்டுமன்றி அந்த நாட்டின் மக்கள் நம்முடன் பழகும் விதமும் கண்டிப்பாக ஈர்க்கும். இதை நாம் விமானம் இறங்கியதிலிருந்தே உணரலாம். மற்ற நாட்டவர் நம்மை மதிக்கிறார்கள்.  காவல் நிலையங்களில் ஏழைகளையும் வசதி படைத்தவர்களையும் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தால்  போதும். அனைவரையும் சமமாக நடத்தினால் நம் தரமும் கண்டிப்பாக உயரும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், தங்களை அங்குள்ளோர் மதித்து நடத்துவதையும்  அரசாங்கத்தில் ஏதாவது வேலை நடக்கவேண்டுமென்றால், எவ்வளவு ஒழுங்காக நம்முடைய நேரத்தை மதித்து அவர்கள் நடத்துவதையும் அனுபவித்தபின் அவர்கள் நம் நாட்டுக்கு எப்படித் திரும்பி வருவர்?  

மக்களின் நேரத்தை மதித்து பணி செய்ய நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதையும் நமது அரசு கட்டாயம் கவனிக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காத்திருக்கும் அழகிய இந்திய விடியல்!
சனாதன தர்மமும் பெண்ணியமும்
சாமானியனின் சரித்திரம்!
மரணம் கற்பிக்குமா பாடம்?
காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரை