புதன்கிழமை 17 ஜூலை 2019

சுயேச்சைகளின் "அணிவகுப்பை'த் தடுக்க...

By  ஐவி. நாகராஜன்| DIN | Published: 06th May 2019 02:57 AM

சுதந்திரத்துக்கு முன்பும் சரி, சுதந்திரத்துக்குப் பின்பும் சரி ஜமீன்தார்கள், பண்ணையார்கள், நில உடைமையாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எனப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு வென்றனர் என்பது உண்மைதான். ஜாதியை முன்னிலைப்படுத்தி களம் கண்டவர்கள்கூட பணக்காரர்களாகத்தான் இருந்தனர்.
 சுதந்திரத்துக்கு முன்பு சாதாரண மக்கள் தேர்தலில் நிற்க மட்டுமல்ல, வாக்களிக்கக் கூட உரிமை கிடையாது. அது வரி செலுத்துவோர், பணக்காரர்கள், படித்தவர்களின் பிறப்புரிமையாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு 21 வயதைக் கடந்தவர்கள் வாக்களிக்கலாம். 25 வயதைக் கடந்தவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்ற உரிமை கிடைத்தது. ஆனால், அந்த காலத்தில் சாமானியர்கள் நின்று வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வசதியானவர்கள் மட்டும் வெற்றி பெறுவது வாடிக்கையாக இருந்தது.
 தேர்தலில் முக்கியப் பிரமுகர்கள் நின்றாலும், இப்போது வாக்கு கேட்டு தெருத் தெருவாக ஊர் ஊராகச் சுற்றும் நிலைமை உள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் தேர்தலில் நின்ற செல்வந்தர்கள், வாக்கு கேட்டு ஊர்வலம் போனது கிடையாது. வாக்குக்காக சாமானியர்களைப் பார்த்து கும்பிடு போட்டதும் கிடையாது. அந்தந்தப் பகுதியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளை அழைத்து, "மொத்த வாக்கும் எனக்குத்தான் விழ வேண்டும்; என்ன சொல்ற' என்பார்கள். அவர் போய் குறிப்பிட்ட பகுதியில் சொல்வார். அது அப்படியே நடக்கும். மறுத்தாலோ, நடக்காவிட்டாலோ பிரச்னைதான். ஏழை மக்கள், தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்றால் பிரச்னையே கிடையாது. வாக்குசாவடி பக்கமே அவர்களைச் சேர்க்க மாட்டார்கள். முகவர்களே அந்த வாக்குகளை தங்கள் வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
 இந்தக் காட்சிகள் எல்லாம் மாநிலக் கட்சிகள் தோன்றிய பிறகு மாறின. குறிப்பாக, தமிழகத்தில் பொதுவுடைமை, சமூக நீதிக் கொள்கை உருவான பிறகு சாமானியர்கள் தேர்தலில் நிற்பது மட்டுமல்ல, வெற்றி பெறும் காலமும் உருவானது. அதை தேசியக் கட்சிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்தன.
 தேர்தலில் போட்டியிடுவது குடியாட்சியின் அடையாளம். இந்தியக் குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் தேர்தல் களம் காணலாம் என்ற நிலை ஏற்பட்டதால் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. சுயேச்சைகள் போட்டியிடுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அதைக் குறைக்க மாற்று வழி யோசிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகையை ரூ.5,000, ரூ.10,000 என அதிகரித்து இப்போது அதை ரூ.25,000-மாக உயர்த்தியுள்ளது தேர்தல் ஆணையம்.
 சுயேச்சைகள் அதற்கெல்லாம் அஞ்சாமல் தங்கள் உரிமையை நிலைநாட்ட ஆரம்பித்தனர். அந்தக் காலத்தில் சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுவது குறைவாக இருந்தது. அதே நேரத்தில் போகப் போக அவர்களின் வெற்றியும் கணிசமாக இருந்தது. வெற்றி பெறாவிட்டாலும் அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் பல அரசியல் கட்சி வேட்பாளர்களைவிட அதிகரிக்க ஆரம்பித்தது. இது சுயேச்சை வேட்பாளர்கள் அதிகமாவதற்குக் காரணமாக அமைந்தது.
 இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் (1951-52) சுயேச்சை வேட்பாளர்கள் 15.9% வாக்குகளை வாங்கி 37 இடங்களில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 1957-இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 19.32% வாக்குகளை வாங்கி 41 இடங்களில் வாகை சூடினர். பிறகு 1962-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 11.05% வாக்குகளைப் பெற்று, சுயேச்சை வேட்பாளர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சுயேச்சை வேட்பாளர்கள் கணிசமான மக்களவைத் தொகுதிகளில் வென்றது, 1967-ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அது 1991-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 4.01% வாக்குகளாகக் குறைந்து, சுயேச்சை ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். கடைசியாக 2014-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்தத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 3.04%. சுயேச்சை வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் குறைந்தாலும், பல தேசிய கட்சிகளைவிட இந்த சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 1996-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் 1,033 சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் ஆணையத்தையே மிரள வைத்தார் தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. இப்படி தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றாதபோது அதிருப்தியில் சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கத் தூண்டுவதும் ஒவ்வொரு தேர்தலிலும் தொடரும் நடைமுறையாக உள்ளது.
 இப்போதெல்லாம் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகளில் போட்டியும் பொறாமையும் அதிகமாகி, கடந்த காலங்களைவிட சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் நிற்கும் கட்சிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் சுயேச்சை வேட்பாளர்களின் போட்டிகள் அதிகரித்துள்ளன. சில கட்சிகளில் வேட்பாளர் தேர்வில் பேரம் தலைதூக்குகிறபோது, அதற்குத் தலைமையும் ஒத்துப்போகிறபோது தகுதியான வேட்பாளரின் எதிர்பார்ப்பு தகர்ந்து போகிறது. இதுபோன்ற சூழலிலும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்துக்கு வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
 எனவே, சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கட்சிகளின் தலைவர்கள் தேர்வு செய்யும்போது தகுதி, திறமை, மற்றும் மக்கள் பிரச்னைகளை அணுகுகிறபோது அதற்குரிய தன்மைகள் ஆகியவற்றில் தேர்ந்தவராக இருப்பதை உறுதி செய்துகொள்ளும் விதத்தில் அமைந்திட வேண்டும்.
 மேலும், மூன்று முறைக்கு மேல் அத்தகைய பதவியில் இருந்தவராக இருந்தால், அது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இளைஞர்கள், திறமையான பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இது குறித்தெல்லாம் கட்சிகள் பரிசீலித்தால் சுயேச்சை வேட்பாளர்களின் அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த முடியும்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

எதற்காக இன்னும் தனி அந்தஸ்து? 
மூன்று வயதிலேயே கல்வி தேவையா?
சரியும் உணவு தானிய உற்பத்தி! 
இலக்குகள் இல்லாத பட்ஜெட்!
மகளிரும் குழந்தை பராமரிப்பும்