தமிழும் இணையமும்

உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்து விட்டது என்றும் கூறலாம்.

உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்து விட்டது என்றும் கூறலாம். இதற்கு முக்கியக் காரணி இணையம் மற்றும் செல்லிடப்பேசி. பல இடங்களில் உள்ள கணினிகளைச் செயற்கைக்கோள் மூலம் இணைப்பதே இணையம் என்ற இண்டர்நெட். ஒரு சிலந்தியின் வலைபோல் உலகின் பல பாகங்களை இணைப்பதால் இதனை வலைதளம் அல்லது வலைப்பின்னல் என்று அழைக்கிறார்கள்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969-இல் 500-க்கும் மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. செயற்கைக்கோளிலிருந்து தகவல்கள் முதலில் தலைமைக் கணினிக்குச் செல்லும். பின்னர் தலைமைக் கணினியானது, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற கணினிகளுக்கு அந்தத் தகல்களை அனுப்பும். இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கர் ஆவார்.
தமிழ் வளர்ச்சிக்கு கணினி, இணையத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் பெரிதும் பயன்படுகின்றன. ஆசிய அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள் உள்ளன. தமிழில் சுமார் 2,000 இணைய அமைப்புகளும் ஒரு கோடி பக்கங்களும் உள்ளன. இதனைத் தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு ஆகிய மென்பொருள்கள் இணையம் மூலமாகக் கிடைக்கின்றன. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள், கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இன்று இணையம் உலகை ஒரு சிற்றூராக்கி விட்டது.
எழுத்துருச் சிக்கல் மற்றும் தட்டச்சுச் சிக்கல் தொடக்க காலத்தில் இருந்தன. இதனால், பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.  
தொலைநோக்கு திட்டத்தில் சங்க கால இலக்கியங்கள் முதல் தற்கால புதுமை படைப்புகள் வரை பல அரிய நூல்கள், வார இதழ்கள், சஞ்சிகைகள் என அனைத்தையும் இணையத்தில் சேகரிக்க முடியும். இவ்வளவு நூல்களை எந்த ஒரு கரையான் அரிப்பும் தூசியும் அடுக்கி வைக்கும் சிரமும் இல்லாமல்,  தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக இணையத்தில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியும். மின் நூலக இணையதளத்தை அமைப்பதற்கு இலவசமாகக் கிடைக்கும் இணையதளத்தில்கூட பல அரிய புத்தகங்கள் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழ்ப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும் பங்காற்றுகின்றன. செய்திகளையும் வலைப்பூக்கள் தருகின்றன. மேலும் படங்கள், ஓவியங்கள், காணொலிகள், ஒலிப் பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்ப் படைப்புகளின் வாசகர் தளமும் விரிவடைந்தது. ஆனால், தற்போது  முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்-அப்'), சுட்டுரை ("ட்விட்டர்') என அடங்க மறுக்கின்ற வளர்ச்சியாக தமிழ் இன்று எல்லோர் கைகளில் தவழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மின்னூல்களை நமது செல்லிடப்பேசியில் படிக்க பல நவீன கையடக்கக் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. மேலும், "கிண்டில்',  "கோபோ', "இபப்', "இ இங்க்', "மோபி ரீடர்' உள்ளிட்டவை "பிடிஎஃப்' வடிவத்தில் நாம் நினைக்கும் இடத்தில் அடிக்கோடிட்டுப் படிக்க உதவுகின்றன.
தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் தரும் வகையில் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள், வாசகர் வட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன. மதுரைத்திட்டம் என்னும் தளம் அரிய பல தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழில் மரபுச் செல்வங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்துள்ளது. 
தமிழ் மரபுச் செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வகையில் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் தேசிய மின் நூலக தளத்தின் சுமார் 2 கோடி புத்தகங்களில் தமிழ் புத்தகங்களுக்கென தனிச் சுட்டிகள் உள்ளன. தமிழ் மின்னனு புத்தகங்களுக்கென பல சிறப்பு இணையதளங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று எத்தனையோ வெளிநாட்டினர் தங்களது கருத்துகளை தமிழில் உச்சரித்து அதைப் பதிந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.  அதுமட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் பொங்கல் விழா, கட்டுரைப் போட்டி, முத்தமிழ் விழா, சங்கத்தமிழ் விழா என அனைத்தையும் தமிழ் இணையத்தில்தான் பார்க்கிறோம்.   
மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, கவிதை, பாடல், கடிதம், சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையத்தின் வாயிலாக அறியலாம்.
இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய வேகம் பெற்றுள்ளது. தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இன்றைய அனைத்து நிகழ்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com