ஏன் இந்தப் பாரபட்சம்?

"இந்தியா முழுவதும் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர் என்ற கருத்தை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தவறு என நிரூபிக்கிறது.

"இந்தியா முழுவதும் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர் என்ற கருத்தை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தவறு என நிரூபிக்கிறது.  இந்தியாவில் எட்டு மாநிலங்களில் இந்துக்கள் மிகச் சிறுபான்மையினர். லட்சத்தீவு 2.5%, மிúஸாரம் 2.75%, நாகாலாந்து 8.75%, மேகாலயா 11.53%, ஜம்மு-காஷ்மீர் 28.44%, பஞ்சாப் 38.40%, அருணாசலப்பிரதேசம் 29%, மணிப்பூர் 31.39%. எனவே, இந்த மாநிலங்களில் மிகச் சிறுபான்மையினராகிவிட்ட இந்துக்களுக்கு சிறுபான்மையினர் தகுதி அடிப்படையில் சலுகைகள், இன்ன பிற உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும்; தேசிய அளவிலான சிறுபான்மை அளவுகோலை வைத்துக் கொண்டு இந்த எட்டு மாநிலங்களில் வாழும் சிறுபான்மையினரை புறம் தள்ளுவதை நீதியாகக் கருத இயலாது' என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முன்வைத்தார் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் அவர் மனு தாக்கல் செய்தார். அவர் மனு மீது  தேசிய சிறுபான்மையினர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார். "மாநில அளவிலான மக்கள்தொகை கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினரை அடையாளம் காண வேண்டும். சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையிலும் திருத்தம் மேற்கொள்ளப் படவேண்டும் என்றும், தேசிய சிறுபான்மையினர் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன்' என்றார். 
இந்த வழக்கை கடந்த மாதம் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது மனு மீது மூன்று மாதங்களுக்குள் தேசிய சிறுபான்மை ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது.  
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் சில விதிவிலக்குகளையும் சிறப்புத் தகுதிகளையும் தருவதற்காக சட்டப்பிரிவு 370 ஒன்றை உருவாக்க  அரசியல் சாசனச்சட்ட வரைவு குழுத் தலைவர் அம்பேத்கரை ஜவாஹர்லால் நேரு வேண்டினார். ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள், விதி விலக்குகள் கொடுப்பதை ஏற்க மறுத்து, 370-ஆவது சட்டப் பிரிவை எழுதித் தர அம்பேத்கர் மறுத்து விட்டார்.
பின்னர் ஜவாஹர்லால்  நேரு கோபாலசுவாமி ஐயங்காரைக் கொண்டு ஷேக் 
அப்துல்லாவின் விருப்பப்படி எழுதச் செய்து தற்காலிக, மாற்றத்தக்க சிறப்பு வசதிகள் கொண்ட 370-ஆவது சட்டப் பிரிவை 1949-இல் இணைத்தனர். அப்போது அங்கிருந்த அம்பேத்கர் ஆட்சேபம் தெரிவித்து வெளியேறினார்.  தற்போது 70 ஆண்டுகள் ஆகியும் தற்காலிகமாக என்று அறிவித்த சட்டமும் 35-ஏ சட்டப் பிரிவும் நீக்கப்படவில்லை. மத்திய அரசு சட்டப் பிரிவை நீக்கி விடுமோ என்ற அச்சத்தில், நீக்கினால் காஷ்மீர் பற்றி எரியும் என்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் தற்போது மிரட்டுகிறார்கள். மேலும், காஷ்மீர் குறித்து  மத்திய அரசு ஏதேனும் சட்டம் இயற்ற விரும்பினால் மாநிலத்தின் இசைவு வேண்டும்.
மக்களை மத வழியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்து சட்டங்களை இயற்றி சலுகைகளை, உரிமைகளை வழங்கும் விநோதம் நம் நாட்டில் மட்டுமே உள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் அந்த மாநில மக்களைத் தவிர்த்து வேறு மாநில மக்கள் சொத்துகளை வாங்க முடியாது. "ஆர்டிஐ', "ஆர்டிஇ' மற்றும் "சிஏஜி' போன்ற எந்தச் சட்டமும் ஜம்மு-காஷ்மீரில் செல்லாது. காஷ்மீர் பெண்களைத் திருமணம் மட்டும் செய்துகொண்டு பாகிஸ்தானியர்கள் இந்தியக் குடிமகனாக மாற முடியும். ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது.
இது போன்று பல சலுகைகள் இஸ்லாமியருக்கு உண்டு. மற்ற மாநில சிறுபான்மையினருக்கான சலுகைகள், உரிமைகள் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு இல்லை.  மற்ற மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் காஷ்மீர் போன்ற எட்டு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு உண்டு. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டி, மறுபுறம் மத வாரியாக எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து சலுகைகள் வழங்கி வருகின்றன அரசுகள்.
இந்திய அரசியல் சாசனத்தில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மை என்ற சொல் இடம்பெறவில்லை; அரசியல் சாசனத்தின் முன்னுரையிலும் கூறப்படவில்லை.  பின்னர் வந்த இந்திரா காந்திதான் மதச்சார்பின்மை என்ற சொல்லை இணைத்தார். ஆனால், அரசுகளின் திட்டங்கள், சட்டங்கள் எல்லாம் மத வழியில்தான் செய்யப்படுகின்றன.  நம் நாடு இரண்டாகத் துண்டாடப்பட்டதே மத வழியில்தான் என்பதை யாரும் மறக்க இயலாது.  
நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமாக வேட்பாளர் தேர்வு செய்யப்படும்போதும், கூட்டணிகள் தத்தம் கட்சியின் பலத்தைக் காட்டி அதிக இடங்கள் கோரும்போதும் சாதி, மதம் முக்கியப் பங்காற்றுகிறது.  இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இந்து மக்களின் எண்ணிக்கை குறையுமானால் நாட்டின் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
எல்லா அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு சாதி, மதத்தைப் பற்றியும் ஒரு கணிப்பு வைத்திருக்கின்றனர்.  சிறுபான்மைச் சமூகத்தினர் தங்களின் வாக்குகளை தத்தம் மதத் தலைவர்கள், சாதித் தலைவர்கள் சொல்லும் கட்சிக்கே சிந்தாமல், சிதறாமல் வாக்களிப்பர்.  இதனால், சிறுபான்மையோர் அம்சத்தில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே பேசுவர்; எழுதுவர். பெரும்பான்மை சமூகத்தினருக்கு அப்படி யாரும் ஒருமித்த தலைவர்கள் இல்லை.
மதச்சார்பற்றவர்கள் எல்லோரும் பெரும்பான்மை சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் எல்லோரும் இந்த சமூக மக்களை மதிப்பதில்லை. இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை.  இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய சித்தாந்தமான அறவழிப் போராட்டத்தைத் தோற்றுவித்த அண்ணல் காந்தியடிகளின் விருப்பத்துக்கு மாறாகவே இந்தியா துண்டாடப்பட்டது. குறிப்பிட்ட மதத்தின் எண்ணிக்கையின் அளவுகோலே நாட்டைப் பிரிக்க முழு முதல் காரணமாக இருந்தது.  எந்தெந்தப் பகுதிகளில் எந்தச் சமூகம் எவ்வளவு எண்ணிக்கையில் வசிக்கிறது என்பதை கணக்கில் வைத்தே நாடு அளவிடப்பட்டது. 
இவற்றுக்கெல்லாம் காரணம் அரசியல் தலைவர்களின் சுயநலமே!  அவர்கள் அனைவரும் தம்மை, தங்களது கட்சியை அரசுக் கட்டிலில் அமர வைப்பதற்கும், காலம் காலமாய் நிலைபெறுவதற்கும் சாதி, மதத்தின் பெயரால் செய்யப்படும் சித்து விளையாட்டுகள். பொதுவாக, நம் நாடு மட்டுமல்லாது, மக்களாட்சி நடைபெறும் குடியரசு நாடுகளில் எல்லாம் அரசு, அதிகாரம் ஆட்சி என்பது எல்லாம் அவர்கள் தேர்தலில் பெறும் வாக்கு அடிப்படையில்தான்.
 ஆனாலும், தங்களின் சுய நலத்துக்கு ஏற்ப தேர்தலுக்கு முன்பு ஒரு கொள்கை, ஒரு முடிவு என்று கூறியவர்கள், தேர்தலுக்குப் பிறகு சொந்த லாபங்களுக்காக எதிர்மறையான முடிவுகளை எடுப்பது கண்கூடு.  இதற்கு இவர்களின் பொருள் விளங்கா கூட்டணிக்கு "கூட்டணி தர்மம்' என்று பெயர் சூட்டுவதும் விந்தைதான்.  வேண்டும் எனில் தேர்தலுக்காக பாகற்காயும் இவர்களுக்கு இனிக்கும்!  வேண்டாம் எனில் பனங்கற்கண்டும் கசக்கும்!
இந்த நாட்டில் மத வழியில் சிறுபான்மையோர் ஒற்றுமையாக இருப்பதைப் போன்று பெரும்பான்மையோர் ஒற்றுமையாய் ஒரே குரலில் ஒலிக்கத் தொடங்குவார்கள் எனில் எல்லோருக்கும் நன்மையே விளையும்.  சிறுபான்மையோரின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தாம் என்ற பிம்பம் மறைந்து எல்லோரும் எல்லா மக்களுக்கும் பொதுவாகச் சிந்திக்கத் தொடங்குவார்கள்.  மகாகவி பாரதி  சொன்ன "எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை' என்ற காலம் வர வேண்டும். யார் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த நாட்டின் தேசிய இனம் இந்து சமயம் மட்டுமே!  ஏன் எனில், இந்து சமயத்தில்தான் சமயப் பொறையுண்டு.  சமயவாதிகளும் உண்டு.  நாத்திகவாதிகளும் உண்டு.  பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பக்தரும் மேலை நாட்டு அறிஞருமான பால் பிரண்டன் கூறியது  போன்று, இந்த நாட்டில் இருக்கும் நதிகள், மலைகள், வனங்கள் எல்லாமே இறைவனின் அம்சம் பொருந்தியவைதான்.  "யோக úக்ஷமம்  வஹாம்யஹம்'  (யோக úக்ஷமத்தை நான் அடையச் செய்கிறேன்) என்ற வேத வாக்கும் "யாதும் 
ஊரே யாவரும் கேளிர்' என்ற புனித வாக்கியமும் பொருள் பொதிந்தவை.
பிரபஞ்சத்தையே ஒரு குடும்பமாகக் கருதி 'வசுதைவ குடும்பகம்' என்றனர் நம் முன்னோர்.  எனவே, மத வழியில் சிறுபான்மையோர், பெரும்பான்மையோர் என்றும் பிரித்தல் வேண்டாம். 
வேண்டுமெனில், அது நியாயமாக இருக்க வேண்டும்.  வாக்கு வங்கிக்காக இந்த நாட்டின் ஆதிகுடி மக்களை, தொல் சமய மக்களை அழிக்க வேண்டாம். இந்துக்களின் வளர்ச்சி விகிதம் எண்ணிக்கையில் குறைவுபடுமாயின், அவர்களின் நலம் பழுதுபடுமாயின் தேசிய அளவில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும்.

கட்டுரையாளர்: தலைவர், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com