நடுப்பக்கக் கட்டுரைகள்

குடியிருப்புகளைக் கட்டிப் பார்!

29th Jun 2019 01:36 AM | வாதூலன்

ADVERTISEMENT

பழைய நாளில் வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை முடித்துப் பார் என்ற சொலவடை உண்டு. அதே சமயம் வீட்டைக் கட்டிப் பார் என்கிற பழைய வழக்கு இன்றைய நாளில், வேறு மாதிரி உருவெடுத்து வருகிறது. காலி மனையைத் தேர்ந்தெடுத்தாலும் உரிமையாளரே கல், மணல், சிமென்ட் வாங்கி, வீட்டைக் கட்ட முடியாது. ஒப்பந்தக்காரரைத்தான் நாட வேண்டும்; திருமண விருந்துக்கு கான்ட்ராக்ட் விடுவதுபோல. மேலும், தனி வீடு என்கிற தன்மை அறவே நீங்கி, 2 படுக்கை அறை;  3 படுக்கை அறை  கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற விளம்பரங்கள் எல்லா நாளிதழ்களிலும் வெளிவருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதில், பல சட்ட நுணுக்கங்களை கவனிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதிலோ அல்லது மாற்றுவதிலோ பொதுவாக மூன்று பிரிவுகள் உள்ளன.
முதலாவது, சென்னையின் மையப் பகுதியிலோ அல்லது புறநகரான தாம்பரம் அருகிலோ எழும்பும் ஐம்பதுக்கும் மேலான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றைப் பெற முன்பணம் கட்டிப் பதிவு செய்து கொள்வது ஆகும். இவற்றைக் கட்டும் ஒப்பந்தக்காரர் பொதுவாக அனுபவம் உள்ளவராக இருப்பார்.
மூலப்பத்திரம், பட்டா, வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றில் சிக்கலே இருக்காது. ஒப்பந்தப் படிவத்தில் குடியிருப்புகளைக் கட்டி முடிக்க வேண்டிய காலக் கெடு, தொகையை அளிக்க வேண்டிய தவணைகள், நவீன வசதிகள் போன்ற அம்சங்கள் தெளிவாக இருக்கும்.
இருந்தாலும் எந்த ஒப்பந்தக்காரரும் இந்த விஷயத்தில் எழுதிக் கொடுத்தபடி, அடுக்குமாடி குடியிருப்புகளை முடித்து ஒப்படைத்ததே இல்லை. அவர்கள் தரப்பில் பல காரணங்களைக் கூறுவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2015-17-இல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்க மிகவும் தாமதமானது. மணல் பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி, அரசியலில் நிலவிய ஸ்திரமற்ற தன்மை ஆகியவை காரணிகளாக அமைந்தன.
இரண்டாவது வகையினர் பரவலாக இல்லாவிடினும், அண்மைக்காலமாக செய்தியில் அடிபடுகின்றனர். அதாவது, 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டு விஸ்தாரமான காலியிடம் கொண்ட 1,520 குடியிருப்புகளை மறுபடியும் இடித்துப் புதுப்பித்து, கூட ஒரு அறையையும் தருவது. இதில் முக்கிய நிபந்தனை என்னவெனில், அனைத்துக் குடியிருப்பு உரிமையாளர்களும் புதுப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். பெரும்பாலோர் ஒப்புக்கொண்டாலே (அதாவது 20 தளவாசிகளில் 15 பேர்) போதுமானது என்று சிலர்  கருதுகின்றனர்.
மாநகராட்சி அனுமதி ஏற்கெனவே இருக்கும் என்பதால், இதில் ஒப்பந்தக்காரரின் வேலை சற்று எளிது. ஏனென்றால்,  கொஞ்சம் கூடுதலான வசதிகளுடன் குடியிருப்புகளை மாற்றி அமைக்க வேண்டியதுதான். இந்தப் பிரிவினர், பழைய கட்டடம் இடித்து புதிய வகை குடியிருப்புகள் முடியும்வரை வேறு இல்லத்துக்கு குடிபோக வேண்டும். எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர், தங்கள் பழைய குடியிருப்பை விட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் அதிகமாக வெளிநாடு சென்றார். திரும்பி வந்தவுடன் எல்லா குடியிருப்புகளும் மெருகேறி காட்சி தந்தன.
மூன்றாவது பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு பூர்வீகச் சொத்தான வீடு இருக்கலாம் அல்லது அவர்களே ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனி ஒப்பந்தக்காரரை வைத்து, மரம், கிணறு, செடி கொடிகளுடன் ஆயிரம் சதுர அடி கட்டி வாழ்ந்திருக்கலாம். கால அழுத்தத்தில், நிச்சயமாக பழைய வீட்டில் பல இடங்களும், அறைகளும் சேதமடைந்திருக்கக் கூடும். பார்த்துப் பார்த்துச் சரி செய்ய இயலாது. உரிமையாளருக்கும் வயது கூடியிருக்கும். பணியாளர்களும் எளிதில் கிடைக்க மாட்டார்கள்.
எனவே, உரிமையாளர் ஒரு கட்டுனருடன் பேசி கூட்டு முயற்சி ஒப்பந்தம் (ஜாயின்ட் வென்ச்சர்)  மேற்கொண்டு கையெழுத்திடுவார்கள். அதற்கான ஒப்பந்தப் படிவத்தில்  அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை, சதுர அடி, காலக்கெடு, மனைக்கான நஷ்டஈடு  போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.  அடுக்குமாடி  குடியிருப்பின் அளவு,  மனையின் மொத்த பரப்பளவைப் பொருத்து நஷ்டஈடு இருக்கும்.
மேலும், வீட்டை இடித்து புது குடியிருப்புகள் நிறுவி முடிக்கப்படும் வரையில், உரிமையாளருக்கு மாத வீட்டு வாடகையும், ஒப்பந்தக்காரரே தருவார். நஷ்ட ஈடாக கிடைக்கும் தொகைக்கு (அதிகபட்சம் ரூ.30,000), மூலதன லாப வரியை உரிமையாளர் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு அறிவுரை கூற பல கணக்கு தணிக்கையாளர்கள் (ஆடிட்டர்கள்) இருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை இங்கு கொஞ்சம் இறுகிய மனத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த மூன்றாவது பிரிவில், எந்த ஒப்பந்தக்காரருமே காலக்கெடுவுக்குள் முடித்துத் தருவதே இல்லை. மேலும், கையெழுத்திட்டபடி உரிய நஷ்டஈட்டை முழுமையாகத் தருவதுமில்லை. இதுபோன்று என் நண்பர் கூட்டு ஒப்பந்தத்தில் சிக்கி, படாதபாடு பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு கைக்கு வந்தால் போதுமென்ற விரக்தி நிலைக்குப் போய் விட்டார்.
ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. கிட்டதட்ட 48 மணி நேர தொலைதூர ரயில் பயணத்துடன் இதை ஒப்பிடலாம். ரயில் தாமதப்படுவதோ, நடுவில் ஆங்காங்கே எழும் சிக்கல்களுக்கோ பயணிகள் பொறுப்பல்ல. ஆனால், அதன் பாதிப்பை அனுபவிக்கத்தான் வேண்டும். எப்படியோ உரிய இடத்தைச் சென்றடைந்தால் போதும் என்று பொறுமையுடன் இருக்க வேண்டும். அதுபோலத்தான் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க ஒப்பந்தக்காரரை நியமிப்பதும்... கட்டுனரை தேடிப் பார்; குடியிருப்பை முடித்துப் பார் என்கிற வாசகம் இன்றைய காலத்துக்கு பொருந்தும் போல இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT