21 ஜூலை 2019

பூமித் தாயின் கோபம் தீர...

By அ. கல்யாணசுந்தரம்| DIN | Published: 27th June 2019 02:30 AM


உலகம் முழுவதும் வசிக்கும் மனிதர்களின் தவறுகளினாலும், தொழில்புரட்சிக்கு பிந்தைய அபரிமிதமான தொழில்களின் பெருக்கத்தாலும் காற்று மாசடைவது, புவி வெப்பமடைவது என இரு நிகழ்வுகள்  போட்டி போட்டுக் கொண்டு நடைபெறுகின்றன. இதனால், இயற்கையோடு இயைந்த மிதமான தட்பவெப்பம், மிதமான ஈரப்பதம், இயற்கையான மழைப் பொழிவு ஆகியவற்றை நமக்கு இலவசமாக வாரி வழங்கிய பூமித் தாய், தம் கோபப் பார்வையை மனிதகுலத்தை நோக்கி வீசத்தொடங்கிவிட்டது. அதன் தொடர் விளைவுகளாக பல்வகை நிலம் வாழ் மற்றும் கடல்வாழ் உயிரினங்களும், வன விலங்குகளும், கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
 உலகம் முழுதும் நிலக்கரி பயன்பாடு தொடர்வது,  பெட்ரோல்- டீசல் உலகளவில் 24 மணிநேரமும் தொடர்ந்து பயன்படுத்துவது, நெகிழிப் பொருள்கள், குப்பைகள், மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட டயர்களை பொது இடங்களில் எரித்தல், மீதமாகும் உணவுப் பொருள்களை பொது இடங்களில் வீசுதல், , செயற்கையான வீரியமுள்ள நைட்ரஜன், யூரியா, பொட்டாஷியம்போன்ற உரங்களை பயிர்களுக்குப் பயன்படுத்துதல், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்கள் மீது அடிப்பது, குளு குளு பெட்டிகள்-ஏ.சி. இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பசுமையில்ல வாயுக்களான கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோஃபுளுரோகார்பன்ஸ், சல்ஃபர் ஹெக்ஸாஃபுளுரைடு, நைட்ரஜன் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக வளி மண்டலம் பாதிப்புக்குள்ளாகி  புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு அடைதல் ஆகியவை ஏற்படுகின்றன.
இத்தகைய மாசு தடை ஏதுமின்றி வளி மண்டலத்தை அடைகின்றன. வளி மண்டலத்தில் ஏற்கெனவே கெடுதல் ஏதும் தராத ஹைட்ரஜன் 78%, ஆக்ஸிஜன் 20% ஆகியவற்றுடன் மனித குலத்துக்கு தீமை செய்யும் 2% பசுமையில்ல வாயுக்களும் கலந்துள்ளன. ஏற்கெனவே வளிமண்டலத்தில் உள்ள 2% பசுமையில்ல வாயுக்களோடு தொடர்ந்து உலகம் முழுவதும் வெளியாகும் பசுமையில்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்வதே புவி வெப்பமடையவும், காற்று மாசடைவதற்கும் முக்கியக் காரணம். வானில் கருமேகங்கள் சூழ்ந்தாலும், அவற்றைக் கலைக்கக்கூடிய விஷ வித்துக்களாக விளங்குவது இந்தப் பசுமையில்ல வாயுக்களே.
பசுமையில்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த சில தீர்வுகள் உள்ளன. மின் உற்பத்திக்கு நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளான காற்றாலை மின்சாரம், சூரியஒளி மின்சாரம், கடல் அலை மின்சார முறைக்கு மாறுவது, எத்தனால் கலந்த பெட்ரோல், பயோ டீசலை உபயோகிப்பது, லண்டன், சீனாவைப் போன்று குறைந்த தொலைவு பயணத்துக்கு மிதிவண்டியைப் பயன்படுத்துதல், தேவையற்ற பொருள்களை பொது இடங்களில் எரிக்காமல் இருப்பது, மருத்துவக் கழிவுகளை அழிக்க இன்சினரேட்டர்களை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தவது உள்ளிட்டவை தீர்வுகளாகும்.
ஜெனீவாவில் உள்ள உலகத் தலைமையக வானிலை ஆராய்ச்சி மையத்தில் குளோரோ ப்ளோரோ கார்பனைக் கட்டுப்படுத்த குளு குளு பெட்டிகள், ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவது இல்லை; மேலும், இந்த மையத்தில் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் பணியாளர்கள் உள்ளே நுழையும்போது விளக்குகள் எரியும்படியும், அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது விளக்குகள் அணையும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனீவா வானிலை ஆராய்ச்சி மையம் போன்று, உலக அளவில் குளு குளு பெட்டிகள்-ஏ.சி. இயந்திரங்களின் பயன்பாட்டை தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டால் மேலே குறிப்பிட்ட ஆறு பசுமையில்ல வாயுக்களின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஏற்கெனவே படிந்துள்ள பசுமையில்ல வாயுக்களின் வீரியம் குறைந்து, காற்று மாசடைதல் மற்றும் புவி வெப்பமயமாதல் படிப்படியாகக் குறையும்.  
இதன் தொடர்ச்சியாக  முந்தைய காலங்களைப் போன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் உரிய பருவ காலங்களில் மழைப் பொழிவு இருக்கும். குறிப்பாக, வறட்சியால் வாடும் தமிழகத்தில் ஆண்டுதோறும் மழைப் பொழிவு  ஏற்படும். ஆண்டு முழுவதும் தொடர்ந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றி, ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்த வேண்டும். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளும் மழை நீரால் நிறையும். டெல்டா விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்புவதில் பிரச்னை இருக்காது.  மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உறுதியுடன் அரசு செயல்படுத்துவது அவசியம். 
உலக வெப்பமயமாதல் விளைவாக மழைப் பொழிவு இல்லாததால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. பசுமையில்ல வாயுக்களின் தாக்கத்தைக் குறைத்து ஆண்டுதோறும் மழைப் பொழிவு ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்படும். மேலும், நாடு முழுவதும் பருவமழை தவறாத நிலையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர்ப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் ‘உயிர்நாடி’ காக்க...
பொதுநலச் சிந்தனையே சிறப்பு
சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!
நிதிச் சேவையின் பிதாமகன்!
புத்தகங்கள், அறிவின் பொக்கிஷம்