கட்சி நலனா? தமிழர் நலனா? 

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்  பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, தமிழகத்தைச் சேர்ந்த

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்  பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட்டு நின்று தங்களது தாய்மொழியான தமிழில் உறுதி கூறி பதவியேற்றது, தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலேஎன்று பாரதி பாடிய பாடலைப் போல தமிழர்களின் காதுகளில் இந்தச் செய்தி இன்பத் தேனாகப் பாய்ந்து மகிழ்ச்சி அடைய வைத்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்க் கொடியை உயர்த்திப் பிடித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கட்சி எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்றிணைந்து தமிழில் உறுதிமொழி ஏற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் மற்ற முக்கிய பிரச்னைகளிலும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவும் போராடவும் முன்வர வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளும், இந்தித் திணிப்பு, ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், எரிவாயு, அணுஉலை ஆகிய திட்டங்கள் போன்ற பிரச்னைகள் எந்தக் கட்சியின் பிரச்னைகளும் அல்ல. மாறாக, ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதிக்கும் பொதுப் பிரச்னைகள் ஆகும். இவற்றிற்குத் தீர்வுகாண ஒன்றுபட்டு போராட தமிழ்நாட்டுக் கட்சிகள் தவறியதோடு, தனித்தனியே போராடியதன் விளைவாக அந்தப் போராட்டங்கள் வலுவிழந்து போயின. மத்திய அரசும் தமிழ்நாட்டை மதிப்பதில் அலட்சியம் காட்டியது. இன்று வரையிலும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படவில்லை.
கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டை நோக்கி ஓடிவரும் காவிரியாற்றிலும், அத்துடன் வந்து இணையும் துணை ஆறுகளிலும் கர்நாடகம் அணைகளைக் கட்டியபோது தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தவறின. அதன் விளைவாக, புதிய அணைகளின் மூலம் 70 டி.எம்.சி நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் வசதியை கர்நாடகம் பெற்றுவிட்டது. சட்டத்துக்குப் புறம்பாக கர்நாடகம் அணைகளைக் கட்டியதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. அதற்குக் காரணம்  தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடாததே ஆகும்.
1968-ஆம் ஆண்டிலேயே காவிரிப் பிரச்னைக்காக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் அந்த மாநில முதல்வர் தலைமையில் தில்லி சென்று அப்போதைய பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது என வற்புறுத்தின. இந்தத் தூதுக் குழுவினரோடு மத்திய அரசில் அங்கம் வகித்த கர்நாடக அமைச்சர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அமைச்சர்கள் எந்த மாநிலச் சார்பின்றிச் செயல்பட வேண்டியவர்கள் என்பது உன்னதமான மரபாகும். ஆனால், அது மீறப்பட்டது.
அப்போது மட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென 2007-ஆம் ஆண்டிலேயே நடுவர் மன்றம் ஆணை பிறப்பித்த பிறகும்,  அதை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. அதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டதன் விளைவாக, 2012-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒருங்கிணைப்புக் குழுவையும் அமைக்க ஆணை பிறப்பித்தது. ஆனாலும், அது அமைக்கப்படவில்லை.
2016-இல் அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில்  அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் அனைத்துக் கட்சிகளையும்  சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வற்புறுத்தினர். மீண்டும் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகே மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், அது பிறப்பித்த ஆணைகளை நிறைவேற்ற கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இப்போதுகூட குறுவை சாகுபடிக்கு 9.5 டி.எம்.சி நீரைத் திறந்து விடவேண்டும் என்று மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன; அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேறுபட்டு நிற்பதன் விளைவாக காவிரிப்படுகை பாலைவனமாகியுள்ளது. பேரிழப்புக்கும், பெரும் துன்பத்துக்கும் விவசாயிகள் உள்ளாகியுள்ளனர். காவிரிப்படுகைப் பகுதியை அடியோடு பாழாக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் எரிவாயு திட்டங்களை எதிர்த்துப் போராடுவதிலும் நமக்குள் ஒற்றுமை இல்லை.
அண்டை மாநிலமான கேரளம் நீர் வளம் நிறைந்த மாநிலம் ஆகும். கேரளத்தில் ஓடும் ஆறுகளில் கிடைக்கும் மொத்த நீர்வளம் 2,500 டி.எம்.சி.களுக்கு அதிகமாகும். அந்த மாநிலத்தின் சாகுபடிக்குத் தேவையான நீரானது 500 டி.எம்.சி மட்டுமே. 2,000 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதில் 10தில் ஒரு பங்கான 200 டி.எம்.சி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால் வறண்ட பகுதி வளம் பெறும்.  உணவு உற்பத்தி பெருகும். 
தமிழகத்திலிருந்துதான் கேரளத்திற்குத் தேவையான உணவு தானியங்கள் காய், கனி, ஆடு,மாடு, கோழி முதலியவை அனுப்பப்படுகின்றன. ஆனால், பெரியாறு அணை நீர்மட்டத்தை முதலில் 145 அடி உயரத்திற்கும், பின்னர் 152 அடி உயர்த்துவதற்கும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் கேரளம் அதை ஏற்பதற்கு மறுத்து வருகிறது.
பெரியாறு அணை வலிமையுடன் இருப்பதாக மத்திய அரசு அமைத்த குழுக்கள், உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு உள்ளிட்ட பல குழுக்கள் கூறிய பிறகும் பெரியாறு அணையை இடித்து விட்டுப் புதிய அணை கட்டவேண்டுமென கேரளம் பிடிவாதமாகக் கூறி வருகிறது. 
மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கேரளத்தை காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் மாறி மாறி ஆட்சி செய்தபோதிலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் பிரச்னையில் ஒன்றுபட்டு நிற்கின்றன. ஆனால் ஐந்து தென்மாவட்ட விவசாயிகளைப் பாதிக்கும் பெரியாறு அணைப் பிரச்னையில் ஒன்றுபட்டுப் போராட தமிழகக் கட்சிகள் தயாராக இல்லை.
கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு 93 கி.மீ. தொலைவு ஓடி, ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, 33 கி.மீ. மட்டுமே ஓடி தமிழகத்தில் நுழைந்து 222 கி.மீ. ஓடி வங்கக்கடலில் கலக்கிறது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பயனடைகின்றன. கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் இரு கரைகளிலும் 25-க்கும் மேற்பட்ட பெரும் ஏரிகளை அமைத்து, அவை நிறைந்த  பிறகே எஞ்சிய நீரை கர்நாடகம் விடுகிறது. ஆனால், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. மட்டுமே ஓடும் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. மேலும், மூன்று தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் பாலாறு அடியோடு வற்றிப் பாழாறாகிவிட்டது.
தமிழர்களை சாதி, சமய, வேறுபாடுகள் பிரித்ததைக் காட்டிலும், அரசியல் கட்சிகள் கூறு போட்டுவிட்டன. தமிழகத்தைச் சீரழிக்கும் பொதுவான பிரச்னைகளில்கூட தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க முடியவில்லை. தமிழகத்தின் நலனைவிட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் நலனே பெரிதாகிவிட்டது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் அனைத்துக் கட்சிகளும் மொழி, இனம், நாடு போன்ற பிரச்னைகளில் கைகோர்த்துச் செயல்படுகின்றன.
உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டு பிரச்னைகளில்கூட வங்காளிகள் எப்படி ஒன்றுபட்டுப் போராடி வெற்றி பெற்றார்கள் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி எடுத்துக்காட்டும். 2006-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படவில்லை; உடனே, அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மக்களவைத் தலைவராக இருந்த சோமநாத் சட்டர்ஜி,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, இடதுசாரி கூட்டணியின் அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகிய ஐவரும் கங்குலி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து கிரிக்கெட் அணியில் கங்குலி இணைக்கப்பட்டார். 
இத்தகைய உணர்வு தமிழகக் கட்சித் தலைவர்களுக்கு இல்லாததால் முக்கியப் பிரச்னைகளில்கூட நம்மால் வெற்றிபெற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி கூறி, தமிழக உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ள நிகழ்ச்சி முன்மாதிரியாகத் தொடர வேண்டும். தமிழகப் பிரச்னைகள் அனைத்திலும் நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுக்கவும் போராடவும் அவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களை வாழ்த்திப் பாராட்டுவோம்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com