"பிஞ்சுகளை வதைக்க வேண்டாமே...' 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 குழந்தைகள் இவ்வளவு அல்லல்படுவதற்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமல்ல, அவர்களின் பெற்றோர்கள்தான். ஆனால், அவர்கள் மீது ஆத்திரம் வருவதற்கு மாறாக பரிதாபம் மட்டுமே விஞ்சுகிறது. ஏனெனில் எந்த ஒரு பெற்றோரும் தம் குழந்தைகளை இது போன்ற வேலைகளுக்கு மனமுவந்து அனுப்புவதில்லை. தீராத வறுமையைச் சமாளிக்கவும், தீர்க்க முடியாத கடனை அடைக்கவும் வேறு வழி இல்லாமல் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தாங்களே அடமானம் வைக்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, கூர்ந்து கவனிக்க வேண்டிய மிகப் பெரிய சமுதாயப் பிரச்னை.
 குழந்தைத் தொழிலாளர்களுக்கு வித்தியாசமான வரைமுறையை யுனிசெஃப் அமைப்பு வகுத்துள்ளது. அதாவது, 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு வாரத்துக்கு 28 மணி நேரம் உழைத்தாலோ அல்லது 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு வாரத்துக்கு 42 மணி நேரம் உழைத்தாலோ அவர்களை குழந்தைத் தொழிலாளர் என்று அழைக்கிறது.
 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதுபோன்ற தொழிலாளர்கள் இந்தியாவில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதிகமான குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற நிலையில் நம் நாடு உள்ளது மிகப் பெரிய சமுதாய அவலம்.
 குழந்தைத் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மீதமுள்ள 40 சதவீதம் பேர் விவசாயம் சாராத பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் பட்டாசு தொழிற்சாலை, கண்ணாடி தொழிற்சாலை, கட்டடம் கட்டும் பணி போன்ற உயிருக்கு ஆபத்தான தொழில்களும் அடக்கம்.
 இது போன்ற கடினமான வேலைகளில் சிறு வயதிலிருந்தே ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. போதிய ஊட்டச்சத்தும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பள்ளிக்குச் செல்லும் மற்ற குழந்தைகளை நினைத்து மனதளவிலும பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஆனால், வேலை செய்யும் இடத்தில் அவர்கள் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. மாறாக, உடல் அளவிலும மனதளவிலும சொல்ல முடியாத துன்பங்களுக்குள்ளாகின்றனர்.
 குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக வறுமைதான் முக்கியக் காரணம். மேலும், திட்டமிடப்படாத குடும்பமும் கல்வி அறிவும் இல்லாததும் காரணம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல விழிப்புணர்வுப் பிரசாரங்களை அரசு மேற்கொண்டாலும் கல்வியைக் கொண்டு சேர்க்க முடியாத பல குக்கிராமங்கள் உள்ளன.
 மக்கள்தொகைப் பெருக்கத்தால் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பச் சுமையைக் குறைக்க தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். குக்கிராமங்களுக்குக்கூட கல்வியைக் கொண்டு சேர்த்தாலே குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும் என்பது உறுதி.
 அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்பது எப்படி? நம் நாட்டில் ஐந்தில் ஒரு தொடக்கப் பள்ளிக்கு எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து ஓர் ஆசிரியர் மட்டும்தான் என்ற நிலை உள்ளது. நாட்டிலுள்ள 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்குத் தரமான கட்டடம் கிடையாது. 40 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு கரும்பலகைகூட கிடையாது. ஏனெனில், கல்விக்காக போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. அப்படியே ஒதுக்கப்பட்டாலும் அதில் 97 சதவீதம் ஆசிரியர்களின் மாத ஊதியத்துக்குச் சென்று விடுகிறது.
 இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்களுக்குத் தரப்படும் மித மிஞ்சிய ஊதியம் நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கல்விக்கான நிதி அதிக அளவில் பயன்படுத்தப்படும். எல்லா குக்கிராமங்களிலும் தரமான தொடக்கப் பள்ளிகள் தொடங்க முடியும். அனைத்துப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த முடியும். கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அங்குள்ள ஏழைக் குழந்தைகளை வேலைக்குப் போகாமல் பள்ளிக்குத் திசை திருப்ப முடியும்.
 குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. 1979-ஆம் ஆண்டு ஆணையம் அமைத்து, குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான அதன் ஆய்வறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், 1986-ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 14 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டபடி குற்றம் என்பது தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. "கல்வியுரிமைச் சட்டம் 2005' நிறைவேற்றப்பட்டு, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஏழை மாணவர்களுக்காக ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிப்படைத் தீர்வு கல்விதான். ஒரு சமுதாயம் கல்வி அறிவு பெற்றுவிட்டால் போதும்; குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய போதிய அக்கறை வந்துவிடும். மக்கள்தொகையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கல்வி அறிவு பெற்ற எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். கல்வி எனும் நெற்றிக்கண் திறக்கப்பட்டாலே வறுமை, வேலையின்மை, குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற சமுதாய பிரச்னைகள் நீங்கி விடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com