தற்கொலையைத் தவிர்க்க...

ஏதேனும் ஒரு தேர்வின் முடிவுகள் வெளியாகும்போதெல்லாம், கருதியது கைகூடாத கவலையில் வளர் இளங்குருத்துகள் வாழ்வை முடித்துக்கொள்ளும் சோகம் நடைபெறுகிறது

ஏதேனும் ஒரு தேர்வின் முடிவுகள் வெளியாகும்போதெல்லாம், கருதியது கைகூடாத கவலையில் வளர் இளங்குருத்துகள் வாழ்வை முடித்துக்கொள்ளும் சோகம் நடைபெறுகிறது. கணப்பொழுதில் முடித்துக்கொள்ளும் அந்த அவலத்திற்குப் பின் பெற்றோரும் மற்றோரும் கணந்தோறும் படுகிற துயரத்தை, அந்தக் கணத்திற்கு முந்தைய கணம், அப்பிள்ளைகள் நினைத்திருந்தால், இது நிகழ்ந்தே இருக்காது. ஆனால், இந்த முடிவு அந்த ஒரு கணப்பொழுதில் மட்டுமே எழுந்தது என்று நினைத்துவிட முடியாது.
 நொடிக்கு நொடி அடிமனதில் எழுந்து வளர்ந்த ஆசை, அதன்வழி செய்த உழைப்பு, "வெற்றி உறுதி' என்ற பிடிவாதத்தில் பிறந்த வரம்புமீறிய நம்பிக்கை எல்லாமும் முற்றுகையிட்டு எழுந்த இளம் மனது, தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் முறிந்தபோது ஏற்பட்ட ஆத்திரம்தான் இந்த முடிவு. கொஞ்சம் பொறுத்திருந்தால் இந்நிலை வற்றிப்போகும் என்பதை ஏற்கக்கூட மனம் இன்றி, வீரம் அல்லது சாகசம் என்கிற பைத்தியக்காரத்தனமான மன நிலையில்தான் இப்படிச் செய்துகொள்கிறார்கள். இந்தச் சமயத்தில் கையாலாகாத நிலையில், சூழல் இருப்பதும் அதன் பின்னணியில் பெற்றோர் மனங்கள் கருகுவதும்தான் பெருந்துயரம்.
 "எதார்த்தத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது' என்பதை நினைக்கவிடாமலே செய்துவிடுகிற போக்குத்தான் இந்த முடிவுக்குக் காரணம். கருதியதற்கு மாறான முடிவு தெரிந்துவிட்ட நிலையில், வாழ்க்கையே முடிந்துவிடுவதாய்த் தோன்றுகிற அந்தக் கணம், பிள்ளையின் உயரிய உயிர்க் கணம். அந்த வேளையில் எந்தக் காரணம் கொண்டும் தன்னம்பிக்கை இழந்துவிடாமல் இருக்கத் தைரியப்படுத்துவதையும், தனிமையில் அந்தப் பிள்ளையை இருக்கவிடாமல் அன்புசார்ந்த துணைகளோடு தக்கவைத்துக் கொள்வதையும் செய்துவிட்டால், பின்னர் எந்தக் கவலையும் தேவையில்லை. மாறாக, அவர்களுக்கும் முன்னதாகத் தங்கள் வருத்தத்தை, கோபத்தை, அவமானத்தை, அவர்கள்பால் கூறக் கூடாது. முகம் திரிந்து பார்த்தால்கூட, உடன் பற்றிக்கொண்டு இத்தகு பரிதாபகரமான முடிவுகளுக்கு அவர்களை இட்டுச்செல்லும் என்பதுதான் எதார்த்தம்.
 இதற்குப் பிள்ளைகளைவிடவும் பெற்றோர்தாம் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். தேர்வு நேரங்களில் பிள்ளைகளின் உடல் நலம், மன நலம் குறித்து அதிக அக்கறை கொள்கிற பெற்றோர், தேர்வுமுடிவுகளின்போது அதைவிடவும் அதிக அக்கறை செலுத்தவேண்டும். தேர்வின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், பிள்ளையின் நிரந்தர வாழ்வுதான் முக்கியம் என்ற மனப்பாங்கும் உறுதிப்பாடும் முதலில் பெற்றோர்க்கு வரவேண்டும்.
 வென்றவர்களைவிடத் தோற்றவர்கள்தான் அதிகம் சாதித்திருக்கிறார்கள் என்பதைப் பலரது வரலாறுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்குப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் பெற்றோரும் பிள்ளைகளும் அதிகம் படிக்க வேண்டும். வரலாற்றில் நிலைகொண்டவர்கள், வரம்பிலாச் சாதனை படைத்தவர்கள், எல்லா நிலைகளிலும் எப்போதும் வெற்றியே பெற்றவர்கள் அல்லர். எத்தனை சோதனைகள், துயரங்கள், அவமானங்கள், வாழ்க்கைப் போக்குகளில் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளக் காரணமான கணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் அவற்றை எவ்வாறெல்லாம் கடந்து வென்றார்கள் என்று கற்பதுதானே கல்வி? தேர்ந்துகொள்ளத்தான் தேர்வே ஒழிய, முற்றிலுமாகத் தம்மைத் தீர்த்துக்கொள்ள இல்லையே?
 தூக்கிலிட்டுக் கொள்ளத் துணையாகும் கயிறு வலுவே இல்லாத கழிவுப்பொருளால்தானே உருவாகியிருக்கிறது? நஞ்சாகும் எதுவும் இந்த மண்ணில் உயிர்ப்பொருள்களாய் விளைந்தவைதானே? அவற்றையெல்லாம் தாங்கி வாழவைக்கிற தாய்ப்பூமி, குறைந்த மதிப்பெண் பெற்ற நம்மை முற்றாக உதாசீனம் செய்துவிடுமா என்ன? சாவின் விளிம்புகள் அனைத்திலும் வாழ்க்கைக்கான அமுத கணங்கள் நம்மை அரவணைக்கக் காத்திருக்கின்றன என்பதைக் காட்டுதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தானே கல்வி என்று பெயர்?
 மரணம் தரும் நோய்களில் இருந்து மீட்டெடுக்க மருந்து தரும் மருத்துவக் கல்விக்குப் போதிய மதிப்பெண்கள் பெற முடியாவிட்டால், மரணம்தான் முடிவு என்று எந்த இயற்கை விதி எழுதியிருக்கிறது? "மரணமிலாப் பெருவாழ்வுக்கு' எத்தனை முறைகள் இவ்வுலகில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முதலில் பெற்றோர் நினைத்துப் பார்த்தால் நல்லது.
 தாய்ப்பாலுக்கு மீறியா தனிப்பால் தெம்பு தரமுடியும்? தேவையில்லாத மனப்பால் குடித்து மதி மாறியவர்களின் விதிகளையும் தாய்ப்பால் தந்த அன்னையின் கருணையும் அன்பும் மாற்றிவிட முடியாதா என்ன? "தாயுமான' தந்தையும், "தாயிற் சிறந்த தயாபரன்களான' ஆசிரியர்களும் நண்பர்களும் உறவினர்களும் இருக்கின்ற உலகம்தானே இது?
 தந்தை கண்டிப்பானவர்தான். அது தவறில்லை. தாயும் கண்டிப்பானவராக இருக்கத்தான் செய்வார். கண்டிப்பு என்பது வேறு; கட்டாயம் என்பது வேறு. கண்டிப்பில் நெகிழ்ச்சி உண்டு. நிறை குறைகளை அனுசரித்துப்போகும் வாய்ப்புகள் இருக்கும், கட்டாயம் அவ்வாறானது அன்று; அதற்கு விதிவிலக்கு இல்லை. தேர்வில் வெற்றி பெறுவதும் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் கண்டிப்பாக நிகழவேண்டும். அது கட்டாயம் ஆகிவிடக் கூடாது.
 காற்றும் நீரும் உணவும் கட்டாயமானவை. உடலின் முக்கிய அங்கங்களை மறைக்க உடை கட்டாயம். ஆனால், அவை ஆடம்பரமாகவும் அதிக விலைமதிப்புள்ளதாகவும் இருந்தே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. கல்வி கட்டாயம் என்றால், அதில் வல்லமை பெறுவது நல்லது; அவசியமானதும்கூட. இதுதான் கல்வி, இதைத்தான் கற்க வேண்டும் என்று மொழியையோ, பாடத்தையோ, பயிற்சியையோ கட்டாயமாகத் தருவதுதான் "திணிப்பு'.
 ஆசைப்படுவது உயிரின் இயல்பு. ஆசை நிறைவேறாது போகும் என்றால் அடுத்த கட்டத்துக்கு அந்த ஆசையை மாற்றிக்கொள்கிற விவேகத்தையும் பெற்றோர்கள் ஊட்ட வேண்டியது கடப்பாடு. மரணம் முடிவல்ல; தற்கொலை தீர்வல்ல; வாழ்வதுதான் நிலைப்பாடு என்கிற வைராக்கியத்தைப் பிள்ளைகளின் நெஞ்சங்களில் ஆழ ஊன்றுவதாகத்தான் கல்வியும் தேர்வுமுறைகளும் இருக்கவேண்டும். அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைப் பயிற்சிகளையும் தராத வரையில் இதுபோன்ற சோக முடிவுகளைச் சந்தித்தே ஆகவேண்டிய நிலை தொடரும்.
 ஆசையில் இருந்து பிடிவாதம் தோன்றுகிறது. இதைக் கண்டிப்பு என்கிற பெயரில் களைகிற முயற்சிகளும் நடக்கின்றன. அதனால் பல சாதக, பாதகங்கள் நேர்ந்து விடுகின்றன. பிடிவாதம் என்பது நல்ல குணம். அது எதன்பால் அமைய வேண்டும் என்று சீர்தூக்கிப் பார்த்துச் சீரமைத்துவிட்டால் மிகவும் நல்லது. அதனை வைராக்கியமாக மாற்றி விடுகிற சாமர்த்தியத்தில் இருக்கிறது வெற்றியின் திறவுகோல்.
 ஒரு விதையில் இருந்து வெளிப்படும் முளை, ஆசையின் வெளிப்பாடு என்றால், மண்ணிறங்கும் வேர், முயற்சி. விண் தொட எழும் மேற்பகுதி கனவு. இரண்டும் ஒருசேர இயங்கும்போது வளர்ச்சி ஏற்படுகிறது. இவை மட்டும் இருந்தால் ஒரு செடியோ, கொடியோ, மரமோ வளர்ந்துவிட முடியாது. நீரும் காற்றும் சூரிய ஒளியும் தருகிற சூழல் மிக முக்கியம். இவையெல்லாம் இருந்தாலும் அந்தந்த விதைகளில் இருந்து அந்தந்தத் தன்மைக்குள்ள குணங்களோடுதான் விளைச்சல் அமையும். இதில் விருப்பு வெறுப்புகள் தலையிட முடியாது. அப்படித்தான் நமது தலைமுறைகளும், அவற்றைத் தற்கொலை என்கிற அசுரன் வந்து கவர்ந்துசெல்வதற்கா நாம் பெற்று வளர்த்திருக்கிறோம்?
 கல்வி என்பது ஒற்றைப் பயிர் விளைவிக்கும் கழனியல்ல; எல்லாப் பயிர்களும் அந்தந்த இயல்புக்கேற்ப விளையும் நன்செய். அதில் பணப் பயிரை மட்டுமே உற்பத்தி பண்ணுவது மண்ணுக்கும் மனிதர்கள் முதலான பல்லுயிர்க்கும் பயனளிக்காது. எதிர்வினைகளை உண்டாக்கியே தீரும். புல்லும் நெல்லும் பூமிக்கு அணி செய்வன மட்டுமல்ல; அத்தியாவசியமானவை. அப்படித்தான் பல்திறன்களை வளர்க்கும் கல்வியும். அவற்றின் ஆதாரம் தாய்மொழிக் கல்வி. அது மொழிப் பாடம் மட்டுமே என்று கருதுவது பேதைமை. தாய்ப்பால்போல் பல சமூகநோய்களை எதிர்க்கும் சக்திகளை கொடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இலக்கியமும் இலக்கணமும் அதன் புலப்பாட்டுக் கருவிகள். இலக்கியம், எழுதப்பட்டதாகவும் எழுத்தேறா வாய்மொழி இலக்கியமாகவும் இலங்குகின்றன. அது கற்றோர்வழி மட்டுமல்ல, பாமர மக்களின் அனுபவங்களில் இருந்தும் வந்தவை.
 ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ ஆயிரம் பக்கங்களைக் கற்றுத்தெரிந்துகொள்கிற ஒன்றை, அனுபவக்கனியாய் வந்து நிறைந்த ஒற்றைப் பழமொழி அல்லது சொலவடை உணர்த்திக் காட்டிவிடும். அது பெருமரத்தின் உயிர்ப்பைத் தாங்கிய சிறுவிதை ஒத்தது. அதன்வழி பெறுகிற பள்ளிக் கல்வியும், அனுபவம் தருகிற கல்வியும் ஒரு புள்ளியில் இணைவதால், அறிவுடைமை முதலில் வரும். அன்புடைமை தொடர்ந்து வரும். ஒழுக்கமுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை என அடுத்தடுத்து வரக் காரணியும் ஆகும். அதனால்தான், "வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ' என்று துரத்திவிட்டு, "ஒளிபடைத்த கண்ணினையும் உறுதி கொண்ட நெஞ்சினையும்' உடைய இளைய பாரதத்தை வரவேற்றார் மகாகவி பாரதியார். காரணம் வெறுப்பன்று; விருப்புத்தான். அது தன்பாலும் பிற உயிர்களின்பாலும் காட்டுகிற பேரன்பு.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com