திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஹிந்தி திணிப்பு எனும் மாயை!

By கோதை ஜோதிலட்சுமி| DIN | Published: 08th June 2019 01:40 AM

தமிழகத்தில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் முதல் முறையாக அமைந்த அரசு, பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து நீதிக் கட்சியினர் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினர். சுதந்திர இந்தியாவில் 1950-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசில் அலுவல் மொழி எது என்ற கேள்விக்கு ஹிந்தி மொழி அலுவல் மொழியாகவும் இணை மொழியாக 15 ஆண்டுகள் ஆங்கிலமும் இருக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1965-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் அலுவல் மொழியாக ஹிந்தி மொழி மட்டுமே இருக்கும் என்ற நிலை ஏற்பட்டபோது தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கு கொண்டனர். திமுக இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது. ஏறத்தாழ இரண்டு மாதங்கள் போராட்டங்களும் கலவரங்களும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. பல உயிரிழப்புகளையும் தமிழகம் சந்தித்தது. அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டன.
இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை மொழிப் போர் தியாகிகள் என்று திமுக அரசு அங்கீகரித்தது. அலுவல் மொழியாக ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளும் இந்திய அரசின் அரசு மொழிகளாக என்றென்றும் விளங்கும் என்னும் திருத்தத்தை இந்திரா காந்தி தலைமையிலான அரசு 1967-ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அதே ஆண்டில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை என்னும் நிலைப்பாட்டை அன்றைய முதல்வர் அண்ணா உறுதி செய்தார். இன்றளவும் தமிழக அரசு இந்த இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறது.
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த கருத்துகளை கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்களும் கருத்துகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், மும்மொழிக் கொள்கை என்பது ஆரோக்கியமானது என்று மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2005-ஆம் ஆண்டு கூறியது. அதே கொள்கையைத்தான் இப்போதைய வரைவு அறிக்கையும் குறிப்பிடுகிறது.
 23 அத்தியாயங்கள் கொண்ட இந்த 484 பக்க வரைவறிக்கை மூன்று முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது. தாய்மொழி வழியில் கல்வி கற்பது ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் அவசியமானது. அதாவது, தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ் மொழி வழியாக ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்கிறது. இரண்டாவது மும்மொழிக் கொள்கை ஹிந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியை மாணவர்கள் மூன்றாவது மொழியாகக் கற்கலாம். அதேபோன்று வட மாநிலங்களில் ஹிந்தி மொழியை பேசும் மாநிலங்களில், ஹிந்தி அல்லாத தென் மாநில மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு 
செய்து கற்கலாம். அதற்கான ஆசிரியர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாது இன்னும் அறிவியல் கணிதம் என்று எல்லா பாடங்களைப் பற்றியும் பயிற்றுவிக்க வேண்டிய முறை பற்றியும் தெளிவாகப் பேசுகிறது.
ஹிந்தி திணிப்பை மத்திய அரசு செய்ய முயற்சிப்பதாக பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்தை, எதிர்ப்பைக் கடுமையாக முன்வைக்கின்றன. ஆனால், அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாய்மொழி வழிக் கல்வியைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவில்லை. மத்திய அரசின் இந்த வரைவு அறிக்கை உண்மையில் சொல்வது என்ன? 
பன்மொழி பேசும் தேசத்தில், மாணவர்களும் தங்கள் பன்மொழித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவே மும்மொழிக் கொள்கை இருக்கும். நாடு முழுவதும் இந்தக் கொள்கை பின்பற்றப்படும்போது அது தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கும். எவ்வாறு எனில், ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் நாட்டின் பிற பகுதிகளில் வழங்கும் மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து மாணவர்கள் பயிலலாம். 
அதேபோன்று ஹிந்தி மொழி வழக்கத்தில் இல்லாத மாநிலங்களில் ஹிந்தி மொழியைக் கற்கலாம். இதனால், இந்திய மொழிகள் அனைத்துமே மேலோங்கும். நாடு முழுவதும் வழங்கும் மொழிகள்  மற்றும் அவற்றின் இலக்கியங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளவும் மிகப் பெரிய அளவில் தங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும்.  வரைவு அறிக்கையின் 88-ஆவது பக்கத்தில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது. 
தென் மாநிலங்களில் ஏற்பட்ட எதிர்ப்பையடுத்து மூன்று மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியையோ அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளையோ மாற்றி கற்க விரும்பும் மாணவர்கள் ஆறாவது அல்லது ஏழாவது வகுப்பில் இதனைச் செய்யலாம் என்று திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், பிற இந்திய மொழிகளை, செம்மொழியான தமிழை இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்து படிப்பதற்கான வாசலும் திறந்திருக்கிறது. அத்துடன் பணி நிமித்தம் இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் அங்கு தமிழ் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். தமிழாசிரியர்கள் நாடுமுழுவதும் நியமிக்கப்படும் நிலையும் ஏற்படும். இது தமிழ் கற்றோருக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
அதே நேரத்தில் தமிழக மாணவர்கள் அல்லது தென்னிந்திய மாணவர்கள் ஹிந்தி மொழி அல்லது பிற இந்திய மொழிகளைத் தேர்வு செய்து கற்பதால் மொழி அறிவு இலக்கியத் தேடல் விரிவடையும். பல்வேறு மொழிகளின் இலக்கியங்களை, சிந்தனைகளை ஒன்றிலிருந்து மற்றொன்று பெற்றுக் கொள்வதற்கு இது வழிவகுக்கும். இந்தியா முழுவதும் தமிழ் கற்பதற்கான நிலை ஏற்பட்டிருப்பதை மறைக்க முயல்வதும் சரியல்ல.
இன்றைய நிலையில் மகாத்மா காந்தியடிகள் ஏற்படுத்திய ஹிந்தி பிரசார சபாவில் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ  ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஹிந்தியை கற்றுத் தேர்வு எழுதுகின்றனர். தற்போது தமிழக பள்ளிக்கூடங்களில் மொழிப் பாடங்கள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்பதையும் உற்று நோக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சிபிஎஸ்இ முறை பள்ளிக்கூடங்களிலும் மாநில வழிக் கல்வியில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும் ஏறத்தாழ மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது. முதன்மை மொழி ஆங்கிலம், இரண்டாம் மொழி தமிழ், மூன்றாவது ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம் அல்லது பிரெஞ்ச் அல்லது ஜப்பானிய மொழி என்று ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து படிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அறிக்கைகள், எச்சரிக்கைகள் தரும் அரசியல் கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்கூட ஏறத்தாழ இந்த நடை
முறைதான் வழக்கமாய் இருக்கிறது.
அரசுப் பள்ளிகள் மட்டுமே இருமொழிக் கொள்கையை இன்றளவும் கடைப்பிடிக்கின்றன.
இரு மொழிக் கொள்கை என்ற நிலைப்பாடு இன்றைய கல்வி முறையில் அரசுப் பள்ளியை நம்பியிருக்கும் ஏழை மாணவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. இது அவர்கள் மூன்றாவதாக தன் தாய் மொழி தாண்டி, ஒரு மொழியைக் கற்பதற்கான வாயிலை அடைக்கிறது. 
அரசியல் கட்சிகளின் கருத்துகள் மட்டுமே ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது. கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதால், இந்த விஷயத்தில் மக்கள், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் விருப்பம் என்ன என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு மக்களின் உணர்வுகள், விருப்பம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். 
ஒரு மொழியையோ பிற கலாசார அம்சங்களையோ முனைந்து திணிக்க முற்படும்போது அது கடினமானதாகவோ ஒவ்வாததாகவோ தோன்றக்கூடும். அதே நேரத்தில் நமக்கு விருப்பமானதைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்போது கற்றலுக்கான வெளி விரிவடைகிறது. தாங்கள் விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து அவற்றில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்வது எளிதாகிறது.
இதை மனதில் கொண்டு மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியைத் தேர்வு செய்வதற்கான பரப்பினை  மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும். நம்முடைய மொழியும் பிற மாநிலங்களில் மாணவர்களால் கற்றுக் கொள்ளப்படும் நிலையில் நம் மொழிக்கான எல்லைகளும் விரிவடைவதை உணர்ந்து மாநில அரசு  அதனை ஏற்க வேண்டும். 
பரந்துபட்ட பாரத தேசத்தில் தாய்மொழி குறித்த பெருமையோடு அடுத்த தலைமுறை வளர வேண்டுமாயின், அவர்கள் பன்மொழிப் புலமையோடு இருக்க வேண்டும். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதி முழங்க முடிந்தது என்றால் அதற்குப் பன்மொழிப் புலமை அவருக்கு இருந்ததே காரணம் என்பதை அறிஞர்களும் மக்களும் அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

கட்டுரையாளர்:ஊடகவியலாளர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காத்திருக்கும் அழகிய இந்திய விடியல்!
சனாதன தர்மமும் பெண்ணியமும்
சாமானியனின் சரித்திரம்!
மரணம் கற்பிக்குமா பாடம்?
காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரை