திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

நீர் சிக்கனம் தேவை!

By பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்| DIN | Published: 07th June 2019 12:06 AM

தமிழகத்தில் கோடைமழை சரியாகப் பொழியாததால் குடிநீர்த் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக நிலத்தடி நீரானது 
மிகவும் குறைந்து கொண்டு வருகிறது. 
கோடைகாலத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை குளங்கள், ஏரிகள் போன்ற  நீர்நிலைகளெல்லாம் பெரும்பாலும் வறண்டு காணப்படுகின்றன. மேலும், உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், உடுத்தும் ஆடைகளைத் துவைத்து சுத்தமாக அணிந்து கொள்வதற்கும் நீரை நாம் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். சமையலுக்கான பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் நீர் அத்தியாவசியமாகிறது.
கோடையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை எதிர்கொள்வது குறித்து அனைவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
வீடுகளில், காடுகளில் மலையடிவாரங்களில் வசித்த முந்தைய தலைமுறையினர், தண்ணீரின் அவசியத்தை அறிந்து நிலத்தடி நீரினைப் பாதுகாத்து அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வந்தனர். 
மேலும், வீடுகளில், கிராமங்களில், காடுகளில்  மற்றும் மலையடிவாரங்களில்  நமது முன்னோர் பெரும்பாலும் கிணறுகள் தோண்டி, வாளியின் மூலம் நீரை இறைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்தும் நீரினை வீணாக்காமல் கிணற்றின் அருகில் செடி, கொடி, மரங்களையும் வளர்த்தனர். இதனால், சுத்தமான காற்றுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். 
ஆனால் தற்போது வீடு தவறாமல் ஆழ்துளைக் கிணறு அமைத்து நாம் வசிக்கும் பூமியை சல்லடைக் கண்களாக்கி விட்டோம்.  தண்ணீர் வீணாவதைப் பற்றி வசதி படைத்தவர்கள் கவலைப்படுவதில்லை. பணம் கொடுத்து லாரி மூலம் தண்ணீர் பெற்றாலும்கூட, போதிய அளவுக்கு பூமியில் தண்ணீர் இருந்தால்தானே கிடைக்கும் என்பதைக்கூட அவர்கள் உணர்வதில்லை. 
வீடுகளில் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பயன்படுத்தி நாம் சுகம் கண்டு விட்டோம். தேவைக்கு அதிகமாகவே தண்ணீரைப் பயன்படுத்தி வீணாக்குகிறோம். முந்தைய காலங்களைப் போன்று சில தெருக்களில் கிணறுகள் இருந்தாலும், குப்பைகளை அதில் போட்டு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இத்தகைய தெருக் கிணறுகளை தூர்வார அரசு ஏற்பாடு செய்து, அதில் குப்பைகள் போடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். 
வீடுகளில் குழாயைத் திறந்து விழும் தண்ணீரைக் கொண்டு நேரடியாக பாத்திரங்களைக் கழுவாமல், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு அதிலிருந்து தம்ளர் மூலம் தண்ணீரை எடுத்து பாத்திரங்களைக் கழுவலாம். இவ்வாறு செய்தால் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கலாம்.
கோடைக் காலத்திலும்கூட குளியலறை "ஷவரை' திறந்துவிட்டு, நேரம் போவது தெரியாமல் குளித்து நீரை வீணாக்குவது சரி அல்ல. மாறாக, வாளியில் தண்ணீரை நிரப்பி குவளை மூலம் முகந்து குளிப்பதன் மூலம் நீரைச் சிக்கனப்படுத்தலாம்.கோடைக் காலத்தில் தண்ணீரைப் பற்றி கவலைப்படாமல் காலையிலும் மாலையிலும் சிலர் ஆனந்தமாகக் குளித்து தண்ணீரை வீணடிப்பார்கள். கோடைக் காலம் என்றால் இரு வேளை குளிப்பது சுகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் அத்தியாவசியத் தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதும் நாம்தான் என்பதை உணர வேண்டும்.  தண்ணீர்ச் சிக்கனம் கருதி காலையில் மட்டும் குளித்து விட்டு, மாலையில் கை, கால்கள், முகம் மட்டும் கழுவிக் கொண்டால், தண்ணீரைச் சேமிக்க முடியும். 
வீட்டில் கார் வைத்திருப்பவர்கள், அதை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவதை விட்டுவிட்டு, துணியை நீரில் நனைத்து அதன் மூலம் துடைத்து சுத்தப்படுத்தலாம். 
தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிப்போர், துணி துவைக்கும் இயந்திரத்தை  ("வாஷிங் மிஷின்') பயன்படுத்து
வதைத் தவிர்ப்பது நல்லது. துணி துவைக்கும் இயந்திரம் மூலம் ஆடைகளைச் சுத்தப்படுத்துவதால் அதிக நீர் செலவாகும். கையினால் துவைத்து ஆடைகளைச் சுத்தப்படுத்துவதால் தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்திச் சிக்கனப்படுத்தலாம். பாய், போர்வை போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதைத்  தவிர்த்து அதிக அளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மாறாக, முந்தைய காலங்களைப் போல் ஆடைகளை கையினால் துவைப்பதால் அதிக அளவுக்கு 
தண்ணீர் தேவைப்படாது. 
மேலும் ஆடைகளை அலசும் தண்ணீரை கீழே ஊற்றி வீணாக்காமல் கழிப்
பறைகளுக்கும், செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
இனி வருங்காலங்களில் புதுவீடு கட்டுபவர்கள் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைத்தால்தான் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்படும் என்பதைப்போல், வீட்டிற்கு அருகில் மரம் வளர்க்க  வேண்டும் என்ற கண்டிப்புடன், கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.  அதிக மரங்கள் வளர்ப்பதன் மூலம் பூமியில் சுத்தமான காற்று கிடைக்கும். அதனால் நாம் வாழும் பகுதிகளில் வெப்பமும் குறையும். 
எனவே, அதிக அளவு தண்ணீரை வீணாக்குவதை நன்கு உணர்ந்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட ஒவ்
வொருவரும் உறுதி கொள்வது அவசியம்.       

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காத்திருக்கும் அழகிய இந்திய விடியல்!
சனாதன தர்மமும் பெண்ணியமும்
சாமானியனின் சரித்திரம்!
மரணம் கற்பிக்குமா பாடம்?
காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரை