நடுப்பக்கக் கட்டுரைகள்

பிரிட்டனின் "டிரம்ப்'!

29th Jul 2019 04:07 AM | சு.வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT


பல சுற்றுப் போட்டிகளைக் கடந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டன் பிரதமராகவும் பதவியேற்றுள்ளார் போரிஸ் ஜான்ஸன். சில குறிப்பிட்ட வட்டத்தினர் மட்டுமே அவரை இதுவரை "பிரிட்டனின் டிரம்ப்' என்று அழைத்து வந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி மூலம் போரிஸ் ஜான்ஸனுக்கு "பிரிட்டனின் டிரம்ப்'  என்ற பெயர் உண்டு என்பது சர்வதேச அளவில் வெளிப்பட்டுள்ளது.  

அதே நேரத்தில், பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், "பிரிட்டனின் டிரம்ப்' என்று பிரதமர் போரிûஸ கூறி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இவ்வாறு பெயர்சூட்டி அழைக்கப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப்பைப் போலவே தீவிர முதலாளித்துவம் மற்றும் வலதுசாரிக் கொள்கைகளை உடையவர் போரிஸ். உள்நாட்டு மக்களுக்கும், அவர்களின் நலன்களுக்குமே முன்னுரிமை என்ற கொள்கையை டிரம்ப்பைப் போலவே தீவிரமாகக் கடைப்பிடிப்பவர் போரிஸ். இது தவிர பெண் எம்.பி.க்களை விமர்சிப்பதிலும், இன ரீதியான கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதிலும் டிரம்ப்புக்கு சிறிதும் சளைத்தவரில்லை என்பதை போரிஸ் ஏற்கெனவே நிரூபித்துவிட்டார்.

உதாரணமாகக் கூறுவதென்றால், கடந்த வாரத்தில் தனது கொள்கைகளை விமர்சித்த எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் பெண் எம்.பி.க்கள் நால்வரை கடுமையாக விமர்சித்த டிரம்ப், "அமெரிக்காவை விரும்பவில்லை என்றால் உங்கள் மூதாதையர்களின் இடத்துக்கே சென்று விடுங்கள்' என்று சுட்டுரையில் திட்டித் தீர்த்தார். அந்த பெண் எம்.பி.க்களில் மூவர் ஆப்பிரிக்க வம்சாவளியினர்; மற்றொருவர் லெபனான் வம்சாவளி முஸ்லிம் ஆவார். இந்த இனவெறி விமர்சனத்துக்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை டிரம்ப் எதிர்கொண்டதுடன், சொந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் உள்ளானார்.

இப்போது டிரம்ப் செய்ததை சில ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர் போரிஸ். அப்போது அவர் பிரதமராக இல்லாததால் அது சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. "சூடான உணவுப் பதார்த்தம்போல எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் உள்ளனர்', "பர்தா அணிந்த (முஸ்லிம்) பெண்கள் வங்கிக் கொள்ளையர்கள் போலவும், அஞ்சல் பெட்டி போலவும் உள்ளனர்' என்பது போரிஸின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு உதாரணங்கள்.

ADVERTISEMENT

பொருளாதார கொள்கைகளைப் பொருத்தவரையில் டிரம்ப், போரிஸ் இருவருமே பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள். பெரு நிறுவன வரிகளைக் குறைக்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருப்பவர்கள். அமெரிக்காவின் வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு மற்ற நாடுகளுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர் டிரம்ப். அதேபோல பிரிட்டனின் வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற ("பிரெக்ஸிட்') கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தவர் போரிஸ்.

இவற்றுக்கெல்லாம் மேலாக இருவருமே தவறான தகவல்களை பொதுவெளியில் பேசத் தயங்காதவர்கள். தவறான தகவல் அளித்ததற்காக ஒருமுறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவப் பெயருக்கு உரியவர் போரிஸ். "காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கேட்டுக் கொண்டார்' என்பது டிரம்ப்பின் பொய்யுரைக்கு சமீபத்திய உதாரணம்.

இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தபோதும், டிரம்ப்பைப் போன்ற ஒரு தலைவரை பிரிட்டன் மக்கள் விரும்பவில்லை என்பது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து பிரிட்டனைச் சேர்ந்த இப்úஸா-மோரி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் தங்கள் நாட்டு மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், 19 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப் குறித்து திருப்தி தெரிவித்தனர். மேலும், அப்போது டிரம்ப்பின் பிரிட்டன் வருகைக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், காலத்தின் கோலத்தில், செயல்பாடுகளில் டிரம்ப்பின் நகலாகத் திகழும் போரிஸ், பிரிட்டனின் பிரதமராகியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக "மிகச் சிறந்த மனிதர்' என்று புதிய பிரதமர் போரிஸூக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பதில் டிரம்ப் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதே கொள்கையுடைய போரிஸ், பிரிட்டன் பிரதமராகியிருப்பது நிச்சயமாகவே டிரம்ப்புக்கு மகிழ்ச்சி அளிப்பதுதான். 

மேலும், அமெரிக்க -பிரிட்டன் உறவு சமீபகாலமாக சீராக இல்லை. முக்கியமாக, டிரம்ப் திறமையற்றவர்; அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவரால் மேற்கொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து  டிரம்ப் விலகினார்' என அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டாரக் சமர்ப்பித்த ரகசிய அறிக்கை வெளியானது இரு நாட்டு உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதற்காக பிரிட்டன் தூதரையும், அப்போதைய பிரிட்டன் பிரதமர் தெரஸா மேவையும் டிரம்ப் பகிரங்கமாக விமர்சித்தார். இப்போது, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம் தங்களுக்குச் சாதமாகமாக இருக்கும் என்பது டிரம்ப்பின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை "பிரிட்டனின் டிரம்ப்' எந்த அளவுக்கு நிறைவேற்றுவார் என்பது விரைவில் தெரியும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT